சிட்னி குறிப்புகள் (2002)
May 8th, 2005 by இரா. செல்வராசு
சிட்னி சுற்றுலாவிற்கு ஏற்ற ஒரு நகரம். நடுநகர்ப் பகுதியிலேயே பார்க்கவென்று நிறைய இடங்கள் இருக்கின்றன. சில ஆண்டுகள் ஆனபின்னும் இன்னும் நினைவில் இருக்கிற இடங்கள் ஓல்ட் சிட்னி, டார்லிங் ஹார்பர் பகுதிகள். சிட்னி என்றவுடன் அடையாளச் சின்னங்களாய் முதலில் படுவது ‘ஆபரா ஹவுஸ்’ – இன் எழில்மிகு வடிவமும் ‘ஹார்பர் பிரிட்ஜ்’ எனப்படும் துறைமுகப் பாலமுமாகத் தான் இருக்கும்.
ஓல்ட் சிட்னி என்னும் பழைய சிட்னிப் பகுதியில் தங்கினால் நடந்து போகும் தூரத்தில் விசைப்படகுத் துறை இருக்கிறது. விசைப்படகில் ஏறி ஒரு உலா சென்றால் தூரக்காட்சியாக ஆபரா ஹவுஸ் மற்றும் வானவில் பாலம் எல்லாவற்றையும் ஒரே பின்புலத்தில் வைத்துப் பார்த்துக் கொள்ளலாம்.
சிட்னியின் தென்புறத்தையும் வடக்குப் பகுதியையும் இணைக்கும் இந்தப் பாலம் கட்டும் வரை இவையிடையே போக்குவரத்துக்கு விசைப்படகுகளே உதவின. இப்போது, கடலடியில் நீண்ட சுரங்கப்பாதைகளும் அமைக்கப் பட்டிருக்கின்றன. இந்தப் பாதைகள் பல மைல் நீளம் கொண்டதாக இருக்கின்றன.
ஊரைச் சுற்றிச் செவ்வகப் பாதையில் ஒரு குறுந்தொடருந்து (மினி ரயில்) சுற்றிக் கொண்டே இருக்கிறது. ஒரு சுற்றுலாப் பேருந்தில் ஏறி எல்லா முக்கிய இடங்களையும் சில மணி நேரங்களில் பார்த்து வரலாம். நீர்நிலைக்காட்சியகத்தில் (acquarium) பிற இடங்களில் காண முடியாத பிரகாசமான நிறத்தில் மீன்களையும் கோரல் ரீஃப் பகுதி வாழ் உயிரிகளையும் காண முடிகிறது. அப்பா! என்ன நிறங்கள்!
விலங்கியல் பூங்காவிற்குச் செல்வதற்கும் கூட ஒரு விசைப்படகில் செல்லலாம். அங்கே சென்று கொண்டிருந்த பாய்மரப் படகுகள் நீல நிறத்து வானத்தின் பின்னணியில் பார்க்க அழகாக இருந்தன.
ஓல்ட் சிட்னி பகுதியில் வார இறுதிகளில் சந்தை நடக்கிறது. ஜேஜே என்று மக்கள் வெள்ளம் வந்து போகிறது. கடற்காற்று கேசத்தைக் கலைக்க, சுட்ட சோளக்கருதில் எலுமிச்சைச் சாறு பிழிந்து சாப்பிட அருஞ்சுவையாய் இருக்கிறது. அருகே மிட்டாய் செய்வது எப்படி என்று காட்ட ஒரு கடை இருக்கிறது. குழந்தைகளைக் கவர ஒரு பொம்மலாட்டக் காட்சியகமும் உண்டு.
