இரா. செல்வராசு

விரிவெளித் தடங்கள்

இரா. செல்வராசு header image 2

புதூர் புகுதல் காதை

February 15th, 2007 · 8 Comments

“இனிமேல் இந்த ஊர்ப்பக்கமா திரும்பி வரவேண்டியது இல்லை இல்லே?”

காரோட்டிக் கொண்டிருந்த மனைவியின் பக்கமாகத் திரும்பிக் கேட்டேன். அன்றொரு நாள் விடியற்காலையில் கிளம்பிய கிழக்கு நோக்கிய பயணத்தில் கண்ணளவில் இருந்த கதிரோன் அப்போது இன்னும் மேல்நோக்கிச் சென்றிருந்தான். பதில் கிட்டும் முன் நேர்திரும்பிக் கொண்டேன். விரையும் சாலையை அவசரமாக விழுங்கிக் கொண்டு கார் சென்றுகொண்டிருந்தது. பலமுறை இந்தச் சாலையில் முன்னும் பின்னுமாய்ப் பயணித்திருந்தாலும், இது திரும்புதல் இல்லாவொரு ஒருவழிப் பயணம்.

“ம்ம்” என்றோ, வேறு எதுவோ பதிலாய் இருந்திருக்கலாம். பதிலை எதிர்பார்த்தே எல்லாக் கேள்விகளும் கேட்கப் படுவதில்லை. பின்பக்கம் திரும்பினேன். பக்கத்து வீட்டு மிஸஸ் டினஸ் கொடுத்த குட்டிக்கரடி / நாய்ப் பொம்மைகளைக் கட்டியபடி பெண்கள் பின்னிருக்கையில் ஓய்ந்திருந்தார்கள். முன்வாரக் கிறிஸ்துமஸ் நாளையொட்டி எங்களை அழைத்துச் சிலமணி நேரம் இனிமையைப் பகிர்ந்து கொண்டு அவர்கள் கொடுத்த அந்தப் பொம்மைகளுக்குப் பெரியவள் ‘ஜிங்கள் பெல்ஸ்’ என்று பெயர் வைத்திருந்தாள்.

Move to VA - N2தானும் ஒரு பெயரை யோசித்துக் கொண்டிருந்தாள் சின்னவள். ‘கோக்கோ’ என்று சொன்ன தாயின் யோசனை கிஞ்சித்தும் கருணையின்றி நிராகரிக்கப்பட்டது. ‘நானே தான் பெயர் வைப்பேன்’ என்றவளின் கற்பனையூற்று அந்தநேரம் கொஞ்சம் வற்றியிருந்திருக்க வேண்டும். ‘மாங்க்’ என்று தான் ஊறியது. (மங்க்கி -> மாங்க்!). புதிதாக நாமம் சூட்டிக் கொண்ட கருஞ்சட்டைக் கரடிக்குட்டியைப் பார்க்க எனக்கும் கூடப் பிடித்துத் தான் இருந்தது. அதைப் பக்கத்தில் வைத்துக் கொண்டு தூங்குவதாகப் பாவனை செய்து கொண்டிருந்தாள். சற்று முன்னர் தான், தொடை கிழிந்து பஞ்சு வெளியே எட்டிப் பார்த்த ‘மாங்க்’கை இருகரத்தால் நீட்டி, “ஊருக்குப் போனதும் இதைத் தெச்சுக் குடுங்க” என்று கேட்டிருந்தாள்.

நினைவு தெரிந்து சில ஆண்டுகளாய் வாழ்ந்த ஊரை விட்டுப் போக அவர்களுக்கும் பிடிக்கவில்லை. தெரிந்த இடம், நண்பர்கள், பள்ளி, ஆசிரியர்கள், நூலகம் என்று பழகியனவற்றை மாற்ற வேண்டிய கட்டாயம் உவப்பானதாய் இருக்கவில்லை.

