புத்தகப் பட்டியல் தரவுதளம்
Jun 29th, 2005 by இரா. செல்வராசு
ரவி ஸ்ரீனிவாஸ், பத்ரி, வெங்கட் முதலானோர் ஒரு புத்தகப் பட்டியல் தரவுதளம் உருவாக்குவது பற்றிக் கருத்துக்களை எழுப்பியும் சோதனை முயற்சிகளை மேற்கொண்டும் இருக்கின்றனர். பலரும் இது போன்ற ஒரு வசதிக்காக ஏங்கி இருக்கின்றனர் என்பது தெளிவாகத் தெரிகிறது. இது ஒரு நல்ல முயற்சி. கிடைக்கிற சில நேரத்தில் படிக்க நல்ல (தம் விருப்பத்திற்கேற்ற) புத்தகங்கள் தெரிவு செய்ய இது போன்ற ஒரு தரவுதளம் உதவும் என்பது உறுதி.
இப்படியான ஒரு பட்டியலுக்கும், தரவுதளத்திற்கும், விமர்சனங்களுக்கும் நானும் ஏங்கி இருக்கிறேன். அப்படி ஒன்றும் இல்லாத பட்சத்தில் நானும் ஒரு சிறு சோதனை முயற்சியில் ஈடுபட்டிருந்தேன். பிரகாஷ் வழியாகத் தமிழ் வலைப்பதிவுகளுக்கு வந்த புத்தக மீம் (சங்கிலிச் சிந்தனைகள்) வழியாக வெளிப்பட்ட பட்டியலைச் சேர்த்து வைக்க ஒரு தரவுதளம் அமைத்து உள்ளிட ஆரம்பித்தேன். நேரமின்மையால் முழுமையாகச் செயல்படுத்த முடியவில்லை. ஒரு ஆரம்பநிலை வடிவை இங்கே பார்க்கலாம்.
இந்த முயற்சியில் யார் (தனக்குப் பிடித்தது எனப்) பரிந்துரை செய்தது என்ற விவரமும் இருக்கும். முழுமை பெற்ற வடிவத்தில், அந்த வலைப்பதிவர் இட்ட கருத்துக்களோ விமர்சனங்களோ இருக்கும். அவரது பதிவிற்கும் சுட்டி இருக்கும். பலவற்றின் அடிப்படையில் வரிசைப்படுத்திக் கொள்ளலாம். நமக்கு ஒருவரின் எழுத்துக்கள் பிடித்திருந்தால், அவரது எண்ணங்களோடு ஒரே அலைவரிசையாய் நாம் உணர்ந்திருந்தால், அவர் என்ன புத்தகங்கள் பரிந்துரை செய்கிறார் என்கிற விவரம் மிகவும் பயனுள்ளதாய் இருக்கும். உதாரணத்துக்கு நான் இதுவரை தொகுத்து வைத்திருக்கும் ஐந்தாறு பதிவுகளில் இருந்து, ‘ஹும்ம்… ஜெயமோகனின் காடு பற்றி நிர்மலா, ஜெயந்தி சங்கர் இருவரும் சொல்கிறார்கள்’, என்றோ, ‘கண்ணன் அம்பையின் புத்தகங்களைப் பரிந்துரை செய்திருக்கிறார், பார்க்கவேண்டும்’ என்றோ தோன்றலாம். குறைந்த பட்சம் வலைப்பதிவுலகில் ஒரு மாற்றக்காற்றாய்ச் சில காலத்துக்கு அடித்த புத்தகப் பதிவுகளை ஒரே இடத்தில் (சுட்டிகளையேனும்) தொகுத்து வைத்தது போலிருக்கும்.
இது இந்த மீம் பதிவுகளில் இருந்து தொகுத்து வைப்பதாய் இல்லாமல், வலைப்பதிவர்கள் பலரும் உள்ளிடும் வசதியையும் கூட அமைக்கலாம். அப்போது இன்னும் பல புத்தகங்களைப் பற்றிய விவரங்களின் தொகுப்பாகவும் அமையும். வெங்கட் முயற்சி போல் ஒரு விக்கியாகவோ, பத்ரி சொன்னது போல் ஒரு பெரும் தரவுதளமாகவோ அமைக்கப்படும் போது, இந்தச் சிறு பட்டியலில் இருந்து சம்பந்தப்பட்ட புத்தகத்துக்கு ஒரு சுட்டியும் கூடக் கொடுத்து விடலாம். அந்த இரண்டு முயற்சிகளும் பெரிய அளவில் நல்ல முறையில் அமையும்.
எனக்கு நேரம் கிடைக்கும் போது இந்த முயற்சியைத் தொடரவும் எண்ணம் இருக்கிறது. ஆனால் சித்தூர்க்காரர் மாதிரி தீவிர முனைப்பும் கவனக் குவிப்பும் இல்லையென்கிறபடியால் (:-)) புத்தகமணம் வீசுவதற்கு நாட்கள் பலவாகலாம். இல்லை இதை விட்டுவிட்டு மொத்தமாய் ஒரு பெரிய தளம் அமைக்க உதவுவது பயனுள்ளதாய் இருக்கும் என்றாலும் சரி. (இந்தத் தரவுதளம், வலைப்பக்கம் நுட்பங்களைப் பாவிக்க வேறு சில புறத்திட்டுக்களும் கைவசம் இருக்கின்றன).
நல்ல முயற்சி செல்வராஜ். வெங்கட்டும் இப்படியான முயற்சிகளில் இருக்கிறார் என்று தெரிகிறது.
நல்ல முயற்சி செல்வராஜ் வாழ்த்துக்கள்
தங்கமணி, கணேஷ், நன்றி.
தங்கள் பட்டியல் பார்த்தேன். புரியவில்லையே.
கறுப்பி மன்னிக்கவும். இது மிகவும் ஆரம்பநிலையிலேயே இருக்கிறது. அதனால் தான் அப்படி. வெறும் வலைப்பக்கமாக இப்போது இருந்தாலும் இந்த விவரங்கள் ஒரு தரவுதளத்தில் இருந்து வருகின்றன. அதனால் வரிசைப்படுத்தல், விரிவுபடுத்தல், ஒன்றுபடுத்தல், என்று மேன்மேலும் பல வகையான வசதிகளை ஏற்படுத்திக் கொள்ளலாம். (தமிழ்மணத்தை நினனத்துக் கொள்ளுங்கள்). தற்போதைக்கு புத்தக மீம் பதிவுகளில் இருந்து மட்டும் சேகரிக்கலாம் என்று எண்ணியிருந்தேன். முதலில் இருப்பது பரிந்துரை செய்த பதிவரின் பெயர். விரிவாய் கட்டமைக்க முயன்றால் பிறகு விளக்கி இன்னொரு பதிவு எழுதுவேன். உங்களுக்கு நன்றி.
எங்கள் தளத்தை உங்களின் பார்வைக்கு வைக்கிறேன்.
பலனுள்ள தளமா?
[…]