மலைப்பாதையும் மருட்பயணமும் (2002)
May 17th, 2005 by இரா. செல்வராசு
ஒரு நாள் முழுக்க நீலமலைப் பகுதியில் சுற்றிக் கொண்டிருந்துவிட்டுத் திரும்பக் கிளம்பிய நேரம் தான் எங்கள் கதை ஆரம்பிக்கிறது! ஒழுங்காக வந்த வழியிலேயே திரும்பி நெடுஞ்சாலையிலே சென்றிருக்கலாம். ஆனால், எப்போதுமே புதுப் புது வழிகளைத் தேடும் நமது அறிவு அன்றும் கொஞ்சம் விளையாடிவிட்டது.
“நெடுஞ்சாலை என்றாலும் மீண்டும் கிழக்கே சிட்னி நோக்கி நூறு கி.மீ போய்ப் பிறகு தென்மேற்காய்ப் போக வேண்டும். அதற்குப் பதிலாக இப்படி நேர் தெற்காக ஒரு வழி இருக்கிறது பார், அப்படியே போய் விட்டால் விரைவில் கூல்பர்ன் போய்ச் சேர்ந்துவிடலாம்” என்றேன் மனைவியிடம்.
“வேண்டாங்க. எதுக்குத் தெரியாத வழியிலே போய்க்கிட்டு?”
“அட இல்லை. இங்கே வரைபடம் இருக்கிறது பார். நேர் வழியாகத் தான் போட்டிருக்கிறார்கள். அப்படியே இந்தப் பள்ளத் தாக்கு ஓரமாய் பார்க்க நன்றாய் (Scenic) இருக்கும் என்று நினைக்கிறேன்”
“ம்ம்ம்”
சற்று யோசனையாய் மனைவி பார்க்க, அந்த ஒரு நிமிடத் தயக்கம் சாதகமாய் அமையவே, புது வழியில் பயணம் தொடங்கிவிட்டது. ஆரம்பத்தில் நன்றாகத் தான் இருந்தது. மாலை வெய்யவன் மலையிடுக்குகளில் மறைகிற காட்சியும் நன்றாகத் தான் இருந்தது. போய்க்கொண்டே இருந்த சாலை திடீரென்று குறுகிச் சிறிதானது கண்டும், சரி இது தற்காலிகமாய் இருக்கும் என்று நம்பிக்கையில் தொடர்ந்தோம். இன்னும் சிறிது தூரத்தில் சாலை தார்ச்சாலையில் இருந்து மண் சாலையாயிற்று.
“ஒருவேளை சாலை வேலை நடக்குமாய் இருக்கும். கொஞ்ச தூரத்தில் மீண்டும் செப்பனிடப்பட்ட சாலையாகி விடும்” என்று உரக்க எனக்கும் ஆறுதலாய்க் கூறிக் கொண்டு தொடர்ந்தோம். இன்னும் அரை மணி நேரம் சென்றும் சாலை அப்படியே இருந்தது. கொஞ்சம் சந்தேகம் வர ஆரம்பித்தது. ஒருவேளை ஏதாவது ஒரு திருப்பத்தை விட்டிருப்போமோ?
வளைந்தும் நெளிந்தும் மணற்சாலை வந்துகொண்டே இருக்க, சுற்றிலும் யாரையும் பார்க்காத அந்த நேரத்தில் சற்று இருட்டவும் ஆரம்பித்தது. சிற்றுந்தின் முன்விளக்குகள் பாதையின் சில அடிகளை மட்டும் காட்டிக் கொண்டிருக்க, பல திருப்பங்களை உடைய மலைப்பாதையில் போவதை உணர முடிந்தது. மிகவும் குறுகிய வளைவுகளையும் கடக்க வேண்டியிருந்த போது, எங்கும் விளக்குகள் இல்லாத, ஆள்/வண்டி நடமாட்டமில்லாத இருட்டில் சற்று பயம் மனதைக் கவ்வத் தொடங்கியது.
இவ்வளவு தூரத்திற்குப் பிறகு திரும்பவும் செல்வது வீண் என்று ஒரு புறமும், இதோ வந்துவிடும் சரியான சாலை என்று நம்பிக்கை ஒரு புறமும் இன்னும் முன்னே செல்லத் தூண்டியது. “நான் அப்பவே சொன்னேன்” என்று மனைவி சொல்லி எனக்கு வெறுப்பையும் அச்சத்தையும் அதிகரிக்கவேண்டாம் என்று அடக்கி வைத்துக் கொண்டாலும், அவர் முகத்திலேயே அதை உணர்ந்தேன். சாலையில் எந்த ஊர்ப் பெயர், தொலைவு விவரப் பலகைகளும் இல்லாத அந்த நேரத்தில் ஏதோ ஒரு ஓட்டத்தில் சென்று கொண்டிருந்தோம். அதிகப் போக்குவரத்து இல்லாத மணற்சாலை தடக் தடக் என்று அடித்துக் கொண்டிருந்தது.
