ஒன்பது ஆண்டுகளும் மூன்று வாரங்களும்
Jun 27th, 2005 by இரா. செல்வராசு
மூன்று வாரங்களுக்கு முந்தின நிகழ்வொன்று. முதலில் நினைத்தது போல் டொராண்டோவுக்குப் போக முடியாது போலிருக்கிறது என்று நயாகரா வரையாவது போய்விட்டு வரலாமா என்று எண்ணம். சிறியவள் கூட ஆசைப் பட்டாளே! இரண்டு வருடங்களுக்கு முன் சென்ற நயாகராப் பயணம், எடுத்து வந்த படங்களால் மட்டுமே அவள் நினைவில் இருக்கும். இப்போது கொஞ்சம் பெரியவளாகி விட்டதில் (இரண்டில் இருந்து நான்கு என்றாலும் பெரிய வயது தானே:-) ) இன்னும் அதிக அளவில் ரசிக்கக் கூடியதாய் அமையலாம்.
சரி அவ்வளவு தூரம் சென்ற பிறகு டொராண்டோவிற்குப் போகாமல் எப்படி? தொடர்ந்த பயணத்திட்டத்தில் ஒரு இரவு நயாகராவிலும், மறு இரவு ஸ்கார்பரோவிலும் தங்குவதற்கு இணையம் வழியாய் இடங்கள் கூடத் தேடி வைத்தோம். இருந்தும் அன்றைய அலுப்புகள், தகைவுகள், வேலை மிச்சங்கள் இவையாலும் இன்ன பிறவாலும் பயணம் வேண்டாம் என்று முடிவாயிற்று. சரி அடுத்த வலைப்பதிவர் கூட்டத்திற்குச் சென்று கொள்ளலாம். நயாகரா சென்றிருந்தால் அந்த நாளுக்கு ஒரு நினைவாகவாவது அமைந்திருக்கும். பரவாயில்லை. பிறகொரு நாள்…
வெளியூர் போகவில்லை. மாலை உள்ளூரிலேயே இருக்கும் கோயிலுக்குச் செல்லலாம் என்றொரு யோசனைக்குப் பின் அலுவலகம் சென்றேன். ஆனால் மதியம் வலுத்த மழையால் அந்தத் திட்டமும் கரைந்து போனது. ‘மதியம் பெய்த மழை’க்கு மாலை கோயிலுக்குச் செல்வதற்கென்ன என்று கேட்பீர்களோ? எப்படிப்பட்ட சிரமமாய் இருந்தாலும் சரி, பக்தியோடு கோயிலுக்குச் சென்று சாமி கும்பிட்டுவிட்டு வரவேண்டும் என்கிற கட்டாய பக்திகளுக்கெல்லாம் குடும்ப சகிதம் விடை கொடுத்து அனுப்பி விட்டோம். அன்புள்ள ஆண்டவனை நமது வசதி கருதியும் முன்பின் அசத்திக் கொள்ளலாம் என்கிற உயர்நிலைக்கு (!) வந்துவிட்டோம். கோயிலுக்குப் போகும் மனநிலை மாறிவிட்டது. அவ்வளவே. காத்திருப்பார் இறைவன் பொறுமையோடு என்று அன்றைய கோயில் திட்டமும் சுருண்டு கொண்டது.
வேண்டுமானால் இரவு வெளியே சென்று நல்ல உணவகம் ஒன்றில் விருந்துண்டு வரலாமா என்று கேட்டேன். அலுவலகக் கூட்டத்தின் போது விருந்தாளிகளோடு சென்று வந்ததில் இருந்து மனைவி மக்களோடு போய் வரவேண்டும் என்று எண்ணிய ‘ச்சீஸ் கேக் ஃபேக்டரி’, மற்றும் ‘ஃபிஷ் மார்க்கெட்’ என்னும் உணவகங்கள் இன்னும் பட்டியலிலேயே இருக்கின்றன. ஆனால் ஒன்றரை வருடமாகச் சோதித்துப் பார்க்காத உடற் கொலஸ்டிரால் எண்களும், வீட்டில் ஒருவரின் தீவிர உடற்பயிற்சிப் பலன்கள் வீணாகிவிட வேண்டாமென்றும், உணவகத் திட்டமும் காலியாகிய டப்பாவாகக் குப்பைத் தொட்டிக்குள் போனது.
மதியம் விடுப்பெடுத்துக் கொண்டு வீட்டிற்கு வந்துவிடலாமா என்ற எண்ணமும் பணியகத்துக் கூட்டங்களிலும் வேலைகளாலும் கலைந்து போனது. கடையேதும் சென்று அன்போடளிக்கத் துணியெதுவும் வாங்கலாமா என்ற யோசனை, எதிர்வரிசையில் சும்மா தொங்கும் சில பழைய அளிப்புக்களாலும், திரும்பி வாங்கிய கடைக்கே சென்று விட்ட மீதி அளிப்புக்களாலும் நசிந்து போனது.
ஊரில் இருந்தால் மல்லிகைப்பூ வாங்கித் தரலாம் என்கிற கற்பனை இருந்திருக்கிறது. இங்கு முன்பு எப்போதோ ஓரிரு முறைகள் வாங்கித் தந்த ரோசாப் பூக்கள் அப்படி ஒன்றும் அதே நிறைவைத் தந்ததில்லை. அதனால் மலர்களுக்கும் இங்கு வழியில்லை.
