வாசிப்பனுபவப் பகிர்வுப் பரவல்
Jun 10th, 2005 by இரா. செல்வராசு
ரேசன் கடைக்குச் சர்க்கரை வாங்கப் போவென்று பணித்த அம்மாவின் குரல்களை மாறுகாதில் விட்டுவிட்டுப் புத்தகங்களும் கையுமாகவே கிடந்த காலங்கள் உண்டு. ஆனால், நல்ல தமிழ்ப்புத்தகங்கள் படித்து நாட்கள் பலவாயிற்று இப்போது. அதனால் புத்தக விளையாட்டு ஆரம்பித்த போது கமுக்கமாய்ச் சத்தம் போடாமல் இருந்து கொள்ளலாம் என்றிருந்தேன். பின்னூட்டம் கூட விடாமல் இருந்து பார்த்தேன். ஆனால் அது நன்றாகப் பற்றிக் கொண்டு பரவும் வேகத்தில் நம்மையும் சூழாமல் விடாது என்று தெரிந்துவிட்டது. அழைப்பு விடுத்த நவன் பகவதிக்கும் பாலாஜி-பாரிக்கும் நன்றி.
பாலர் புத்தகங்கள் படக்கதைகள் எல்லாம் தாண்டிய வாசிப்பு அனுபவம் ஆரம்பித்த போது நான்காவதோ ஐந்தாவதோ படித்துக் கொண்டிருந்தேன். அதிகம் புத்தகங்கள் வாங்க வழியில்லாத வரிசைக் குடியிருப்பு (லைன் வீடு) வாடகை வீட்டில் குடியிருந்த போது பக்கத்து வீட்டு அண்ணன், அக்கா, மாமா எல்லோரிடமும் இருந்து இரவல் கிடைத்தது எதுவானாலும் படிக்க ஆரம்பித்தேன். அப்படிப் படித்த முதல் புத்தகங்களுள் ஒன்று கல்கியின் ‘பார்த்திபன் கனவு’.
கல்கியின் எழுத்து எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. அதன் பிறகு பல ஆண்டுகள் கழித்துப் படித்த ‘பொன்னியின் செல்வன்’ இன்றும் எனக்குப் பிடித்தவற்றுள் முதன்மையானது என்று சொல்ல முடியும். ‘சிவகாமியின் சபதம்’ மீது ஒரு கலப்பட உணர்ச்சி. முதல் முறை படித்த போது பிடித்துத் தான் இருந்தது. இரண்டு வருடங்கள் முன்பு மீண்டும் படித்த போது அதில் உள்ள போரும் ஒட்டிய அழிவும் குறித்த விவரணைகள் மனச்சோர்வையே தந்தன. சிவகாமியின் புலம்பல்கள் சில இடங்களில் எரிச்சலையும் கோபத்தையும் உண்டு செய்தன. அப்படி உணர வைத்ததும் எழுத்தாளனின் சக்தி தானோ?
குமுதம் நாற்பத்தைந்து பைசாவிற்கு விற்ற காலத்தில் முதன் முதலாகக் கொலையுதிர்காலம் வழியாகச் சுஜாதாவைத் தெரிந்து கொண்டேன். ஒவ்வொரு சனிக்கிழமையும் குமுதம் வாங்கவும் முதல் ஆளாய்ப் படிக்கவும் தயாராய் இருப்பேன். சுஜாதாவின் எளிய நடைக்கு ஆட்பட்டு அவருடைய புத்தகங்கள் நிறையப் படிக்க ஆரம்பித்தேன். ஆனால் ஐகாரஸாரைப் போலவெல்லாம் அவருடைய படைப்புக்களையும் பாத்திரங்களையும் நினைவில் வைத்திருக்கத் தெரியாது. அதனால் என்னைச் சந்தித்தாரென்றால் வெந்நீர் கொட்டியது போல் உணர மாட்டார் தாத்தா. அவரது எழுத்தில் கவர்ந்த இன்னொன்றின் (குறுநாவல்?) முடிவில் ஒரு சிறு குழந்தை வைரங்களை உணராமலே நீரோடையில் கொட்டிவிடுவாள் – அதன் பெயர் என்ன? வைரங்கள்?
முதல்ப் பெண்ணுக்கு ‘நிலா’ என்று பெயர் வைக்கலாம் என்றிருக்கிறோம் என்று கூறிய காலத்தில் “ஏன், ஜீனோன்னு வையுங்களேன்!” என்று சொந்தங்கள் கிண்டலடித்தன. ஆதிகாலத்தில் இருந்து எல்லாத் தலைமுறைக் கவிஞர்களுக்கும் பாடுபொருளாய் இருந்த ஒன்றின் பெயரைத் தன் பாத்திரம் ஒன்றோடு மறக்க முடியாமல் இணைத்து விட்ட விந்தையை என்னவென்பது?
