• Home
  • என்னைப் பற்றி

இரா. செல்வராசு

விரிவெளித் தடங்கள்

Feed on
Posts
Comments
« மலைப்பாதையும் மருட்பயணமும் (2002)
வறண்ட குளத்து வாத்துக்கள் »

ஷெஞ்சென் நுழைவனுமதிப் பத்திரமும் அயலக இந்தியக் குடியுரிமையும்

May 19th, 2005 by இரா. செல்வராசு

ஐரோப்பாவின் பல நாடுகளுள் நுழைய ‘ஷெஞ்சென்’ நுழைவனுமதிப் பத்திரம் (Schengen Visa) வாங்கியிருக்க வேண்டும். அமெரிக்கக் குடிமகவாய் (குடிமகன்+குடிமகள்=குடிமகவு(?) ) இருந்தால் இது தேவையில்லை. பொதுவாகவே, அமெரிக்கர்களுக்குப் பல நாடுகளுக்குச் செல்லவும் நுழைவனுமதிப் பத்திரம் தேவையில்லை. இதற்காகவே அமெரிக்கக் குடியுரிமை வாங்கி வைத்துக் கொள்ளலாம் என்றொரு எண்ணம் மூலையில் எழாமல் இல்லை.

ஏதோ ஒரு விநோத நாட்டுப்பற்றுணர்ச்சி வந்து இந்தியக் குடியுரிமையை விடாமலிருக்க வைத்திருக்கிறது. இதனால் இந்தியக் குடியுரிமையை விட்டுவிட்டு அமெரிக்கக் குடியுரிமை பெற்றவர்களுக்கு நாட்டுப்பற்றுக் குறைவு என்றோ, மற்றவர்க்குப் பற்று அதிகம் என்றோ எதுவும் நான் கூற விழையவில்லை. இது பற்றிப் பலருக்கும் பல கருத்துக்கள் இருக்கும். அவையிரண்டிற்கும் இடையே ஒரு பிணைப்பு இல்லை என்பதே இப்போதைய என் எண்ண ஓட்டம்.

சரி. அது தான் இப்போது இரட்டைக் குடியுரிமை வந்துவிட்டதே. இரண்டிலும் ஒன்று வாங்கி வைத்துக் கொள்ளலாமே என்றும் கூடத் தோன்ற ஆரம்பித்திருக்கிறது. ஆனால், அதில் இன்னும் தெளிவின்மையும் பல சிக்கல்கள், குழப்பங்களும் இருக்கின்றன. வாஷிங்டனில் இருக்கிற இந்தியத் தூதரகம் இரட்டைக் குடியுரிமை விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்வதை நிறுத்தி வைத்திருக்கிறது. அதோடு, பேச்சுவாக்கில் இரட்டைக் குடியுரிமை, இருமைக் குடியுரிமை என்று கூறினாலும், இது முழுவதுமாய் இரட்டைக் குடியுரிமையைத் தருவதில்லை. அயலக இந்தியக் குடியுரிமையை மட்டுமே தருகிறது (Overseas Indian Citizenship). நியு யார்க் இந்தியத் தூதரகத்தின் இது பற்றிய விளக்கத்தில் இறுதிப் பத்தியில் தெளிவாகக் குறிப்பிடப் பட்டுள்ளது. Overseas Citizenship is not Dual Nationality.

ஒரு வகையில் இது ஏமாற்றமே. அயலக இந்தியக் குடிமகவானால் சில இழப்புக்களை ஏற்றுக் கொள்ள வேண்டும். அவற்றுள் முக்கியமானது ஓட்டுரிமை இழப்பு. இந்தியத் தேர்தலில் ஓட்டுப் போட்டுப் பல காலம் ஆயிற்றென்றாலும், ஓட்டுரிமையை இழப்பதென்பது உரிமையான ஒன்றைப் பறிகொடுப்பது போல் தான் தோன்றுகிறது. அதோடு ‘திரும்பிச் சென்று அரசியலில் சேர்ந்து…’ என்கிற வீராவேச வசனங்களையும் இனிப் பேச முடியாமல் போய் விடும். அயலக இந்தியக் குடிமக்கள் இந்தியாவில் அரசமைப்புப் பதவிகளும் அரசு வேலைகளும் வகிப்பதும் இயலாத ஒன்று. அப்புறம் எப்படி ஒரு எம்மெல்லே (அ) எம்ப்பி ஆவது? எப்படி ஒரு மாவட்ட ஆட்சியர் ஆவது? ‘அதுக்கெல்லாம் வயசு தாண்டியாச்சு’ என்கிற மனைவியின் நினைவுறுத்தல் இடியை ஒருபுறம் தள்ளிவிட்டு மீண்டும் ஐரோப்பாவிற்கு வருவோம்.

