சிட்னியும் ராமாஸாமிகளும்
May 5th, 2005 by இரா. செல்வராசு
குறைந்தது மாநிலத்துக்கு ஒன்று என்று ஆஸ்திரேலியாவில் மிகப் பெரிய நகரங்கள் இருக்கின்றன. அவற்றுள் கிழக்குக் கரையோரம் இருக்கும் சிட்னி, மெல்போர்ன் இவை முக்கியமானவை. இவை போன்ற பெரிய நகரங்களை விட்டால் இடையில் குறுநகரங்கள் தான் இருக்கின்றன. அப்புறம் எங்கும் நிறைந்த காடு. அவ்வளவு தான். குறுநகரங்கள் சொல்லி வைத்தாற் போல் ஒரு இலக்கணத்துக்கு உட்பட்டவையாக இருக்கின்றன. குறுக்கும் நெடுக்குமாக நாலைந்து தெருக்கள். நகரின் நடுப்பகுதியில் கடைவீதி. தவறாமல் இந்திய உணவகம், தாய்லாந்து, சீன உணவகங்கள். இப்படி.
வழியில் தெரியும் ஈ காக்காயை ஒரு கையில் எண்ணி விட்டுச் சுமார் எட்டு மணி நேரப் பயணத்தில் சிட்னியில் இருந்து மெல்போர்னுக்குச் சென்றுவிடலாம். அப்புறம் போக்குவரத்து நெரிசலில் நகர்ந்து நகருக்குள் செல்ல ஒரு மாமாங்கமே ஆகி விடும். விரைந்தேகும் நெடுஞ்சாலைகளும் வேகத்தை மட்டுப் படுத்தக் காவற்காரரும் ஆஸியிலும் உண்டு. எனது ராசி அங்கும் சென்று ஒருமுறை வேகமாகச் சென்றதற்கு மாட்டிக் கொண்டேன். போனால் போகிறது அயலூர்க்காரன் என்று மன்னித்து விட்டுவிட்டார்கள் என்பது ஆச்சரியம் தான். அன்றே ஜெர்மனியைச் சேர்ந்த என் கும்பணிக்காரர் (குமு, பணி என்ற வேர்களில் இருந்து இந்தச் சொல் வரும் என்று எண்ணுகிறேன்; சமீபத்தில் இராம.கி.யின் ‘வளவில்’ பார்த்தேன்) ஒருவர் தானும் மாட்டிக் கொண்டதும் அவரையும் மன்னித்து விட்டுவிட்டார்கள். ஏதோ ஈஸ்டர் சமயம் என்று குடிபோதையில் ஓட்டுவோர் அதிகம் என்பதால் அதிகரித்தக் கண்காணிப்பில் இருவரும் மாட்டிக்கொண்டோம். குடிவாசமறியாதவன் என்று விட்டுவிட்டார்கள் போலும்.
சுற்றுலா செல்ல சிட்னியும் மெல்போர்னும் அருமையான ஊர்கள். தனித் தனியே இரண்டு இடங்களிலும் பல நாட்கள் கழிக்கலாம். சுற்றிப் பார்க்க அதற்கென்று இருக்கும் பேருந்துகள் இருக்கின்றன. விருந்தினர் தகவல் மையங்கள் இருக்கின்றன. இந்த நகரங்களை இனங்காட்டவென்று தனிச் சின்னங்கள் இருக்கின்றன. என்றாலும் இன்று நாம் விலங்கியல் பூங்காவை விட்டு வெளியெ வரப் போவதில்லை. அங்கே முக்கியமான சொந்தக்காரர்கள் சிலரைச் சந்திக்க வேண்டியிருக்கிறதே!
முதலில், கங்காரு போலவே ஆஸ்திரேலியாவில் பெயர் பெற்ற இன்னொன்றும் உண்டு. அதன் பெயர் ஈமு. இது ஒரு மிகப்பெரிய பறவை. மணிக்கு நாற்பது மைல் வேகத்தில் ஓடக்கூடிய ஈமுவிற்குப் பறக்கத் தெரியாது. பாவம், அவ்வளவு பெரிய உருவைத் தூக்கிக் கொண்டு பறப்பது சிரமம் தான். ஆனால் வேகமாக ஓடும்போது ஒரு எட்டில் ஒன்பது அடி பாய்ந்து விடுமாம். தாய் ஒன்பது அடி பாய்ந்தால் குட்டி எவ்வளவு தூரம் பாயும் என்று பழமொழித்தனமாய் யோசிக்காமல் குட்டியும் அவ்வளவு தான் பாயும் என்று எடுத்துக் கொள்க!!
