Aug 6th, 2005 by இரா. செல்வராசு
‘நவகிஸ்’ என்றால் கன்னடத்துல எதாவது அர்த்தம் இருக்கிறதா என்று கன்னட ஓட்டுனரைக் கேட்டேன். தமிழும் பேசுகிறார் அவர். ‘முடிவதில்லை’ என்கிற அர்த்தத்தில் அவர் சொல்லும் ‘ஆவுறதில்லே’ கேட்க நன்றாக இருக்கிறது. அவருக்கும் தெரியவில்லை. “நவ என்றால் புதிது, நவகிஸ்னா தெரியல்லியே” என்று தான் பதில் கிடைத்தது. எம். எஸ். ராமய்யா என்பவர் இந்த ஊரில் பெரிய ஆள் போலிருக்கிறது. அவர் பெயரில் வகைக்கு ஒன்றாய்க் கல்லூரி, பள்ளி எல்லாம் இருக்கிறது. பொறியியற் கல்லூரி, மருத்துவக் கல்லூரி, பல்மருத்துவக் கல்லூரி, மேலாண்மைக் கல்லூரி, விடுதி மேலாண்மைக் கல்லூரி, தாதியர் கல்லூரி, ஓவியக் கல்லூரி … இப்படி. நவகிஸ் பள்ளி கூட ராமய்யாவின் மகன்களுள் ஒருவருக்குச் சொந்தமானதாம். பெயர்க்காரணத்தை ஒரு நாள் பள்ளியிலேயே கேட்டு விட வேண்டும்.
பள்ளியில் சேர்க்கப் பெரியவளுக்கு நுழைவுத் தேர்வு கூட இருந்தது! எந்த வகுப்பில் சேர்த்துக் கொள்வது என்று மதிப்பிடுவதற்காக என்றார்கள். இரண்டாம் வகுப்பில் சேர்ந்திருப்பவளுக்குப் பொதுவாக எந்தப் பிரச்சினையும் இல்லை. இந்தி மட்டும் முற்றிலும் தெரியாது என்பதால் சிறு பிரச்சினை. கொஞ்சம் நாட்கள் தானே என்று ‘எழுத்துக்களைப் பார்த்து வரைந்து கொள்ளச் சொல்லி விட்டார்கள்(!)’ என்று மகளுக்கு நிம்மதி. பொதுவாகவே இங்கே பள்ளிகளில் கையெழுத்து வேலை அதிகம். கூடவே ‘சிக்ஸ் ஒன்ஸ் ஆர் சிக்ஸ்…’ என்று ராகம் போட்டு வாய்ப்பாடும் கற்றுக் கொண்டு வருகிறாள்.

இந்தியப் பள்ளிகளில் சீருடை அணிந்து கொள்ளலாம் என்பதில் பெண்களுக்கு ஒரு ஆர்வம். எனது பள்ளிக்காலத்தில் சீருடை அணிய வேண்டியிராத ‘கலர் டிரஸ்’ சனிக்கிழமைகள் பிடிக்கும். மனித மனம் எது கிடைப்பதில்லையோ, எது புதுமையாக இருக்கிறதோ அதையே விரும்புகிறது. வெள்ளிக்கிழமைக்கென்று தனியாய் வெள்ளைச் சீருடையும் உண்டு. இங்கு வரும் முன் புதிய இடம் பற்றித் தெரியாமல் சற்றுக் கலக்கம் அடையும் நேரங்களிலெல்லாம் கூட “ஹே, அங்க போய் சீருடை எல்லாம் போட்டுக்கலாம்” என்று சொன்னால் போதும். கலக்கம் போய் ஆர்வம் வந்துவிடும்.