லக்ஸம்பர்க் நாட்டில் ஷெஞ்சென் என்றொரு சிறு நகரம். 1985ல் இங்கு ஏழு ஐரோப்பிய நாடுகள் ஒன்று கூடித் தமக்கிடையே இருந்த எல்லைகளை விரித்தன. ஒரு ஒப்பமிட்டுத் தங்களுக்குள் ஒரே நுழைவுப் பத்திர முறையைக் கொண்டு வந்தன. அவர்களிடையேயான போக்குவரத்துக் கட்டுக்களை விலக்கிக் கொண்டன. அந்த நகரத்தின் பெயராலேயே வழங்கப்பெறும் இந்த நுழைவுச்சட்ட முறைகளை கடந்த இருபது ஆண்டுகளில் மேலும் சில நாடுகள் ஏற்றுக் கொண்டன. அதன்படி இந்தக் குழுவில் உள்ள நாட்டு மக்கள் தங்கள் நாட்டில் இருந்து பிற நாடுகளுக்குச் செல்ல நுழைவனுமதி தேவையில்லை. அதோடு, பிறர் இந்தக் குழு நாடுகளுக்குள் வருவதற்கு ஒரு நாட்டில் அனுமதி வாங்கியிருந்தால் போதும். தற்போது மொத்தமாகப் பதினைந்து நாடுகள் இந்தக் குழுவில் சேர்ந்திருக்கின்றன. அவை பின்வருமாறு என்று ஒரு பட்டியல் போடலாம் என்றிருந்தேன். அதனால் என்ன பயன்? தேவையிருப்பவர்கள் ஒரு கூகுளடித்துக் கொள்ளுங்கள்.

பணி நிமித்தமாய் இந்த வாரம் சுவீடனில் இருக்கிறேன். ‘ஷெஞ்சென்’ நாடுகளில் சுவீடனும் ஒன்று. வேண்டிய காகிதங்களைக் (ஆவணங்களைக்) கொடுத்து வாஷிங்டன் சுவீடன் தூதரகம் வழியாக ஒரு வருட நுழைவனுமதிப் பத்திரம் வாங்கிக் கொண்டேன். இந்த அனுமதியைப் பெற சுவீடனில் இருந்து ஒருவர் ‘அய்யா வரவேணும்’ என்றொரு வெத்தலை-பாக்கு-அழைப்பிதழ் வைக்க வேண்டும். அழைப்பில் குறிப்பிட்ட தேதியில் கிளம்ப முடியவில்லை. விண்ணப்பத்தில் வேறு தேதி போட்டிருந்ததால், ஏற்றுக் கொள்ள முடியாதென்று இன்னொரு அழைப்புக் கேட்டுத் தூதரகத்தில் இருந்து கிம்பர்லி தொலைபேசியில் அழைத்தார். நாமாகக் கூப்பிட்டுத் தொங்கினாலும் பேச முடியாத சில தூதரகங்களுக்கு, இது சற்று வித்தியாசமாக இருந்தது.

மின்சீட்டு (இ-டிக்கெட்) தான் என்றாலும் விமான நிலையத்தில் குடியுரிமையேடு, நுழைவனுமதி எல்லாவற்றையும் ஒரு தாத்தாவிடம் காட்டிவிட்டுத் தான் உள்ளே வர நேர்ந்தது. ஆச்சரியமாய், இந்த முறை காப்பதிகாரிகள் (Security) என்னைக் கைகால் பரப்பி நிற்கச் சொல்லவில்லை! வழமையாக ஒவ்வொரு முறையும் அப்படிச் சோதனைக்கு உள்ளாவதுண்டு.

