பெங்களூர் மழையில் நனைகின்ற பூங்காற்று – 6
Sep 11th, 2005 by இரா. செல்வராசு
அதென்னவோ இந்த வருடம் “பொத்துக்கிட்டு ஊத்துதடி வானம்” என்று பாடுவதற்கேற்றாற் போல் பெங்களூரில் மழை பெய்யோ பெய் என்று பெய்கிறது. தொப்பலாக நனைந்த துணியை உலர்வதற்குள் மீண்டும் மீண்டும் எடுத்து நீரினுள் முக்கியெடுத்துக் காயப்போடுவது போல் இருக்கிறது ஊர். ஐந்து வருடமாய்க் காணாத மழையெல்லாம் இந்த ஐந்தாறு வாரங்களில் கண்டதில் இந்தப் பகுதியில் இருக்கிற அணைகள் எல்லாம் நிரம்பி வழிகின்றன. அதில் வருடாந்திரக் காவிரிப் பிரச்சினையொட்டிய அரசியற் காட்சிகள் அதிகமாய் அரங்கேற வாய்ப்பில்லை.
சின்ன வயதில் ‘தெய்வத் திருமணங்கள்’ என்றோ ‘மூன்று திருமணங்கள்’ என்றோ ஒரு படத்தை ஒன்றிற்கு மேற்பட்ட முறைகள் பார்த்திருக்கிறேன். அதில் வள்ளியாகச் ஸ்ரீதேவி கூடத் திணைக்காட்டில் பாட்டுப் பாடிக் கிளியோட்டிக் கொண்டிருப்பார். மூன்று தெய்வங்களில் ஒருவர் (சிவபெருமான்?) தன் திருமணத்திற்கு மதுரைப் பக்கமாய் வரும்போது தண்ணீர்ப்பஞ்சம் என்று அதைத் தீர்ப்பதற்காக மண்ணில் கை வைத்து ஒரு ஆற்றையே உருவாக்கி வைப்பார். மண்ணில் இருந்து பொத்துக் கொண்டு நீர் பொங்கிப் பரவும். ஐயன் ‘கை வை’த்து உருவான வைகை ஆற்றைப் போலத் தான் ஐந்தாறு நிமிடம் மழை பெய்தால் போதும், பெங்களூர் தெருக்கள் எல்லாம் பொத்துக் கொண்டு ஓடுகின்றன. உண்மையான வைகை ஆறு இப்போது எப்படி இருக்கிறது என்பது எனக்குத் தெரியவில்லை. யாராவது மதுரைக்காரர்களைத் தான் கேட்க வேண்டும்.
ஓடுகிற மழைநீரால் சாலைகளில் குழியாவதும், குழிகளில் நீர் தேங்கிச் சாலைகள் மோசமாவதும் ஒரு சுழற்சியாக நடந்து கொண்டிருக்கிறது. மழை பெய்த ஒரு நாளில் விமான நிலையத்திற்கு இரண்டு மணி நேரம் முன்பே கிளம்பினாலும் போக்குவரத்து நெரிசலில் பதினைந்து நிமிடம் முன்பு தான் அடித்துப் பிடித்துச் செல்ல முடிந்தது. மற்றொரு நாள் நானும் மனைவியும் சென்ற ஆட்டோவின் ஒரு சக்கரம் குழிக்குள் இறங்கி இன்னும் ஓரிரு பாகைகள் (degrees) சாய்ந்திருந்தால் குப்புறக் கவிழ்ந்து சாலைக்குழிமழைநீர்த்தேக்கத்தில் நீந்திக் கொண்டிருந்திருப்போம். என்னவோ ஒரு சாகசம் செய்து கவிழாமல் தடுத்து விட்டார் ஓட்டுனர். நல்ல வேளையாக மகள்களை உடன் அழைத்துச் செல்லவில்லை.
சாதாரண மழைக்கே இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் ஒரு ஓரமாய் நிறுத்தி சாலைநீர் வடியட்டும் என்று கொட்டுகிற மழையிலும் காத்திருப்பார்கள். அதில் சில தைரியசாலிகள் கால்களைத் தூக்கி அந்தரத்தில் தொங்கவிட்டுக் கொண்டு சக்கரம் நீரில் மூழ்கச் சென்று கொண்டிருப்பார்கள். சற்று இக்கான (risky) செயல் தான். கவனம் கொள்ள வேண்டும். மழைநீர் வடிகுழாய்கள் சரியாய் இல்லை என்பதால் நகரின் பல பகுதிகளில் வெள்ளமாய்ப் பொங்குகிறது என்று பலதரப்பட்ட மக்களும் பொங்கிக் கொண்டிருக்கிறார்கள். அடுக்குமாடிக் குடியிருப்புகளின் கீழ்த்தளத்தில் நிறுத்தியிருக்கும் கார்கள் எல்லாம் சிலசமயம் மழைவெள்ளத்தில் நீந்திக் கொண்டிருக்கின்றன.