மரத்துக்கு மரம் தாவிடும் குரங்குகளுக்கு ஊர்ப்பிடிப்போ வாழும் மரப்பிடிப்போ இருக்குமோ தெரியவில்லை. ஆனால் மனிதனுக்கு இருக்கிறது. ‘பொட்டி தட்டுர வேலை’ என்று சுயமாய்த் தம்மையே கிண்டலடித்துக் கொள்கிற கணினி வல்லுனர்களைப் போல ‘ஓரூராறு மாதம் வேறூராறு மாதம்’ என்று இல்லையென்றாலும் மூன்று நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை இடம்பெயர்ந்திருக்கிறோம். இருப்பினும் இந்த முறை ஆறு வருடங்கள் மாறாதிருந்த ஊரை விட்டு இப்போது விலக சற்று அழுந்தத் தான் செய்கிறது. அதிலும் எம்மக்களுக்கு நினைவு தெரிந்த முதல் மாற்றம் இது தான்.

உணர்வோடு ஒன்றிவிட்ட ஒரு ஊர் இப்போது உயிரிழந்து கிடந்தாலும், அதன் நினைவுகளால் உந்தப்பட்டு அடர்ந்த புதர்களும் இடிந்த சுவர்களுமாய் இருந்ததனூடே போய் உடைந்த சுவற்றின் ஓடு ஒன்றினைப் பத்திரப்படுத்திப் பெருமூச்சு விடுகின்ற தமிழ்நதியின் ஊர்ப் பிரிதலும் விலகலும் பாசமும் போன்றதில்லை இது.

மிகச் சாதாரண ஒரு ஊர் மாறுதல் தான். இருப்பினும் ஒரு எட்டு வயதினளுக்குத் தன் உயிர்த்தோழி என்று இனங்கண்டவளை விட்டு விலக வேண்டியிருந்த சோகம் நிறைத்த ஊர். பல நட்புக்கள் இருந்தாலும் ‘இது போல ஒன்று இனி அமையாது அம்மா’ என்று ஏங்க வைக்கிற நட்பை விலகிச் செல்ல வேண்டிய கட்டாயம். நான்காண்டுகளுக்கு முன் இந்த வீட்டிற்குச் சென்றபோது, “நல்லது. பெண்களுக்கு நினைவுகளைச் சேர்த்து வைக்க வழி செய்கிறாய்”, என்று பாராட்டிய நட்பொன்று நினைவுக்கு வந்தது.

* * * *
“ஐ விஷ் வீ டிண்’ட் ஹேவ் டு மூவ் அப்பா” என்று சோகப் பட்ட மனதைச் சில நேரம் சமாதானப் படுத்த என்னிடமும் பெரிதாய் ஒன்றுமில்லை.

“எனக்கும் கூட அப்படித் தான் இருந்தது கண்ணம்மா. ஆனால் நாம் போய்த் தான் ஆகவேண்டும். வேறு வழியில்லை.”

“ஐ நோ…, பட்…” பாதியிலேயே அறுந்தது பேச்சு.

“நிச்சயமாய் புதிய ஊரும் உனக்குப் பிடித்துவிடும் பாரேன்”

ஆனால் சஞ்சனா மாதிரி இன்னும் ஒரு உயிர்த்தோழியைத் தான் பெறுவது இயலாத ஒன்று என்று திடமாக நம்புகிறாள். அவர்களிருவரும் ஆடிய ஆட்டத்தையும் போட்ட கூத்தையும் பார்த்திருப்பதால் அது உண்மையாகத் தான் இருக்குமோ என்றும் தோன்றி அவளுக்காக ஏக்கமாகவும் இருக்கிறது.

ஓரளவிற்கு எனக்கும் ஒட்டுதல் உண்டு என்றாலும், கடந்த சில மாதங்களாக இந்த மாற்றத்தை எதிர்நோக்கித் தயார்ப்படுத்திக் கொண்டிருந்ததாலும், இதுபோல் நிறைய ஊர் மாற்றங்களைப் பார்த்திருப்பதாலும் இதன் தாக்கம் பெரிதாகத் தெரியவில்லை. முதன்முறையாகப் பள்ளிவாழ்வு முடிந்து கல்லூரிக்குச் சென்றபோதோ, நாடுவிட்டு நாடுவந்து புதிய சூழலில் புதிய வாழ்விற்குத் தயார்ப்படுத்திக் கொள்ளவேண்டியிருந்தபோதோ இருந்த பிரிவுத்துயரும் மலைப்பும் இப்போது இல்லை.