நூவார்க் வழியாக ஆம்ஸ்டர்டாம் வந்து, ஸ்டாக்ஹோமிற்குத் தொடர்ந்து, அங்கிருந்து ஒரு வாடகை வண்டியில் வாஸ்டெராஸ் பயணம். ஷெஞ்சென் பத்திரத்தை சுவீடனுக்காக வாங்கி இருந்தாலும், அந்தப் பதினைந்தில் எந்த நாட்டில் முதலில் நுழைகிறோமோ அங்கு தான் பரிசோதிக்கப் படும். அதற்குப் பிறகு அந்தப் பத்திரங்களை மூடிப் பையில் பத்திரப்படுத்திக் கொள்ளலாம். அதனால் ஆம்ஸ்டர்டாமிலேயே (நெதர்லாந்து) குடிவரவு அதிகாரியைப் பார்க்க வரிசையில் நின்று கொண்டிருந்தேன். ‘நாம் நிற்கிற வரிசை மட்டும் ஏன் மெதுவாகச் செல்கிறது’ என்று எப்போதுமே எல்லோருக்குமே தோன்றுவது போல் அன்றும் தோன்றியது. ஒரு வழியாய் என் முறையும் வந்தது.

நீல உடை டச்சு அதிகாரி குடியுரிமையேட்டை திருப்பித் திருப்பிப் பார்த்தார். ஒரு பக்கத்தைக் காட்டிக் கேட்டார்,

“எந்த நாட்டுக்குப் போகிறீர்கள்? இதுவா உங்கள் நுழைவனுமதி?”

“ஓ இல்லை. இது மூன்று வருடங்களுக்கு முன் போனது. இப்போது காலாவதியாகிவிட்டது. ஆனால் சுவீடனுக்குத் தான் போகிறேன். இன்னொரு பக்கத்தில் இருக்கிறது பாருங்கள்”

“இல்லையே… அதுவும் தான் காலாவதியாகி இருக்கிறது”.

என்ன இது? இந்த ஆள் வரிசை இதனால் தான் மெதுவாக நகர்ந்திருக்கும். ஒரு தேதியைக் கூடச் சரியாகப் பார்க்கத் தெரியவில்லையே!

“இல்லை. இந்த நுழைவனுமதியை ஒரு வருடத்திற்குப் பெற்றிருக்கிறேன். வாங்கி ஒரு மாதம் தான் இருக்கும். சரியாய்ப் பாருங்கள். பலமுறை வந்து போகும் அனுமதியோடு இருக்கும்”

“ம்ம்..ம்ம்.. பலமுறை சரிதான். ஆனால், இதோ நீங்களே பாருங்கள். காலாவதியாகிவிட்டது.”

அப்போது தான் அந்தத் தேதி ஏப்ரல் 2005 என்று இருந்ததைப் பார்த்தேன். இரண்டு வாரங்களுக்கு முன்னரே காலாவதியாகிவிட்டது. இருக்க முடியாதே. கிம்பர்லியிடம் பேசும் போது ஐந்து வருடங்களுக்கெல்லாம் தர முடியாது. அதிக பட்சம் ஒரு வருடம் தான் என்றெல்லாம் கூறினாரே? வருடத்தை 2006 என்று போடாமல் ஏதோ பழக்க தோஷத்தில் 2005 என்று போட்டிருப்பாராய் இருக்கும். இப்போது என்ன செய்வது? ஆஹா… தப்புப் பண்ணிட்டியேம்மா கிம்பர்லி!

“ஓ! ம்ம்… தூதரகத்தில் தப்புப் பண்ணி விட்டார்கள் போலிருக்கிறது. நான் ஒரு வருடத்திற்குத் தான் கேட்டிருந்தேன். அதனால் தான் பலமுறை வந்துபோகும் அனுமதி தந்திருக்கிறார்கள்”

“இருந்தாலும் இது காலாவதியாகி விட்ட அனுமதி. நான் உங்களை உள்ளே அனுமதிக்க முடியாது. என்னோடு வாருங்கள்”

‘எங்கே சிறைக்கா’ என்று கேட்காமல் அவருடன் சென்றேன். தனியாகக் குடிவரவு அலுவலகம் என்று இருந்த ஒரு அறைக்கு அழைத்துச் சென்றார். நெட்டையாக இருந்த ஒருவரிடம் விட்டுவிட்டு “இவர் பார்த்துக் கொள்வார்” என்று போய் விட்டார்.

