கங்காருவும் கேங்கரூவும்
May 3rd, 2005 by இரா. செல்வராசு
இவ்வார நட்சத்திர நிலவு வசந்தன் கங்காரு என்று ஒரு படம் போட்டிருப்பது ஒரு பகிடிக்குத் தான் என்று நினைக்கிறேன். நிச்சயமாக நான் பார்த்த கங்காருக்கள் அப்படி அணில் மாதிரி இருக்கவில்லை :-). குறைந்த பட்சம் மூன்று வருடங்களுக்கு முன்னர் அவை அப்படி இருக்கவேயில்லை!
மூன்றே வாரங்களுக்கு என்று சென்ற ஒரு பயணம் கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்கு இழுத்து விட ஆஸ்திரேலிய அனுபவத்திற்கும் அரிய காட்சிகளைக் காணவும் ஒரு அருமையான வாய்ப்பாய் அமைந்தது. (அட! அது பற்றிக் கூட ஒரு பழையகதை பயணக்கதை எழுதலாமே!). அதுவும் ஒரு இலக்கப் படக்கருவியை வாங்கிச் சென்ற முதல் பயணம் என்றதால், ‘காசா பணமா’ என்று எடுத்துத் தள்ளிய படங்கள் நிறையவே உண்டு.
சிட்னியில் இருந்து ஒரு நான்கு மணி நேரம் கீழே மெல்போர்னை நோக்கிச் சென்றால், இடையில் ‘ட்யூமுட்’ என்று வரும் ஒரு குக்கிராமத்திற்குத் தான் சென்றிருந்தோம். வார இறுதிகளில் ஒரு வாரம் மேல்நோக்கி சிட்னிக்கும் ஒரு வாரம் கீழ்நோக்கி மெல்போர்னுக்கும் போய் வந்தாலும், இடையில் ஓரிரு முறைகள் அருகிலேயே இருக்கும் வனப் பிரதேசத்திற்கும் சென்று வந்தோம். பல நாட்கள் ஒன்றும் கண்களில் தென்படவில்லை என்றாலும், ஒரு முறை ஆட்டு மந்தைகளைப் போல் காட்டில் சுற்றிக் கொண்டிருந்தன கங்காருக்கள். முதன் முறை பார்ப்பதில் அவை எப்படி எங்களை எதிர்கொள்ளும் என்று அறியா ஒரு சிறு பயத்துடன் படம் பிடிக்க முயன்றேன். சற்றுத் தொலைவில் தான் இருந்தன.
முடிந்தவரை படக் கருவியைக் குவித்து ஒன்றை அருகில் படம் பிடிக்க முயன்றேன். அவற்றைக் கண்டு நான்/நாங்கள் பயப்பட எங்களைக் கண்டு அவை பயந்து ஓடின. சரி தான், இவை சிங்கம் புலி போன்றவை இல்லை. ஏதோ ஆடு, முயல் மாதிரி தான் என்று புரிந்தது. முன்னங்கால்களைத் தூக்கிக் கொண்டு மடியைக் காட்டிக் கொண்டு ஒன்று என் படப் பெட்டிக்குள் மாட்டியது.
பிறகு அருகில் இருந்த வாகா வாகா என்னும் ஊரின் மிருகக் காட்சி சாலைக்குச் சென்ற போது அங்கும் வகைவகையான கங்காருக்களைக் காண முடிந்தது. “வாகா” என்றால் காக்கா என்று பொருளாம். “காக்கா காக்கா” என்று “நிறையக் காக்கைகள் இருக்கிற ஊர்” என்னும் காரணப் பெயர் பெற்ற ஊராம். காட்டில் பார்த்தவற்றைப் போலில்லாமல் இங்கிருந்த கங்காருக்கள் ஏனோ ஒரு சோகம் அப்பிக் கிடந்தன. தைரியமாய் தடுப்புக்குள் இருந்து எமதருகே வந்து “எதாச்சும் குடேன், சாப்ட்டு நாளாச்சு” என்பது போல் பார்த்தன.
