துள்ளுமான்
Jun 9th, 2005 by இரா. செல்வராசு
பாம்பி (இது மாண்ட்ரீஸர் ஊட்டுக்காரி பேரு இல்லீங்க:-) ) பேம்பின்னு எல்லாம் பேரு வச்சு இந்த டிஸ்னிக்காரங்க மானுங்கள ஒரு செல்லப் பிராணியாக்கிட்டாங்க. நான் ரொம்ப நாள் பேம்பின்னா பொண்ணு பேருன்னு நெனச்சிருந்தேன். ஆனா போன வருசம் பெரிய புள்ளை வச்சிருந்த ஒரு புத்தகத்தப் பாத்தப்போ தான் அது ஆம்பளப் பேருன்னு தெரிஞ்சுது! ஆம்பளயோ பொம்பளயோ, மானுங்க அப்படி ஒண்ணும் பஞ்சு மாதிரி மெதுமெது மிருகங்க இல்லீன்னு தான் நான் நெனக்கிறன். அதுங்க கொஞ்சம் எரும மாதிரி தான். மொரடு.
அடப் பாத்தாலே தெரியுமுங்களே. இதுக்கெல்லாம் சாப்பிட்டுப் பாக்க முடியுமா? மான்கறி சாப்பிடறதுக்கு வாய்ப்புக் கெடைக்குறது அப்படி ஒண்ணும் கஷ்டம் இல்லீன்னாலும் இந்தச் செங்கறிச் சமாச்சாரம் எல்லாம் நான் சாப்பிடறதில்ல. இப்போல்லாம் கோழி, மீனோடு நிறுத்திக்கறது தான். அதையும் இதையும் திண்ணு வச்சு எதுக்குக் கொழுப்பெடுத்து அலையோணும்?
எங்க வீட்டுக்கு பின்னால எப்பவாச்சும் சில சமயம் மானுங்க வரும் பாத்திருக்கேன். “ஹை… அதோ பாரு மானு”ன்னு பொண்ணுங்க கிட்டக் காட்டி இருக்கேன். ஒண்ணோ ரெண்டோ ஓரத்துல போயிக்கிட்டு இருக்கும். வெள்ளயாப் பனி பேஞ்சு கெடக்குறப்போ கூட இந்த மானுங்க வருமுன்னு நெனக்கிறேன். ஏன்னா, பரவிக் கிடக்கிற பனியில கால்தடம் பதிஞ்சு கெடக்கும். அது மொசலாக் கூட இருக்கலாமுல்லன்னு கேட்காதீங்க; இருந்தாலும் இருக்கும். யாரு கண்டா?
மான் நடமாட்டம் இந்தப் பக்கம் கொஞ்சம் அதிகந்தான். பக்கத்தூட்டுப் பாட்டி போட்ட தக்காளிச் செடியெல்லாம் இந்த மானுங்க ராத்திரியில வந்து கடிச்சுப் புடிச்சின்னு திட்டிக் கிட்டு இருப்பாங்க. பாவம் எம்பது வயசுப் பாட்டி வெய்யலு பாக்காம புல்லுப் புடுங்கிச் செடி வளக்க நெனச்சா இப்படி மான் கடிச்சுட்டுப் போயிருச்சுன்னா மனசு கஷ்டப் படும் தான? அதுல பாருங்க, பாட்டி, மானை ‘அது’ன்னு சொல்ல மாட்டாங்க; அவன் வந்தான், தின்னுட்டுப் போயிட்டான்னு ஒரு ஆம்பளயா உருவகப் படுத்திப் பேசுவாங்க, கேட்க வேடிக்கையா இருக்கும். சின்னப் புள்ளயா இருக்கறப்பவே செக்கோஸ்லாவோக்கியாவில இருந்து இங்க வந்தவங்களாம். இந்த வயசுல செய்யற வேலயப் பாத்தா நமக்கெல்லாம் வெக்கமா இருக்கும். மூஞ்சியக் கொண்டு போயி எங்க வச்சிக்கரதுன்னு தெரியாது!