டார்லிங் ஹார்பர் பகுதியில் எப்போதும் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. எல்லா வயதினருக்கும் செய்ய ஏதேனும் ஒன்று இருக்கிறது. சீன மக்களையும் அதிகம் பார்க்க முடிகிறது. நாங்கள் சென்றிருந்த சமயம் சீனப் புத்தாண்டிற்கெனக் கொண்டாட்டங்கள் நடந்து கொண்டிருந்தன. அருகிருக்கும் ஆதிவாசித் தீவினர் நடனம் என்று மேடை மீது ஆடிய ஆட்டத்தை இரண்டு படம் பிடித்தாலும் இங்கு பதிய வேண்டாம் என்று விட்டுவிட்டேன். 🙂
டார்லிங் ஹார்பரில் டார்லிங்குகளோடு சென்று சாப்பிட, நடனமாட, படகோட, அல்லது சும்மா உட்கார்ந்து காற்று வாங்க, என்று நிறைய இடங்கள் உண்டு. ஜாஃப்ஃபிரன் (Zaffron) என்றொரு இந்திய உணவகத்தில் கிடைக்கிற கடலுணவு முன்பண்டம் (seafood appetizer) அருமையாய் இருக்கிறது.
பெரிய உணவகங்களாய் இருந்தாலும் இங்கும் எடுப்புச் சாப்பாடு வாங்கினால் விலையில் 10-15 விழுக்காடு கழிவு உண்டு. நாலு வயதும் இரண்டு வயதுமாய் இரண்டு பெண்களோடு சாப்பிட எடுப்புச் சாப்பாடு தான் வசதி. தங்குமறைக்கு வாங்கிச் சென்று செய்தித்தாளை விரித்துப் போட்டுச் சம்மணங்காலிட்டுச் சாப்பிடும் வசதிக்குச் செலவும் குறைவென்றால் பிறகென்ன கவலை?
ஈடுபட நிறையவும், மக்கள் நடமாட்டம் நிறையவும் இருக்கிறது. எல்லாம் நன்றாக இருக்கிற பேரூர்களில் குறைகள் இல்லாமல் இருக்குமா? கூடவே வழிப்பறி அபாயங்களும் உண்டு என்பதை நேரடி அனுபவத்தின் மூலம் அறிந்தோம். குழவியர் தள்ளுவண்டியில் மனைவியின் கைப்பையை மாட்டி வைத்துவிட்டு, நாங்கள் பாட்டுக்குப் பராக்குப் பார்த்துக் கொண்டும் பேசிக் கொண்டும் இருந்தோம். ஒரு காவற்பெண்மணி விரைவாக நடந்து வந்து “உங்கள் பை பத்திரமாக இருக்கிறதா?” என்றார்.
அப்போது தான் பார்த்தோம் மாட்டி வைத்த இடத்தில் பையைக் காணோம்! யாரோ ஒரு பெண்மணி அலுங்காமல் ‘லவட்டிக்’ கொண்டு போய்விட்டார். அதை எப்படியோ பார்த்து விட்ட காவற்பெண் விரைந்து வர, மாட்டிக் கொள்ள வேண்டாம் என்று சற்றுத் தள்ளிப் பையைக் கீழே எறிந்து விட்டு கூட்டத்தில் அந்தப் பெண் ஓடி மறைந்துவிட்டாராம். ஓடிச் சென்று பையை மீட்டுச் சோதித்துப் பார்த்தோம். நல்ல வேளையாக எதுவும் (பணம், கடனட்டைகள், வங்கிக் காசோலைகள் எல்லாம் அதில் இருந்தன) களவு போயிருக்கவில்லை.
தெரியாத ஊரில் இவற்றை இழந்திருந்தால் பெரும் பிரச்சினைக்கு ஆளாகியிருப்போம். நல்ல வேளை! காவலதிகாரி காப்பாற்றினார். அந்தக் காவலதிகாரியின் பெயரைக் கூடத் தெரிந்து கொள்ளாமல் வந்துவிட்டோமே என்று கொஞ்ச நாள் மனது அடித்துக் கொண்டது.
