Aug 17th, 2005 by இரா. செல்வராசு
ஓ! தயவு செய்து மும்பை விமான நிலையம் பற்றி மட்டும் ஆரம்பித்து வைத்து விடாதீர்கள். ‘இந்தியாவின் நுழைவாயில்’ என்று இன்னும் எத்தனை நாட்களுக்குத் தான் நாட்டின் பெயரையே கெடுத்துக் கொண்டிருக்கப் போகிறார்கள் என்று தெரியவில்லை. வெளிநாட்டில் இருந்து வருகிற இந்தியர்கள் மட்டுமல்ல, வெளிநாட்டினரும் கூட முதன் முதலில் காலடி எடுத்து வைக்கிற அந்த முதல்க் கணங்களிலே தானே ஒரு அபிப்பிராயத்தை ஏற்படுத்திக் கொள்கிறார்கள். இப்போதெல்லாம் உலகமயமாக்கலும், தட்டையாகும் உலகும், கணித்திறன் மற்றும் மாறுகரைப்பணிகளும் இந்தப் பக்கமாய்த் திரும்பிக் கூடப் பார்க்காத பலரையும் உள்ளிழுத்துக் கொண்டிருக்கிறது. அந்தக் கட்டாயங்கள் இல்லையெனில் இந்தியாவின் நுழைவாயிலுக்குள் வந்தவுடன் எல்லோரும் வெளிவாயிலைத் தேடி ஓடி விடுவார்கள்!
வளியூர்தியை விட்டிறங்கி நிலையத்துள் நுழைந்து காலடி வைத்தவுடன் முதலில் அடிக்கிற ‘பெனாயில்’ மணத்தைக் கூட விட்டுவிடுவோம். சுத்தப் படுத்துகிறார்கள் என்று வைத்துக் கொள்ளலாம். அட, அந்த அழுமூஞ்சிப் பழைய விளக்குகளை எல்லாம் மாற்றிவிட்டு ஒரே அளவு ஒளி தரும் விளக்குகளை மட்டுமாவது மாட்டி வைக்கலாமே. கடுகடுவென்ற முகத்துடன் சும்மா நின்று பார்த்துக் கொண்டிருப்பவர்களைக் குறைந்த பட்சம் கொஞ்சமாவது சிரிக்கச் சொல்லலாமே.
ரத்தாகிப் போன விமானத்தினாலோ, அல்லது சாதாரணமாகவே வேறு பல ஊர்களுக்கு மாற்று விமானங்களில் செல்ல வேண்டியிருப்பவர்களுக்கு கொஞ்சம் தெளிவான குறிப்புக்கள் கொடுக்கலாம். சரியான திசைகளில் கை காட்டலாம். ஒரு ஊருக்குப் போகும் சிலர் விமான நிலையம் மாறாமலும் செல்லலாம், மாறியும் செல்ல வேண்டியிருக்கலாம் என்னும் நிலையை உணர்ந்து அதுபற்றித் தெளிவாய் எடுத்துரைக்கலாம். அதைவிடுத்துச் சும்மா சென்னை, பெங்களூர், ஹைதராபாத் ஆளுங்க இங்கே போ, ட்ரான்சிட் ஆளுங்க அங்கே போ என்று கூவி விற்காமல் இருக்கலாம். வேறு விமானத்தில் ஏறிச் செல்பவர்கள் எல்லாம் ட்ரான்சிட் ஆளுங்க தானே. நான் பெங்களூரும் போகணும், ட்ரான்சிட் ஆளும் தான் என்பதால் அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று குழம்பி, ஒரு வரிசையில் பல நிமிடங்கள் நின்றபின் ‘இங்கில்லையப்பா, நீ வேறிடம் போ’ என்று துரத்திவிட்டால் என்ன செய்வது?
Continue Reading »
Posted in பொது | 10 Comments »
Aug 16th, 2005 by இரா. செல்வராசு
மொட்டை வெய்யலாய் இருந்தாலும் நடந்தே செல்வது என்று முடிவு செய்தேன். ஈரோடு பேருந்து நிலையத்தில் இருந்து எங்கள் வீடு இருக்கும் (இருந்தவென்றாகப்போகிற) வீரப்பன் சத்திரம் சுமார் ஒன்றரைக் கிலோ மீட்டர் தூரம் தான் இருக்கும். ஒரு ஆட்டோவில் ஏறிச் சென்றால் ஐந்து நிமிடத்தில் வீட்டில் இருக்கலாம். இருந்தாலும் ஊருக்குத் தனியனாக நான் மட்டும் சென்றதில் கிடைத்த நடைச் சுதந்திரத்தை அனுபவித்தவாறு கிளம்பினேன். அவசரமாய் ஆட்டோவில் அல்லது நகரப் பேருந்தில் சென்றால் எப்படி வேடிக்கை பார்த்துச் செல்வது? அவ்வப்போது அடித்த காற்றின் காரணமாய் வெய்யல் பெரிதாய் ஒன்றும் செய்யவில்லை.