எங்கூட்டுச் செடியையும் மானுங்க தின்னுட்டுத் தான் போகும். ஆனா, நான் பெருசாக் கவலப் படறதில்ல. உடம்பு நோக வேல செஞ்சாத் தானே இழக்கறப்போ வருத்தம் வரும்? ஊர்ல இருந்து கொண்டாந்த வெதைங்களை என்னன்னே தெரியாமத் தூவியுட்டுட்டு, ஏதோ மழ பேஞ்சாத் தானா வளந்தாத் தான் உண்டு எங்க ஊட்டுச் செடியெல்லாம். பீக்கங்காச் செடிய மட்டும் மான் தொடறுதுகூட இல்லைங்க. கொஞ்சம் வறவறன்னு எலைங்க இருக்கும். மான் நாக்குக்கு ஒத்துக்காதோ என்னவோ! போன வருசம் ஒரு ஆறோ எட்டோ பீக்கங்கா புடுங்கிச் சமச்சோம். இந்த வருசம் ஒரு வெள்ளாமயும் இல்லீங்க. மழ வல்லீன்னு மட்டும் இல்லீங்க. கள புடுங்கறதுக்கே நேரத்தக் காணோம். புல்லு வெட்டரதுக்கே சில சமயம் ஆளு வச்சு முப்பது (அமெரிக்க) ரூவா அழ வேண்டியிருக்கு. இதுல செடி போடறதுக்கு எங்க போறது?
இந்த மான் தொல்ல இல்லாம இருக்கறதுக்கு எல்லாரும் என்னென்னவோ பண்றாங்க தெரியுமுங்களா?. ஒரு அலுமினியத் தட்டக் கம்பியில கட்டித் தொங்க விட்டுப் பாத்தாங்க. என்னவோ வாச (நாத்த?) மருந்தடிச்சுப் பாத்தாங்க. சோப்புக் கட்டி உட்டா வராதுன்னு சொல்றாங்க. அதுவும் சோப்பக் கொஞ்சம் செதுக்கிக் கட்டோணும்னு இன்ன ரெண்டு பேரு சொல்வாங்க. எதுவும் ஒத்து வந்த மாதிரி தெரியில. வேலி கட்டி வச்சா வராதுன்னு பாத்தா அதையும் கூட மானுங்க விட்டு வக்கிறதில்ல. எட்டிக் குதிச்சு வந்துருதாம்.
என்ன பண்றது? மானுங்க வாழ்ந்த எடத்துல காட்ட அழிச்சு மனுசங்க வீட்டக் கட்டிப் புட்டோம். அதுங்க எங்க போகும்? சோத்துக்கும் வேற என்ன வழி? அதான் இந்தச் செடிங்களச் சாப்பிட வந்துருது. ஆனாப் பாருங்க. அதுங்குளுக்கு ஒரு நாயம்னா, மனுசங்களுக்கும் ஒரு நாயம் இருக்கு. இப்படி மானுங்களால நம்ம வீட்டுக்குத் தொல்லை. தோட்டத்துக்குத் தொல்லை. காரு, வாகனம், கொழந்தைங்க இப்படி எல்லாத்துக்கும் எதாவது ஒரு வகையில எடஞ்சலாத் தான இருக்குது. அதனால இதுக்கு ஒரு வழி பண்ணோனும் மானை வேட்டையாடோனும்னு எறங்கறாங்க. இதுல எதச் சரி எதத் தப்புங்கறது?
இந்த வருசம் எங்க ஊர்ல அறுநூறு மானைக் கொல்லோணும்னு அதுக்குத் தனியா காண்டிராக்ட் உட்டுட்டாங்க. செலவு என்னன்றீங்க? சும்மா எரநூத்தி முப்பத்தி நாலாயிரம் டாலரு தான்! அடங்கொப்புரானேன்னு வாயப் பொளக்காதீங்க. நல்லாக் குறி பாத்துச் சுடோணும். வேற ஆளுங்களுக்கும் ஆபத்து வரக்கூடாது. அதுக்குத் தனியாளு எல்லாம் போட்டு… இருந்தாலும் அத்தன காசான்னு எனக்குந்தான் அடிச்சிக்குது. என்ன பண்றது?
