பெங்களூர் மழையில் நனைகின்ற பூங்காற்று – 2
Jul 9th, 2005 by இரா. செல்வராசு
நுகர்வோர் சேவையில் நாம் போக வேண்டிய தூரம் வெகுதூரம் என்று பலமுறை நினைத்துக் கொள்கிறேன். அது மீண்டும் ஒருமுறை இந்தியா வந்த முதல் நாள் இரவு இரண்டு மணிக்கு எங்கள் நிறுவனத்தின் விருந்தினர் இல்லத்தில் என்னைப் பார்த்துத் தூக்கக் கலக்கத்தில் கேட்டது.
“என்னங்க, தனியாள் தானே வருவதாய்ச் சொன்னாங்க. ஒரு குடும்பமே வரும்னு யாரும் சொல்லலையே?”
இத்தனைக்கும் பல மாதங்களாகப் பேச்சுவார்த்தை. தொலைபேச்சுக்கள். ஏற்பாடுகள். மின்மடல்கள். கையொப்பங்கள். “நீங்க ஒண்ணும் கவலைப்படாதீங்க சார். எல்லாம் நாங்க பாத்துக்கறோம்” என்று யாராவது சொன்னால் உடனே கவலைப்படுங்கள். தலைமாட்டில் மூவரும், மகள்களின் கால்மாட்டில் இருந்த இடத்தில் குறுக்கிக் கொண்டு நானும், குறுக்கும் நெடுக்குமாய்ப் படுத்துறங்க முயன்ற அனுபவத்தில் சொல்கிறேன். உணவு பற்றி ஒன்றும் சொல்லாமல் வீட்டைத் திறந்துவிட்டுவிட்டு அவர் போய் படுத்துக் கொள்ள விடியற்காலையில், உறக்கம் வராமல் பசி எடுத்தது. புலி பசித்தால் பிள்ளைகளுக்கு விமானப் பயணத்தில் சாப்பிட வைத்திருந்த கேரட் துண்டு மிச்சங்களையும், மிக்சர் பொட்டலத் துகள்களையும் கூடச் சாப்பிடும் என்று அறிக.
இன்னும் அலுவலகத்திலும் வீட்டிலும் தொலைபேசி இணைப்புக்குக் காத்திருக்கிறோம். “பத்தே நிமிடத்தில வந்திடறேன் சார்” என்று சொல்லிச் சென்றவரை எதிர்பார்த்துச் சார் நான்கு நாட்களாகக் காத்திருக்கிறார். அதே சமயம் சில மாற்றங்களின் அறிகுறிகளும் தென்படுகின்றன. வீட்டில் துணி துவைப்பன் (Washing machine) வேண்டும் என்று மதியம் சொன்னபோது மாலையே புதிதாய் ஒன்றைக் கொண்டு வந்து மாட்டிவிட்டுச் சென்றது வியப்பை அளித்தது (அட! யாரங்கே? சும்மா இருங்கள். அதற்கும் ஏதோ இணைப்புக் கொடுக்கவென்று வரவேண்டிய ஆள் மூன்று நாட்களாய் இன்னும் வந்துகொண்டேஏஏ இருப்பதைப் பற்றிப் பொதிவாய் (positive) நாம் இங்கு பேசிக் கொண்டிருக்கையில் குறிப்பிடவேண்டியதில்லை!).
மற்றபடி இன்னும் சில மாதங்கள் தங்கியிருக்கவென்று வந்துவிட்ட அடுக்குமாடிக் குடியிருப்பு வீடொன்றின் முற்றத்தில் நின்று வீசுகின்ற காற்றை ரசித்திருப்பது சுகம். பத்திருபது அடிகள் இடைவெளியில் உயர் தென்னை மரங்கள் அசைந்து இசைக்கின்றன. பெங்களூர் முழுதுமே மரங்களும் கான்கிரீட்களும் ஒன்றோடொன்று இயைந்து வாழ்கின்றன. குப்பைத் தெருக்களை மட்டும் எப்போதும் சுத்தமாய் வைத்திருக்க ஒரு வழிமுறை கண்டுகொண்டால் பெங்களூரின் சூழல் மிகவும் அருமையானதாய் இருக்கும் என்று எனக்குத் தோன்றுகிறது.
