வறண்ட குளத்து வாத்துக்கள்
Jun 5th, 2005 by இரா. செல்வராசு
பெண்களுடன் நடந்து சென்று வந்தபோது வாத்துக்குளம் வறண்டு கிடந்தது. பாளம் பாளமாய் வெடித்துக் கிடந்த குளத்தைப் பார்த்துப் பெரியவளுக்குக் கொஞ்சம் ஏமாற்றம். இந்த வசந்தத்தில் போன வருடம் போல் மழையில்லை. தண்ணீரில்லாத குளத்தில் வாத்துக்கள் வரவில்லை. உள்ளே இறங்கிச் சிறிது நேரம் விளையாடியதில் வருத்தம் கொஞ்சம் மறைந்தது.
“வாழ்க்கையிலேயே முதன்முறையாக இப்படிப் பார்க்கிறேன்” என்றாள். “இது என்ன பெருசு? எங்க ஊர்ல பெரிய பெரிய ஆறெல்லாம் தண்ணியில்லாமக் கிடக்குது” என்றேன்.
“It’s not fair” என்றாள். பேறாற்றைச் சொன்னாளா வாத்துக் குளத்தைச் சொன்னாளா? தெரியவில்லை.
தன்னுடைய Feelings புத்தகத்தில் இதை எழுதி வைக்க வேண்டும் என்றாள். நானும் கூட நாட்குறிப்பெழுதுவதை மீட்டுக் கொள்ள வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருக்கிறேன். போன வருசம் நாலு நாளோடு நின்று போய் விட்டது. அந்தச் சனவரி ஒன்றாம் தேதி எழுதியதை இரண்டு நாட்களுக்கு முன் படிக்க நேர்ந்தது. சில சமயம் உணர்ச்சிகளை மறந்து விடுதல் நலமா மறவாமல் நினைவிலிருத்திக் கொள்வது நலமா என்று யோசனை எழுகிறது.
குளக்கரைப் பாதையோரம் உட்கார்ந்திருந்த போது வரிசையாய் வைக்கப் பட்டிருந்த செம்மேப்பிள் மரங்கள் நேர்த்தியாய் இருந்தன. பாதையில் ஒரு சோடி மிதிவண்டிகள் அளவளாவிக் கொண்டிருந்தன. அவை ஈருருளிகள் அல்ல. ஒன்று மூவுருளி. மற்றது நான்குருளி (இரண்டு பேருருளி, இரண்டு சிறுபயிற்சியுருளி).
தங்கள் கற்தொகுப்பிற்காய் இன்றும் பொறுக்கிய இரண்டு கற்களைச் சுமக்கப் பணித்துவிட்டு மிதிவண்டிகள் பறந்தன. சுமந்து நடக்கையில் வெட்டியாய்ப் போனதோவென்று சனிக்கிழமையின் மீது ஒரு ஆயாசம் வந்தது. வழியில் இருந்த வீடுகளின் கண்ணாடிச் சன்னல்களில் விட்டெறிந்தால் எப்படி இருக்கும் என்று மனசு குறுக்கே யோசித்தது. “ஏன் இப்படிக் கிறுக்காய் இருக்கிறாய்” என்று கேட்டுக் கொண்டு கட்டோடு வந்துவிட்டேன். எல்லாம் நொடி நேரத்தில். கற்கள் இன்னும் கையிலே தான்.
கோணை மனசு. சிலசமயம் இப்படித் தான். அதைக் கட்டில் வைத்திருக்கும் வரையில் பிரச்சினை இல்லை.
சில செடிகளின் ஊசிப் பூக்கள் பெருவாசம் வீசிக் கொண்டிருந்தன. ஒரு வீட்டிலே வேறோடு பிடிங்கிய செடியை வெளியே போட்டிருந்தார்கள். ஒரு கொத்து ஊசிப் பூவைப் பறித்துக் கொண்டு முகர்ந்தபடி நடந்தேன். வசந்த ஒவ்வாமை கூட உண்டாகவில்லை இன்று.
இழுத்து வரப் பணித்துவிட்டுப் பாதி தூரத்தில் மிதிவண்டிகளைப் போட்டுவிட்டு ஓடிக்கொண்டிருந்தனர் பெண்கள். கிறுக்குப் பெண்கள். ஒரு தலையசைவோடும் ஏற்போடும் குதூகலித்த மனதைக் கூட்டிச் சென்றேன்.
மீண்டும் ஒரு நாள் மழை வரும். வெடித்த பாளம் மறையக் குளத்தில் நீர் வரும். வாத்துக்களும் வரும்.
கோணை மனசு. சிலசமயம் இப்படித் தான். அதைக் கட்டில் வைத்திருக்கும் வரையில் பிரச்சினை இல்லை.
நன்றாகயிருக்கிறது!வர்ணனை அழகு,இயற்கையை வருடும் பாங்கு அற்புதம்.
மனத்தை கட்டுப்படுத்த தெரிந்து விட்டால் பிரச்சினையே இல்லை. குளத்தில் ஒருநாள் நீர்வரும் கூடவே வசந்தமும் வரும்
அன்புள்ள சந்திரவதனா, ஸ்ரீரங்கன், பத்மா, உங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி.
அங்கேயுமா வறட்சி? செல்வா, மனதை வருடும் உங்கள் எழுத்து நடைக்கு இன்னொருமுறை சபாஷ்! அடுத்த 3 மாதமௌம் கொண்டாட்டம்தானே, அனுபவி ராஜா அனுபவி.:-)
ஆமாம் காசி. சென்ற வருடங்கள் போலின்றி இவ்வருடம் மழை குறைவு. வெப்பநிலை 90ஐத் தாண்டி விட்டது இரண்டு வருடச் சாதனை.
அப்புறம் மூன்று மாதம் அல்ல. ஆறு. 🙂
[…] அஞ்சல்பெட்டியும் நடைபாதையும் வாத்துக் குளமும் இவர்களின் வளர்ச்சிக்குச் […]