சுவீடன்: மொழியும் நாடும்
Jun 23rd, 2005 by இரா. செல்வராசு
சுவீடன் போய் வந்தது பற்றி அப்பாவிடம் பேசிக் கொண்டிருந்த போது அவர் கேட்டார், “அது ஒரு பெரிய நாடு அல்லவா?” என்று. ஒரு நாடு சிறியது பெரியது என்று எதை வைத்துச் சொல்வது? பரப்பளவை வைத்துப் பார்த்தாலோ, மக்கட்தொகையை வைத்துப் பார்த்தாலோ சுவீடன் அப்படி ஒன்றும் பெரியது அல்ல. இவர்களின் மக்கட்தொகை மொத்தமாய் ஒன்பது மில்லியனுக்கும் குறைவே. ஒப்பிட்டுப் பார்க்க, தமிழகத்தில் மட்டும் சுமார் அறுபத்தி இரண்டு மில்லியன் பேர் இருக்கிறோம்.
பொருளாதார நிலையை வைத்து, வாழ்க்கைத் தரத்தை வைத்துப் பார்க்கும் போது பெரியதாகத் தான் இருக்க வேண்டும். மொத்த ஐரோப்பாவே பொறாமைப் படும் அளவிற்கு உயர்வாழ்க்கைத் தரம் இருந்தாலும், சுவீடியர்கள் அதற்காக அதிக வரியைச் செலுத்துகிறார்கள். சராசரியாய் இவர்களின் வாழ்க்கைக் காலம் 78 முதல் 82 ஆண்டுகளாக இருக்கிறது. நிலப்பரப்பில் 50 சதவீதத்துக்கு மேல் காடுகள் நிறைந்திருக்கின்றன. அதனால் காடும் காடு சார்ந்த தொழிலும் இங்கு பிரதானமாக இருக்கிறது.
அப்பா மேலும் ஒரு கேள்வியைக் கேட்டு வைத்தார். “அங்கேயெல்லாம் இந்தி பேசுவாங்களா? இல்லை இங்கிலீசு தானா?”
வாஸ்டெராஸ் என்னும் சுவீடனின் சிறு ஊர் ஒன்றில் மூன்று நாட்கள் இருந்ததை வைத்துப் பொதுப்படையாய்ச் சொல்லி விட முடியாது என்றாலும், ஒரு விதயம் தெள்ளத் தெளிவாகத் தெரிந்தது – அவர்களின் மொழி! பலரும் ஆங்கிலம் தெரிந்து வைத்திருந்தாலும், மொழி தெரியாதவரோடு ஆங்கிலத்தில் பேசத் தயங்காவிட்டாலும், தங்களுக்குள் சுவீடிய மொழியையே பெரும்பாலும் பாவிக்கின்றனர். ஊர்ப்பெயர்கள், சாலைகள், தங்குமிடங்கள், கடை கண்ணிகள், பேருந்துகள், உணவகங்கள், உணவுத் தெரிவட்டைகள், கல்லூரி ஆய்வறிக்கைகள், ஏன் பணியிடத்து மின்மடல்கள் வரை எங்கும் சுவீடிய மொழியே நிறைந்திருக்கிறது.
பிறமொழிக் கலப்பை எதிர்த்து யாரும் அங்கு மொழிப் போரிடத் தேவை இல்லை. கடைப் பெயர்களில் பிறமொழிகளைத் தார் பூச அவசியமில்லை. ஏனென்றால் பிறமொழிகளில் அவை எழுதப் படவேயில்லை. சொந்த மொழியில் பேசுவதை யாரும் அவமானமாகக் கருதுவதில்லை. தம்மொழியைச் சிறப்பாகக் கருதிப் பேண விரும்புவோரை ஏனையோர் எள்ளி நகையாடுவதில்லை.நுட்பியல் விதயங்கள் கூட அங்கே சுவீடிய மொழியில் தான் பேசிக் கொள்கிறார்கள்.