பின்குறிப்பு: சிட்னியில் இருக்கிற பெருந்திரைக் காட்சியகத்தில் (IMAX) நாங்கள் பார்த்த படம் பாண்டா பற்றியது. (சில நாட்கள் முன்பு அது குவோலா பற்றியது என்று நான் தவறாக எழுதியது தெரிந்திருந்தாலும் பெருந்தன்மையாய் மன்னித்து விட்டுவிட்ட உள்ளங்களுக்கும் சுட்டிக் காட்டிய மனைவிக்கும் நன்றி! :-). ஒரு குவோலாவிற்கும் பாண்டாவிற்கும் கூட வித்தியாசம் தெரியாத ஆள்!).
//பெரிய உணவகங்களாய் இருந்தாலும் இங்கும் எடுப்புச் சாப்பாடு வாங்கினால் 10-15 விழுக்காடு கழிவு உண்டு. //
என்ன கழிவு?
ஊப்ஸ்… discountக்குத் தள்ளுபடின்னு எழுதலாம்னு நெனச்சேன். சமீபத்துல ‘கழிவு’ன்னு படிச்சது (பத்ரி?)சரியா இருக்குமோன்னு எழுதிட்டேன். ‘கழிவு’ தப்பா?
சாப்பாட்டுல ‘கழிவு’ங்கறது கொஞ்சம் தப்பர்த்தம் குடுக்குதுங்கறது இப்போ தெளிவாத் தெரியுது! (விலையில் அப்படிங்கறத சேர்த்துடறேன். நன்றி).
ரொம்ப வருடங்களாய் ஆஸ்திரேலியா போக வேண்டும் என்கிற ஆவல், திரும்பவும் மனதில் விதை விட்டுள்ளது,நன்றி உங்களால் 🙂
சாப்பாட்டுல ‘கழிவு’ங்கறது கொஞ்சம் தப்பர்த்தம் குடுக்குதுங்கறது இப்போ தெளிவாத் தெரியுது
தமிழ்நாட்டு சஞ்சிகைகளை படிக்கும் பழக்கம் இருந்த காலத்தில்,பின்னட்டையில் ஆடி மாதத்து துணி தள்ளுபடி குறித்த விளம்பரத்தை “ஆடி கழிவு” என போட்டிருந்ததை கண்டுள்ளேன் 🙂
//ஓடிச் சென்று பையை மீட்டுச் சோதித்துப் பார்த்தோம்.// எனக்கும் வெளியடங்களுக்கு போகும் போது
இந்த பயம் இருந்ததுண்டு. ஜீன்ஸ் பேன்ட் போடுவதில் ஒரு வசதி (முன் பாக்கெட்).
ஜீன்ஸ் பாக்கெட் போல் ஒரு நண்பனில்லை
அவன் அடி தொழ மறுப்பவர் மனிதரில்லை! மண்ணில் மனிதரில்லை.
//ஒரு குவோலாவிற்கும் பாண்டாவிற்கும் கூட வித்தியாசம் தெரியாத ஆள்!//
இதிலே ஆள் யாரு? 😛
என்னமோ செய்யுங்க ; மான்செஸ்டருகுறீங்க; சிட்னிங்குறீங்க நடத்துங்க.
விசைப்படகு வேகத்தில காதுல புகை.
ஆஸ்திரேலியாவை விட நீங்கள் எடுத்திருக்கும் படங்களை தான் நான் அதிகம் நேசிக்கிறேன். இந்த மாதிரி படம் எடுக்கவாவது ஆஸ்திரேலியா போக வேண்டும் :-). சுருங்காத படக்கோப்பை njvijay at halwacity dot com-க்கு அனுப்புங்களேன். முன்நன்றிகள் உரித்தாகுக. panoramic view அருமையாக இருக்கிறது. என்ன கேமிரா பயன்படுத்துகிறீர்கள்?
பதிவுக்கும், தகவல்களுக்கும் நன்றிங்க செல்வா. நீங்க சொல்வதிலும், படங்களும் (நீஙக் போடாத படம் வேற இருக்குது:) சிட்னிக்கு ஒரு முறை உலா போகலாம்போல் தூண்டுகிறது, பார்க்கலாம்.
