காறையெலும்பும் சவடியெலும்பும்
Jun 8th, 2005 by இரா. செல்வராசு
நெஞ்சுக் கூட்டையும் தோள்பட்டையையும் இணைக்கிற பாலமாகப் புறம் ஒன்றாய் ஆளுக்கு இரண்டு எலும்புகள் இருக்கும். உடலுக்கு ஒரு கட்டமைப்புத் தருவதோடு இவை உள்ளிருக்கும் நரம்பு வலைகளுக்கும் பாதுகாப்பை அளிக்கின்றன. ஆங்கிலத்தில் Clavicle அல்லது Collar Bone என்று சொல்வார்கள். “S” வடிவத்தில் இருக்கும் இதனை இணையத் தமிழ் அகரமுதலி காறையெலும்பு அல்லது சவடியெலும்பு என்று கூறுகிறது. முதலில் விலா எலும்பு என்று தமிழ் அறிவிலியாய் எழுதிக் கொண்டிருந்ததை வெட்கத்தை விட்டு ஒத்துக் கொண்டு, தவறைச் சுட்டிக் காட்டிய மனைவிக்கும் நன்றி சொல்லத் தான் வேண்டும்.
மற்ற பல எலும்புகள் போல் சதையொட்டி இராமல் வெறும் தோல் மட்டுமே போர்த்தப்பட்டிருப்பதால் காறையெலும்பை எளிதில் பார்க்கவும் உணரவும் முடியும். நேரடியாகவோ, பிறவழியாகவோ இவை அடிபடும் சாத்தியங்களும் கணிசமானது. உதாரணத்திற்கு வாகன விபத்துக்களில் மாட்டிக் கொள்பவர்களுக்கும், சிலவகையான விளையாட்டுக்களில் ஈடுபடுவோருக்கும் காறையெலும்புக் காயங்கள் ஏற்பட அதிக வாய்ப்புண்டு. குறிப்பாக, ஐஸ் ஹாக்கி, சாதா ஹாக்கி (!), மல்யுத்தம், கால்பந்து, உதைபந்து (ஒன்றை அமெரிக்கன் ஃபுட்பால் என்று கொள்க, மற்றது சாக்கர்!), கூடைப்பந்து, குத்துப்பந்து (Volleyball 🙂 ) இவற்றில் சவடியெலும்புகள் அடிபடுவது அதிகம் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்ச்சினிமாவாய் இருந்தால் மிதிவண்டிச் சங்கிலி, இரும்புக்குழாய், வாள், கம்பு, கிரிக்கட் மட்டை என்று பலவித ஆயுத எழுத்துக்களால் மற்ற எலும்புகளோடு சேர்ந்து உடையச் சவடிக்கும் வாய்ப்புண்டு. கதை நாயகர்களுக்குப் போலியாகச் சண்டைக்காட்சியிலும் சில சாகசகங்களிலும் ஈடுபடுபவர்களுக்குப் பாவம் இது நிஜ வாழ்விலும் நிகழ்வதுண்டு.
விளையாட்டு வீரர்களுக்கும் திரைத் தீரர்களுக்கும் மட்டுமன்றி, புதிதாய்ப் பிறக்கிற குழந்தைகளுக்குக் கூடச் சில சமயம் பிறப்புப்பாதை (Birth Canal) வழியே சிரமமான பயணத்தின் விளைவாய்க் காறையெலும்பு முறிவதுண்டு. குழந்தை பிறந்தவுடன் கையை அசைக்காமல் மடக்கியே வைத்திருந்தால் அநேகமாய்க் காறை முறிந்திருக்க வாய்ப்பிருக்கிறது. ஆனால் இதற்கென்று தனியாக எந்த மருந்தும் மருத்துவமும் தேவையில்லை. இயற்கையாகவே மீண்டும் ஒட்டிக் கொண்டு இந்த முறிவு சரியாகிவிடும். பெரும்பாலான சமயத்தில் மருத்துவர்கள் இதனைப் பெரிதாகக் கண்டுகொள்வது கூடக் கிடையாதாம்.
பிறந்த குழந்தைகள் தவிர பிஞ்சுக்குழந்தைகளிலும் (infants), சிறு குழந்தைகளிலும் (toddlers) கூடக் காறை முறிவு சாதாரணமாக நிகழும் ஒன்று. நீட்டிய கரத்துடன் எங்காவது உயரத்தில் இருந்து கீழே விழ நேரிட்டாலோ, தம் தோள்பட்டையின் மீது தாமே விழுந்தாலோ, அல்லது நேரடியாக படும் அடியாலோ முறிவு ஏற்பட வாய்ப்பிருக்கிறது.