தமது மொழியைப் பேணிக் காக்கத் தெரிந்தவர்கள் இருக்கிற நாட்டை ஒரு பெரிய நாடென்று தான் சொல்ல வேண்டும்!
சுவீடிய மொழிப்பழக்கம் பற்றி நீங்கள் எழுதியுள்ளது படிப்பதற்கு நன்றாக இருக்கிறது, செல்வராஜ். அது பெரிய நாடு தான். ஐரோப்பாவில் இதுபோலப் பெரியநாடுகள் பல இருக்கின்றன. ஆனாலும் நம்மவர்கள் உணர்வார்கள் என்றா நினைக்கிறீர்கள்? எனக்கு நம்பிக்கையில்லை. ஆங்கில மொழி அறிவும், ஆங்கிலமே எல்லாமும் என்கிறதும் வெவ்வேறானவை என்று சொல்லுவது செவிடன் காதில் ஊதிய சங்கு.
ஆனாலும் சங்கு ஊதுவோம். ஒருவேளை சிலருக்குக் கேட்கக் கூடும்.
அன்புடன்,
இராம.கி.
//தமது மொழியைப் பேணிக் காக்கத் தெரிந்தவர்கள் இருக்கிற நாட்டை ஒரு பெரிய நாடென்று தான் சொல்ல வேண்டும்! //
செல்வராஜ், இங்கே சைக்கிளுக்கு தமிழ் தெரியுமா என்றெல்லாம் அடிமை மனப்பான்மையோடு காலைச் சுரண்டிக்கொண்டிருக்கிறார்கள் தேசியத்தலைவர்கள். ஆங்கிலத்தால் வாழ்கிறோம் என்று நம்பிக்கொண்டிருக்கிறார்கள் தமிழ் தலைவர்கள்.
அருமையான, இரத்தினச் சுருக்கமான பதிவு. நன்றிகள்.
கோயம்பேடு பஸ் நிலையத்திற்கருகில் இரவு இரண்டரை மணிக்கு ஏதேனும் உணவகம் திறந்திருக்கிறதா என்று பார்த்து, எதுவுமில்லாமல் கடைசியில் ராதா பார்க் இன் (Radha Park Inn) என்ற பெருவிடுதியின் உணவகத்துக்குள் நுழைந்து அமர்ந்தால் பேரர்கள் முதலில் ஆங்கிலத்தில் பேசினார்கள், பின்பு ஹிந்தியில் பேசினார்கள். சிறிது நேரம் கழித்து பரிமாறுபவரை அழைத்து, “வாடிக்கையாளர்களிடம் தமிழில் பேசுவது இல்லையா” என்றால், உடைந்த ஆங்கிலத்தில் “இல்லை. வாடிக்கையாளர்களிடம் ஆங்கிலத்தில்தான் பேசவேண்டும், அல்லது தேசிய மொழியான ஹிந்தியில்தான் பேசவேண்டும் என்று எங்களது பயிற்சியாளர் சொல்லியிருக்கிறார்”.
“பயிற்சியாளர்களுக்கு எந்த ஊர்” என்றேன்.
“டெல்லி.”
“இந்த ஓட்டலை அப்போது டெல்லிக்கோ லண்டனுக்கோ பெயர்த்துவிடலாமே, சென்னையில் எதற்கு” என்றேன். பாவம் பரிமாறும் இளைஞர் மௌனம் சாதித்தார். அவர் என்ன செய்யமுடியும் பாவம். “லோக்கல் மொழிகளுக்கெல்லாம் அனுமதி கிடையாதாம் – லோக்கல் என்பது தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம்” என்றார், அவரும் சற்று இயலாமையுடன்.
இந்தமாதிரி மூளைகாய்ந்த கோஷ்டிகள் இருக்கும்வரை இதுமாதிரி இம்சைகளிலிருந்து விடுபடுவது சற்றுச் சிரமமே! பகல் நேரமாயிருந்தால் “my 2 cents” என்று ‘பயிற்சி’யாளரையும் இரண்டு கிழி கிழித்துவிட்டு வந்திருக்கலாம். சர்ரென்று எழுந்த தலைக்கொதிப்பு அடங்க வெகு நேரமாயிற்று!