மீண்டும் அவரிடம் ஆதியந்தம் கதை எல்லாம் கூறி, அச்சில் வைத்திருக்காத சூவீட அழைப்பை மடிக்கணியைத் தட்டிக் காட்டி, பயண விவரம், தங்குமிட விவரம், பயணச்சீட்டு, பிறந்த சாதகம் எல்லாவற்றையும் கேட்டபடி காட்டியும், “இப்படி ஓரமாய் உட்காருங்கள். வருகிறேன்” என்று இவரும் போனார். இவர்கள் எல்லோரும் எந்த முறைப்பையும் காட்டாது நட்புணர்வோடு தான் நடந்து கொண்டார்கள் என்பதால் ஒரு நிம்மதியோடு அமர்ந்தேன்.

எனக்கு முன் பரிசீலித்துக் கொண்டிருந்தவரை அனுப்பி விட்டுச் சொன்னார், “அடுத்த கட்ட விமானம் கிளம்புவதற்குள் உங்களை அனுப்ப முடியாது. அமெரிக்கச் சுவீடத் தூதரகத்திற்குத் தொடர்பு கொண்டு கேட்க வேண்டும். அவர்களுக்கு இன்னும் விடியவில்லை என்பதால் (ஆறு மணி நேர வித்தியாசம்) அதுவரை இங்கேயே பொறுத்திருக்க வேண்டும். பிறகு என் மேலாளரிடம் பேசிவிட்டு என்ன செய்வது என்று சொல்கிறேன். தூதரகத் தவறு என்று ஒத்துக் கொண்டால் இங்கே வேறொரு பத்திரம் தந்து உள்ளே அனுப்புவோம். இல்லையென்றால், திரும்பி நீங்கள் அமெரிக்காவிற்குச் செல்ல வேண்டியது தான்!”

“ஆஹா, ஆம்ஸ்டர்டாம் விமான நிலையம் பார்க்கவா இவ்வளவு தூரம் அலுவலகக் காசை ‘இவ்வளவு’ செலவுசெய்து வந்தோம்? ” என்று தோன்றினாலும், நான் செய்வதற்கு ஒன்றுமில்லை. ஒரு வாரம் முன்பு தான் வாங்கிய பயணச்சீட்டு என்பதால் கொள்ளைக் விலை கொடுத்திருந்தோம். “என்னங்க? முதல் வகுப்பில் போகிறீர்களா?” என்றும் கூட ஒருவர் கேட்டு விட்டார்.

பிறகு அரை மணி நேரம் கழித்து மேலாளரிடம் பேசிவிட்டு வந்து சொன்னார். “சரி இந்த முறை நீங்கள் பாக்கியம் செய்திருக்க வேண்டும். உங்களை உள்ளே விட இசைவு கிடைத்துவிட்டது. தற்காலிக நுழைவனுமதி தருகிறோம். இங்கே ஒரு முப்பத்தைந்து ஈரோ கட்டி விடுங்கள். திரும்பிச் சென்று சுவீடன் தூதரகத்தில் வாங்கிக் கொள்ளுங்கள்”

… (கிம்பர்லியை விடக் கூடாது!).

“இன்னொரு விஷயம். அது உங்கள் தலைவலி இல்லை. ஆனால் நீங்கள் வந்த விமானத்தார் இதைச் சரி பார்த்திருக்க வேண்டும். இதனைக் க்ளீவ்லாண்டு விமான நிலையத்திலேயே பார்த்துத் தடுத்திருக்க வேண்டும். அப்படிச் செய்யாததால் அவர்களுக்கும் ஒரு அபராதம் விதிக்கப் போகிறோம். நீங்கள் நன்முறையில் சென்று வாருங்கள்”. பாவம். விமான நிலையத் தாத்தா மாட்டிக் கொள்வாரோ என்னவோ?