தள்ளுவண்டியில் சில பெண்கள் காய் கறி பழங்கள் விற்றுக் கொண்டிருந்தனர். அந்த வ்ண்டிகளுக்கு எண்கள் குறிக்கப் பட்டிருந்தன. அரசு பள்ளியொன்றின் பெயர்ப்பலகை புதிதாக இருந்தது. சின்னச் சந்தாய் இருந்த இடங்களில் பெரிய வணிகக் கட்டிடங்கள் முளைத்திருந்தன. இன்னும் சில அப்படியே இருந்தன. உருமாலை கட்டிக் கொண்டு இளநீர் விற்றுக் கொண்டிருந்தவர்களைத் தாண்டிப் ‘பாரதி கொட்டாய்’ நிறுத்தம் அருகே சென்றபோது அந்த விளம்பரத் தட்டி என்னைக் கவர்ந்தது. ஈரோட்டில் பத்து நாட்களுக்குப் புத்தகக் கண்காட்சி. இந்தப் பக்கமெல்லாம் இப்படிப் புத்தகக் கண்காட்சிகள் வருவது அரிதாயிற்றே!
புதிதாய் மக்கள் சிந்தனைப் பேரவையின் சார்பாய் ஏற்பாடு செய்திருக்கிறார்கள். கண்காட்சி ஆரம்பித்துச் சில நாட்களே ஆகியிருந்தன. இன்னும் ஒரு வாரத்துக்கு நடக்கும் என்றாலும் நான் இருக்கப் போவது இரண்டு நாட்களுக்கு மட்டுமே. சென்ற முறை இந்தப் பக்கமாக வந்தபோது கோவை விஜயா பதிப்பகம் சென்றும் பல நல்ல புத்தகங்களைப் பார்த்துவிட்டுப் பெருமூச்சு மட்டும் விட்டுவிட்டு வந்துவிட்டதில் இங்கு மட்டும் போய் என்ன செய்யப் போகின்றேன்? புத்தகங்களை வாங்குவதற்குத் தயங்குவதற்குச் சில காரணங்கள். ஒன்று, அதனை அயல்நாட்டுக்குச் சுமந்து செல்வதில் இருக்கும் சிக்கல்கள். இரண்டு, வாங்கி அடுக்கிப் படிக்க நேரமின்றிச் சும்மாவே போட்டு வைத்துவிடுவேனோ என்னும் ஐயம். மூன்று, நல்ல புத்தகங்கள் என்று எப்படிப் பார்த்து வாங்குவது என்னும் அறியாமை. இவற்றையெல்லாம் மீறிச் சமீபத்தில் மீண்டும் எழுத்துலகில் ஆர்வம் பிறந்திருப்பதற்கு வலைப்பதிவுலகம் நிச்சயமான ஒரு காரணம். நிறைய நல்ல புத்தகங்களின் அறிமுகங்கள் கிடைக்கத் தொடங்கியிருக்கின்றனவே.
கண்காட்சியில் தினமும் மாலையில் சிலரைச் சொற்பொழிவாற்றவும் அழைத்திருக்கின்றனர். அன்றைய தினம் யாரென்று பார்த்தேன். பொன்னீலன் என்றிருந்தது. சாகித்ய அகாடமி விருது பெற்றவர் என்றாலும் அவரைப் பற்றிப் பெரிதும் அறிந்திராததில் அப்படி ஒன்றும் ஆர்வம் பிறக்கவில்லை. அருகிலேயே சிறிதாய்த் திருமதி. செல்வநாயகி என்றிருந்தது. அவர் யாரென்று பெரிதான விளக்கமில்லை. எனக்குத் தெரிந்து ஈரோட்டில் செல்வநாயகி மருத்துவமனை ஒன்றிருக்கிறது. ஆனால் அந்த மருத்துவர், குடும்ப நண்பர், பெயர் நிர்மலா. அதனால் அவர்களாயிருக்க முடியாது. அதையடுத்து தோழியரில் எழுதிக் கொண்டிருக்கும் செல்வநாயகி. ஒருவேளை இது அவராகக் கூட இருக்குமோ என்னவோ தெரியவில்லை என்று மனதிற்குள் எண்ணியவாறு நடையைக் கட்டினேன். வேறு விவரங்கள் இல்லாததால் தெளிவு செய்து கொள்ள இயலவில்லை.
