மெல்போர்ன் குறிப்புகள் (2002)
May 10th, 2005 by இரா. செல்வராசு
மெல்போர்ன் அருகே இருக்கும் ஒரு கடற்கரைப் பகுதியில் இரவில் கூட்டம் கூட்டமாய்ப் பென்குயின்கள் கரைக்கு வரும் என்று பார்க்கப் பல மணி நேரங்கள் காரோட்டிச் சென்றிருந்தோம். எங்களைப் போன்றே பெருங்கூட்டம் கூடியிருந்தது. சில மணி நேரங்கள் இருட்டட்டும் என்று காத்திருந்து பார்த்தபோது, அவ்வளவாய் ஒன்றும் வரவில்லை. கடைசியாய், போனால் போகிறது என்று ஒரு சில பென்குயின்கள் மட்டும் காட்சி தந்தன. போகிறது போவென்று குளிருக்கு இதமாய் ஒரு தக்காளி சூப் குடித்துவிட்டு, பென்குயின் வேடமணிந்த ஒன்றைக் கட்டிப் பிடித்துவிட்டு (நானில்லைங்க, குழந்தை 🙂 ) வந்துவிட்டோம்.
மெல்போர்ன் நடுநகர்ப் பகுதி (City Center) ஒரு ஒழுங்காய் அமைந்திருக்கிறது. செவ்வக வடிவத்தில் குறுக்கும் நெடுக்குமாய்த் தெருக்கள். வெளிப்புறமாய் இருக்கிற தெருவில் ஒரு குற்றுந்து இலவசமாய் ஆட்களை ஏற்றிச் சென்று சுற்றிக் கொண்டிருக்கிறது. நகரின் முக்கிய பகுதி ஒரு ஆற்றங்கரையின் அருகே அமைந்திருக்கிறது. ஆற்றங்கரையை அழகாகப் பயன்படுத்தத் தெரிந்திருக்கிறது இவர்களுக்கு. கரையை ஒட்டிப் ‘ப்ராமனாடு’ என்று அமைத்திருக்கிற இடங்களில் நிறைய உணவகங்களும் பிற பொழுதுபோக்கு அம்சங்களும் (இசைக்கேற்றபடி எழுந்து வீழும் ஒரு செயற்கை நீர்ப்பொழிவு) உண்டு. இரண்டு கரைகளையும் இணைக்கும் அழகான நடைப்பாலம் தட்டையாக (இலக்கிய ரசம் சொட்டுதா? 🙂 ) இல்லாமல் சற்று மேலெழுந்து வளைந்த மாதிரி இருக்கிறது.
ஆற்றின் மீது ஒரு விசைப்படகுச் சுற்றுலாப் பயணமும் சென்றோம். அது ஒன்றும் அவ்வளவு ரசிக்கத்தக்கதாய் இல்லை. படகுத்தலைவன் தலபுராணங்களைச் சொல்லியபடி வந்தார். குறிப்பிடத்தக்க ஒன்று மெல்போர்ன் கிரிக்கட் மைதானம். மேலிருக்கும் படத்தில் (“பகலிலே மெல்போர்ன்”) இடது மேல் கோடியில் பார்த்தால் தெரியும். நேரிலேயே சென்று பார்த்திருக்க முடியும் என்றாலும் எங்களுக்கு அவ்வளவு கிரிக்கெட் பற்று (அதாவது பித்து!) இருக்கவில்லை. இரவில் மெல்போர்ன் காட்சியை வசந்தனின் பதிவில் பார்க்கலாம். இந்தப் படத்தை எடுத்த உயரக் கட்டிடமும் இந்த நகர் நடுப் பகுதியிலேயே இருக்கிறது (ரியால்டோ கட்டிடம்?).