சரியான வடிகுழாய் முறைகள் இல்லை என்று அரசினர் மீது மக்கள் பழி போட்டுக் கொண்டும், இருக்கும் வடிகுழாய்களில் கண்ட குப்பைகளைப் போடுவதால் தான் அவை அடைபட்டு இப்படிப் பிரச்சினைகள் உருவாகின்றன என்று அரசு மக்கள் மீது பழி போட்டுக் கொண்டும் இருக்கிறார்கள். இரண்டிலும் சிறிது உண்மை இருக்கலாம். ஒரு பெரிய டிராக்டர் டயரை ஒரு அடைப்பில் இருந்தும் இன்னும் பல பெரிய பொருட்களையும் (காட்டாக: கழிவறைச்சட்டிகள் – கம்மோடுகள்) எடுத்ததைச் செய்தித்தாளில் பார்த்தேன். இருப்பினும் இந்தப் பழியும் பொறுப்பும் அரசுப் பக்கம் தான் அதிகம் என்று எனக்குத் தோன்றுகிறது. சரியான வழிமுறைகளைச் சொல்லி அமுல்படுத்தும் தலைமைப்பண்புகளையும் பொறுப்புக்களையும் விலகுபவர்களை வழிக்குக் கொண்டுவரும் முறைகளையும் அரசே கொண்டிருந்திருக்க வேண்டும். எங்கே! அவர்களுக்குக் காசு பார்ப்பதற்கே நேரம் சரியாக இருக்கிறது என்கிற எண்ணம் தான் பரவலாக இருக்கிறது.
தனியார் நிறுவனங்கள் சில வசதிகளைச் செய்ய முன்வந்தாலும் அரசு முட்டுக்கட்டையோ போதிய ஊக்கம் அளிக்கத் தவறியோ அவற்றை நிறைவேற்ற விடுவதில்லையாம். கிருஷ்ணா முதல்வராய் இருந்ததை விட இப்போது சில ஆண்டுகளில் எல்லாம் மோசமாகப் போயிருக்கிறது என்பதும் ஒரு பொதுக் கருத்து. அடித்தளம் சரியாய் இல்லாத மாளிகை எவ்வளவு நாட்களுக்குத் தான் நிலையாய் நிற்க முடியும்? அடிப்படை வசதிகள் சரியாய் இல்லாத காரணத்தால் இந்த வருடம் பல மென்பொருள் நிறுவனங்கள் பெங்களூர் ஐடி.காம் என்னும் தொழில்விழாவைப் புறக்கணிக்க முடிவு செய்திருக்கின்றன. சில புதிய நிறுவனங்கள் வேறு ஊர் நோக்கிப் பார்வையைச் செலுத்த ஆரம்பித்திருக்கின்றன. இதற்கெல்லாம் அரசின் பதில் என்ன?
“அடிப்படை வசதிகள் பற்றி அநியாயமாய்ப் பேசி, சில குறிப்பிட்ட நிறுவனங்களைச் சார்ந்த சில குழுக்கள், வீணாக அவதூறு பரப்பி அரசியல் சாயம் பூசி என்னை எதிர்த்து அவப்பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்”.
வேடிக்கையாகப் பேசுகிறார் போலிருக்கிறது – தரம்சிங், இந்நாள் முதல்வர். நகரின் பிரச்சினைகள் கண்கூடு. மக்கள் அன்றாடம் எதிர்கொள்கிற சாலை நெரிசல், போக்குவரத்து வசதிக்குறைவுப் பூசணிகளை மேற்படி அறிக்கைச்சோற்றில் மறைத்துவிடலாம் என்று நினைத்தாரென்றால் அது வேடிக்கையின்றி வேறென்ன?
