நீலமலையில் மூன்று சகோதரிகள் (2002)
May 15th, 2005 by இரா. செல்வராசு
சிட்னியில் இருந்து மேற்கே சுமார் நூறு கி.மீ தூரத்தில் ‘கட்டூம்பா’ என்று ஒரு சிறுநகரம் இருக்கிறது. ஆஸ்திரேலியப் பழங்குடியினரை ‘அபோரிஜனல்ஸ்’ (Aboriginals) என்று வழங்குகிறார்கள். அபோரிஜனல் மொழியில் ‘கெடும்பா’ என்றால் ஒளிக்கும் நீர் வீழ்ச்சி (shining falling waters) என்று பொருளாம். கெடும்பாவில் இருந்து மருவி வந்திருக்கிறது கட்டூம்பா. ஆஸ்திரேலியாவில் பல இடங்களில் இதுபோன்ற பழமையான, பழங்குடியினரின் ஊர்ப் பெயர்களே இன்னும் வழக்கில் இருக்கின்றன. உதாரணத்திற்கு, கேன்பரா (சந்திக்கும் இடம்), வாகா வாகா (காக்கா காக்கா), கூயாங் (ஓய்வுக் கூடாரம்), குரீ குரீ (விரைந்து விரைந்து).
கட்டூம்பாவை அடுத்து இருக்கிறது ‘புளூ மவுண்டன்ஸ்’ என்னும் நீலமலைத்தொடர். இது ஒரு காரணப் பெயர். இப்பகுதியில் நிறைந்திருக்கும் யூக்களிப்டஸ் மரங்களின் இலைகளில் இருந்து நூகத் துகள்களாய் (micro particles) வெளிவந்த எண்ணெய்த் துகள்கள் காற்றில் பரவிக் கிடக்கின்றன. அவற்றில் பட்டுத் தெறிக்கும் சூரிய ஒளிக் கதிர்கள் ஒரு நீலப் புகையைச் சுற்றுவெளிக்கு அடித்து வைத்திருப்பது ரம்மியமான ஒரு காட்சி.
நமது ஊரிலும் இதே காரணத்தினால் தான் ‘நீலகிரி’ என்று பெயர் வந்திருக்கும். ‘நீல்கிரீஸ்’ என்று தூயதமிழில்(!) சொன்னால் தான் சிலசமயம் நமக்குப் புரிகிறது! என்ன செய்வது? ‘ப்ளூமவுண்டன் எக்ஸ்பிரஸ்’ என்னும் விரைவுத் தொடருந்தில் சில முறைகள் பயணித்திருகிறேன். ஆனால் அது நீலகிரியின் எதிர்த்திசையில் சென்னை நோக்கிய பயணம். நீலகிரிக்கோ ஒரே ஒரு முறை தான் சென்றிருக்கிறேன்.
நீலமலைத் தொடரில் கட்டூம்பா நகருக்கு அருகே அமைந்திருக்கிறது ஜேமிசன் பள்ளத்தாக்கு. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் இந்தப் பகுதியில் வாழ்ந்த பழங்குடியினருக்கும் கட்டூம்பா என்றே பெயர். இந்தப் பகுதியில் அவர்களையொட்டிய சுவாரசியமான இடுகதைகளும் (myths & legends) நிலவுகின்றன.
மீகனி, விம்லா, குன்னெடூ என்று மூன்று சகோதரிகள். கட்டூம்பா பழங்குடி வம்சத்தைச் சேர்ந்த அழகான பெண்கள். அருகிலேயே இருந்த ‘நெப்பியன்’ என்னும் இன்னொரு பழங்குடி வருக்கத்தில் இருந்த மூன்று சகோதரர்கள் மேல் காதல் கொள்கிறார்கள். காதலர்கள் ஒருவரை ஒருவர் விரும்பி மணம் செய்து கொள்ள விழைந்தாலும், அவர்களுடைய பழங்குடிச்சட்டங்கள் அதற்கு இடங்கொடுக்காமல் தடை செய்கின்றன.