வாசிப்பு தீவிரமாய் இருந்த காலத்தில் புதிது புதிதாய்ப் புத்தகங்கள் கிடைக்க வழி செய்த நண்பன், பெங்களூரில் இருக்கிற சிவசங்கரனுக்கு நன்றி சொல்லவேண்டும். சுழல் நூலகம் ஒன்றில் உறுப்பினராகி அவன் காசு கொடுத்து எடுத்த புத்தகங்களை ஓசியில் படித்தே என் வாசிப்பு வளர்ந்தது. தங்க மணியான ஒரு நல்ல நட்பும் வாசிப்புப் பகிர்தலும் இவன் மூலம் எனக்குக் கிட்டியது.
அப்போது பலரைப் போலவே என் மனதிற்கும் பிடித்த எழுத்தாளனாய் அமைந்தவர் சுஜாதா வழி வந்ததாய்ச் சொல்லிக் கொண்ட பாலகுமாரன். மூக்கன் சொன்னது போன்றே ஆரம்ப கால பாலகுமாரனின் எழுத்துக்கள் என்னையும் வெகுவாகக் கவர்ந்தவை. மனக்குதிரையின் எண்ணப் பாய்ச்சலுக்கு வரிவடிவம் தர முயன்று அதில் வெற்றியும் கண்ட ஒருவன் என்று நினைக்க வைக்கும் எழுத்து அவருடையது.
சரித்திரக் கதைகள் என்றாலே நினைவுக்கு வரும் இன்னொருவர் சாண்டில்யன். போர்த்தந்திரங்களாக இருக்கட்டும் பெண் அங்கங்களாக இருக்கட்டும் சாண்டில்யனின் வர்ணனைகள் தனிச்சிறப்பு வாய்ந்தவை. பெரிய பெரிய பத்தி என்று சில நண்பர்கள் எப்படி இதையெல்லாம் படிக்காமல் தாவிச் சென்று விடுகிறார்கள் என்று அந்தப் பள்ளி நாட்களிலும் எனக்குப் புரிந்ததே இல்லை.
ஒரு பித்தாய்ப் புத்தகங்களில் கிடந்த காலத்தில் (படிப்பில் குறையில்லை என்றாலும்) அன்பு கொண்ட சில ஆசிரியைகள் கொஞ்ச காலத்துக்கு இதையெல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட்டுப் படிப்பில் கவனம் செலுத்தச் சொன்னார்கள். பத்தாவது முதல் பன்னிரண்டாவது வரையான இடைவெளி. அப்போதிருந்து வாசிப்புக் குறைந்து போய்விட்டது. இப்போதெல்லாம் அன்பு சொன்னது போல் தமிழ்மணம் வழியாகப் படிப்பதே அதிகமாக இருக்கிறது. இருந்தாலும் நிறைய நல்ல புத்தகங்கள் வாங்கிப் படிக்க வேண்டும் என்கிற ஆசைகள், ஆதங்கங்கள் நெஞ்சில் நீங்காதுண்டு.
அமெரிக்காவில் உயர்கல்வி மாணவனாய் இருந்த போது பல்கலையின் இடைநூலக இரவல் சேவை வழியாகச் சில நல்ல புத்தகங்களை வாங்கிப் படித்திருக்கிறேன். இணையம் பரவலாய் இல்லாத அந்தக் காலத்தில் தமிழுக்கும் தட்டுப்பாடு தான். தாகத்தில் வறண்டு கிடந்த நாவிற்கு நல்ல குளிர்நீர் கிடைத்த சுகம் அப்படிக் கிடைத்த புத்தகங்கள். அவற்றுள் முக்கியமானவை சுஜாதாவின் பிரிவோம் சந்திப்போம், தி.ஜாவின் மோகமுள், மற்றும் சு.ராவின் ஜே.ஜே சில குறிப்புக்கள்.
ஜெயகாந்தனை அறிந்திருந்தாலும் எதுவும் படித்ததில்லை. சர்ச்சைக்குரியவராய் இருந்தாலும் அவரது எழுத்தின் சிறப்பை யாரும் மறுக்கவில்லை. அதனால் அவரது புத்தகங்களைப் படிக்க வேண்டும் என்று நினைத்திருக்கிறேன். கருணாநிதியோடு ‘இலக்கியவாதியா’ என்று சர்ச்சை வந்த போது தான் ஜெயமோகன் என்று ஒரு ஆள் இருக்கிறார் என்றே எனக்குத் தெரியும்! அதன் பிறகு வலையுலகில் அவரது படைப்புக்கள் பற்றியும் பெரும் விமர்சனங்கள் எழுவதால் அவரையும் படிக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. ஆனால் பதினைந்து பக்கத்துக்கு மேல் படிக்க முடியாமல் போய் விடுமோ என்றும் தோன்றுகிறது! கருணாநிதியின் சில படைப்புக்கள் படிக்கச் சிரமமான நடையாக உணர்ந்தேன். இருந்தும் அவருடைய பொன்னர் சங்கர் நடை பிடித்த ஒன்று. கொங்கு நாட்டுக் கதை என்றதாலும் இருக்கலாம்.