Continue Reading »
Posted in பயணங்கள், வாழ்க்கை | 12 Comments »
Jul 19th, 2005 by இரா. செல்வராசு
ஊர் சுற்றிக் காண்பிக்க அழைத்துச் சென்ற ரூட்டபேகோ உடன் பணி புரியும் ஜெர்மன். தன் காதலியையும் அங்கு அழைத்திருப்பதாகக் கூறினான். “நீ எங்கிருந்து வருகிறாய்? மான்ஹைம் நகரா ஹைடல்பர்க்-ஆ?” என்று கேட்டவனைப் பார்த்து இரண்டும் இல்லை என்று தலையை ஆட்டினாள் அவள். அருகில் இருக்கும் கிராமத்தில் இருந்து வருவதாய்க் கூறினாள். முழுக்க ஆங்கிலம் தெரியாத அவளும் ஜெர்மன் தெரியாத நானும் ரூட்டபேகோ ஒண்ணுக்கிருக்கப் போனபோது பேசிக் கொண்டோம். குரங்கு தாவிக் கொண்டு கிடந்தது. கொஞ்சம் வெட்கப் பட்டுத் தனக்குள் பேசிக் கொண்டது. அவர்கள் இருவரும் ஜெர்மனில் பேசிக் கொண்டபோது சன்னல் வழியே பார்த்துக் கொண்டு முகத்தில் மட்டும் ஒரு இளிப்புக் காட்டிக் கொண்டு கிடந்தது. மூன்றாம் ஆள் இருப்பதற்கு அவர்களின் முத்தமோ குரங்கோ வெட்கப் படவில்லை.
ஆந்தலூசியா ஆந்தலூசியா என்று மனதுள் ஒலித்துக் கொண்டே இருந்தது. எங்கோ ஒரு முறை ஆந்தலூசியாவின் நாய் என்று படித்த நினைவு இப்போது ஏன் மேலெழும்ப வேண்டும்? பீர் தயாரிக்கும் வினைகலன்கள் இரண்டு பெரிதாய் இருந்த அறையில் பழமையின் தாக்கம் இருந்தது. “பன்றிக்கறியை இப்படிச் சாப்பிட்டும் எப்படி மெலிதாய் இருக்கிறாய்” என்றேன். இடையில் ரூட்டபேகோ ஜெர்மனில் அவளுக்கும் ஆங்கிலத்தில் எனக்கும் மொழிபெயர்த்துக் கொண்டிருந்தான். அவர்கள் விழிகளால் பேசிக் கொண்டதும் முத்தங்கள் கொடுத்துக் கொண்டதும் இடையில் நீ என்ன கரடி என்று குரங்கு கேட்டது. குலுக்கிய அவள் கை வணிக இறுக்கம் இல்லாமல் மிருதுவாய் இருந்தது. “உனக்கு இரண்டு குழந்தைகளா” என்றாள். “ஆம் இரண்டு பெண்கள் ஆறும் நான்கும் வயது” என்றேன். “படம் வைத்திருக்கிறாயா?” என்று வினவினாள். ஆந்தலூசியா. உனது ஏழு வயது மகனை எங்கே விட்டுவிட்டு வந்தாய் என்று நான் இரவு பன்னிரண்டு மணியானபோதும் அவளைக் கேட்கவில்லை. ஆனாலும் ஊருக்குப் போன பின் பெண்களின் படத்தைக் கையோடு வைத்திருக்க முடிவு செய்து கொண்டேன். பேருந்தைப் பிடிக்க ஓடினோம். அலைந்து கொண்டிருந்த குரங்கையும் பிடித்து இழுத்துக் கொண்டு ஓடினேன். “மறுபடியும் பசிக்கிறதா?” என்றாள்.
Continue Reading »
Posted in பயணங்கள் | 7 Comments »
Jul 13th, 2005 by இரா. செல்வராசு
பெங்களூர் – சென்னை விமானம் அரை மணி நேரப் பயணம் தான் என்றாலும் அருமையாய் நொறுக்குத் தீனி கொடுக்கிறார்கள். இப்போதெல்லாம் ஓரிரு மணி நேரம் செல்லும் அமெரிக்க விமானப் பயணங்களில் கடலைக்கொட்டை கூடக் கிடைப்பதில்லை. அதற்கு மேல் செல்லும் பயணங்களில் கூட, கிடைக்கிற சாப்பாட்டுக்கு ஐந்து டாலர் கேட்கிறார்கள்.
ஜெட் ஏர்வேஸ்-இல் இரவு தூங்குகிற நேரத்தில் எதற்கு குளிர்துண்டு கொடுக்கிறார்கள் என்று நினைத்தேன். ஆனால் வியர்வை அழுக்கைத் துடைத்துக் கொள்கையில் அயர்வு நீங்கி ஒரு புத்துணர்வு வருகிறது. இதில் ஒரு மனோதத்துவத் திட்டம் இருக்க வேண்டும். அயர்வான பயணிகளை விட, மலர்ந்திருக்கிற பயணிகளைக் கவனித்துக் கொள்வது எளிதானது. (“என்னவோ பெருசா கண்டுபிடிச்சிட்டாரு”).