இப்படிச் சுட்ட மான எல்லாம் மான்கறியாக்கிச் சாப்பாட்டுக் கடைங்களுக்கும் ஏழை சனங்களுக்குக் கொடுக்கிற சாப்பாட்டு வங்கிகளுக்கும் அனுப்பிட்டாங்களாம். மொத்தமா இந்த வருசம் இருவத்தியெட்டாயிரம் பவுண்டு எடைக்கு வந்துச்சாம். எங்க ஊரு பேப்பருல போட்டிருக்காங்க படிச்சுக்குங்க. அட! நான் முன்னாலயே சொல்லீட்டனுல்ல. இருந்தாலும் இன்னோரு தரஞ் சொல்லிக்கறன். மான் கறியெல்லாம் நான் வாழ்க்கயில சாப்பிட்டதே இல்ல.
இப்படி மானைக் குறி பாத்து நொங்குன்னு சுட்டுத் தள்றது சரியான்னு ஒரு கூட்டம் சண்டைக்கும் வராங்க. கோர்ட் கேசுன்னு கூடப் போய்ப் பாத்தாங்க. உள்ளூர்ப் பேப்பருல பள்ளிக் கூடத்துப் புள்ளைங்க செல பேரு பிராணிங்க மேல அன்பா இருக்க வேண்டாமான்னு கேட்டு எல்லாம் எழுதி இருந்தாங்க. (எம்பொண்ணுகளும் இப்படிப் பேப்பருல எல்லாம் ஒரு நாளக்கி எழுதுவாங்க!). என்னவோ தூக்க ஊசி போட்டு அதுங்க மயங்கிக் கெடக்குறப்போ வலி தெரியாமச் சுட்டுரலாம்னு ஒரு ரோசனை சொன்னாங்க. அமெரிக்காவில வேட்டைக் காலமுன்னு ஒரு மூணு மாசத்துக்கு மான் வேட்டைக்கு எந்தத் தடையும் இல்லாமக் கூடப் பண்ணி இருக்காங்க. ஆனா, அதெல்லாம் காட்டுல இருக்கற மானுங்களுக்கு. ஊட்டுப் பக்கத்துல இருந்தா இப்படி அரசாங்கச் செலவுல குறிபார்த்துச் சுட்டுச் சாவு.
ரெண்டு பக்கமும் நாயம் இருக்குது தாங்க. ஆனா எனக்குப் புடிக்காத பூச்சி பூரானெல்லாம் எங்கூட்டுக்குள்ள வராத வரைக்கும் எனக்குப் பிரச்சின இல்ல. வந்தா நான் கொல்லத் தான் செய்வேன். இது தான் எங்கட்சி. தப்பாக் கூடத் தெரியலாம். ஆனா என்ன பண்றது? நம்மளக் கொல்ல வந்தா பசு மாட்டக் கூடக் கொல்லலாம்னு காந்தி கூடச் சொல்லி இருக்காரே. (நமக்கு வசதியாச் சொல்லியிருந்தா எடுத்துக்குவோம். இல்லேன்னா டீல்ல உட்டுருவோம்!).