Continue Reading »
Posted in இலக்கியம், பொது | 9 Comments »
Aug 12th, 2005 by இரா. செல்வராசு
அப்புடியே புதுசாச் செக்குல ஆட்டுன எண்ணெய் இருந்தா நல்லா இருக்குமேன்னு எங்கூட்டுக்காரிக்குத் திடீர்னு ஒரு ஆசை வந்துருச்சுங்க. பெத்த புள்ள கேட்டுருச்சேன்னு அவங்கப்பா எங்களயும் கூட்டிக்கிட்டு கெளம்பீட்டாரு. செக்கெண்ணயத் தேடிக்கிட்டு ஊரு தேடி ஊரு தாண்டிக் கடசில கொளப்பலூருக்கு வந்து சேந்தோம். மாடு வச்சுச் செக்காட்டி எண்ணெய் எடுக்கிறதெல்லாம் இப்போ இல்லைன்னு சொல்லீட்டாங்க. மிசினுத் தானாம். ரோட்ட ஒட்டி இருக்குற சந்துல கொஞ்சம் உள்ளுக்கால போனோம். ஓரமா இருந்த சாலக்கொட்டாயில மாடு ரெண்டு அச போட்டுக்கிட்டு இருந்துச்சு. தொறந்திருந்த இரும்புக் கதவத் தாண்டி நொழவாசல்ல உரிச்ச தேங்காமட்ட மலை மாதிரி குமுஞ்சிருந்துது.
பின்னால எங்கிருந்தோ மொதலாளியம்மா வந்தாங்க. “ஏம்மா தேங்கா எண்ண இருக்கா?”. வாச முலுக்க ஒடச்ச கொப்பரத் தேங்காயக் காய வச்சுருந்தாங்க. செவுத்தோரம் ஒரு வண்டி டயரும் வெய்யல்ல காஞ்சுக்கிட்டு இருந்துச்சு. யாரோ ரெண்டு பேரக் கூப்பிட்டு அந்தம்மா ஊத்திக் குடுக்கச் சொன்னாங்க. வரட்டும்னு சுத்திமுத்தியும் வேடிக்க பாத்துக்கிட்டு இருந்தோம். காஞ்சுக்கிட்டிருந்த தேங்காயுல ஒண்ணு அழுகிப் போயிருந்துச்சு. “பாருங்க, இதையெல்லாம் அப்படியே போட்டு அரச்சுருவாங்க”, அப்படின்னாரு எங்க மாமா.

லிட்டருக்கு அம்பது ரூவா கேட்டாங்கன்னு நெனைக்கிறேன். வெலையெல்லாம் ஒரு நெதானமுந் தெரியலீங்க. அது அதிகமா கம்மியா புரியல. “ஏம்மா, கடல எண்ண உங்ககிட்ட இல்லியா, எங்க கெடைக்கும்?” மாமா மேல வெசாரிச்சுக்கிட்டிருந்தாரு. அப்படியே தெக்கயோ மேக்கயோ என்னவோ சொல்லிக் கொஞ்ச தூரம் போய்க் கேக்கச் சொன்னாங்க. போய் நின்ன எடத்துல ரெண்டு பெருசுங்க ஒக்காந்து பராக்குப் பாத்துக்கிட்டிருந்துச்சுங்க. மூக்கு மேல கண்ணாடி போட்டுக்கிட்டு அதுக்கு மேல இருந்த சந்துல பாத்துக்கிட்டிருந்தவங்க கிட்டப் போயி மொட்டயடிச்சிருந்த ட்ரைவரு கேட்டுட்டு வந்தாரு.