நடுநகர்ப் பகுதியின் முக்கிய தெருக்களில் பெரிய அளவில் கடைவீதி அமைந்திருக்கிறது. ஒரு தெருவில் ஒரு கடைக்குள் நுழைந்தால், உள்ளேயே பல கடைகள் தாண்டி வெளியே வரும்போது வேறு தெருவாய் இருக்கும். வெளியே சாலைகள் சுத்தமாகவும், பராமரிக்கப் பட்டும் இருக்கின்றன. அழகான பூந்தோட்டங்கள்; செடிகொடிகள்; பசும் புல்வெளிகளில் வெண்புறாக்கள். நடைபாதையிலே இடப்பட்டிருக்கிற சதுரக் கற்களிலே கலைப்படங்கள் செதுக்கப் பட்டிருக்கின்றன. யாரும் அதிகம் கண்டுகொள்ளவில்லை என்றாலும், அவை என்னை மிகவும் ஈர்த்தன.
பல நகரங்கள் போல இங்கும் இரட்டைக் குதிரை பூட்டிய வண்டிச் சவாரியும் உண்டு. அப்பா! எவ்வளவு பெரிய குதிரைகள்! வண்டிச் சவாரி சாதாரணமாய் கிளம்பிய இடத்தில் திருப்பிக் கொண்டு வந்து விட்டுவிடும் என்றாலும், நடந்து களைத்த நாங்கள் எங்கள் தங்குமிடத்திற்குச் கொண்டு விடச் சொல்லிக் கேட்டுப் பார்த்தோம் (குதிரை டாக்ஸி!). ஏற்றுக் கொண்டனர்!
இந்த முக்கிய பகுதியின் ஒரு கோடியில் தொடருந்து (ரயில்) நிலையம் இருக்கிறது. பழங்காலத்துக் கட்டிடமாய் பொன்னிறத்தில் பிரகாசிக்கிறது. ஆற்றங்கரையில் ஓரம் அமைந்திருக்கிறது. இந்த இடத்தில் தான் நான் மனைவி குழந்தைகளைத் தொலைத்தேன் என்று வரலாறு எழுதப் பட்டிருக்கும். நல்ல வேளை!
எங்களின் ஆற்றுமேல் படகுப் பயணம் முடிந்து இருகரைகளில் எங்கு வேண்டுமானாலும் இறங்கிக் கொள்ளலாம் என்று இருந்த போது, மனைவி குழந்தைகளை ஒரு புறம் இறக்கிவிட்டுவிட்டு நான் மட்டும் அடுத்த பக்கம் போய்த் தள்ளுவண்டியை எடுத்து வருவதாய்ச் சென்றேன். வந்து பார்த்தால் குடும்பத்தைக் காணோம். இந்த ரயில்நிலையம் முன்பு தானே நிற்கச் சொன்னேன். எங்கே போனார்கள்?
சுற்றிச் சுற்றிப் பார்த்தும் கிடைக்கவில்லை. நேரம் ஆக ஆகப் பதற்றம் அதிகரிக்கிறது. போலீசுக்குச் சொல்லலாமா என்று வினவ, தொலைந்த 24 மணி நேரம் ஆனால் தான் அவர்கள் வந்து பார்ப்பார்கள் என்று பதில் கிடைத்தது. இன்னும் இரண்டு மணி நேரத்தில் ஊரை விட்டுக் கிளம்ப வேண்டுமே! ஒருவேளை நிலையத்திற்கு வெளியே நிற்கச் சொன்னதை மறந்து உள்ளே சென்றிருப்பார்களோ என்று உள்ளே சென்றும் தேடிப் பார்த்தேன். காணோம். டிக்கட் பரிசோதகராய் இருந்த ஒருவர் தமிழராய்த் தெரிந்தார். கிருஷ்ணன் என்று பெயர்ப்பலகை குத்தியிருந்தார். பெரிதாய் ஒன்றும் உதவவில்லை என்று அவர்மீது எனக்கு அதிருப்தி. (என்ன செய்திருக்க முடியும் என்று இப்போது தோன்றுகிறது). உள்ளே நிலையத்தில் சென்று ஒலிபெருக்கியில் அறிவிக்கச் சொல்லிக் கேட்டேன். பல கேள்விகளுக்குப் பிறகு அவர்கள் செய்த அறிவிப்பு எனக்கே கேட்கவில்லை. இது ஒத்து வராது என்று மீண்டும் மூன்று சுற்று சுற்றினேன்.