அப்புறம் வழக்கம்போல உங்கள் கைவண்ணம்:
குறுந்தொடருந்து (மினி ரயில்)
நீர்நிலைக்காட்சியகத்தில் (acquarium)
கடலுணவு முன்பண்டம் (seafood appetizer)
குழவியர் தள்ளுவண்டியில்
போன்ற புதியசொற்கள் தெரிந்துகொண்டேன்.
எடுப்புச் சாப்பாடு (நாங்கல்லாம் தமிழ்ல்ல டேக் அவே-ன்னு சொல்லுவோம் இங்க சிங்கப்பூர்ல:)
கழிவு- உணவோட வந்ததால அப்படி தெரிஞ்சாலும்.. நானும் ஆடிக்கழிவு போன்ற விளம்பரம் பார்த்திருக்கிறேன்.
பி.கு:
(உங்க வீட்டம்மணிக்கு: ) இங்கு நான் எழுதியெதெல்லாம் பாராட்டுக்கள், பாராட்டுக்கள், பாராட்டுக்கள் மட்டும்தான்:)
அப்புறம் இன்னொன்னு… என்னோட டெஸ்க்டாப்ல* நீங்க எடுத்த படத்த வச்சுக்கிறதுக்கெல்லாம் யாரோட அனுமதியும் வேணுமா என்ன!?
தள்ளுபடிக்கு ‘கழிவு’ பாவிப்பது சரிதான். சாப்பாட்டிற்குள் அது வந்ததால்தான் கேட்டேன். சாப்பிட்ட மிச்சச் சாப்பாட்டையும் கழிவுச் சாப்பாடு என்றுதானே சொல்லுறது?:p
கார்த்திக், இது பழைய கதைங்க. மூணு வருஷம் ஆச்சு. வசந்தன் ஆஸ்திரேலியா பத்தி எழுதியதால உந்தப்பட்டு இதெல்லாம் இப்போ வெளியே வருது. இன்னும் ரெண்டு பதிவு போடாம விடறதில்லைன்னு இருக்கேன். அடுத்த வாரம் சுவீடனுக்கு வேணும்னா போறேன். (இன்னும் கொஞ்சம் புகை வருதா? 🙂 ). அஞ்சு நாலும் வேலையா இருக்கும்கிறதால எழுத ஒண்ணும் இருக்காதுன்னு நினைக்கிறேன். (அப்படி உட்டுர்ர ஆளா நீங்கன்னு சில பேர் கிண்டல் பண்றாங்க!). ஸ்டாக்ஹோம், வாஸ்டெராஸ் பக்கம் யாராவது வலைப்பதிவர்கள் இருந்தால் சந்திக்கலாம். அப்புறம் அது பத்தி எழுதலாம். ஆனால், யாரும் இருப்பதாய்த் தெரியவில்லை.
வாசன் நன்றி. இப்படி ஆவலைத் தூண்டி விடுவதாய் இருக்கிறது’ங்கறது கேட்க நல்லா இருக்கு.
அன்பு, விஜய், படத்தப் பத்தி சொன்னதுக்கு நன்றி. இவையெல்லாம் மூணு வருஷம் முந்தி வாங்கின Canon (Powershot?) வச்சு எடுத்தது. விஜய் தனியா அனுப்பி வச்சுடறேன். அன்பு, புது சொல்லெல்லாம் நான் சும்மா முயற்சி பண்றது. சிலது நல்லா இருக்கு. சிலது சரிவராதுன்னு நானே நினைக்கிறேன். (உ-ம் acquarium). சரியானது வேணும்னா இராம.கி மாதிரி இருக்கவங்க கிட்ட தான் கேட்கணும்.
வசந்தன், “பகலிலே மெல்போர்ன்” போடலாம்னு இருக்கேன் :-).