உறங்கா நிலவு
Jun 30th, 2005 by இரா. செல்வராசு
உறங்காத ஓர் இரவில் வெளியே வந்தேன். பொன்னிற ஒளியிற் சந்திரன் குளித்துக் கிடந்தான். சந்திரன் ஆணா பெண்ணா? நிலவென்றால் பெண். சந்திரன் என்றால் ஆண்? ம்? அந்தக் கவலையெல்லாம் இன்றி ‘அது’ அதைச் சுற்றிக் கொண்டிருந்தது. சுற்றுவது அந்த நிமிடம் பார்க்கத் தெரிவதில்லை. சுற்றுகிறது என்பது கற்றது தானே. இங்கே கல்வி என்பது பார்த்து உணர்ந்து அறிந்தவர்கள் சொன்னதை ஏற்றுக் கொள்வது. ஆனால் எல்லாக் கற்பிதங்களையும் ஏற்க இயலாமல் போகிறது. சிலவற்றைக் கட்டுடைக்க வேண்டியிருக்கிறது. கல்வி வேறு, கற்பிதம் வேறு.
கண் கொண்ட அளவு கருவி கொள்வதில்லை. ஆனால் நினைவை விடக் கோப்பு நிலையானது என்பது வேடிக்கையாய் இருக்கிறது. மறந்து போயிருப்பேன். ஆனால் கோப்பை வெட்டிச் செதுக்கி வடிவமைக்க, மீண்டும் நினைவில் சேர்ந்து கொள்கிறது இந்த நிலவு. அப்படியென்றால் மீண்டும் நினைவு தான் வெல்கிறதோ? கோப்பு ஒரு மீட்டுக் கொடுக்கும் துணை(வன்) மட்டுமோ?
இருட்டில் செடிகள் எல்லாம் தூங்கிக் கொண்டிருந்தன. ஒளிபாய்ச்சி ஒரு படம் எடுக்கப் பளிச்சென்று பிரகாசிக்கும் இலைகள். இது செயற்கைத் தனமா? இல்லை இந்த ஒளியையும் வாங்கிக் கொள்ள முடிகிற இலைகளின் இயல்பென்று இதுவும் இயற்கையிற் சேர்த்தி தானா? பொன்னிற ஒளிச் சந்திரன், தூங்கும் இலைகள், கோப்பில் சிறை என்று தற்குறிப்பை மனிதன் ஏன் இயற்கை மீது ஏற்ற வேண்டும்? இவை கல்வியின் படிநிலைகளில் ஒன்று? கருத்துருவாக்கமும், கட்டுடைப்பும், மீண்டும் கருத்துருவாக்கமும் கட்டுடைப்புமாகக் கல்விப் பயணம் தொடர்கிறது. அது சுயமாய் இருக்கும் போது சிறக்கிறது. வெளியிருந்து வரும்போதும் யோசித்து ஏற்றுக் கொள்ள வேண்டியது முக்கியமாகப் போகிறது. அப்படி இல்லாத போது தலை சூடேறி அறிவு மயக்கமுற வைக்கிறது.
உறங்காத நிலவில் மனம் லயிக்கும் போது எல்லா இசங்களும் தளமுடைந்து போகும். போக வேண்டும்.
//கண் கொண்ட அளவு கருவி கொள்வதில்லை. ஆனால் நினைவை விடக் கோப்பு நிலையானது என்பது வேடிக்கையாய் இருக்கிறது. மறந்து போயிருப்பேன். ஆனால் கோப்பை வெட்டிச் செதுக்கி வடிவமைக்க, மீண்டும் நினைவில் சேர்ந்து கொள்கிறது இந்த நிலவு. அப்படியென்றால் மீண்டும் நினைவு தான் வெல்கிறதோ? கோப்பு ஒரு மீட்டுக் கொடுக்கும் துணை(வன்) மட்டுமோ//
அறிவு மனத்தின்பால் கொண்ட மோகத்தில் புலன்களின் தலைமையை மனதுக்கு விட்டுக் கொடுக்கிறது.
கண் பார்ப்பதும், காது கேட்பதும், நாசி நுகர்வதும், தசை ஸ்பரிசம் உணர்வதும் நினைவில் பதிய மனது கொஞ்சம் மனது வைக்க வேண்டும்.