சென்னை விமான நிலையத்திலுள்ள ஹிக்கின் பாத்தம்ஸிலும் என்னிடம் விடாப்பிடியாக ஆங்கிலத்தில்தான் பேசினார் அங்கிருந்த கேஷியர் (கிருஷ்ணன் என்று பெயரட்டை மாட்டிக் கொண்டிருந்தார்). நானும் விடாப்பிடியாக தமிழிலேயே அவருடன் உரையாடினேன். மற்றொருவர் இன்ன மொழியில்தான் பேச வேண்டுமென்று எதிர்பார்ப்பதும் ஒரு வகைத் திணிப்பென்றே கூறுவேன். நாம் பேசுவது அவருக்குப் புரிந்து, அவர் (வேற்று மொழியில்) பேசுவதும் நமக்குப் புரிந்த பின், ஆகவேண்டிய வேலைகளை கவனிக்க வேண்டியதுதான்.
//மற்றொருவர் இன்ன மொழியில்தான் பேச வேண்டுமென்று எதிர்பார்ப்பதும் ஒரு வகைத் திணிப்பென்றே கூறுவேன் //
அது மட்டுமல்ல, மற்றவர் நம்மை, நமது மொழி பேசும் ஊரில் அவரது மொழியில் பேச கட்டாயபடுத்துவதை பற்றி குற்றமாய் பேசுவது கூட ஒருவகை திணிப்பு(அல்லது வேறுவகை குற்றம்) என்றும் வாய்ஸ் வாய்மொழிந்திருக்கிறார்.
“என் மொழி பேசும் என்னூரில் என்னிடம் வந்து (எனக்குத் தெரிந்த) வேற்று மொழியில் நீ பேசினால் அது என்னைக் கட்டாயப் படுத்துவது போலுள்ளது. ஆகவே, உனக்குத் தெரிந்திராவிட்டாலும் கற்றுக்கொண்டு என்னிடம் நீ என் மொழியிலேயே பேசு” என்ற வகையில் போகும் எண்ணவோட்டத்தைத்தான் தவறு / குற்றம் என்று முன்பொரு முறை வாயமொழிந்திருக்கிறேன். ்
செல்வராஜ் , நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை. இங்குள்ள மக்கள் அனைவரும் மொழிப்பற்று மிக்கவர்களே! ஸ்வீடன் மட்டுமல்ல , ஐரோப்பிய நாடுகளில் பெரும்பான்மையான நாடுகளில் இப்படித்தான். ஐரோப்பியர்களிடமிருந்து கற்றுக்கொள்ள இது போன்ற பல நல்ல விஷயங்கள் உள்ளன. அவற்றுள் சில : விதிகளையும் சட்டங்களையும் மதித்தல், அவற்றைக் கடைப்பிடித்தல் சக மனிதனை மனிதனாகப் பார்த்தல் .
வாய்ஸ் சொல்வது உண்மையல்ல. நான் குறிப்பிட்ட நபருக்கு ஹிந்தி தெரியாது என்று நான் சொன்ன பின்பும், ஹிந்திதெரியாதவரை நங்கநல்லூரில் வற்புறுத்துவதை பற்றித்தான் பேசுகிறேன் தெளிவாய் என்று சொன்னபின்னும் சாதித்துகொண்டிருந்தார். அதைதான் குறிப்பிட்டேன். ஆதாரம் காட்டமுடியும்.
ஆனால் இப்போது அவர் தன் கருத்தை மாற்றிகொண்டால் கூட எனக்கு அது வரவேற்கத் தக்கதுதான்.