அடுத்தது தான் நம்ம ராமாஸாமிகள்! அட! வேற ஒண்ணுமில்லீங்க. நம்ம குடும்பப் பேரும் ராமசாமி தான். எல்லாம் நம்ம சகோதரவர்க்கம்னு சொல்ல வந்தேன். (ஏன் ‘மா’ நீண்டு ‘சா’ வுக்கு பதிலா ‘ஸா’ வந்துதுன்னு கேட்காதீங்க!). இவர்கள் தங்குமிடத்தை விளையாடவென்றே அமைத்திருக்கிறார்கள். “கொஞ்சம் தொங்கிக்கோங்க” என்று கையிறு கட்டிவிட்டு ஒரு விளையாட்டு மைதானமாக்கி மரக்கிளைகளையும் போட்டு வைத்திருக்கிறார்கள். சுவாரசியம் இழக்காமல் இருக்கவேண்டும் என்பதாலோ என்னவோ!
இன்னும் இரண்டு பேர் இங்கே சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். முகம் என்று தவறாக எண்ணி முன்னாடி இருக்கிறவர் வந்து கொண்டிருக்கிறார் என்று நினைத்துவிடாதீர்கள். முகத்தை முன் வைத்துப் போய்க் கொண்டிருக்கிறார் அவர்.
அப்புறம் ஒருவருக்கு வயதாகி விட்டது போலும். கொஞ்சம் ‘டயர்’ போட்டிருக்கிறார். கிண்டல் காதில் விழுந்து கோவித்துக் கொண்டு திரும்ப மாட்டேன் என்கிறாரோ இல்லை திரும்பி உட்கார்ந்து தியானத்தில் ஈடுபட்டுவிட்டாரோ தெரியவில்லை.
ஆஸ்திரேலியா (சிட்னி) ஸூ (விலங்கியற்பூங்கா) வித்தியாசமா வித்தியாசமில்லையா என்றொரு கேள்வி எழுந்ததன் தொடர்பாய் இந்தப் பதிவு. வித்தியாசம் என்றால் வித்தியாசம். இல்லை என்றால் இல்லை. என்ன சொல்கிறீர்கள் ?
வாரே வா…. என்ன ஃபோட்டோக்கள். முதல் படம் ரொம்ப ரொம்ப பிடித்திருக்கிறது. நைஸா அந்த படங்களை சுட்டுக்கிறேன் :-))))
ஆமாம், வந்தது வந்தீங்களே, அப்படியே இங்கேயும் ஒரு விசிட் அடிச்சிருந்தா
எங்க ஸ்பெஷலான ‘கிவி’யையும் பார்த்துட்டுப் போயிருக்கலாம்லெ!
அப்புறம் ‘ப்ளாடிபுஸ்’ பாக்கலையா?
என்றும் அன்புடன்,
துளசி.
யப்பா!
இந்த ஆட்டத்துக்கு நான் வரேல.
விஜய், அசல் படம் வேணும்னா சொல்லுங்க. கொஞ்சம் பெரிய கோப்பா இருக்கும். மின்மடலில் அனுப்புகிறேன்.
துளசி, நீங்க அங்க இருக்கீங்கன்னு அப்போ (2002) தெரிஞ்சிருந்தா நிச்சயம் வந்திருக்கும் வாய்ப்பு இருக்கிறது. இனிமேல் கொஞ்சம் வாய்ப்புக் குறைவு தான்.
வசந்தன், 🙂 வரவேண்டியவங்க வரலையே!
ஆகா!!! ரொம்ப நன்றி செல்வராஜ். படம் 1,2,3-ன் சுருக்காத முழு கோப்பை அனுப்பவும். எனக்கு இந்த டிஜிட்டல் படங்களை சேர்ப்பதில் அலாதி பிரியம். என்னுடைய மின்னஞ்சல் njvijay at halwacity dot com ஆகும்.
‘Your’ Photos looks great… I mean the photos taken by you 😉
நான் வேற ஒரு இணைய ராமசாமிக்கு வேட்டு வைக்கலாம்னு நெனச்சுப் போட்டா, நீங்க நமக்கே வேட்டு வெச்சுட்டீங்களே. 🙂
/நான் வேற ஒரு இணைய ராமசாமிக்கு வேட்டு வைக்கலாம்னு/ இவரை எனக்குத்தெரியுமா? 😛
வாங்க கார்த்திக். இப்போ தான் பார்த்தீங்களா? ரெண்டு மாசம் தாமதம். இருந்தாலும் அவரை உங்களுக்குத் தெரியுமா என்று என்னால் சொல்ல முடியவில்லை! 🙂 அவரைச் சுற்றி இருப்பவர்களைக் கேட்டால் தான் தெரியும்!