அமெரிக்காவில் ‘கேங்கரூ’ என்கிறார்கள். என் மகள்களின் புத்தகங்களில் (கிறிஸ்டபர் ராபினும் பூக்கரடியும்) வரும் ஒரு கேங்கரூவின் பெயர் கேங்கா! இந்தக் கிறிஸ்டபர் ராபின் கதையே ஒரு தந்தை தனது மகனுக்குச் சொன்ன உண்மைக் கதையின் உருவாக்கம் தான் என்று என் மனைவி என்னிடம் சொன்னபோது சும்மா என் காலை வாருகிறார் என்று தான் எண்ணினேன். ஆனால் அது உண்மை தான் என்று சத்தியம் செய்யாத குறையாய்ச் சொல்கிறார். உண்மை தான் போலிருக்கிறது.
“வாகா வாகா”வின் அதே மிருகக்காட்சி சாலையில் இன்னும் பலவற்றைப் பார்த்தோம். ஆடு மாதிரி ஒரு பெயரிலியையும் ( 🙂 மன்னிக்க, பெயர் தெரியிலியையும் ) இங்கு பார்த்தோம். கழுத்தை நீட்டிக் கொண்டு என்னவோ பல மிருகங்கள் கலந்து உருவாக்கின ஒன்று போல் தெரிந்தது.
இது தவிர சிட்னி மிருகக் காட்சி சாலைக்குச் சென்ற போது (Taranga Zoo) ஒருவருக்கு ஏகப்பட்ட மவுசாய் இருந்தது. இவர் தூங்கி எழுந்து வரும் நேரம் என்று பொறுமையாய் எதிர்பார்ப்புடன் காத்திருந்தார்கள் மக்கள். எங்கள் நல்ல நேரம், நாங்கள் அங்கிருந்த சமயத்தில் வெளிவந்து தரிசனம் கொடுத்தார். மூங்கில் மரங்களைத் தின்னும் இந்தக் க்வோலாக்களைப் பற்றியும் அவற்றைக் காணச் சீனாவுக்குச் செல்லும் ஒரு அமெரிக்கப் பெண்மணி பற்றியும் சிட்னியில் ஒரு பெருந்திரையில் படம் கூடப் பார்த்தோம்.
ஆஸ்திரேலியா – ஒரு வித்தியாசமான அனுபவம் தான்.
வாவ்! அருமையான கட்டுரை. கட்டுரைக்கு நடுவில் போட்டிருக்கும் படங்கள் சுவாரஸ்யமாக இருக்கிறது. அப்படியே ஒரு பயணகட்டுரையும் போட்டுத் தாக்குங்களேன்.
இந்தக் கங்காரு விடுகிற உதை எலும்புகளை உடைத்துவிடும். (எனக்கு அனுபவமில்லை :o) )
நல்ல பதிவு. குவாலா கரடியின் “வாசனை” எப்படி? ;o)
nalla katturainga selvaraj. photoes ellaam romba enjoy panninEn. sorry for this font.
‘டெலிபோன் மணி போல் சிரிப்பவள் இவளா’ பாடலில் வருமே? அதேதானே…
After posting the comment, I get the following errors in IE6.
Warning: date(): Windows does not support dates prior to midnight (00:00:00), January 1, 1970 in C:\Inetpub\wwwroot\mt\Selvaraj\wp-includes\functions.php on line 26
Warning: date(): Windows does not support dates prior to midnight (00:00:00), January 1, 1970 in C:\Inetpub\wwwroot\mt\Selvaraj\wp-includes\functions.php on line 28
//குறைந்த பட்சம் மூன்று வருடங்களுக்கு முன்னர் அவை அப்படி இருக்கவேயில்லை!//
🙂
படங்களும் பதிவும் நல்லாயிருக்கு.
விஜய் பயணக்கதை எழுதிவிடலாம். படிக்கிறவங்க பாடு தானே! 🙂 ஷ்ரேயா, கொஞ்சம் தூரத்துல இருந்து பார்த்ததால ஒரு ‘வாசமும்’ தெரியலே. குவோலா கொஞ்சம் ‘வாசமானது’ங்கறீங்க? கங்காரு கொஞ்சம் பயந்த சுபாவமாத் தெரிஞ்சாலும் கனமானது தான். மேல விழுந்தா எலும்பு நொறுங்கிடும்ங்கறது நம்புற மாதிரி தான் இருக்கு.
