பெங்களூர் மழையில் நனைகின்ற பூங்காற்று – 1
Jul 8th, 2005 by இரா. செல்வராசு
மூன்று நாட்களாக மட்டுமே ஒரு ஊரில் இருப்பவர்கள் அந்த ஊரைப் பற்றி எழுதக் கூடாது என்று ஒரு சட்டம் இருந்தால் முதலில் என்னைத் தான் பிடித்து உள்ளே தள்ளுவார்கள். அப்படி ஒன்றும் இல்லாத காரணத்தால் பெங்களூர் பற்றிய சில அனுபவ மற்றும் எண்ணக் குறிப்புகள்.
பெங்களூரின் சர்வதேச விமான நிலைய அனுபவம் வழமைக்கு மாறாய் இனிமையாய் இருந்தது. சரியாகப் படிவங்கள் பூர்த்தி செய்யாது வரிசையில் நின்ற போதும் குடிவரவு அதிகாரிகள் முறைப்புக் காட்டாமல் பொறுமையாய் இருந்தார்கள். வெளியே வந்தபின் உள்ளனுப்பிய பெட்டிகளுக்காகக் கால்கடுக்க நின்ற முன் அனுபவங்கள் போலன்றி, பெட்டிகளை ஏற்கனவே வெளியே எடுத்துத் தயாராய் வைத்திருந்தார்கள். சுங்க அதிகாரியின் நியாயமான சில கேள்விகளுக்குப் பிறகு வெளியே வந்தவர்களைப் பெங்களூரின் இளம்பெண்கள் இருவர் எதிர்கொண்டு மலர் கொடுத்து வரவேற்றார்கள். அது பிளாஸ்டிக் பூ தான் என்றாலும், ஏதோ குழந்தையர் உலகம் (கெம்ப் கிட்ஸ்) குறித்த வணிக விளம்பர நோக்கில் அமைந்திருந்தாலும், அது ஊருக்கு வருபவர்களை எல்லாம் இன்முகத்தோடு வரவேற்பது போன்ற உணர்வைக் கொடுத்தது. மொத்தத்தில் அடுத்த முறையும் பெங்களுர் வழியாகவே வரலாமே என்று யோசிக்க வைத்தது.
நெரிசலில்லாத நள்ளிரவில் ம.கா.சாலையில் சிலுசிலுவென்று இளங்காற்று முகத்தைத் தழுவ, சாலை விளக்குகளின் பொன்னொளியோடு கலந்து தலையசைத்த பச்சை மரங்களைப் பார்த்தபடி சிற்றுந்தில் சென்ற முதல்க் கணங்களிலேயே இந்த நகரத்தோடு காதல் கொண்டேன். சிற்றுந்து ஓட்டுனர்கள் (பொதுவாகவே எல்லா ஓட்டுனர்களும்) எவ்வளவு திறமைசாலியாக இருக்கிறார்கள் என்று இந்தச் சில நாட்களிலேயே உணர முடிகிறது. சிறு சந்து பொந்துகளிலும், நிறுத்துமிடங்களிலும் ஒடித்து வளைத்து அவர்கள் ஓட்டிவிடும் லாகவம் தனி.
பெரும் கட்டிடங்களும் பன்னாட்டு நிறுவனங்களும் அதையொட்டி வந்த வசதிகளும் ஒரு பக்கம். கணினி பற்றிச் சிறிதும் அறியாத மற்ற சேவைகள் வேலைகள் செய்து பிழைக்கும் அடுத்த தட்டு மக்கள் மறுபக்கம். ஒரு புறம் சுத்தமாய் இருக்க, மறுபுறம் குப்பை கூழங்களுக்கு நடுவே மல்லாந்து கிடக்கிறது. அதனூடேயும் பளிச்சென்று ஆடையணிந்து செல்லும் மக்கள்.