அருமை
ரோசாவசந்த், என் கருத்தில் எந்த மாற்றமுமில்லை. இதோநீங்கள் குறிப்பிடும் ஆதாரம். அவருக்கு ஹிந்தி தெரியாது என்று நீங்கள் கூறிய பின்பும் நான் எதைச் சாதித்தேன்? அவரை ஹிந்தி பேசக் கட்டாயப் படுத்த வேண்டுமென்றா? நான் அன்று கூறியது, இப்பொழுதும் கூறுவது: வாடிக்கையாளர் ஹிந்தியில் பேசினார் என்பதாலேயே அவர் மற்றவரையும் ஹிந்தியில் பேசக் கட்டாயப் படுத்தினார் என்ற வகையில் புரிந்து கொண்டு அவரைத் தாக்குவது சகிப்புத்தன்மையற்ற செயல். “ஹிந்தி தெரியாத தமிழரிடம் தமிழில்தான் பேசவேண்டும், தமிழ் தெரியவில்லையென்றால் முதலில் அதைக் கற்றுக் கொள், பிறகு பேசலாம்” என்ற ரீதியில் செயல்பட்டால் அது திணிப்பே. (உடைந்த) ஆங்கிலம், சைகை என்று இடைபட்ட மாற்றுக்கள் எவ்வளவு உள்ளன.
வாய்ஸ் அவர்களின் தெளிவு என்னை கிறங்க அடிக்கிறது. ஆதரம் தந்ததற்கு நன்றி.
முதலில் ‘மற்றொருவர் இன்ன மொழியில்தான் பேச வேண்டுமென்று எதிர்பார்ப்பதும் ஒரு வகைத் திணிப்பென்றே கூறுவேன். ” என்று அவர் சொன்னார். தமிழகத்து தலைநகரில், ஒரு காய்கறிக்கார பெண்மணியிடம், அவருக்கு ஹிந்தி தெரியாது என்று நன்கு அறிந்தும் (இவர் குறிப்பிடும் சைகை இடைப்பட்ட ஆங்கிலம் என்று எதுவும் இல்லாமல் வெளிப்படையான திமிருடன்) ஹிந்தியில் தொடர்ந்து பேசும் ஒருவரை பற்றி நான் விவரித்ததற்கு, அவரே தன் வசதிப்படி நான் சொன்னதை திரித்து விளக்கமளித்து ” ஹிந்தி தெரியாத தமிழரிடம் தமிழில்தான் பேசவேண்டும், தமிழ் தெரியவில்லையென்றால் முதலில் அதைக் கற்றுக் கொள், பிறகு பேசலாம்” என்று சொன்னதாக தீர்பளிக்கிறார்.
அதாவது தமிழ் நாட்டில் ‘ஹிந்தி திணிக்கப்பட கூடாது’ என்று நீங்கள் நினைத்தால், ‘மற்றவரை இன்ன மொழியில் பேசவேண்டும்’ என்று வற்புறுத்துவதாய் அர்த்தம். ஹிந்தியில் ஒருவார்த்தை தெரியாத காய்கறிக்கார பெண்மணியை அவருடைய மொழி பேசப்படும் மானிலத்தில் ஒருவன் ஹிந்தி பேச வற்புறுத்துவது என்பது, ‘இன்ன மொழியில் பேசுமாறு வற்புறுத்துவது’ அல்ல. ஆனால் அந்த நிகழ்ச்சியை ஒருவர் விவரித்தால், அது ‘ஹிந்தி தெரியாத தமிழரிடம் தமிழில்தான் பேசவேண்டும், தமிழ் தெரியவில்லையென்றால் முதலில் அதைக் கற்றுக் கொள், பிறகு பேசலாம்” என்கிறரீதியில் செயல்படுவது. யருக்காவது உடலில் உள்ள முடியை எல்லாம் பிய்த்துகொள்ள தோன்றினால் நான் பொறுப்பல்ல. (அப்படி பிய்த்துகொள்ளும் அளவிற்கு(இதற்கு தேவை முடி அல்ல, மூளை) எத்தனை பேர்கள் உண்டு என்று தெரியவில்லை.)
மாண்ரீஸர் ஆனாலும் நீங்கள் வடயிந்திய ஹோட்டலில் போய் அவர்களை தமிழில் பேசும்படி வற்புறுத்திய மொழி வெறியை வன்மையாய் கண்டிக்க வேண்டும் என்று தோன்றுகிறது.
