எலிக்குட்டி
Jul 1st, 2005 by இரா. செல்வராசு
ஒரு நீல வண்ணக் கட்டியை எடுத்து நந்திதா படம் வரைந்திருந்தாள். எலிக்குட்டி நன்றாக இருக்கிறது என்று நல்ல வண்ணப் பேனா ஒன்றைக் கொடுத்து மீண்டும் வரைந்து தருமாறு கூறினேன். மீண்டும் வரைந்த எலியோ உட்கார்ந்து கொண்டது.
“இல்ல நந்து. எனக்கு அதே மாதிரி வேணும்”
இப்போது எலி எழுந்து நின்றது. இருந்தாலும் முதல் எலி மாதிரி இல்லை.
“நந்து. இதுவும் நல்லா இருக்கு. ஆனா எனக்கு இன்னொன்னும் வேணுமே”
இது உங்களுக்கு; இது அம்மாவுக்கு; இது சகோதரிக்கு என்று, கேட்கிறோமே இல்லையோ எங்கள் வீட்டில் நிறையப் பட விநியோகங்கள் நடைபெறும். இன்று அப்பா கேட்டு வாங்கிக் கொள்கிறார் என்று சந்தோஷம் முகத்தில் தெரிந்தது.
மூன்றாவது எலி வந்தது. இது கொஞ்சம் கூன் போட்டுக் கொண்டதா? இல்லை, நாங்கள் ஊருக்குப் போகிறோம் என்று ‘டாட்டா’ காண்பிக்கிறதா?
“ஆறு மாசம் பெங்களூர் போறோம். டாட்டா”
பெரிய காது வைத்து ஒரு நடன நிலையில் இருந்த அந்த முதல் நீல எலி போல இல்லையே என்று மீண்டும் ஒன்று கேட்டேன். உற்சாகத்துடன் போனவள் ‘இது சிறப்பான எலியப்பா’ என்று வந்தாள்.
“என்ன சிறப்பு?”
“இந்த எலிக்கு மட்டும் தான் மூக்கு இருக்கு. சிறப்பான எலி என்பதால் இது உங்களுக்கு இல்லை. தித்துவுக்கு (நிவேதித்தாவுக்கு)”
“ப்ளீஸ், ப்ளீஸ், எனக்கு இன்னும் ஒண்ணே ஒண்ணு. முதல் எலி மாதிரி வேணும்”
துள்ளலுடன் ஒரு எலிக்குட்டி மீண்டும் ஓடிப்போனது. அலுவலகத்தில் இருந்து கொண்டு வருகிற “ஒருபுறத் தாள்”கள் (ஒருபுறம் மட்டுமே அச்சடித்துக் குப்பையில் போகும் வீண் தாள்கள்) தாம் மொத்தமாய் வீண் போகவில்லையே என்று கொஞ்சம் மகிழ்ந்து கொள்ளும்.
ஐந்தாவது படத்துடன் ஓவியர் வந்தார்.
“அப்பா, என்னால் முடியாது. இது ஒரு சிறப்பான படம். ஒரு முறைக்கு மேல் அதே மாதிரி இதனை வரைவது என்னால் இயலாதது!”
எனக்குப் புரிந்துவிட்டது. இன்னும் எத்தனை எலிகள் வேண்டுமானாலும் எனக்குக் கிடைத்திருக்கும். அந்த முதல் நீல நிற எலி மட்டும் கிடைக்கப் போவதில்லை.
// எனக்குப் புரிந்துவிட்டது. இன்னும் எத்தனை எலிகள் வேண்டுமானாலும் எனக்குக் கிடைத்திருக்கும். அந்த முதல் நீல நிற எலி மட்டும் கிடைக்கப் போவதில்லை. //
குழந்தைகளை ஊக்கப்படுத்தலாம் கட்டாயப்படுத்தக்கூடாது. முக்கியமாக மற்றவர்களுடன் கம்பேர் பண்ணக்கூடாது. அழகாக சொல்லியுள்ளீர்கள்
எலி(கள்) சூப்பர்…
“ஒருபுறத் தாள்”கள் (ஒருபுறம் மட்டுமே அச்சடித்துக் குப்பையில் போகும் வீண் தாள்கள்)…
இங்கயும் அதே கதைதான்…
ஆனா… சந்தடிசாக்குல 6 மாதம் பெங்களூர் போறதா சொல்லவரீங்களா, இன்னொரு மரத்தை பிடுங்குநடும் முயற்சியேதும் நடக்கிறதா!?