இனி வரும் காலத்திற்கும் வாழ்க்கைக்குமான எதிர்பார்ப்புக்களை நான் நிறைத்துக் கொண்டதைப் போல இவர்களும் ஏற்றுக் கொள்வார்கள். இருப்பினும் நினைவுகளைச் சேர்த்துத் தருகிற எந்த ஒரு இடத்தையும் காலத்தையும் தாண்டிச் செல்வது நெகிழ்வளிப்பது தான்.

* * * *
ஆறு ஏழு மணி நேரப் பயணம். டஜன் கணக்கில் ஆப்பிள் விற்கும் வியாபாரி ஒரு டஜனுக்கு மூன்று ஆப்பிள் இலவசமாய்க் கொடுத்தாரெனில்… என்பதையொட்டி எழுந்த என் கணக்குக் கேள்விகளுக்கு விடைகள் கண்டுபிடித்தபடி சில நேரம். எப்போதோ வாங்கிக் கொடுத்த ஓவியத்தாள் ஏட்டில் மிஸ்.ஃப்ரிஸ்ஸில் (Ms.Frizzle) படம் வரைந்தபடி சில நேரம். தூங்கிச் சில நேரம். தூங்குவதாய் நடித்தபடி சில நேரம். காரின் ஒலிபெருக்கியில் தமக்குப் பிடித்த ‘இருவர்’ படப்பாடலுக்குத் தலையாட்டியபடி சில நேரம்.

“வி…டு…த…லை… விடுதலை…”

“மக்கள் மக்கள் என் பக்கம்
மாலைத் தென்றல் என் பக்கம்
சிட்டுக் குருவிகள் என் பக்கம்
செடிகள் கொடிகள் என் பக்கம்”

“அடக் கலங்காதே…”

* * * *
செடிகள் கொடிகள் இரண்டையும் இம்முறை தூக்கிப் போட்டுவிட்டேன். பெண்கள் இருவரும் பிறந்தபோது ஆளுக்கொன்றாய் வாங்கி இரண்டு மூன்று முறை ஊர் மாறி இன்னும் வளர்த்து கொண்டிருந்தேன். அதிலொன்று சமையலறைச் சுவற்றில் இரண்டு பக்கத்துக்குப் படர்த்து ஒரு பசுமையை அளித்துக் கொண்டிருந்தது. எட்டு வயதான மற்றொன்றோ பல தொட்டிகள் மாறினாலும் இன்னும் உறுதியாய் இருந்தது. மூன்று மாதம் நீர் காட்டாமல் விட்டுவிட்டுப் போன ஒரு வெளிநாட்டுப் பயணத்தின் பின்னும் உயிர்வாழ்ந்திருந்த அதனை நினைத்தும் கூட ஒருமுறை நெகிழ்ந்திருக்கிறேன்.

வளர்ந்தது செடிகள் மட்டுமில்லை. அந்த வீட்டிற்குச் சென்றபோது அதன் முன்மாடக் கட்டையை விடக் குட்டையாய் இருந்தவள், இப்போது சாலையோர அஞ்சல்பெட்டி உயரம் வளர்ந்திருக்கிறாள். அதன் நினைவாகச் சின்னவளை அதன்முன் வைத்துக் கடைசியாகப் படம் பிடித்துக் கொண்டபோது இன்னும் சரியாக விடிந்தும் கூட இருக்கவில்லை. அந்தத் தடவழியும் புல்தரையும் அஞ்சல்பெட்டியும் நடைபாதையும் வாத்துக் குளமும் இவர்களின் வளர்ச்சிக்குச் சாட்சியங்கள்!

காலத்திற் பின்சென்ற என்னைக் கவனிப்பவர்களைப் பார்த்துப் புன்னகைக்கிறேன்.

“வாட் அப்பா?” என்று அவர்கள் கேட்கும்போது ‘வர்ஜினியாவிற்கு வருக’ என்று எங்களை வரவேற்று இந்த மாகாணத்தின் ஆளுனர் வைத்திருந்த வரவேற்புப் பலகையைத் தாண்டி விரைகிறது எங்கள் வண்டி.

* * * *

Tags: வாழ்க்கை

8 responses so far ↓

  • 1 -/பெயரிலி. // Feb 15, 2007 at 10:44 pm

    ||இருப்பினும் நினைவுகளைச் சேர்த்துத் தருகிற எந்த ஒரு இடத்தையும் காலத்தையும் தாண்டிச் செல்வது நெகிழ்வளிப்பது தான்.||

    கடந்த பின்னாலேதான் எந்தவோர் ஊரும் அதன் காலமும் அதிகமாக ஒட்டிக்கொள்கிறனவோ?