நானும் மாண்டியைக் கண்டிக்கிறேன். உணவகத்தில் நமக்குச் சாப்பாடு போட்டார்களா, போட்ட சாப்பாட்டுக்கு கொடுத்த பணம் சரியாக இருந்ததா என்றெல்லாம் பார்ப்பதே புத்திசாலி தமிழனின் குணமாய் இருக்கவேண்டுமேயல்லாது, அவன் எந்த மொழியில் பேசினால் இவருக்கென்ன?
நமக்கு சாப்பாடு மட்டும் தான் பிரதானமாய் இருக்கவேண்டும். இந்தி வேண்டாம் என்று தமிழ் நாட்டு அரசியல்வாதிகள் ஒரு தமிழனின் வயிற்றில் அடித்ததற்கு இதுதான் சரியான உதாரணம்.
இங்கு திரிப்பு வேலையை யார் செய்கிறாகளென்று புரிந்து கொள்ள, முடியும் தேவையில்லை, மூளையும் தேவையில்லை. சென்ற முறையும் இதே ரீதியில் சென்றதால்தான் இந்த விவாதத்தைத் தொடர விரும்பவில்லை.
வட இந்திய ஹோட்டலை விடுங்கள். தென்னிந்தியச் செட்டிநாடு உணவகத்திலும் ஆங்கிலம் பேசி வரவேற்கும் பணியாளரை எதிர்கொள்ளும் வாய்ப்பேற்படலாம். நாம் தமிழில் பேசிய பின்பும் அவர் ஆங்கிலத்திலேயே தொடரலாம், அது அவரது சொந்தத் தேர்வு. நாம் செய்யக்கூடியவை: வேறு தமிழ் பேசும் பணியாளரை அனுப்பும்படி கேட்கலாம், அவ்வாறு எவரும் இல்லையெனில் (தமிழே பிரதானமென்றால்) வெளியேறி நடையைக் கட்டலாம். இவையன்றி அவரை அவரது விருப்பத்துக்கு மாறாக தமிழில் பேசுமாறு வற்புறுத்துவது (சங்கம் வளர்த்த மதுரையிலும்) மொழிவெறியைக் குறிக்கும் செயலே.
வாய்ஸ், உங்கள் தீர்ப்புகளுக்கு மிக நன்றி. நாளை டோக்கியோ நகரில் அனைவரிடமும் தமிழில் உரையாட முயல்கிறேன். (ஏனென்றால் அவர்களுக்கு ஆங்கிலம் தெரியாது பாருங்கள்.) என்னை குறைந்த பட்சம் கேனயனாக பார்த்தால் கூட, அவர்களின் மொழிவெறியை கண்டித்து ஒரு பதிவை ஜப்பானிய மொழியில் எழுதுகிறேன். அந்த வேலை இருப்பதால் இப்போதைக்கு இந்த விவாதத்திலிருந்து விலகுகிறேன்.
மேலும் நான் முந்தயதாய் கடைசியில் எழுதியதை மறுக்காததர்கும் நன்றி.
அந்தச் செட்டிநாடு உணவகத்தில், தமிழில் பேசவில்லையென்ற பின்னாடி, ஓர் இயக்கமாகப் பலரும் அந்த உணவகத்தைப் புறக்கணித்தால் போதும்; அப்புறம், அவருடைய வணிகத்தில் ஏற்படும் தாக்கம், அங்கே உணவளிக்கும் பணியாளரை அடுத்தநாள் செட்டிநாட்டுத் தமிழில் என்ன, சங்கத் தமிழில் கூடப் பேச வைக்கும். அப்படி நாம் செய்தால், அதற்குப் பெயர் போராட்டம், வன்முறை அல்ல. எல்லாம் இங்கே கேட்பதற்கு ஆளில்லை. அதனால் இப்படி ஊரெங்கும் கல்லுளிமங்கத்தனம் நடைபெறுகிறது.
