Feed on
Posts
Comments

கொங்கு மண்ணின் மணம் வீச இனிய நடையில் வரும் இவரது கட்டுரைகளும் பதிவுகளும் பலரையும் கவர்ந்தவை. ஒரு வழக்கறிஞரான இவர் கவிதைகளும் வடிப்பவர் என்பது திண்ணையில் வெளிவந்த ஒரு பொங்கல் கவிதை பார்த்தபோது தான் எனக்குத் தெரிந்தது. மரத்தடி, திண்ணை, திசைகள் உட்பட இணையத்தில் பல இடங்களிலும் வெகு காலமாய் எழுதி வருபவர். ஒரு மேடைப் பேச்சாளருமாக அறியப்படும் கவிஞர் செல்வநாயகியின் முதல்ப் புத்தகம் – பனிப்பொம்மைகள் என்னும் கவிதைத் தொகுப்பு நூல் வெளியீட்டு விழா ஈரோட்டில் இன்று நடைபெறுகிறது.

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில், சம்பத் நகரில் உள்ள கொங்கு கலையரங்கத்தின் சக்தி மசாலா அரங்கத்தில், இன்று (21 செப் 2005) மாலை ஆறு மணிக்குக் விழா தொடங்கும். தலைமை தாங்கி நடத்திக் கொடுப்பவர் மக்கள் சிந்தனைப் பேரவையின் தலைவர் ஸ்டாலின் குணசேகரன். இவர் சமீபத்தில் சிறப்பாக நடைபெற்ற ஈரோட்டுப் புத்தகக் கண்காட்சியையும் ஒருங்கிணைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் பற்றியும் புத்தகக் கண்காட்சி அமைப்பு பற்றியும் சில குறிப்புக்களைப் பத்ரியின் பதிவில் காணலாம்.

பனிப்பொம்மைகள் கவிதை நூலை வெளியிட்டுச் சிறப்புரை ஆற்ற இருப்பவர் சாகித்ய அகாடமி விருது பெற்ற முனைவர் சிற்பி பாலசுப்பிரமணியம். முதல் பிரதியைப் பெற்று வாழ்த்துரை ஆற்றுபவர் இன்னொரு சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் தமிழ்நாடன். வாழ்த்துரை வழங்கும் பிறர்: கவிஞர் மரபின் மைந்தன் ம. முத்தையா, ஆசிரியர், ‘நமது நம்பிக்கை’ மாத இதழ், கோவை, மற்றும் பேராசிரியர் செ.சு.பழனிசாமி, கோபி.

இறுதியாக ஏற்புரை ஏற்றுப் பேசும் செல்வநாயகியின் மேடைப் பேச்சை இரண்டாவது முறையாகத் தவற விடப் போகிறேன். வார இறுதியையொட்டி விழா அமைந்திருந்தால் வழக்கம் போல் ரயிலேறி ஊர் சென்றிருப்பேன். சரியாகப் புதன்கிழமையாக அமைந்துவிட்ட காரணத்தால் தூரத்தில் இருந்து ஒரு வாழ்த்தை மட்டும் அனுப்புகிறேன். அடுத்த வாரம் ஊர் விட்டு ‘மேக்காலவூருக்குத்’ திரும்பும் அவருக்கு இன்னொரு வார இறுதி கிடைப்பது சாத்தியமல்ல தான்.

உங்கள் எழுத்துலகப் பயணம் மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் செல்வநாயகி!

அதென்னவோ இந்த வருடம் “பொத்துக்கிட்டு ஊத்துதடி வானம்” என்று பாடுவதற்கேற்றாற் போல் பெங்களூரில் மழை பெய்யோ பெய் என்று பெய்கிறது. தொப்பலாக நனைந்த துணியை உலர்வதற்குள் மீண்டும் மீண்டும் எடுத்து நீரினுள் முக்கியெடுத்துக் காயப்போடுவது போல் இருக்கிறது ஊர். ஐந்து வருடமாய்க் காணாத மழையெல்லாம் இந்த ஐந்தாறு வாரங்களில் கண்டதில் இந்தப் பகுதியில் இருக்கிற அணைகள் எல்லாம் நிரம்பி வழிகின்றன. அதில் வருடாந்திரக் காவிரிப் பிரச்சினையொட்டிய அரசியற் காட்சிகள் அதிகமாய் அரங்கேற வாய்ப்பில்லை.