கையில் செல்பேசி இருந்தது. இருந்தாலும் தற்காலிகமான ஒன்றென்பதால் மனைவிக்கு எண் தெரியாது. கையில் காசும் இல்லாமல் (கைப்பை காரில்) குழந்தைகளோடு என்ன செய்து கொண்டிருப்பார்களோ? மதிய உணவு நேரமும் நெருங்கித் தாண்டிவிட்டது.
தங்குமிடத்தைக் காலையிலேயே காலி செய்துவிட்டாலும் கார் இன்னும் அங்கே தான் நின்று கொண்டிருந்தது. எதற்கும் அங்கு தொலைபேசிப் பார்க்கலாம் என்று கேட்டபோது இரண்டு மூன்று முறை பயனேதுமில்லை.
இறுதியாய், தொலைந்த இரண்டு மூன்று மணி நேரம் கழித்து அவர்கள் மூவரும் இலவசக் குற்றுந்தில் ஏறித் தங்குமிடம் வந்து அமர்ந்திருந்தார்கள். தெரியாத ஊரில் கொண்டு வந்து விட்டுவிட்டு வேண்டுமென்றே மொத்தமாய்த் தொலைத்துவிட்டு ஓடிவிட்டேன் என்று நினைத்திருக்க வேண்டும்.
மீண்டும் சந்தித்ததும், நிம்மதிப் பெருமூச்சும் எள்ளும் கொள்ளும் வெடித்தும் எல்லாமுமாய்க் கலந்து எங்கள் அன்பு (!) வெளிப்பட்டுக் கொண்டது. அது ஒரு அனுபவம்!
//மீண்டும் சந்தித்ததும், நிம்மதிப் பெருமூச்சும் எள்ளும் கொள்ளும் வெடித்தும் எல்லாமுமாய்க் கலந்து எங்கள் அன்பு (!) வெளிப்பட்டுக் கொண்டது. அது ஒரு அனுபவம்! //
:))
//எவ்வளவு பெரிய குதிரைகள்!//
அமெரிக்க யானைக்குதிரைகளைப் பார்க்கும்போதெல்லாம் படமெடுத்துப் போடவேண்டுமென்றிருக்கும்.
இரண்டு மூன்று மணி நேரத்துக்கு வெறும் எள்ளு கொள்ளு என்றால் பரவாயில்லை போலிருக்கே. இங்கே அரை மணி நேரம் கடைத்தெருவில் தொலைத்ததற்கு பட்டாசு வெடிக்கிறது. என்னத்தச் சொல்ல :))
இதுக்குத்தான் சொன்னேன், பென்குவின் பார்க்க எங்க ஊருக்கு வந்துருக்கலாம்னு!!!!
பதில் நீளமாப் போயிடுமேன்னு என்னோட பதிவுலே இதைப் பத்தி போடறேன்.
வரலாறை – மாத்தீட்டங்கன்னு சொல்லுங்க:)
தங்கமணி நன்றி. சுந்தர் எள்ளு கொள்ளு முதல் தவணை தான். அதுக்கப்புறமும் இருக்குதே.
துளசி, பென்குயின் பத்தி அழகா எழுதி இருக்கீங்க. நாங்களும் நீங்க சொன்ன மாதிரி, குளிரிலே இருட்டிலே உட்கார்ந்துக்கிட்டு விருந்தாளிக்காக ரொம்ப நேரம் காத்திருந்தோம்.