குடிவரவு அதிகாரி புன்சிரிப்போடு அனுப்பி வைத்தார். பார்த்ததென்னவோ சில நபர்கள். ஆனால், டச்சுக்காரர்கள் மிகவும் இனிமையாக இருக்கிறார்கள் என்று தானே சொல்லப் போகிறேன்? ஏன் இந்தியா, அமெரிக்கா உட்படப் பல குடிவரவு அதிகாரிகள் இப்படி இருப்பதில்லை?

எப்படியோ, வாழ்க்கையில் முதல் முறையாய் ஒரு நாடுகடத்தப் பட்டிருப்பேன். தப்பித்துக் கொண்டேன்.

சுவீடனில் இறங்கியவுடனே குடிவரவுக் காவலதிகாரிகளிடம் சென்று பதிவு செய்து கொள்ளச் சொன்னார். ஆனால் சற்று விசாரித்தும் அப்படி ஒருவரையும் விமான நிலையத்தில் பார்க்க முடியவில்லை என்று நான் பாட்டுக்கு வந்துவிட்டேன். அடுத்த வாரத்தில் ஊர் திரும்பவில்லை என்றால் எதாவது ஒரு ஐரோப்பியச் சிறையில் கம்பி எண்ணிக் கொண்டிருப்பேனாயிருக்கும்! 🙂

பகிர்க:

  • Click to share on Facebook (Opens in new window)
  • Click to share on Twitter (Opens in new window)
  • Click to share on WhatsApp (Opens in new window)
  • Click to email a link to a friend (Opens in new window)

Posted in பயணங்கள், பொது

8 Responses to “ஷெஞ்சென் நுழைவனுமதிப் பத்திரமும் அயலக இந்தியக் குடியுரிமையும்”

  1. on 19 May 2005 at 7:02 am1சுந்தரவடிவேல்

    குடிமகவு, நல்ல வார்த்தை. இனி பயன்படுத்துவேன்.
    //‘எங்கே சிறைக்கா’// :))
    இப்படியாக வரிக்கு வரி வந்து பதில் சொல்ல வைக்கும் ஒரு பேச்சுக் கொடுக்கும் நடை.
    வந்து சேருங்க!

  2. on 19 May 2005 at 7:11 am2எழில்

    ஸ்வீடனுக்கு நல்வரவு 🙂

  3. on 19 May 2005 at 7:23 am3ravisrinivas

    i too faced a similar situation when i flew to switzerland.they made me wait in paris air port and sent me to geneva via zurich.paris to geneva takes just an hour.but as i had no schengen visa they sent me to zurich by flight with an air ticket to geneva.so it took me 6 hours to reach geneva instead of one hour.and they told me that delta should not allowed me to fly without schengen visa.after my arrival i found out that this is a routine thing and neither the airlines nor the passengers know that they need a transit visa or schengen visa if they travel via paris, even if they dont step out of the flight.

  4. on 19 May 2005 at 7:55 am4ரவியா

    Schengen Visa தான் இருக்கிறதே இங்கே தலையை காட்டலாமே !!!

  5. on 19 May 2005 at 12:57 pm5செல்வராஜ்

    எழில் நன்றி. சுவீடனில் யார் இருக்காங்கன்னு யோசிச்சப்போ உங்க ஞாபகம் தான் வந்தது. ஆனா நீங்க வேற கோடியில இருக்கறீங்களே! ரவியா, ஷெஞ்சென் விசாவில தான் பிரச்சினை ஆகிவிட்டதே. “இங்க”ன்னு நீங்க சொல்றது பிரான்சு தானே. இன்னோர் நாள் வாய்ப்புக் கிடச்சா வந்துட்டாப் போச்சு!

    ரவி, பாரிசு வழியாப் போறதுல என்னவோ சிக்கல் இருக்குதுங்கறீங்க? அப்படிப் போக நேர்ந்தா நல்லா விசாரிச்சுக்கிறேன்.

    சுந்தர், மகவுன்னா குழந்தைன்னு அர்த்தம் வருதேன்னு தயங்கினேன். அவன், அவள், அவர் மாதிரி, குடிமகர்னு சொல்லலாம் என்பது இன்னொரு எண்ணம். ஆனா குடிமகவு ஏனோ பிடித்திருக்கிறது.

