பெங்களூர் மழையில் நனைகின்ற பூங்காற்று – 3
Jul 11th, 2005 by இரா. செல்வராசு
புறாக்கள் பார்க்க அழகாக இருக்கின்றன. மாண்ட்ரீஸரிடம் சொன்னால் இந்த ஒற்றை வரியை வைத்துக் கொண்டு ஒரு நவீன கதை கட்டித் தலையைப் பிய்த்துக் கொள்ள வைப்பார் :-). திரைப்பாடல்களையே பெரும்பாலும் போட்டுத் தள்ளும் தமிழ்த் தொலைக்காட்சிகளில் கூட ஒருமுறை கூட்டமாய்ப் புறாக்கள் சிறகடித்துப் பறந்து செல்ல அவற்றின் பின்னே ஆடிவரும் செந்நிற ஆடையணிந்த அம்மணியைத் தேடி/நாடி ஒரு அய்யா ஓடி வருவார். இவையெல்லாம் கிடக்க, நேரிலும் புறாக்கள் பார்க்க அழகு தான். ஆனால் அவற்றின் எச்சங்கள் மட்டும் கொஞ்சம் துர்நாற்றம் வீசும். பார்வைக்கு அழகும் வாசல் முழுக்க எச்சமும் கலந்திருப்பதும் இயல்பு தான் போலிருக்கிறது. அசிங்கத்துக்கு நடுவே வாழப் பழகிக்க வேண்டியது தான் எனக் கொங்கு ராசா எழுதியிருக்கிறார். எல்லா நேரங்களிலும் அது முடிவதில்லை என்றாலும் சிலசமயம் முயற்சி செய்ய வேண்டியிருக்கிறது தான்.
சிறகடித்துப் பறந்த புறாக்கள் தெருவில் விட்டுச் சென்ற இறக்கைகள் சிலவற்றோடு மூன்று நாட்களாய் ஆர்வம் குறையாது விளையாடுகின்றனர் என் பெண்கள். அதே இறக்கைகள் சன்னல்வழி வந்து அடைத்துக் குளியல் தொட்டியில் நீர் தேங்கிக் கிடந்தாலும், இது எப்படியெல்லாம் குழந்தைகளின் கற்பனையை வளர்க்கிறது என்று வியப்பாய் இருக்கிறது! அதில் ஒன்றில் என் படம் வழியாக நான் கூட ஒரு மயிலாகிப் பறந்து கொண்டிருந்தேன்! நான்கு மாதங்கள் பள்ளிக்குச் செல்லவில்லை என்றாலும் இதுபோன்ற அனுபவங்களை எந்தப் பள்ளி தந்துவிட முடியும்? இந்தப் பயணத்தின் பலனை இது ஒன்றே கொடுத்துவிடுகிறது என்று என்னைக் கேள்வி கேட்பவர்களிடம் நியாயப் படுத்திக் கொள்ளலாம்.
பெண்களை இங்கு பள்ளிக்குச் செலுத்த வேண்டியதில்லை என்றாலும், அப்படிச் சென்று வருவதும் ஒரு நல்லனுபவம் தானே என்று பள்ளி வேட்டையாடிக் கொண்டிருக்கிறோம். எனது பள்ளிவாழ்வு முழுதும் ஈரோட்டிலேயே அமைந்தாலும் எப்போதோ ஓரிரு நாட்கள் மூலனூரிலும் பரமத்தியிலும் சென்ற கிராமத்து ஓரறை அரசுப் பள்ளிகளில் ஏற்பட்ட அனுபவங்கள் நிறைவாய் மனதுள் இருக்கின்றன. இல்லாவிட்டால், “வஞ்சிக்கொடி உள்ளேன் ஐயா” என்று ராகமாய் இழுக்கும் வருகைப் பதிவு (attendance call) பற்றியெல்லாம் வாழ்க்கையில் எனக்குத் தெரிந்திராமலே போயிருக்கும்.
நான்கைந்து மாதங்களுக்கு மட்டும் பள்ளி கண்டுபிடிப்பது இந்தியாவில் சுலபமில்லை என்று தெரிந்தது தான். இருந்தாலும் பேசிப் பார்க்கலாமே என்று வீட்டருகே இருக்கும் ஒரு கான்வென்ட் பள்ளிக்குச் சென்று முதல்வரிடம் பேசினோம். எவ்வளவு நாட்கள் இருந்தாலும் ஒரு வருடத்திற்குப் பணம் கட்ட வேண்டும் என்று ஒரு பகற்கொள்ளை முயற்சி நடந்தது. அதிலும் Capital Expenditure Fee என்று வேறு என்னவோ கேட்டார்கள்.
“அதுக்கு பேரு தாங்க டொனேஷன்” என்று எனக்கு விளக்க முயன்றார் மனைவி.
பள்ளி முதல்வருக்கு அவர் பள்ளியைப் பற்றிப் பெருமை இருக்க வேண்டியது தான். இருந்தாலும், “அங்கே எல்லாம் என்ன சொல்லித் தருகிறார்கள்? ஒன்றும் சரியில்லை. இங்கு தான் சிறப்பாகச் சொல்லித் தருகிறோம்” என்று சொன்னதில் எந்த நியாயமும் இல்லை. படித்திருப்பதற்கும் அறியாமையற்றிருப்பதற்கும் தொடர்பில்லை என்பது எவ்வளவு உண்மை!