கையிலே செல்பேசி இருந்தும் அந்தக் காட்டில் எங்கே வேலை செய்யப் போகிறது? “சரி. ரொம்ப மோசமாகப் போய்விட்டது என்றால் அப்படியே எங்காவது ஓரமாய் நிறுத்தி உள்ளேயே தூங்கி விடலாம். அப்புறம் நாளைக்கு எழுந்து விடிந்தவுடன் போய்க் கொள்ளலாம்!” என்று மாறு யோசனைகள் செய்யவும் ஆரம்பித்திருந்தோம். நல்ல வேளை. குழந்தைகள் இருவரும் நாள் முழுதும் அலைந்த அலைச்சலில் ஓய்ந்து பின்னிருக்கைகளில் உறங்கிக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்காக வைத்திருந்த நொறுக்குத் தீனியின் மிச்சங்கள் பசிக்குப் பக்குவமாய் இருந்தது.
இப்படியே சில மணி நேரங்கள் சென்ற பிறகு, சரியான சமதரைச் சாலை வந்ததும் தார்ச்சாலையாக அமைந்ததும் தான் நிம்மதிப் பெருமூச்சு வந்தது. அப்படி நல்ல சாலை அமைந்து சில நிமிடங்களில் நாங்கள் செல்ல வேண்டிய ஊர் வந்துவிட்டது. ஆக, அந்தப் பயணம் முழுதும் மலை/மணற்பாதையிலேயே வந்திருக்கிறோம். சிற்றுந்து முழுதும் மணலடித்து நிறம் மாறிக் கிடந்தது.
வழியில் நாங்கள் எந்தத் திருப்பத்தையும் விட்டுவிடவில்லை. அது ஒரு மலைப்பாதை. நீலமலைத்தொடரில் ஒரு மலையைத் தாண்டி வந்திருக்கிறோம். வந்து வரைபடத்தைப் பார்த்த போது தான் சாலைக் கோட்டில் சிறு இடைவெளி இருப்பது தெரிந்தது! “ஓ! இதற்கு அது தான் அர்த்தமா?”
கூல்பர்னில் தங்கிவிட்டு அடுத்த நாள் அலுவலகம் வந்த போது சொன்னார்கள், “பகல் நேரத்திலேயே அந்த வழியில் நாங்கள் யாரும் போக மாட்டோம். ஆபத்தானதாச்சே! ஓரத்தில் பார்த்திருந்தால் பெருஞ்சரிவுகள் தெரிந்திருக்கும். தடுப்புக்கள் கூட இருக்காது!”
“ஓ! நல்லவேளை நாங்கள் தான் இரவில் வந்தோமே! அதனால் ஒன்றும் தெரியவில்லை!” 🙂
இது மட்டுமா, மறுநாளே பயணத்தின் அடுத்த கட்டத்தில் கடைசி ஒருமணி நேரத்தில் தெரிந்த வழியில் செல்லாமல், இன்னொரு வழியைக் காட்டி, “இது எனக்குத் தெரியும் இதில் போகலாம்” என்று நான் சொல்ல அதையும் நம்பிவிட்ட மனைவியை என்ன சொல்வது? (உள்ளுக்குள் இந்தப் புது அனுபவங்கள் அவருக்கும் பிடித்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் என் யோசனைக்குச் செவி சாய்த்து வந்திருப்பாரா?). இதுவும் ஒரு மலைப்பாதையாய், ஒரு வண்டி மட்டுமே செல்ல முடிவதாய்ச் சில சமயங்கள் குறுகலாய் இருந்தது. இதிலும் முன்னும் பின்னும் யாரையும் காணோம். ஒரு இடத்தில் சிலை போல் இருந்த இந்த ஆடுகளைப் பார்த்தோம்.