மாரியம்மன் கோயில் திருவிழாவின் போது கிடைக்கும் நீர்மோர் இப்போது பொட்டலத்தில் அடைபட்டு விமானத்தில் பறந்து கொண்டிருக்கிறது. அதுவும் கூடச் சுவையாய் இருந்தது. ஒரு வேளை உப்பு அதிகமாகவோ குறைவாகவோ இருக்குமோ என்று எண்ணினேன். இல்லை. சரியாக இருந்தது. நீர்மோரையும் எதாவது பன்னாட்டு நிறுவனம் தங்கள் சொத்தாக்கிக் கொண்டு விடுமா என்று ஐயத்துடன் எங்கு செய்கிறார்கள் என்று பார்த்தேன். இல்லை இது ஒரு உள்நாட்டு நிறுவனம் தயாரிப்பது தான்.
Continue Reading »
Posted in பயணங்கள், வாழ்க்கை | 1 Comment »
Jul 12th, 2005 by இரா. செல்வராசு
தமிழ்மணம் பற்றிய அடிப்படையைப் பலர் (பெரிய தலைகளும் கூட) தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறார்கள் என்பது வருத்தத்திற்குரியது. அது திரட்டி மற்றும் சில வசதிகள் மட்டும் தான் என்று மீண்டும் மீண்டும் விளக்கம் அளிக்க ஆயாசம் தான் மிஞ்சுகிறது. அதனால் மீண்டும் அது பற்றி விளக்க நான் முற்படப் போவதில்லை. அவரவர் ‘புரிதலில்’ அவரவர் உறுதியாய் இருக்கும்போது எந்த விளக்கமும் வீண்.
யாருக்கேனும் தமிழ்மணம் பற்றிய கேள்விகள் கருத்துக்கள் இருப்பின் தமிழ்மணத்தின் வாசகர் மன்றத்தில் எழுப்பினால் அதனைக் கவனிக்க முடியும். மன்றத்தில் நிர்வாகிகள் மட்டுமன்றி தெரிந்த பலரும் பதில் அளிக்க ஏதுவாய் இருக்கும். அது போலப் பல வாசகர்கள் இப்போது செய்து வருகிறார்கள் என்பது மகிழ்ச்சியைத் தருகிறது. அதுவன்றி பிற பதிவுகளிலும் பதிவுகளின் பின்னூட்டங்களிலும் எழுதிவிட்டுப் பதிலை எதிர்பார்த்திருப்பது நியாயமற்றது. இது ஒரு நிறுவனம் என்பதல்லாமல் ஒரு கூட்டமைப்பு என்று கொள்ள வேண்டும்.
தமிழ்மணத்தில் பதிவு செய்து கொள்வதால் பரவலான வாசகர்கள் கிடைக்கிறார்கள் என்பது வரவேற்கத்தக்கதாகவும், அதே சமயம் யாராவது அவதூறாய் எழுதிவிட்டால் அதுவும் பரவலாய் அறியப்படுவதால் அது விரும்பத்தகாததாகவும் இருக்கிறது என்பது முரணானது. ஒரு வகையில் கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை என்பது போன்றது. அதுவும் தமிழ்மணத்தின் கட்டுப்பாட்டில் இல்லாத ஒன்று அது என்பதும் நினைவில் கொள்ள வேண்டும். தனித்தனிப் பதிவர்கள் நுட்ப உதவி கொண்டோ, பிற நண்பர்கள் உதவிகொண்டோ, அல்லது மூக்கன் சொன்னது போல் நேரடியாகப் பேச்சுவார்த்தையின் மூலமோ சக பதிவர்களுடன் உண்டாகும் பிரச்சினைகளைச் சரி செய்து கொள்ள வேண்டுமே தவிர, அந்தச் சுமையையும் அதிகாரபூர்வமாகத் தமிழ்மணத்தின் மீதேற்றி நசுக்கிவிடக்கூடாது. தமிழ்மண நிர்வாகிகளும் வலைப்பதிவர்கள் தான் என்பதால் நட்புறவுக்காகத் தெரிந்த வகையில் உதவ முன்வருவோம்.