வித்தியாசமான ஒன்றை மோசம் என்று சொல்லுகிற போக்கு நம்மிடம் இருந்து போக வேண்டும். இந்தியக் கல்விமுறை வித்தியாசமானது. அமெரிக்கக் கல்விமுறை வேறுவிதமானது. ஒன்றிற்கு ஒன்று மோசம் என்று பொத்தாம் பொதுவாகச் சொல்லிவிட முடியாது. சுயமாய்ச் சிந்திக்கச் சொல்லித் தருகிற அமெரிக்க முறையை “அங்கே பெற்றோரை எதிர்த்துப் பேசிச் சண்டையிடச் சொல்லித் தருகிறார்கள்” என்கிறார். சுயத்தை மதிக்கச் சொல்லித் தருகிற அமெரிக்க முறை போலின்றி, “இங்கே தடியெடுத்து அடி தான்” என்று அடக்குமுறைக்குப் பெருமைப் பட்டுக் கொள்கிறார். சுயசிந்தனையின் விளைவால் எழுகின்ற கேள்விகளைக் கூட “எதிர்த்துப் பேசுவாயா?” என்று நாம் அடக்கி வைக்கும் போது ஆட்டுமந்தைகளுக்கும் மனிதனுக்கும் என்ன வித்தியாசம்?
இந்தப் பள்ளி நமக்கு ஒத்து வராது என்று பெரிய கும்பிடு போட்டு விட்டு எழுந்து வந்துவிட்டோம். தங்கள் முறைகளில் பெற்றோர் தலையீடு இருக்கக் கூடாது என்று சட்டங்கள் வேறு. நாங்கள் பள்ளியில் படித்த போதும் இப்படித் தான் இருந்தது.
“கண்ணையும் காதையும் உட்டுப்போட்டு மத்தபடி அடி நொறுக்கிப் புடுங்கோ. நாங்க ஒரு கேள்வியுங் கேக்கலே” என்று பள்ளியாசிரியர்களுக்கு எம் பெற்றோர் சர்வ அனுமதியும் வழங்கியது நினைவில் இருக்கிறது. நல்லவேளை அப்போது அமைந்த ஆசிரியர்கள் அந்தச் சர்வ அனுமதியை, வல்லமையைத் தவறாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. இப்போதெல்லாம் அந்த அமைப்புக்களில் கேள்வி எழுகிறது. எதிர்பார்ப்புக்கள் மாறி இருக்கிறது. வேரூன்றிய பழக்கங்களை, நம்பிக்கைகளை, விழுமியங்களைக் கேள்வி கேட்கத் தோன்றுகிறது. அப்படி இருக்கையில், எமது பெண்கள் எதிர்த்துப் பேசினாலும் பரவாயில்லை ஒடுங்கிக் கிடக்கும் போக்கை மட்டும் கற்றுக் கொள்ள வேண்டாம் என்று தோன்றுகிறது.
Selvaraj
Did you try at Rishivalley school in Bangalore? They have international students and for short period of time.
செல்வராஜ்.
புறாக்களின் இறகுகளோடு குழந்தைகளை ஆட விடாதீர்கள். அவற்றில் பல வியாதிக்கிருமிகள் இருக்கலாம். அதுவும் குட்டஹள்ளி புறாக்கள்ள்ள்ள்ள் ….
அருள்
செல்வராஜ், உங்கள் முடிவு நன்று. அங்கு ஜே.கே பவுண்டேசன் பள்ளியொன்றும், அதே போன்ற வெகு அற்புதமான இன்னொரு பள்ளியும் இருக்கிறது. கொஞ்சம் விசாரித்துப்பார்க்கவும். யாராவது பெங்களூர் மண்ணின மகா சொல்லுங்கப்பா!
பத்மா, தங்கமணி, நீங்கள் இருவரும் சொன்னது ஒன்றே தான் போலிருக்கிறது. அது பற்றி இணையத்தில் பார்க்க நன்றாகத் தான் இருக்கிறது. ஆனால் நாங்கள் இருக்கும் இடத்தின் அருகிலேயே பார்ப்பதாலும், இன்னும் சிறு பெண்களாய் இருப்பதாலும் அது சரிப்படாது என்று விட்டுவிட்டோம். தற்போதைக்கு IISc பின்புறம் உள்ள ஒரு பகுதியில் (கோகுலம்?) பார்த்திருக்கிறோம். நவ்கிஸ் பள்ளி பிடித்திருக்கிறது. பார்க்கலாம்.
அருள் தகவலுக்கு நன்றி. நல்லவேளையாக அவர்களின் கவனம் அதிலிருந்து அகன்றுவிட்டது. முற்றத்துக் கொடியில் காயப்போட்ட துணியைச் சோதித்து எடுத்து வைப்பதில் இரண்டு நாளாய் ஆர்வமாய் இருக்கிறார்கள் 🙂
தங்கமணி
அது ரிஷிவாலி பள்ளிதான். பள்ளியின் பாடதிட்டங்களும் சுற்றுப்புரமும் நன்றாக உள்ளன.
கோகுலம் பள்ளி பற்றி யும் கேள்விப்பட்டிருக்கிறேன்.
எப்படிங்க செல்வா… அத்தனை வேலைல… அருமையா பதிவும் எழுதறீங்க. இன்றுதான் தொடரை உட்கார்ந்து படித்தேன், கலக்கல்.
நன்றி.
அன்பு நன்றி. வேலைகளுக்கிடையே சிலசமயம் எழுத்து ஒரு மாற்றைத் தருகிறது. தவிர, ஒரு ரெண்டு மூணு மணி நேரம் ஒரு இடத்தில் அடைந்து கிடக்க வேண்டியிருந்தபோதும், ஜெட்-லேக்-இல் உறக்கம் வராத போதும் நேரத்தைப் பயன்படுத்திக் கொண்டேன்.