பல சமயம் இப்படி முறிவு ஏற்படும் சவடியெலும்பைச் சரிசெய்ய அவற்றைச் சில நாட்களுக்கு பேரசைவின்றி ஒன்றாக வைத்திருந்தாலே போதும். அதற்காக தோள்பட்டையைச் சுற்றியொரு எட்டு-வடிவக் கட்டைப் போட்டு விடுவார்கள். வலி நிவாரணம் தவிர வேறு மருந்து ஒன்றும் தேவையில்லை. நாளாக ஆகக் கையசைவை அதிகரிக்க முடியும். இரண்டு மூன்று வாரத்தில் கட்டை நீக்கி விடலாம்.
வாண்டுகளாய் இருக்கும் சில குழந்தைகள் ஓடியாடி விளையாடும் வயதில் அங்கும் இங்கும் ஏறிக் கீழே மேலெ விழுந்து இப்படி எலும்பு முறிவுகளைப் பெற்றுவிடுவரோ என்று சில பெற்றோருக்கு மனத்தகைவே ஏற்பட்டுவிடும்.
வாண்டுக்களாக இருக்க வேண்டும் என்பதில்லை. ஓரளவு கவனமாக விளையாடும் என் மகள்கள் கூடக் குதிரை சவாரி, உப்பு மூட்டை என்று வீட்டினுள்ளேயே ஒருவரோடு ஒருவர் விளையாடிக் கொண்டிருந்த போது கீழே விழுந்து கடந்த வார இறுதியில் ஒருத்திக்கு காறையில் தூர்விட்டுவிட்டது. நான்கு வயதினளை அவசரச் சிகிச்சைக்கு அள்ளிக் கொண்டு போக, இனி எட்டுவடிவக் கட்டோடு பதினாறு நாட்களுக்காவது இருக்க வேண்டும் என்று பணித்துவிட்டார்கள்.
பாவம் நந்திதா, நன்கு வலித்திருக்க வேண்டும். கண்ணீர் விட்டு முகம் வீங்கத் தேம்பித் தேம்பி அழுதது நெஞ்சில் அழுந்தியது. தன் தங்கைக்காக என்று நிவேதிதா அவளுக்குப் பிடித்த நட்சத்திர வடிவ வாழ்த்தட்டை செய்து மருத்துவமனை செல்லும் வழியில் விளையாட்டுக் காண்பித்தாள். அந்த அன்பும் பாசமும் மகிழ்வுறுத்தலும் மோட்ரினுக்கு முன்னரே வலியை மறக்கடிக்கச் செய்துவிட்டது.
Dear Nandhu, the sick fairy will come. In the morning, she will put penny under your pillow 🙂 She’s like the tooth fairy. I will try to draw her
மூன்று நாள் தாண்டியாகிவிட்டது. சட்டைக்குள்ளே கட்டுப் போட்ட சுந்தரியாய்த் தமக்கையின் கடைசி நாள் பள்ளிக் கொண்டாட்டத்திற்கும் இன்று சென்று வந்துவிட்டாள். நல்லதும் அல்லதும் கலந்தது தானே வாழ்க்கை!
இதுவும் கூட ஒரு வாழ்வனுபவம் தான். அவளுக்கும் அவளுக்கும் எங்களுக்கும்.
செல்வா,
குழந்தைகள் படம் பார்த்ததும் ஒரு சந்தோஷம் மனதில் – அதிர்ஷ்டசாலி நீங்கள்!
நந்திதாவின் வலி தீர்ந்து, விரைவில் குணமடைய நானும் ஒரு நட்சத்திர தேவதையை வேண்டுகிறேன்…
உங்கள் மகள் விரைவில் நலம் பெற விழைகிறேன்
குழந்தை விரைவில் குணமடைய வேண்டுகிறேன். அவளுக்கு என் அன்பு.
சில சமயம் ரைபிள் கொண்டு சுடும்போது தவறாக அதை காறையெலும்பின் மேல்வைத்துவிட்டாலும் உடைய நேரிடும்.
உங்கள் மகள் விரைவில் குணமடைய விழைகிறேன்.
விரைவில் குணமடைய மகளுக்கு என் வாழ்த்துக்களை சொல்லுங்கள்.
பீடிகையைப் பார்த்ததும் இவர் எங்கே போய் விழுந்தாரோ என்று நினைத்தேன்.
உளுந்து மற்றும் சோய் போன்ற பொருட்களுக்கு எலும்பை குணமாக்கும்/வலுவாக்கும் தன்மையுண்டு. உளுந்தங்கஞ்சி, சோய் பால் உதவலாம். நந்திதா விரைவில் குணமடைய வாழ்த்துக்கள்!
நந்திதா விரைவில் குணமடைய வாழ்த்துக்கள்!
வாழ்த்துக்களும் கருத்துக்களும் சொன்ன அனைத்து நண்பர்களுக்கும் நன்றி. விரைவில் குணமடைந்து விடும் என்கிற நம்பிக்கை இருக்கிறது.