சில பதில்கள்.
Continue Reading »
Posted in இணையம் | 22 Comments »
Jul 11th, 2005 by இரா. செல்வராசு
புறாக்கள் பார்க்க அழகாக இருக்கின்றன. மாண்ட்ரீஸரிடம் சொன்னால் இந்த ஒற்றை வரியை வைத்துக் கொண்டு ஒரு நவீன கதை கட்டித் தலையைப் பிய்த்துக் கொள்ள வைப்பார் :-). திரைப்பாடல்களையே பெரும்பாலும் போட்டுத் தள்ளும் தமிழ்த் தொலைக்காட்சிகளில் கூட ஒருமுறை கூட்டமாய்ப் புறாக்கள் சிறகடித்துப் பறந்து செல்ல அவற்றின் பின்னே ஆடிவரும் செந்நிற ஆடையணிந்த அம்மணியைத் தேடி/நாடி ஒரு அய்யா ஓடி வருவார். இவையெல்லாம் கிடக்க, நேரிலும் புறாக்கள் பார்க்க அழகு தான். ஆனால் அவற்றின் எச்சங்கள் மட்டும் கொஞ்சம் துர்நாற்றம் வீசும். பார்வைக்கு அழகும் வாசல் முழுக்க எச்சமும் கலந்திருப்பதும் இயல்பு தான் போலிருக்கிறது. அசிங்கத்துக்கு நடுவே வாழப் பழகிக்க வேண்டியது தான் எனக் கொங்கு ராசா எழுதியிருக்கிறார். எல்லா நேரங்களிலும் அது முடிவதில்லை என்றாலும் சிலசமயம் முயற்சி செய்ய வேண்டியிருக்கிறது தான்.
சிறகடித்துப் பறந்த புறாக்கள் தெருவில் விட்டுச் சென்ற இறக்கைகள் சிலவற்றோடு மூன்று நாட்களாய் ஆர்வம் குறையாது விளையாடுகின்றனர் என் பெண்கள். அதே இறக்கைகள் சன்னல்வழி வந்து அடைத்துக் குளியல் தொட்டியில் நீர் தேங்கிக் கிடந்தாலும், இது எப்படியெல்லாம் குழந்தைகளின் கற்பனையை வளர்க்கிறது என்று வியப்பாய் இருக்கிறது! அதில் ஒன்றில் என் படம் வழியாக நான் கூட ஒரு மயிலாகிப் பறந்து கொண்டிருந்தேன்! நான்கு மாதங்கள் பள்ளிக்குச் செல்லவில்லை என்றாலும் இதுபோன்ற அனுபவங்களை எந்தப் பள்ளி தந்துவிட முடியும்? இந்தப் பயணத்தின் பலனை இது ஒன்றே கொடுத்துவிடுகிறது என்று என்னைக் கேள்வி கேட்பவர்களிடம் நியாயப் படுத்திக் கொள்ளலாம்.
பெண்களை இங்கு பள்ளிக்குச் செலுத்த வேண்டியதில்லை என்றாலும், அப்படிச் சென்று வருவதும் ஒரு நல்லனுபவம் தானே என்று பள்ளி வேட்டையாடிக் கொண்டிருக்கிறோம். எனது பள்ளிவாழ்வு முழுதும் ஈரோட்டிலேயே அமைந்தாலும் எப்போதோ ஓரிரு நாட்கள் மூலனூரிலும் பரமத்தியிலும் சென்ற கிராமத்து ஓரறை அரசுப் பள்ளிகளில் ஏற்பட்ட அனுபவங்கள் நிறைவாய் மனதுள் இருக்கின்றன. இல்லாவிட்டால், “வஞ்சிக்கொடி உள்ளேன் ஐயா” என்று ராகமாய் இழுக்கும் வருகைப் பதிவு (attendance call) பற்றியெல்லாம் வாழ்க்கையில் எனக்குத் தெரிந்திராமலே போயிருக்கும்.
Continue Reading »
Posted in பயணங்கள், வாழ்க்கை | 7 Comments »