அது பாருங்க. போன வாரம் மூணு நாள் லீவு உட்டுருந்தாங்களா. இன்னோரு நா சேத்து எடுத்துக்கிட்டுக் குடும்பத்தோட நியுயார்க் நியுஜெர்சிப் பக்கமாக் கெளம்பிட்டோம். சீக்கிரமாப் போய்ச் சேரலாம்னு வெடியக்காலம் ஆறு மணிக்கெல்லாம் ஊட்ட விட்டுக் கெளம்பினோம். ஒரு ரெண்டு மணி நேரந்தாண்டி ஐ-எய்ட்டியில கெழவுறமாப் பென்சில்வேனியாவுக்குள்ளற போய்க்கிட்டு இருந்தோம். அப்போ தான் நம்பாளு காட்டோரமா இருந்து எட்டிப் பாத்தாரு. துள்ளுற மான். கண்ண மூடித் தெறக்குற நேரத்துல என்ன நெனச்சுக்கிட்டு வந்தாரோ தெரியல, குதிச்சு வந்து நம்ப கார் மேல விழுந்தாரு! துள்ளுற மான் துள்ளுன மானாயிருப்பார்னு நெனக்கிறேன். மொரடுன்னு சொன்னம் பாத்தீங்களா, அவரு உளுந்த வேகத்துல, காரு போன வேகத்துல எங்கூட்டுக்காரி உக்காந்திருந்த பக்கக் கதவு ஒடுங்கி இடுஞ்சு போயிருச்சு. பின்னாடி பாக்குற கண்ணாடி துண்டாவிக் காணாமப் போயிருச்சு. ஏதோ நல்ல நேரம். முன்னாடிப் பக்கம் வந்து உளுந்துருந்தா ஆளுக்கெல்லாம் அடிபட்டு ஆசுபத்திரிக்குத் தான் போயிருப்போம். பின்னாடி தூங்கிக் கிட்டிருந்த என் கன்னுக்குட்டிங்களுக்கும் ஒண்ணும் ஆகல. கார்ச்செலவு மட்டும் ரெண்டாயிரம் சொச்சம் வருது. காப்பீடு இருக்கறதால எங்கைக்காசு ஒரு எரநூத்தம்பதோடு போச்சு.
இப்போச் சொல்லுங்க. எச்சா இருக்குற மானச் சுட்டுரலாம்னு சொன்னா நான் என்ன சொல்றது?
நல்ல பதிவு.
//நமக்கு வசதியாச் சொல்லியிருந்தா எடுத்துக்குவோம். இல்லேன்னா டீல்ல உட்டுருவோம்!//
:-))))
…..
உங்கள் கவலையும் புரிகிறது செல்வராஜ்!
//பாம்பி (இது மாண்ட்ரீஸர் ஊட்டுக்காரி பேரு இல்லீங்க:-) ) //
ஹி ஹி….
மான்னா சல்’மான்’தான் ஞாபகம் வர்றார். இப்போ பட்டு’ஓடி’ வேற சேர்ந்திக்கிட்டாரு போல.
// துள்ளுற மான். கண்ண மூடித் தெறக்குற நேரத்துல என்ன நெனச்சுக்கிட்டு வந்தாரோ தெரியல, குதிச்சு வந்து நம்ப கார் மேல விழுந்தாரு! //
அதுக்கு என்ன தலையெழுத்தோ. தண்ணியில கண்டம் மாதிரி மாதிரி கண்டமோ. பார்த்து வண்டிய ஓட்டுங்கைய்யா.
நல்ல பதிவு.
பாம்பி மாதிரியே இந்த கரடியையும் மெதுமெதுன்னு பண்ணீட்டாங்க.
அப்புறம், இந்த மானுகளுக்கும் (மத்த மிருகங்களுக்கும்) எச்சா (கொஞ்சமா நஞ்சமா?) இருக்கற மனுஷங்களப் போட்டுத் தள்ளிடற மாதிரி வசதி இருந்திருந்துச்சுன்ன வச்சுக்குங்க… 😉 ஏதோ தப்பிச்சோம்.
டீசே நன்றி. டொராண்டோவிற்கு வரலாமான்னு கூட நினச்சிருந்தேன். இப்படி மானிடிச்சதும் வராததற்கு ஒரு காரணம்.
விஜய், என்னவோ இந்திமானெல்லாம் பத்தி சொல்றீங்க. எனக்கும் அவங்களுக்கும் தூரம் ரொம்ப அதிகம்! துள்ளுற மான் வந்து விழுந்தா எத்தன பாத்தும் நம்மால ஒண்ணும் பண்ண முடியாது. அது தான் காப்பீட்டுக்காரர் கூட நம்ம தவறு இல்லைன்னு ஏத்துக்கறாங்க. இல்லைன்னா, வெலையை ஏத்திப்புடுவாங்க.
இராதாகிருஷ்ணன், நிஜம் தான். ஏதோ ‘survival of the fittest’ னு நாம பொழச்சிப் போயிக்கிட்டு இருக்கோம்!
Thank God!!
Kicked memories of our anna Univ life as the same thing happend to me when i was driving my Scooter there. Suddenly a deer ran on my way just behind the ground. Scooter got severly damaged and myself had lot of painful wounds.
Take care.