செல்வநாயகி,கார்த்திக்,வசந்தன் நன்றி. பா.பா- இந்த error வந்ததை முன்னாடியே பாத்தேன். இருந்தாலும் பதிவாகிவிடுவதால், அப்புறம் பார்த்து சரி செய்யலாம்னு மறந்துட்டேன். சுட்டியதற்கு நன்றி. சமயம் இருக்கும்போது பார்க்கிறேன்.
ஆஸ்திரேலியா – ஒரு வித்தியாசமான அனுபவம் தான்.
அதுவும் சரிதான், ஆஸ்திரேலியா ஸூ (உள்ளே) வித்தியாசமில்லாத அனுபவம் என்று சொல்கிறீர்கள் என்று நாங்கள் சரியாக புரிந்து கொள்கிறோம்.
கார்த்திக் என்னவோ கிண்டறீங்கன்னு மட்டும் தெரியுது. விலங்கியற்பூங்காவினுள் இருந்ததெல்லாம் கூட வித்தியாசமாத் தாங்க இருந்தது. நம்மள மாதிரி எல்லா ஊர்லயும் இருக்கிறது இல்லாம வேற வேற மாதிரி 🙂
செல்வராசுவுக்கும் டோண்டுவுக்கும் சேர்த்து:
என் பதிவின் பின்னூட்டத்தில் பாருங்கள். அவ்வளவு பேரும் ஆமாம் என்று தலையாட்டிவிட்டுப்போக நீங்கள் ரெண்டுபேர் மட்டும் என்னத்துக்கு ராத்துறியள்? (ரவுசு).
அப்ப உங்கள் ரெண்டு பேரிட்டயும்தான் ஏதோ பிழை இருக்க வேணும். என்ன நான் சொல்லுறது?
கார்த்திக்!
மதி உமக்குத்தந்த ப(ட்)டத்தை வைத்துப் பார்க்கும்போது நீர்(உம்) அந்த ‘ஸூ’வுக்குள் போனால் வித்தியாசமில்லாமல்தான் இருப்பீர் என்று நான் ஊகிக்கிறேன்.
வசந்தன் நன்றி. கார்த்திக் பேரைச் சொல்லி அடுத்த பதிவுக்கு விதை போட்டுட்டீங்க.
‘படக்கருவி’ குறித்த சுவையான ‘அஞ்சலாடல்’ 😉 ஒன்று நினைவுக்கு வந்தது. அவற்றைப் பின்வரும் சுட்டியிலுள்ள பதிவிலும், அதனைத் தொடர்ந்து வந்த சில பதிவுகளிலும் (16785, 16789, 16790, 16793, 16794, 16804, 16805, 16807, 16826, 16830) பாருங்கள்:
http://groups.yahoo.com/group/tamil-ulagam/message/16777
‘காமரா’விற்கு தமிழிணையப் பல்கலையின் கலைச்சொல் அகராதியில் ‘நிழற்படக் கருவி’, ‘ஒளிப்படக் கருவி’, ‘படப்பெட்டி’ என்றவாறான சொற்கள் உள்ளன.
எதைப் பயன்படுத்தப் போகிறோம்?
இராதாகிருஷ்ணன், தகவலுக்கு நன்றி. இன்னும் எல்லாத்தையும் படிக்கலே. பல இணையான சொற்களில் எதைப் பயன்படுத்துவது என்பது சரியான கேள்வி தான். தற்போதைக்கு அந்தந்தச் சூழலுக்கு எது சரியெனப் படுகிறதோ அதைப் பயன்படுத்தலாம். காலப்போக்கில் வலுவானது நிற்கும் என்றும் தோன்றுகிறது. ‘இணையம்’ ‘வலைப்பதிவு’ நின்ற மாதிரி. நாலு பேர் பயன்படுத்துவதைப் பார்த்தால் நமக்கும் சிலது பிடித்துப் போகலாம். அதைப் பொறுத்தும் மாற்றிக் கொள்ளலாம். ஒருவருக்கொருவர் ‘இது சிறப்பாய் இருக்குமே’ என்று கருத்துக்களும் கூறலாம்.