இருபது முப்பது வருடங்களாகப் பெங்களூரையே வசிப்பிடமாய்க் கொண்ட பணியோய்வு பெற்ற மக்களாய் இருந்தாலும் சரி, இரண்டு மூன்று வருடங்களாய் மென்பொருள் அலையில் அடித்துவரப்பட்ட இளைஞர் பெருமக்களாய் இருந்தாலும் சரி, மக்கள் இந்த அடிப்படை வசதிக் குறைவுகளை நினைத்தேங்கி நொந்துபோயிருப்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. அந்த ஏக்கம் பெங்களூரின் ‘வாழச்சிறந்த இடம்’ என்கிற பெயருக்குக் குறைவை ஏற்படுத்தி வருகிறது என்பது தற்காலிகனான எனக்கும் கூட ஒரு சோகத்தை உண்டு பண்ணுகிறது.
* * * *
பி.கு.: பெங்களூரில் மழை-மரம்-மின்வெட்டு பற்றிய அலெக்ஸ் பாண்டியன் பதிவு. அங்கு அவர் இட்டிருந்த டெக்கான் ஹெரால்டில் வந்த படம்.
இந்தியாவின் பெருவாரியான நகரங்களின் நிலை இப்படித்தான் உள்ளது போலும். மும்பை பட்ட பாடு இன்னும் மனதிலிருந்து நீங்கவில்லையே
செல்வராஜ்:
சுட்டியை சுட்டியமைக்கு நன்றி. தற்போது அலுவலக மடல்களில் வலம் வந்து கொண்டிருக்கும் இந்த செய்திகளையும் நீங்கள் படித்திருக்கலாம்.
http://www.indianexpress.com/full_story.php?content_id=74992
http://www.indianexpress.com/messages.php?content_id=74992
http://chaos.weblogs.us/archives/022692.html
http://lists.sculptors.com/pipermail/future-studies/2004-August/msg00000.html
பெங்களூரின் வாய்ப்புகள் சென்னைக்கும், ஹைதராபாத்துக்கும், கொல்கத்தாவிற்கும், குர்காவ்ன்(டெல்லி)க்கும், புணேவிற்கும் சென்று கொண்டிருக்கின்றன என்பதில் ஐயமில்லை.
– அலெக்ஸ்
எப்பதான் இதற்கெல்லாம் விடிவு காலம் வரும்?
ஏன் பொறுப்பில் இருப்பவர்களுக்கு இதெல்லாம் புரியமாட்டேன்குது?
நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு…… 🙂
கொஞ்ச நாள் சென்னையில் இருங்கள், மழை கொண்டு வாருங்கள் 🙂
இந்த மழை தண்ணீர் வடியும் விஷயத்தில் நவிமும்பை (மும்பை அல்ல) பரவாயில்லை, ஓரளவுக்கு நல்ல கட்டமைப்புடன் நகரம் நன்றாக உள்ளது, இந்த பிரச்சனைகளுக்கு மக்கள்தொகை பெருக்கம், முறையற்ற குடியுருப்புகளையும் காரணமாகச் சொல்லலாம்
சோம்பேறிப் பையன், நவிமும்பை எங்கே எப்படின்னு தெரியல்லே, ஆனா இப்போ தான் மும்பை தாராபூர் பக்கமா போயிட்டு வர்றேன். அம்மாடி பெண்டு கழண்டுடிச்சுங்க. பெங்களூர் பரவாயில்லனு சொல்ற மாதிரி தான் இருக்கு.
தாணு, நீங்க சொன்ன ‘மும்பை பட்ட பாடு’ பற்றியும் நேரிலேயே பாத்தவங்ககிட்டக் கேட்டுட்டு வந்தேன்.
ரவி, இப்படிக் கால வாரறீங்களே! 🙂 அப்படியே வானிலை அறிக்கை பாத்துட்டு மழை வர்ற ஒரு நாளில் சென்னைக்கும் ஒரு நடை போயிட்டு வந்துரலாம். விடுங்க !!
விமலா, அலெக்ஸ் நன்றி. அந்தச் சுட்டிகளைப் பார்த்தேன். இப்போ செய்தித்தாள்களில் வேடிக்கையா வர்ற இன்னும் நிறைய செய்திகளைப் பார்க்கிறேன்.
“உள்ளூர் ஆளுங்களாப் பாத்து வேலைக்கு எடுங்கப்பா”
“மென்பொருள் நிறுவனங்கள் தாதா மாதிரி நடக்கின்றன. விடுங்க, வேற ஊர் போனாப் போகட்டும்” என்று அரசியல்வாதிகள் வியாதி வந்த மாதிரி பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.