இன்ஃபினிடீ என்று நவீனமாய்ப் பெயர் தாங்கிய காப்பிக் கடைகள் ஒருபுறம். நாலுக்கு நாலடியில் பெட்டிக்கடையில் ரொட்டி விற்றுப் பிழைக்கும் கூட்டம் இன்னொரு புறம். டொயோட்டா ஃபோர்டு சிற்றுந்துகள் சுற்றுகின்ற சாலைகளில் சில மாடுகளும் மேய்ந்து கொண்டிருக்கின்றன.
இக்குணங்களிற் பல பெங்களூருக்கு மட்டுமல்ல. இந்தியா முழுமைக்குமே பொருத்தமாகத் தான் இருக்கும். இந்தியா என்பது ஒரு நாடல்ல. பல நாடுகளை (குணங்களை) ஒன்று சேர்த்து அழுத்தியமுக்கி அமைக்கப்பட்ட ஒன்று. இங்கே பலக்கிய குமுகாயம் ஒன்றன் தானியங்கித்தனத்தை நேரில் பார்க்க முடிகிறது. எந்தக் கட்டும் இன்றி உயிர் எல்லா வழிகளிலும் பொங்கிப் பாய்ந்து கொண்டிருக்கிறது.
எந்தக் கேள்வியும் இன்றி நேர்த்தியாக முடிவெட்டி விட்ட பன்மொழி வித்தக நாவிதர் (தமிழ் தெலுங்கு கன்னடம் எது வேண்டுமானாலும் பேசுகிறார்) கேட்ட முப்பத்தைந்து ரூபாயைப் பேசாமல் கொடுத்து விட்டு வந்தேன். மேலை நாட்டு வாழ்க்கையில் இப்படியா அப்படியா, ‘மெஷினா கத்தரியா’, என்று ஆயிரத்துச் சொச்சம் கேள்விகளுக்குப் பிறகு, தலையைக் குதறி வைக்கும் அம்மணிகளுக்கு மனதுள் திட்டிக் கொண்டே கொடுக்கும் ஒரு டாலர் கொசுறுவை விட இது குறைவு தான்!
எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் இன்னொன்று – மதர்த்த நடை இளைஞர் இளைஞிகளும் அவர்தம் கண்ணொளியில் வீசும் நம்பிக்கைச் சுடர்களும். உலகம் எங்கள் கையில் என்கிற உறுதி அவர்கள் நடையில் செயலில் தெரிகிறது. ஒரு ஒட்டுமொத்தப் பொதிவுணர்வைத் தருகிற இந்த இளமை ஊருக்கே தனிச்சிறப்பைத் தருகிறது.
இன்னும் பார்க்கிற இடமெல்லாம், செய்கிற செயலெல்லாம், அடைகிற அனுபவமெல்லாம் நிறைய உண்டு. இப்போதைக்குச் சாலைமுக்குக் கடையொன்றில் வாங்கிய ‘தஹி வடா’ என்னும் தயிர் வடையினுள் மிதக்கும் காராபூந்திபோல பெங்களூரியத்திலும் அதன் பல்வேறு அம்சங்களிலும் மெல்ல ஊறிக் கொண்டிருக்கிறேன்.
moonu vaaram munnaadi blore poyittu vandhu idhe pola dhaan feel aagikittu irundhen. it is nice to be in blore. have fun!
நல்ல ஊர். எனக்கும் பிடிக்கும். இன்பினிடீயில் டீ குடித்துப்பாருங்கள்.
உடன் பணிபுரியும் பெங்களூர் அம்மணியொருவர் சமீபத்தில் அங்கு சென்றுவந்துவிட்டு கொஞ்சம் அலுத்துக் கொண்டார் – மிதமிஞ்சிய வாகனங்கள், புகை…. பார்க்கும் பார்வையில்தான் வித்தியாசங்கள் உள்ளனவோ?