இனிமேல் ஆஸ்திரேலியாவில் இப்படிச் சோதனைகள் வேண்டாம். தெரிந்த நெடுஞ்சாலைகளில் மட்டும் தான் செல்வது என்று எண்ணிக் கொண்டோம். இருந்தாலும் இந்த இரு சாலைப் பயணங்களும் மறக்க முடியாத அனுபவங்களாய்ச் சேர்ந்து கொண்டன. இல்லையெனில் இது போல் இனிய காட்சிகளைக் கண்டிருக்க முடியுமா?
மர்ஃபியின் சட்டப்படி ஏதேனும் ஒன்று நடந்திருக்கக் கூடும் என்று இப்போதும் தோன்றுகிறது. சிற்றுந்திற்கு ஏதேனும் கோளாறோ, சக்கரத்தில் ஓட்டையோ, எரிபொருள் தீர்ந்தோ போயிருக்கலாம். மணற்பாதையில் செல்கையில் மழை வந்து சறுக்கி இருக்கலாம். வழி மாறிச் சென்று சுற்றிச் சுற்றி அந்த மலைப்பாதையில் காணாமல் போயிருக்கலாம். இத்தனை சாத்தியங்கள் இருந்தும் அன்று மர்ஃபியின் சட்டம் செல்லவில்லை. நல்லது. ஒரு வேளை அந்த மலைகளிலும் பள்ளத்தாக்குகளிலும் காற்றில் கலந்திருக்கும் பழங்குடியினரின் நல்லெண்ண அலைகள் எங்களுக்கு அன்று துணையாய் இருந்திருக்கலாம் !
எப்பவோ நடந்ததென்றாலும் படிக்கும்போது மனம் பக் பக்கென்றது!
ஆனாலும் ரொமபவும் அசட்டுத் துணிச்சல்தான்!
பாவம் உங்கள் மனைவி மனதிற்குள் எத்தனை சாமியை
வேண்டிக் கொண்டாரோ.
சுவையான, ஆர்வமூட்டும் பதிவு!
அண்ணே நல்லா பழகின ரூட்டுல (அமெரிக்காவிலேயே )போகும்போதே பாதை தடவுற ஆட்கள் நாங்கள். எங்க கிட்ட போய் இதெல்லாம் சொல்லிகிட்டு. பேசாம “மலைப்பாம்பும் அதன் மண்டுப்பயணமும்” பேர மாத்திடுங்க :-))
ஆமாங்க மீனா. கொஞ்சம் அசட்டுத்தனமாத் தான் தெரியுது. ஆனாலும் பாருங்க. அதன் சுவாரசியம் தான் இப்போ கண்ணுக்குத் தெரியுது! 🙂 அதனால் இந்த அசட்டுத்தனம் விட்டுப் போகாதுன்னு நினைக்கிறேன்.
தங்கமணி, கார்த்திக் நன்றி. அட, நானும் அப்படித் தடவுற ஆசாமி தானுங்க. ஒவ்வொரு முறையும் எங்காவது தொலைஞ்சு போயிட்டு, உனக்கு ஊரைச் சுற்றிக் காட்டுகிறேன் என்று மனைவியிடம் கதை விட்டதை ஆரம்பத்தில் கொஞ்ச நாட்கள் நம்பித்தான் இருந்தார் என்று நினைக்கிறேன். 🙂
நல்ல பதிவு(கள்), அருமையான படங்கள்.
பதற்றத்திலும் நல்ல இயற்கையழகைத் தவறவிடவில்லை நீங்கள்!
செல்வா,
நான் ஓரிருமுறை பேருந்து மாறி ஏறி, நிறுத்தம் தவறி இறங்கும்போதே வீட்டில எள்ளும்/கொள்ளும் வெடிக்கும்,
இவ்வளவு செய்து எப்படி உங்கள வீட்டோட வச்சிருக்காங்கன்னு பெரிய பெருமூச்சுதான் வரது, என்ன பண்ண:)
மலைப்பாதையும் மருட்பயணமும் (2002) (4) :
என்று தமிழ்மணத்தில் பார்த்தவுடன் டென்ஸனாய்ட்டேன். ஒரு பக்கம் 200, 300ன்னு பின்னூட்டப்போட்டின் நடந்திட்டிருக்கும்போது சந்தடிசாக்குல 2002ஆ என்று:)
கண்ணன் நன்றி. அன்பு, குடும்பத்துல குழப்பம் உண்டு பண்ணாதீங்க! சத்தம் போடாம நீங்க பெருமூச்சு விட்டுக்குங்க :-). அப்புறம் 2002 பின்னூட்டமெல்லாம் வாய்ப்பே இல்லை. அதிகபட்சம் இருபது தாண்டாது இங்கே!