Bangalore Rain

சின்ன வயதில் ‘தெய்வத் திருமணங்கள்’ என்றோ ‘மூன்று திருமணங்கள்’ என்றோ ஒரு படத்தை ஒன்றிற்கு மேற்பட்ட முறைகள் பார்த்திருக்கிறேன். அதில் வள்ளியாகச் ஸ்ரீதேவி கூடத் திணைக்காட்டில் பாட்டுப் பாடிக் கிளியோட்டிக் கொண்டிருப்பார். மூன்று தெய்வங்களில் ஒருவர் (சிவபெருமான்?) தன் திருமணத்திற்கு மதுரைப் பக்கமாய் வரும்போது தண்ணீர்ப்பஞ்சம் என்று அதைத் தீர்ப்பதற்காக மண்ணில் கை வைத்து ஒரு ஆற்றையே உருவாக்கி வைப்பார். மண்ணில் இருந்து பொத்துக் கொண்டு நீர் பொங்கிப் பரவும். ஐயன் ‘கை வை’த்து உருவான வைகை ஆற்றைப் போலத் தான் ஐந்தாறு நிமிடம் மழை பெய்தால் போதும், பெங்களூர் தெருக்கள் எல்லாம் பொத்துக் கொண்டு ஓடுகின்றன. உண்மையான வைகை ஆறு இப்போது எப்படி இருக்கிறது என்பது எனக்குத் தெரியவில்லை. யாராவது மதுரைக்காரர்களைத் தான் கேட்க வேண்டும்.

Continue Reading »

அவளுக்கு வயது சுமார் இரண்டு இருக்கும். பச்சை நிறப் பொட்டு வைத்திருந்தாள். தீர்க்கமாய்ப் பார்வையைச் செலுத்தும் கண்கள். கொக்கி மாதிரி தலையின் இரு புறங்களில் கொண்டைகள். அப்போது தான் உறங்கி எழுந்து வந்தவள் தன் தந்தையின் மீது ஏறிக் கொண்டாள். அவரின் சட்டையை இறுகப் பற்றிக் கொண்ட ஒரு பாதுகாப்பு உணர்வோடு என்னைச் சந்தேகமாகப் பார்க்கிறாள். ஒரு அன்புப் பொட்டலமாய் இருந்த அவளையும் கொஞ்சுகிற பெற்றோரையும் பார்க்கையில் இரண்டு வயதினளோடு இருப்பது என்ன ஒரு சுகம் என்று மனம் சுயநினைவுகளில் ஆழ்கிறது.

Zurich Teddy

மெல்லப் பேச்சுக் கொடுத்தேன். “உன் பேர் என்னம்மா”

பதில் இல்லை.

“பாப்பா தானே?”

என்ன தவறாகச் சொல்கிறீர்கள் என்பது போல் உடனே நிமிர்ந்து பார்க்கிறாள். “குட்டிப் பாப்பா!”. திருத்தம் தெளிவாக வருகிறது. சொல்லிவிட்டு மீண்டும் தன் வேலையைக் கவனிக்கச் சென்றுவிட்டாள். நான் வெளியூருக்குப் போகிறேன் என்று தெரிந்தவுடன் எங்கள் வீட்டு நாலேமுக்கால் வயதுக் குட்டிப் பாப்பா ஒன்றும் என் கால்களைக் கட்டிக் கொண்டு “உங்க ஆபீஸ எனக்குப் பிடிக்கல்லே” என்று சொன்னதும் நினைவுக்கு வருகிறது.
Continue Reading »

வார இறுதியில் தஞ்சாவூர் விரைவு வண்டி ஈரோடு ரயில் நிலையத்தில் என்னை இறக்கிவிட்டபோது இரவு மணி ஒன்று. பெங்களூரில் முன்பதிவு செய்யாத ரயில்வண்டியில் ஏறி மூட்டைமுடிச்சு வைக்கும் இடத்தில் கிடைத்த இடத்தில் படுத்துக் கொண்டே வந்துவிட்டேன். கீழே உட்கார்ந்திருந்தவர்களும் இடையில் ஏறியவர்களும் இடத்திற்காக சிறு சிறு சச்சரவுகளும், விட்டுக் கொடுத்தல்களும், சமாதானமான பின் சுமூகமான பயணமுமாய் இருந்த ஊடாடல்களைக் கவனித்துக் கொண்டே வந்தேன். சுவாரசியமாய் இருந்தது. யாராவது கேட்டால் மேலே இடம் கொடுக்கவும் சித்தமாய் இருந்தேன். ஆனால் மேலே இடம் பிடிப்பவர்கள் படுத்துக் கொள்ளலாம் என்பது எழுதப்படாத விதி ஒன்று போலும். யாரும் என்னை அணுகவில்லை.