Continue Reading »
Posted in கொங்கு, வாழ்க்கை | 15 Comments »
Aug 9th, 2005 by இரா. செல்வராசு
“அப்பா… ஒய் ஆர் யுவர் மாம் அண்ட் டேட் ஓல்ட்?” என்று கேட்டது குழந்தை. எட்டிக் குதித்து மேலே விழுகிறவளைத் தாங்கிக் கொண்டு தூக்கிச் சுற்றும் தெம்பு இன்றைக்கு அவருக்கு இல்லை. ஈரோடு நிலையத்திற்கு வந்து நின்ற இண்டர்சிட்டி ரயிலில் ஏற்றிவிடப் பெரியவளின் கையைப் பிடித்துக் கொண்டு நடந்து வந்த அந்த இரு நிமிடங்கள் கூட அவருக்கு ஒரு நிறைவைத் தந்திருக்கக் கூடும். ஒரு காலத்தில் இறுக்கி வைத்துக் கொள்பவரின் வயிற்றைக் குத்திப் பார்த்து விட்டு, ‘கல்லு மாதிரி இருக்கு’ என்று வியந்து நின்றிருக்கிறேன். இன்று பாதியாகிப் போன தேகமும் அங்கங்கு விழுந்திருக்கும் குழிகளும் குறுகும் தோளும் ஏறிக் கொண்டே இருக்கும் வயதிற்குச் சாட்சியங்கள் கூறுவனவாய் இருக்கின்றன. ஓரிரு வருட இடைவெளியில் ஒவ்வொரு முறை ஊருக்கு வரும்போதெல்லாம் இப்படி வயதாகும் மாற்றங்கள் முகத்தில் அறையும். இம்முறை அப்படி ஏதும் தாக்கங்கள் ஏற்படவில்லை என்பதற்கு இந்தச் செலுத்தத்தை இயல்பென்று மனம் ஏற்றுக் கொண்டது காரணமா அல்லது அந்த வயதேறும் செலுத்தமே இப்போது மிதமாகிவிட்டதா என்று தெரியவில்லை.
ஊரை விட்டுக் காவிரிப் பாலத்தைத் தாண்டி இரயில் விரைகிறது. பெரும் பசுமைப் பகுதி என்று சொல்லி விட முடியாது என்றாலும் இந்த மண்ணுக்கே சொந்தமான சின்னங்கள் காட்சி தருகின்றன. ஆங்காங்கே சில தென்னை மரங்களும் பனை மரங்களும் உயர்ந்து நிற்கின்றன. வண்ணக் கோலத்தில் எல்லைத் தெய்வங்கள் கண்ணை உருட்டிக் கொண்டு ஓரமாய் நிற்கின்றன. வண்டி முன்னே செல்ல நினைவுகள் பின்னே செல்கின்றன.
“ங்கோவ், ஒழுங்காச் சாப்பிடுங்க. இப்படி ஒண்ணுஞ் சாப்பிடாம ஒடம்பே எளச்சுப் போச்சு. வெறும் மேலோடு இருந்த ஆளப் பாத்துக் கோயக் கும்பாவிசேத்துக்கு வந்த சனமெல்லாம் பேசுச்சு. ராமசாமி ஒடம்பு பாதி ஆயிருச்சுன்னு”, உணவு பரிமாறுகையில் அம்மாவின் கவலை அதட்டலாய் வெளி வந்தது. “அட. வேண்டாம் போ. பசிக்கல”
Continue Reading »
Posted in கொங்கு, வாழ்க்கை | 22 Comments »
Aug 7th, 2005 by இரா. செல்வராசு
ஊர்ப்பக்கம் போயிருந்தபோது கிராமம் ஒன்றின் சாலையில் மாடுகளைக் கூட்டிக் கொண்டு ரெண்டு பேர் போய்க்கொண்டிருந்தார்கள். சந்தைக்குப் போனவையா வாங்கி வரப்பட்டவையா தெரியவில்லை. வயதாகியிருந்தது. நின்று கொண்டிருந்த இடத்தைத் தாண்டிப் போயின.
சிறிது நேரம் கழித்துக் கார் அவர்களைத் தாண்டிப் போன போது ஒரு மர நிழலில் இளைப்பாறிக் கொண்டிருந்தார்கள் மாடுகளை ஓட்டிச் சென்றவர்கள். மாடுகளும் ஆசுவாசமாய் நின்று கொண்டிருந்தன. சலுப்பும் ஓய்வும் மாடுகளுக்கும் உண்டு. ஓட்டிகளுக்கும் உண்டு.
இன்னும் எத்தனை தூரமோ?

Posted in பொது | 4 Comments »