கண் ஒரு இடத்தே நிலைத்து, பாடுபட்டுச் சேர்க்கும் காட்சிகளையெல்லாம் மனது செவியிடத்தே ‘கண்’ வைத்திருக்கும் போது நிராகரித்துவிடும்.
செவி ஓசைகளைக் களைத்துச் சேகரித்தாலும் மனது கண்ணிடத்தே இருக்கும் போது கேட்பதில்லை.
கண்ணிடத்தும், செவியிடத்தும், தசையிடத்தும் மனமிருந்தாலும், உணர்ச்சிகளை தணிக்கை செய்து வெட்டித் திரித்து, மனம் பார்க்க விரும்புவதையும், கேட்க விரும்புவதையும், அறிய விரும்புவதையும் மட்டுமே நினைவிற் சேர்க்கிறது.
கருவிகளில் பதிந்த படங்களும் ஓசைகளும் இந்நினைவுகளை மீட்க ஒரு திறவுகோல் மட்டுமேயாகிறது.
அறிவு என்றாவது ‘விழித்து’க் கொள்ளும்போது, புலன்கள் இருக்குமிடத்தில் இருந்து கொள்ளும்.
🙂
கண்ணன் அருமை!
மனம் என்பது நினைவுகள் மட்டுமா? புலன்கள் சேகரிப்பதை எல்லாம் எந்தத் தணிக்கையும் இல்லாமல் போட்டு வைத்துக் கொள்ள ஆழத்தில் ஒரு கிடங்கும் இருக்கிறதா? சில திறவுகோள்கள் கிடங்கில் இருந்து மேலே கொண்டுவந்து நினைவில் போடுவதை மட்டுமே அசைபோடுகிறதா? அறிவு விழிக்கையில் புலன்மயக்கம் இன்றிச் சரியானவற்றைச் சரியான இடத்தில் போட்டு வைக்கிறதா?
செல்வா,
நீங்கள் சொல்வதும் சரிதான் என்று தோன்றுகிறது.
ஆனால் மனது பார்க்காத உணர்வுகள் கிடங்குக்குள்ளும் செல்வதில்லை என்று நினைக்கிறேன். அப்படிச் சென்றாலும் அவை அனாதைகளாக, திறவுகோல் (தேவை) இல்லாத ஒற்றை நினைவுகளாவே மேலெழும்பி வரும் போல.
அருமையான பதிவு செல்வா.
//உறங்காத நிலவில் மனம் லயிக்கும் போது எல்லா இசங்களும் தளமுடைந்து போகும்//
உணர்ந்து எழுதப்பட்ட வாக்கியம். மிக அழகு. உண்மை.
நன்றிகள் செல்வா..
(ஏதோ எனக்குள்ளே சென்று வந்தது மாதிரி இருந்தது இப்பதிவை படித்தவுடன்)
கண்ணன், உங்கள் கடைசி வாக்கியம் சரியென்று தோன்றுகிறது. சிலசமயம் எப்படி என்று தெரியாமலே கிடங்கில் இருந்து ஒரு பாட்டோ காட்சியோ எழும்பி வருவது ஆச்சரியத்துக்குரியது தான்.
பாலாஜி-பாரி, உங்கள் வழக்கமான ஊக்கத்திற்கும் கருத்துக்களுக்கும் நன்றி.
நீங்கள் தூங்காமலிருந்துவிட்டு , உறங்கா நிலவு என்று புருடா வுடுவதை நான் கண்டிக்கிறேன். 🙂
கார்த்திக்! சிரித்தேன்! வேடிக்கையான ஆள் தான் நீங்க. ஆனால் நீங்கள் சொன்னது தான் நிஜம்!
/உறங்காத நிலவில் மனம் லயிக்கும் போது எல்லா இசங்களும் தளமுடைந்து போகும். போக வேண்டும்./
போகுமா தெரியவில்லை; போனால், நல்லதுதான்
//போகுமா தெரியவில்லை; போனால், நல்லதுதான்//போகாது;உறங்காநிலவிசம் ஒன்று உருவாகும் 🙂 😉
அது உறங்காநிலாவிசம்.
நிலவு+இசம்=நிலவிசம் சரிதான், நில விசமாய் இல்லாதவரை! 🙂
பெயரிலி, போனால் நல்லது தான். அது தான் போக வேண்டும் என்று முடித்தேன். எல்லோர்க்கும் எல்லாச் சமயங்களிலும் போவதில்லை தான். (இன்று நாங்கள் போகிறோம்:-) )