சிலகாலம் முன்பு சென்ற புறத்திட்டு (Project) மானகைப் (Management) பயிற்சி வகுப்பொன்றில் பக்கத்து இருக்கை டெப்பீ இதுவரை வாழ்க்கையில் என்ன சாதனை செய்திருக்கிறீர்கள் என்று கேட்ட கேள்விக்கு இருபத்தியைந்து வருடமாய் இன்னும் திருமணமாகியே இருக்கிறோம் என்று சொன்னார். காலம் பூராவும் மணமாகியே இருக்கிற (இருந்த?) இனத்தினர் மத்தியில் இருந்து வந்தவனுக்கு அதில் என்ன சாதனை என்று கேள்வி எழுந்தது.
அதைவிட என் மணிக்கட்டில் கிடக்கிற கடிகாரம் வாங்கிப் பதினெட்டு வருடங்கள் ஆகியிருப்பது ஒரு பெரிய சாதனையாகத் தோன்றுகிறது. இந்த விதயத்தில் மானசீகமாய் மாமனாருடன் ஒரு போட்டி. அவர் வாங்கிய கைக்கடிகாரம் இருபத்தியைந்து ஆண்டுகளுக்கு மேலாக அவர் கைகளில் இருக்கிறது என்று என்னனக் கட்டியவர் கூறுகிறார். அவரைக் கட்டி ஆயிற்று ஒன்பது ஆண்டுகளும் மூன்று வாரங்களும் இரண்டு-மூன்று நாட்களும். “What a jerk” என்று அவர் போயிருக்கக் கூடிய சூழ்நிலைகள் கால ஓட்டத்தில் ஏற்பட்டே இருந்தாலும் பொறுமையாய் இருந்த இந்த ஒன்பது ஆண்டுகள் ஒரு வகையில் சாதனை தானோ? டெப்பீயின் இருபத்தியைந்து ஆண்டுகளும் அது போன்றதொரு வகையில் பெரும் சாதனையாக அவர் கொண்டாடுவதில் என்ன கேள்வி!
நாளதனின் அவசரங்கள் முடிந்த அசைபோடும் நேரத்தில் வியப்போடு மனைவி கூறினார்.
“எப்படி மாந்தா! (Man! இன் தமிழாக்கம் 🙂 ) இனிய திருமண ஆண்டுப் பூர்த்தி வாழ்த்துக்கள் என்று காலையில் எழுந்து வந்து கை குலுக்கிவிட்டு ஒரு வணிக ஊடாடலாய்ச் செல்ல உங்கள் ஒருவரால் தான் முடியும்!”
பெருமையாய் இருந்தது. கொஞ்சம் அசட்டுத் தனமும் கலந்து.
வாழ்த்துக்கள்.. 🙂
செல்வா,
வாழ்த்துக்கள்!!!
//“What a jerk” என்று அவர் போயிருக்கக் கூடிய சூழ்நிலைகள் கால ஓட்டத்தில் ஏற்பட்டே இருந்தாலும் பொறுமையாய் இருந்த இந்த ஒன்பது ஆண்டுகள் ஒரு வகையில் சாதனை தானோ?//
இப்படியெல்லாம் பயமுறுத்தினால் எப்படி? அப்புறம் நாங்கள் திருமணம் செய்துகொள்வதே சாதனை என்றாகிவிடும் போலிருக்கிறதே!
🙂
//ஊரில் இருந்தால் மல்லிகைப்பூ வாங்கித் தரலாம் என்கிற கற்பனை இருந்திருக்கிறது. இங்கு முன்பு எப்போதோ ஓரிரு முறைகள் வாங்கித் தந்த ரோசாப் பூக்கள் அப்படி ஒன்றும் அதே நிறைவைத் தந்ததில்லை. அதனால் மலர்களுக்கும் இங்கு வழியில்லை.//
மல்லியப்பூசுக்கும், அல்வாவுக்கும் மிஞ்சின பிரியம் உலகத்திலேயே இல்லைன்னு என் கரூர் நண்பர் ஒருவர் சொல்லுவார்.அது சரிதான். ரோசா எல்லாம் நமக்கு சரிவராது செல்வா..:-)
இனிய மணநாள் வாழ்த்துகள். ஒம்போது வருஷம் ஆயிப் போச்சா சீனியர்..??
-மூக்கு சுந்தர்
இனிய திருமண வாழ்த்துக்கள்.
ராசா, கண்ணன், வாழ்த்துக்களுக்கு நன்றி. இதுக்கெல்லாம் பயந்துக்காதீங்க. தவறுதல் மனித இயல்பு தானே. “நான் செய்யப்போற தப்புக்கெல்லாம் முதலிலேயே மொத்தமாய் மன்னிப்புக் கேட்டுக்கறேன்”னு ஒரு ஒட்டுமொத்த அறிக்கை விட்டுருங்க. 🙂
மூக்கன், பூவென்ன இனிப்பென்ன, மனசுல இருக்கற அன்பு தானே முக்கியம்னு அப்பப்போ ஒரு ‘வசனம்’ எடுத்து உட்டுடறதும் முக்கியம். ஆமாங்க. ஒன்பது வருசம் ஓடிப் போச்சு. நல்லனுபவம்.
பத்மா, உங்கள் வாழ்த்துக்களுக்கும் நன்றி.