  6. on 19 May 2005 at 2:55 pm6Padma Arvind

    சில சமயம் எங்கே என்ன பிரச்சினை என்பது அனுபவிக்கும் போதுதான் தெரிய வருகிறது. என் பாஸ்போர்ட்டில் பிரச்சினை இருப்பதே புடாபெஸ்ட் போனபின் தான் தெரிந்தது. அதற்கு முன் சிங்கபூர், அமெரிக்கா வந்ததும் போனதும் தெரியவில்லை.
    அருமையாக எழுதியிருக்கிறீர்கள்.

  7. on 20 May 2005 at 1:59 am7D.Krishnamurthy

    Sel,
    Hope you wont get the oppurtunity to write about Swedens Jail!! By the way, do u know, Sweden is the best place for women to live. Enquire and then access yourself about how much of those rights u have given to karthi!!
    Balakumaran used to say that one needs a flow like river (Aatrozukku nadai!) to write a story. It is seen in your writing. keep it up.

  8. on 20 May 2005 at 3:42 am8iraamaki

    நுழைவு அனுமதிப் பத்திரம் – கொஞ்சம் நீண்டது போல் தெரியவில்லையா? ஒரு நான்கு, ஐந்து ஆண்டுகளுக்கு முன்னிருந்தே நுழைமதி (visa) என்ற சுருக்கமான சொல் இணையத்தில், குறிப்பாக மடற்குழுக்களில், புழங்கிக் கொண்டிருக்கிறது.

    அன்புடன்,
    இராம.கி.

  • அண்மைய இடுகைகள்

    • பூமணியின் வெக்கை
    • வீட்டுக்கடன்–அசல், வட்டி, தவணை
    • அனைவர்க்குமாம் கல்வியும் வளர்ச்சியும்
    • வணிகப்பெயர்த் தமிழாக்கம் – ஒரு கட்டாய்வு (Case analysis)
    • பொரிம்புப்பெயரும் புறப்பெயரும்
    • குந்தவை
    • நூற்றாண்டுத் தலைவன்
    • அலுக்கம்
  • பின்னூட்டங்கள்

    • இரா. செல்வராசு on வீட்டுக்கடன்–அசல், வட்டி, தவணை
    • RAVIKUMAR NEVELI on வீட்டுக்கடன்–அசல், வட்டி, தவணை
    • Ramasamy Selvaraj on வீட்டுக்கடன்–அசல், வட்டி, தவணை
    • இரா. செல்வராசு on அனைவர்க்குமாம் கல்வியும் வளர்ச்சியும்
    • THIRUGNANAM MURUGESAN on அனைவர்க்குமாம் கல்வியும் வளர்ச்சியும்
    • இரா. செல்வராசு » Blog Archive » வணிகப்பெயர்த் தமிழாக்கம் – ஒரு கட்டாய்வு (Case analysis) on பொரிம்புப்பெயரும் புறப்பெயரும்
    • Balasubramanian Ganesa Thevar on பொரிம்புப்பெயரும் புறப்பெயரும்
    • செல்லமுத்து பெரியசாமி on குந்தவை
  • கட்டுக்கூறுகள்

    • இணையம் (22)
    • இலக்கியம் (16)
    • கடிதங்கள் (11)
    • கணிநுட்பம் (18)
    • கண்மணிகள் (28)
    • கவிதைகள் (6)
    • கொங்கு (11)
    • சமூகம் (30)
    • சிறுகதை (8)
    • தமிழ் (26)
    • திரைப்படம் (8)
    • பயணங்கள் (54)
    • பொது (61)
    • பொருட்பால் (3)
    • யூனிகோடு (6)
    • வாழ்க்கை (107)
    • வேதிப்பொறியியல் (7)
  • அட்டாலி (பரண்)

  • Site Meter

  • Meta

    • Log in
    • Entries feed
    • Comments feed
    • WordPress.org

இரா. செல்வராசு © 2025 All Rights Reserved.

WordPress Themes | Web Hosting Bluebook