நேர மாற்றத்தில் உறக்கம் வராத இரவுகளில் முற்றத்தில் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். எங்கோ தூரத்தில் ஊளையிட்டுக் கொண்டிருந்த நாய்களைத் தவிர ஊர் அமைதி நிரம்பியிருந்தது. பகலில் பழுதுபார்க்கவென்று பின்னங்கால்களைத் தூக்கி நின்றுகொண்டிருந்த ஆட்டோக்கள் இரவில் நேராக நின்று தூங்கிக் கொண்டிருந்தன. அதில் ஒன்றில் தொங்கிய சாக்குப்பை உள்ளே யாரோ தூங்கிக் கொண்டிருக்கக் கூடும் என்று சொன்னது. ஆட்டோக்களோடு இன்னும் சிறுலாரிகள், குதிரை வண்டிகள், சில பேருந்துகள், பிறவண்டிகள் எல்லாம் அயர்ச்சியில் தூங்கிக் கொண்டிருந்தன. அவற்றின் உலகம் என்று ஒரு கற்பனை விரிந்ததற்கு இரவு இரண்டு மணிக்குப் ‘போகோ’ சேனலில் பார்த்த ‘தாமஸ் ரயில் எஞ்சின்’ நிகழ்ச்சி காரணமாய் இருந்திருக்கலாம். எந்தக் குழந்தை இரவு இரண்டு மணிக்குத் தொலைக்காட்சியில் தாமஸைப் பார்க்கிறது என்று தான் தெரியவில்லை.
மயான அமைதி என்று சொல்ல முடியாது. இது உறங்கும் அமைதி. ஆட்டம்போட்டு ஓய்ந்த ஒரு குழந்தை அழகாகத் தூங்கிக் கொண்டிருப்பது மாதிரியான ஒன்று. நாளை காலை இது விழித்துக் கொள்ளும் என்கிற உத்தரவாதம் இருக்கிற அமைதி.
விழித்துக் கொள்வது எங்கே? ஐந்து மணிக்கு அலறிக் கொண்டு எழ வைக்கிற ‘அல்லாஹூ அக்பர்’ ஒலிபெருக்கி!
“What is that noise அப்பா?” என்று கேட்டாள் நிவேதிதா.
அப்புறம் சொல்கிறேன் என்று மீண்டும் அந்தக் கோழியைப் படுக்கையில் அமுக்க வேண்டியிருந்தது. மத நல்லிணக்கம் பேணுபவன் தான் நான். ஆனாலும் இப்படி மூடியிருக்கிற கதவு சாளரம் வழியாக உள்ளே வந்து ஊரையே எழுப்புகிற ஒலிபெருக்கிகள் தேவையா என்று கேள்வி எழுகிறது.
“அட! அப்படி ஊரை எழுப்பி ஒழுங்காகச் சாமி கும்பிடுங்கன்னு சொல்றதுக்குத் தான் இப்படிப் பண்றாங்க. நீங்க அதையே கேள்வி கேட்கறீங்களே” என்றார் மனைவி. அதிலும் ஒரு காலத்தில் நியாயம் இருந்திருக்கலாம். ஐந்து வேளைகளும் இப்படித் தான் இருக்கிறதாம்.
பார்க்கலாம். வரும் மார்கழி வரை இங்கு இருக்கத் தானே போகிறேன். அப்போது ஊரை எழுப்ப ஆண்டாளும் சேர்ந்து கொள்வாரா என்று பார்க்க வேண்டும்.
ஐந்து மணிக்கு அலறிக் கொண்டு எழ வைக்கிற ‘அல்லாஹூ அக்பர்’ ஒலிபெருக்கி!
>>>>
சிவாஜி நகர் பக்கமா இருக்கீங்க?
வெங்காலூருக்கு வருக வருக!!!..நேரமும் விருப்பம் இருந்தால் நேரில் சந்திக்கலாம்..
அன்புடன்
அரவிந்தன்.
வெங்காலூர்…
(அதாங்க பெங்களுரின் முந்தைய பெயர்)
பரி, நன்றி. ஏதாவது தகவல் வேண்டுமானால் தனி மடலில் கேட்கிறேன். இப்போது நாங்கள் இருப்பது சேஷாத்ரிபுரம்.
அரவிந்தன், நன்றி. உங்களையும் பிற வலை நண்பர்களையும் சந்திக்க வாய்ப்புக் கிடைத்தால் மகிழ்வே. இன்னும் சில வாரங்கள் கழித்து, இருந்தமைந்தபின் சந்திக்க முயற்சி செய்வோம்.
நான் பெந்தக்காளூர்னு நெனச்சேன். நீங்க வெங்காலூர்னு சொல்றீங்க?
வாங்க செல்வா!
எதற்கும் knski@yahoo.com இற்கு ஒரு மடல் தட்டி விடுங்க. என்னுடைய contact விபரங்கள் தருகிறேன்.
ம்ம்…பெங்களூர்..
நல்லா என் ஜாய் பண்ணுங்க… சேஷாத்திரிபுரத்துக்கு பக்கத்துலதான் சாங்கி டேங்க் இருக்கு. பெங்களூர் வலைப்பதிவர்களை சந்தித்து அல்லது குடும்பத்துடன் மாலை பொழுதை கழிக்க நல்ல ஒரு இடம். அப்படியே வெளியே வந்தால், மேக் சாகரில் இரவுணவை முடித்துக் கொண்டு வீட்டிற்கு நிம்மதியாக போகலாம்.
பாலாஜி-பாரி, நன்றி. திரும்புவதற்குள் நிறைய பெங்களூர் வலைப்பதிவர்களைச் சந்திக்க முடியும் என்று எண்ணுகிறேன்.