அன்பு, நீங்க வேற. வரலாறு ஆகாமப் போயிடுச்சு. சின்னக் கதையாச்சு. அவ்வளவு தான். இல்லையென்றால் என் வாழ்க்கை அர்த்தம் இழந்திருக்கும் (ஹிஹி… எங்க வீட்டுல இதப் படிப்பாங்கன்னு தெரியும்! 🙂 )
செல்வராஜ்! போகிறவழியில் உங்கள் வீட்டிற்குள் வந்து நீங்கள் சொல்வதை(பதில் பேசாவில்லையே தவிர)கேட்டுவிட்டுத்தான் போகிறேன்!அத்தனை சுவாரஸ்யம்!போட்டோக்கள்!
சொல்லவும் வேண்டுமா?!.
என் வீட்டில் எப்போ கிரகப்பிரவேசம் செய்துள்ளேன் என்று கவனித்தீர்களா செல்வராஜ்?
குடிபுகுந்ததில் இருந்து ஒழுங்காவே இன்னும் சமையல் ஆரம்பிக்கலை.. அதான் இப்படி சத்தம் போடாமல் 🙂
வந்து சென்றதற்கு நன்றி செல்வராஜ்.
அன்பு
மீனா.
பதிவு நல்லாயிருக்கு.
என்ர படத்தையும் இதுக்க இணைச்சதுக்கு நன்றி.
இங்கே காவல்துறைக்கு அதிகம் வேலையில்லை என்பது தான் என் கணிப்பு.
உங்கள் பயணக்குறிப்புகள் படிக்க சுவையாக இருக்கின்றன
அருள்
படிக்க சுவாரஸ்யமான முறையில் பயணக் குறிப்புக்களை எழுதுகிறீர்கள்.
எப்படியோ எல்லோரையும் பத்திரமாத் திருப்பிக் கூட்டீட்டு வந்திட்டீங்க ஆஸ்திரேலியாவிலிருந்து. இப்பெல்லாம் இங்கிலாந்துப் பயணத்துக்கு மூணு பேரும் ஏன் உங்களைத் தனியாவே அனுப்பி வைக்கறாங்கன்னு புரிஞ்சுபோச்சு :))
அருமை செல்வராஜ். போட்டோ தான் அனுப்ப மாட்டேங்கிறீங்க. :-))
உள்ளூர்த் திருவிழாக் கூட்டங்களில் தொலைத்ததைக் கண்டுபிடிப்பதற்குள் போதும் போதும் என்றாகி விடுகிறது. தொலைந்தவர்கள், தொலைத்தவர்கள் இவர்களில் யாருக்கு குற்ற உணர்வு, பதைபதைப்பு அதிகம் இருக்கும்? தொலைந்தவர்கள், தொலைத்தவர்கள் என்ற சொல்லாடல் சரியா?
உடன்வந்தவர்களைப் பிரிந்து தேடி அலைவது மிகவும் கொடுமைதான்.
பிரிந்தவர் மீண்டும் சேர்ந்திடும்போது அழுதால் கொஞ்சம் நிம்மதி..?
மீனா நன்றி. பார்த்தேன் ரொம்ப நாள் முன்பே ஆரம்பித்து அப்புறம் சும்மா வச்சுட்டீங்க போலிருக்கு.
வசந்தன், அருள், செல்வநாயகி நன்றி. என்னை நம்பி மூவரும் வராததற்கு இன்னும் கொஞ்சம் காரணங்கள் எல்லாம் இருக்கு 🙂 (அடுத்த இடுகையில் இருக்கும் பாருங்க).
விஜய், உங்களை மறக்கல்லே. விரைவில் அனுப்புகிறேன்.
ராம்கி, யாருக்குக் குற்ற உணர்வு அதிகமா இருக்கும் அப்படிங்கறது வித்தியாசமான பார்வை. அட! உண்மைதானேன்னு தோணுச்சு. நன்றி.