// தலையைக் குதறி வைக்கும் அம்மணிகளுக்கு மனதுள் திட்டிக் கொண்டே கொடுக்கும் ஒரு டாலர் கொசுறுவை விட// என்னது ஒரு டாலர் கொசுறுதானா? ம்.. இந்த ஊர் அம்மணிகள் வெட்டுவதற்கு குறைந்த பட்சம் 20 டாலர்களுக்கு மேல் வாங்கிவிடுகிறார்கள். 🙁
அருமையான ஊர். மரியாதையைடுஅன் பேசும் கடைக்காரர்கள். எப்போதுபெங்களுர் சென்றாலும் மறக்காமல் செல்லும் இடம் IISc. அந்த வளாகத்தில் பழைய நினைவுகளுடன் நடப்பதும் ஒரு சுகம். என் பெற்றோர்கள் அங்குதான் தற்போது இருக்கிறார்கள்.
பெங்களூர் ஒரு சொர்க்க பூமி.
மிக இயல்பான பதிவு, செல்வராஜ்,
//பெங்களூர் ஒரு சொர்க்க பூமி.//
பாலாஜி-பாரி புரிகிறது,புரிகிறது :-).
சுவடு, நன்றி. மறுபடியும் இந்தப் பக்கமா வந்தா சொல்லுங்க. சென்னையில கூட உங்களைப் பார்க்க முடியுமோ என்று எண்ணியிருந்தேன். (கடற்கரை->உட்லண்ட்ஸ் கூட்டத்தில்).
தங்கமணி, பாலாஜி பாரி, பத்மா, நீங்கள் எல்லாம் இங்கேயே இருந்திருப்பவர்கள் என்னும் அளவில் நிறைய அனுபவித்திருப்பீர்கள். எனக்கு இது புதிது. நன்றாக இருக்கிறது.
இராதாகிருஷ்ணன், கொசுறு (டிப்ஸ்) மட்டும் தான் ஒரு டாலர். மற்றபடி விலை பத்தாவது இருக்கும். இருபது டாலர் கடைகளெல்லாம் கூட இருக்கின்றன. இதுக்கு இது போதும் என்று அந்தப் பக்கமெல்லாம் நான் போவதில்லை. 🙂
அலுத்துக்கொள்ளும்படியானவை சிலதும் இருக்கின்றன. ஆனாலும், கூட்டிக் கழித்துப் பார்க்கையில் இறுதியில் மிகையாகத் தான் இருக்கிறது. குறைவாய் இல்லை என்பது என் எண்ணம்.
டிசே. நன்றி. சொர்க்கபூமியில் ஏதோ விஷயம் இருக்குது என்கிறீர்கள்? 🙂
(கெம்ப் கிட்ஸ்)
>>>
அது கிட்ஸ் கெம்ப் 🙂
நம்ம பழைய பேட்டைக்குப் போயிருக்கீங்க. எதாவது வேணும்னா சொல்லுங்க பசங்க இருக்காங்க 😉
En innum ezhuthavillai endru thinamum parthu kondirunthen..Padithathum Oorukku vara vendum endru asayai irukku(eppozhuthuthan illai ?).
விமலா, மிக்க நன்றியும் மகிழ்ச்சியும். பின்னூட்டப் பெட்டிக்கு வரவைத்தாயிற்று. அடுத்து ஒரு தனிப்பதிவு தான்:-). எப்போ?
Thani pathivu ..sirithu kalamagum, Matravargalin pathivugalai padipathum thani sugame.
-Vimala
Bangalore is a very very nice place to live, it has all the facility at the same time it is in India too. And usually people from IISC tend to like Bangalore more, because of the campus life and its richness in all aspects.
In that sense I also like Bangalore very much
Athu oru nalla arumaiyaana nagaram, anubaviyungal.
sarah
ஓ, மிக்க நன்றி சாரா.ஐஐஎஸ்சி பக்கமாகப் போயிருந்தோம். அதன் பின்புறம் உள்ள பகுதியில் ஒரு பள்ளிக்காக. அருமையான பகுதியாய் இருக்கிறது. அங்கிருந்து வருபவர்கள் எல்லாம் ஏன் உருகுகிறீர்கள் என்பது மெல்லப் புரிகிறது. உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.