//எனக்குப் புரிந்துவிட்டது. இன்னும் எத்தனை எலிகள் வேண்டுமானாலும் எனக்குக் கிடைத்திருக்கும். அந்த முதல் நீல நிற எலி மட்டும் கிடைக்கப் போவதில்லை//
ஏதோ ஒரு பெரியா வாழ்க்கை தத்துவம் போல தெரிகிறது 🙂
விதவிதமா எலி வரை குட்டீஸ்கு வாழ்த்துக்கள்..ஊக்கப்படுத்திய அப்பாவுக்கும் தான்.
வீ எம்
வாழ்க்கைச் சூழலோடு இணைந்த நிகழ்வுகளை சுவையாகச் சொல்வதில் உங்களுக்கு நிகர் நீங்களேதான் செல்வராஜ்.
யாழ் இனிது, குழல் இனிது,
அஜந்தா, எல்லோரா ஓவியங்கள் அருமை
என்பார்கள் தம்மக்கள்
சிறுவாய் மழழைச் சொல்லும்
பிஞ்சுக் கரத்தின் எலிக்குட்டியும்
கேட்காதவரும் காணாதவரும் !
– ஞானபீடம்.
// எனக்குப் புரிந்துவிட்டது. இன்னும் எத்தனை எலிகள் வேண்டுமானாலும் எனக்குக் கிடைத்திருக்கும். அந்த முதல் நீல நிற எலி மட்டும் கிடைக்கப் போவதில்லை. //
இதில் ஒன்றும் மறைபொருள் இல்லையே?
அடுத்த புலிக்குட்டி வரையும்பொதாவது உசாரா இருங்க.ரசித்தேன்.
கணேஷ், நன்றி. முடிந்தவரை செய்து கொண்டிருக்கிறேன்.
அன்பு மரம் பிடுங்கி நடும் முயற்சி இல்லை. இது கொஞ்சம் ஆழ வேரூன்றிய மரம் (14 அடி ஆழம்! :-)). சும்மா ஒரு விழுது பரப்பும் முயற்சி.
வீ.எம். எனக்கும் அப்படித் தான் தோன்றுகிறது. என்ன தத்துவம்னு தான் நானும் யோசிக்கிறேன். 🙂
மூர்த்தி, நன்றி. நீங்கள் சொன்னது போல் எழுதினால் தான் நன்றாக இருக்கிறது என்றும் மற்றதெல்லாம் வீண் என்றும் கருத்துக்கள் எங்க வீட்டிலும் எதிரொலிக்கிறது. 🙂
குழலி, மறுபடியும் படித்துப் பார்த்தேன். சிகப்பு பேனாவைக் கொடுத்துவிட்டு நீல எலி கேட்டால் கிடைக்காது தான். வேற ஒண்ணும் மறைபொருள் இல்லீங்களே. நமக்கு அவ்வளவு சாமர்த்தியம் இல்லை. 🙂
கார்த்திக், நன்றி.
தீவிரமான விவாதங்களில் இருந்து விலகி, குழந்தையுடன் நேரம் செலவழித்த மகிழ்ச்சி இதைப் படித்தபோது ஏற்பட்டது. வாழ்க்கை நிகழ்வுகளைச் சிறப்பாகப் படம் பிடிக்கிறீர்கள் என்ற மூர்த்தியின் கூற்றை நானும் வழிமொழிகிறேன்.(மே(லி)டத்தின் கருத்தும் அதுதான் என்று தெரிந்தபிறகும் எப்படி வழிமொழியாமல் இருப்பது? )
வலைப்பதிவில் திக்குத் தெரியாமல் இருந்த என்னை முதலில் வரவேற்றவர் தாங்கள்தான் .நன்றி.
அப்ப அஃது எலிக்குஞ்சு இல்லையா? 🙁
பெயரிலி, முட்டை போட்டுப் பொரிச்சாத் தானே குஞ்சு. எலி குட்டி தானே போடும்?
ராம்கி, உங்கள் கருத்துக்கு நன்றி.
ஞானபீடம், உங்கள் கருத்து தானியங்கியால் முடக்கப் பட்டிருந்தது. விடுவித்து விட்டேன். மூன்றுக்கு மேல் இணைப்புக்கள் இருந்தால் எரிதமோ என்று ஐயம். அது தான்.
//…ஞானபீடம், உங்கள் கருத்து தானியங்கியால் முடக்கப் பட்டிருந்தது. விடுவித்து விட்டேன்….//
நன்றி செல்வராஜ்
பதிப்பாளர் ஒருவர், ஒரு எழுத்தாளரிடம், “முன்பு தாங்கள் எழுதிய *சுய* சரிதைப் புத்தகம் அதிகம் விற்று அதிகம் இலாபம் வந்துள்ளது. அதேபோல் மறுபடியும் இன்னொரு புத்தகம் எழுதித்தாருங்களேன்” என்றாராம் :-))
லதா
லதா, உங்கள் வேடிக்கையான கருத்துக்கு நன்றி. 🙂