அதனால், நெப்பியன் சகோதரர்கள் சண்டையிட்டுக் கட்டூம்பா சகோதரிகளை அடைய முற்பட, இரு பழங்குடியினருக்கும் இடையே பெரும் போர் மூள்கிறது. அந்தப் போரின் போது சகோதரிகளின் உயிருக்கே ஆபத்து நேர்ந்துவிடும் என்று அஞ்சி அவர்களின் தந்தை – ஒரு மந்திரக்காரர் – அவர்களைக் காக்க இப்படிக் கல்லாய் மாற்றி விடுகிறார். போர் முடிவில் அவர்களை மீட்டு விடலாம் என்று எண்ணியிருக்க, போரிலே அடிபட்டு இறந்து போகிறார். அதனால் மூன்று சகோதரிகளும் மீள வழியின்றி இப்படிக் கல்லாகவே அமைந்துவிட்டனர்.
பாவம் நெப்பியன் குடிச் சகோதரர்கள் – கல்லாய்ப் போன காதலியரைப் பார்த்துக் கண்ணீர் விட்டிருப்பரோ? இல்லை போரிலேயே அவர்களும் போய் விட்டார்களோ?
இந்த மூன்று சகோதரிகளை ஒட்டி இன்னொரு இடுகதையும் வழக்கத்தில் இருக்கிறது. மீகனி, விம்லா, குன்னெடூவும் அவர்களின் மந்திரவாதித் தந்தை தயாவனும் தான் பொது இழைகள். கதை அதன் பிறகு வேறு வழியில் திரும்புகிறது.
இந்தப் பள்ளத்தாக்கில் வசிக்கும் பன்யப் என்று ஒன்று (அது என்ன என்று தெரியவில்லை) சகோதரிகளைத் தாக்கி விடக்கூடாது என்று ஒரு மலையருகே ஒளிந்திருக்கச் செய்கிறார் தந்தை. ஆனால் ஒருநாள் அவர்கள் அந்த மலையில் இருந்து தவறி விழுந்துவிடும் அபாயகரமான நேரத்தில் அதைத் தவிர்க்க இப்படிக் கல்லாகும்படி செய்துவிடுகிறார். அல்லது அவர்கள் விழ இருக்கும் அபாயத்தில் பயந்து கத்திவிட அந்தச் சத்தம் கேட்டுத் தாக்க வரும் பன்யப்-இடமிருந்து காக்கக் கல்லாக்கி விடுகிறார். பன்யப் அவரைத் துரத்த, தானும் ஒரு பறவையாய் (Lyrebird?) மாறி அங்கேயே சுற்றுகிறார். ஆனால் அந்தப் பறவை மந்திரக் கோளைக் கீழே தவற விட்டுவிடுகிறது. அன்றிருந்து மீள முடியாமல் கல்லாகவே சகோதரிகள் இருக்கிறார்கள். அந்த மந்திரக் கோளைத் தேடிக் கொண்டு அந்த தந்தைப் பறவையும் இன்னும் அந்தப் பகுதியில் சுற்றிக் கொண்டிருக்கிறது.
உண்மையில் பல நூறாயிரம் (மில்லியன்) வருடங்களாகச் சுண்ணாம்புக் கற்களில் அரிப்பு ஏற்பட்டு உருவான இந்தக் கல்லமைப்புக்களுக்கு இப்படிக் கதைகள் உருவாகி இருக்கின்றன என்பது சுவாரசியம் தான். இன்னும் சிறு சிறு வேறுபாடுகளுடன் பல கதைகள் உண்டு. இப்படி நிலவும் கதைகளை எல்லாம் தொகுத்தால் இன்னொரு கட்டூம்பாயணமே உருவாக்கி விடலாம். (பிறகொரு நாள் மீள்வாசிப்பு செய்திருக்கலாம் 🙂 ).