  • 2 Kannan // Feb 15, 2007 at 11:32 pm

    Selva,

    Nice…get a warm feeling reading this.

    All the best to all in the new place.

  • 3 இராஜராஜன் // Feb 15, 2007 at 11:35 pm

    “இனி வரும் காலத்திற்கும் வாழ்க்கைக்குமான எதிர்பார்ப்புக்களை நான் நிறைத்துக் கொண்டதைப் போல போல இவர்களும் ஏற்றுக் கொள்வார்கள்.”

    நிறைய பேரிடம் இம்மாதிரியான வார்தைகளை கேட்டு இருக்கின்றேன்

    என்னால் இக்கூற்றை முழுதாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை கடந்து போனபின் நிணைவுகள் வந்து கொத்திக்கொண்டு இருக்கும் இல்லையா அந்த நிணைவுகள் தான் மனிதம் என நிணைக்கின்றேன்
    நான்.

  • 4 இலவசக்கொத்தனார் // Feb 15, 2007 at 11:39 pm

    வாழ்வின் புதிய அத்தியாயத்திற்கு எனது வாழ்த்துக்கள். எல்லாம் நல்லபடியாக நடக்க, குழந்தைகள் விரைவில் தங்கள் இயல்பான வாழ்க்கைக்குத் திரும்ப எனது பிரார்த்தனைகள்.

  • 5 Vassan // Feb 16, 2007 at 12:13 am

    வணக்கம் நண்பர் செல்வராஜ்.

    வெர்ஜ்ன்யா மாநில குடிபெயர்ப்பு நல்ல முறையில் அமைய நல்வாழ்த்துகள், வெகு முக்கியமாக உங்கள் செல்விகளுக்கு.

  • 6 மணியன் // Feb 16, 2007 at 1:52 am

    ஊர் விட்டு ஊர் பெயர்வது என்பது சிறுவயதில் மிகக் கடிமையானதுதான். எனக்கு அது நிகழ்ந்திருப்பதால் உங்கள் செல்வங்களின் மனக்கவலை உணரமுடிகிறது. பள்ளி இறுதி வருவதற்குள் மூன்றுமுறை இடம் மாறினோம். பழகியவர்களைப் பிரிவது ஒரு துக்கம் என்றால் புதியவர்களுடன் நட்பேற்படுத்திக் கொள்வது ஒரூ மன அழுத்தத்தைத் தரும் செயலாகும். புதியவர்கள் தங்கள் பழக்கமான சூழலில் நம்மைத் தேவைப் படாதபோது, நாமாக வலிந்து நட்புக் கரங்களை நீட்டுவது வயதான, முகமூடி அணியப் பழகிய வயதில் எளிதாக இருக்கலாம், ஆனால் நேர்மையான அணுகுமுறையில் தன்னம்பிக்கையை வெகுவாக பாதிக்கும்.

    உங்கள் செல்விகளுக்கு எனது அன்பையும் ஆசிகளும் உண்டு. Wish no relocation blues for them !

  • 7 DJ // Feb 16, 2007 at 10:08 am

    ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்று உங்களைப்போல பிள்ளைகளும் தம் இளவயதிலேயே புரிந்துகொள்ளப்போகின்றார்கள் :-). பிரிந்து வருவதன் சோகம் புரிந்துகொள்ளக்கூடியதாக இருப்பினும், பல்வேறு சூழல்களிற்குள் வளர்வது உங்கள் பிள்ளைகளின் எதிர்கால ஆளுமை வளர்ச்சியில் ஏதோ ஒருவகையில் உதவி புரியக்கூடும்.

  • 8 செல்வராஜ் // Feb 17, 2007 at 12:05 pm

    வாழ்த்துக்களுக்கும் கருத்துக்களுக்கும் நன்றி நண்பர்களே. டிசே, பல்வித சூழல் அனுபவங்கள் ஏதோவொருவித வளர்ச்சிக்கு உதவும் என்று தான் நாங்களும் எண்ணிக்கொள்கிறோம்.