எளிதில் உணர்ச்சிவயப்பட்ட எதிரில் இருந்த வெள்ளைச் சட்டை வேட்டித் தாத்தா சகட்டுமேனிக்குச் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். உயரழுத்தக்காரராய் இருக்கும். உடன் வந்தவர்கள் அவரை நன்றாக கவனித்துக் கொண்டார்கள். சண்டைக்குப் போன அவரைச் சமாதானப்படுத்தி உடன் வந்தவர்களில் மூன்று பேர் அவரை மேலே அனுப்பக் கைகொடுத்தார்கள். நெரிசலிலும் மக்கள் எவ்வளவு சந்தோஷமாய் இருக்கிறார்கள் என்ற என் மையலுணர்ச்சியைக் (romantic) கெடுப்பதற்கென்றே அமைந்த மாதிரி வண்டி கிளம்பிய சிறிது நேரத்தில் சற்றுத் தள்ளி ஒரு பெரிய சண்டை ஆரம்பமாகி இருந்தது. பெரிதாகத் தூக்கம் வரவில்லை என்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். இடம் பிடித்துக் கொடுப்பதும் கூட ஒரு தொழிலாகி இருக்கிறது. ஆரம்பத்தில் ஓர இருக்கை இரண்டில் ஒவ்வொரு செருப்பு இருந்ததைப் பார்த்தேன். இருபது ரூபாய்க்கு விலை போயிருக்கின்றன அந்த இருக்கைகள். ஒற்றைச் செருப்புப் பதிவு முறைக்கு இருபது ரூபாய். பரவாயில்லை.

சண்டை வந்த திக்கில் எட்டிப் பார்த்தேன். அங்கு யாரோ நூற்றைம்பது ரூபாய்க்கு படுக்கும் உரிமையை வாங்கி இருந்ததாகவும் அதனால் தாங்கள் படுத்துக் கொண்டு தான் வருவார்கள் என்றும் உட்கார இடம் கேட்டுக் கொண்டிருந்தவர்களிடம் சத்தம் போட்டுக் கொண்டிருந்தார்கள். அது கொஞ்சம் அதிகம். அநியாயம். முறையாகப் பயணச்சீட்டு வாங்கி வருபவர்களுக்கு உட்கார உரிமையுண்டு தானே. தாம் நியாயமின்றி யாருக்கோ காசு கொடுத்துப் படுத்துக் கொண்டு வந்தால் மற்றவர்கள் என்ன செய்ய முடியும்? பேச்சும் சத்தமும் சண்டையும் அதிகரித்துக் கொண்டே வந்து தர்மபுரியில் போலீசார் உள்ளே ஏறும் வரை தொடர்ந்து கொண்டிருந்தது. இத்தனைக்கும் இடையிலும் சில மகானுபாவர்கள் பழைய செய்தித்தாளைக் கீழே விரித்து உறங்கிக் கொண்டிருந்தார்கள். நான் எடுத்துச் சென்ற ஒரு பழைய செய்தித்தாள் கூட பைக்குள் பத்திரமாய் இருந்தது. இப்போதெல்லாம் அந்த வழிமுறை ஒத்துவராது என்று தோன்றியது.
Continue Reading »

“என்ன கோபமா இருக்கியா?” என்று கேட்டது குரங்கு.

“ம்ம்…, நீ?”

“எனக்குக் கோபம் தான்”

“எனக்கும் கோபம் கன்னாபின்னான்னு இருக்கு” என்றேன். “நெறயா எம் மேல. கொஞ்சம் உம் மேலயும். ‘ரௌத்திரம் பழகு’ன்னு மீசைக்காரன் ரெண்டு வார்த்தைல சொல்லிட்டுப் போய்ட்டார். ஆனா என்ன பண்றதுன்னு தெரியலே!”

“சரி. விடு. இப்போ எதுக்குக் குதிக்கறே?”

“விடா? நீதானே நான் குதிக்கவே இல்லைன்னு சொன்னே?”

“ஆமா. அதுக்காக என்ன பண்றது? நீ சொல்றதுக்குப் பெரும்பாலும் மாற்றுச் சொல்லத்தானே நான்? எதுவுமே அதீதமாப் போயிட்டா பிரச்சினை தான்”

“அடப் போ குரங்கே. நம்பிக்கைன்னு ஒண்ணு இருக்கு. அது சிதறும்போது எதையோ பிச்சு எடுக்கிற மாதிரி வலிக்கும். அப்புறம் என்ன பெரிய பிரச்சினை?”
Continue Reading »

« Newer Posts - Older Posts »