இன்னும் விரிவாகப் படிக்க நிறைய இருக்கிறது என்பதே ஒரு மலைப்பாய் இருக்கிறது. ஆதவன், புதுமைப்பித்தன், அசோகமித்ரன், எஸ்.ராமகிருஷ்ணன், கி.ராஜநாராயணன், இரா.முருகன், இப்படி ஆரம்பித்து நிறைய இருக்கிறது. சொந்தமாய் ஒரு நூலகம் அமைத்து நூற்றுக் கணக்கில் புத்தகங்கள் வாங்கி வைத்துக் கொள்ளவேண்டும்.
* * * *
என்னிடம் உள்ள புத்தகங்களின் எண்ணிக்கை: 500 முதல் 1000 வரை என்று சொல்ல ஆசையாய் இருந்தாலும் ஒரு அஞ்சோ பத்தோ தேறும். ஒரு மரியாதை கருதிச் சுமார் 50 என்று சொல்லிக் கொள்கிறேன்!
பிடித்த சில:
பொன்னியின் செல்வன் – கல்கி
யவன ராணி – சாண்டில்யன்
பொன்னர் சங்கர் – கருணாநிதி
மோக முள் – தி. ஜானகிராமன்
ஜே.ஜே சில குறிப்புக்கள் – சுந்தர ராமசாமி
பிரிவோம் சந்திப்போம் – சுஜாதா
இரும்பு குதிரைகள் – பாலகுமாரன்
படிக்க வேண்டியவை: நிறைய இருக்கின்றன. பட்டியலில் அடங்கா.
சமீபத்தில் வாங்கியது: அப்படி ஒன்றும் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. அடுத்த முறை ஊர் போகும்போது பார்க்கலாம்.
இவ்விளையாட்டுத் தொடர நான் அழைப்பவர்கள்:
இராம.கி
இராதாகிருஷ்ணன்
வசந்தன் (என்னங்க சயந்தன் யாரு? ஒன்னா இல்லையா?)
நாமக்கல் ராஜா (கொஞ்ச நாள் காணாம இப்பத் தான் வருவீங்க போலிருக்கு)
பார்வை மெய்யப்பன் (ரொம்ப நாளா இவரக் காணோம்)
* * * *
உங்கள் வாசிப்பு அனுபவம் எதார்த்தமாக இருக்கிறது. உங்களுக்கு பிடித்த புத்தகங்களுள் பொன்னர் – சங்கர் குங்குமத்தில் தொடராக வந்தபோது ஈடுபாட்டுடன் படித்திருக்கிறேன். நம் ஊர் பக்கங்களில் இக்கதை ‘குன்னடையான் கதை’ என்ற பெயரில் இன்றும் தெருக்கூத்தாக நடிக்கப்படுவதை நீங்கள் அறிந்திருக்கலாம்.
மற்றவற்றைப் பற்றியும் விரிவாக பின்னூட்டு இட நினைத்தாலும் அலுவலகத்திலிருந்து முடியவில்லை.
அழைப்புக்கு நன்றி செல்வராஜ். நாளை(ஞாயிறு) என் அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறேன்.
*/கொஞ்ச நாள் காணாம இப்பத் தான் வருவீங்க போலிருக்கு/*
🙂 இருக்கிறேன் – பெரும்பாலும் வாசகனாக மட்டும்.
நன்றிகள் செல்வா!
வித்தியாசமா எழுதியிருக்கிறீங்க…
என்னிடம் உள்ள புத்தகங்களின் எண்ணிக்கை: 500 முதல் 1000 வரை என்று சொல்ல ஆசையாய் இருந்தாலும் ஒரு அஞ்சோ பத்தோ தேறும். ஒரு மரியாதை கருதிச் சுமார் 50 என்று சொல்லிக் கொள்கிறேன்!
ஹா ஹா ஹா…
ஆனா அந்த லொள்ளும், கொங்கும் பிரிக்கவே முடியாதுபோல:)
//முதல்ப் பெண்ணுக்கு ‘நிலா’ என்று பெயர் வைக்கலாம் என்றிருக்கிறோம் என்று கூறிய காலத்தில் “ஏன், ஜீனோன்னு வையுங்களேன்!” என்று சொந்தங்கள் கிண்டலடித்தன.//
🙂
//ஜே.ஜே சில குறிப்புக்கள் – சுந்தர ராமசாமி//
ரொம்ப நாளாக இது எனது விழைப்பட்டியலிலேயே இருக்கிறது. விரைவில் வாங்கியாக வேண்டும்.
நல்ல பதிவு. நன்றி.
ராஜா, பாலாஜி, அன்பு, நவன் உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.
[…] பற்றியதான இதனைக் கொடுத்துள்ளேன்) செல்வராஜ் – http://blog.selvaraj.us/archives/136 (http://selvaraj.weblogs. […]