“இந்தியர்களுக்கும் நாய்களுக்கும் இங்கு இடமில்லை” என்று ஒருகாலத்தில் தட்டி கட்டி வைத்திருந்தார்கள். அதையும் தட்டிக் கேட்க, ஒரு , கண்ணாடி போட்ட, வழுக்கைத் தாத்தா வந்தார். போராட்டம் செய்தார். இந்த நாட்டிற்கு விடுதலை வந்தது. எல்லாரும் மறந்துவிட்டார்கள். எது வன்முறை, எது வன்முறை அல்ல என்று சொல்லுவதில் எழுந்துவரும் நூதனமான கோணப் பார்வைகளைப் பார்த்தால், அந்தக் கம்புவைத்த, கண்ணாடி போட்ட, வழுக்கைத் தாத்தா ஒரு வன்முறையாளன் என்று இன்றைய வரையறையின் படி சொல்ல வேண்டியது தான் போலிருக்கிறது.
இன்றைக்கு இந்த மாநிலம் சில ஆண்டுகளாகவே (அவர்கள் எந்தக் கழகமாய் இருந்தாலும் சரி) தமிங்கிலர்களால் ஆளப்படுகிறது. அவர்களிடமிருந்து தமிழருக்கு விடுதலை வேண்டும், அவ்வளவுதான். எந்தத் தாத்தா வரவேண்டும், இந்தியன் தாத்தாவா, கம்புவைத்த, கண்ணாடி போட்ட, வழுக்கைத் தாத்தாவா?
அன்புடன்,
இராம.கி.
வாய்ஸ் ஆன் விங்க்ஸ், ரோசாவசந்த், உங்கள் முந்தைய விவாதங்களை நான் கவனித்திருக்கவில்லை. வாய்ஸ் ஆன் விங்க்ஸின் கருத்துக்கள் சற்று வித்தியாசமாக இருக்கிறது – அவர் சொல்ல வருவதில் ஏற்புடையது என்ன என்று எண்ணிக் கொண்டிருக்கையில் கடைசியாய் அவர் இட்ட பின்னூட்டம் பார்த்தேன். அதனை முற்றிலுமாக ஏற்றுக் கொள்ள என்னாலும் இயலவில்லை.
‘வற்புறுத்தல்’ என்று பார்த்தால், ‘நீ தமிழில் பேசாததால் நான் வேறு கடைக்குச் செல்கிறேன்’ என்று சொல்வதைக் கூட ஒரு வகையில் (மென்மையான) வற்புறுத்தலாய் எடுத்துக் கொள்ளலாம். ஆனால் மதுரையில் செட்டிநாட்டு உணவகத்தில் ஒருவர் தமிழ் பேச வேண்டும் என்று எதிர்பார்ப்பது ‘மொழிவெறி’ என்பது சற்று மிகையானது. ‘வற்புறுத்தல்’ என்று கொள்ளலாம், ஆனால் ‘வெறி’ ஆகாது.
பிறகு, இந்த வகை வற்புறுத்தல்கள் தவறு என்று சொல்ல முடியாது. ‘அட நாமெல்லாம் ஒரே மொழி பேசற ஆளுங்க. அதிலேயே பேசலாமே’ என்று சொல்வது தவறாகத் தோன்றவில்லை. கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் ஒருவர் குடும்பத்திலேயே அவரவர் எண்ணங்களை எடுத்துச் சொல்லி அடுத்தவரை வற்புறுத்துவதில்லையா? அது போலத் தான்.
இனி பேசிக் கொள்கிற இருவருக்கும் அடுத்தவர் மொழி தெரியாத நிலையை எடுத்துக் கொள்வோம். அது இந்தி தமிழாக இருக்கட்டும். இருப்பது நங்கநல்லூரோ டெல்லியோ எதுவானாலும் சரி. அங்கு உரையாடல் நடக்க அவரவருக்குத் தெரிந்த மொழியிலேயோ இடைப்பட்ட ஆங்கிலம் சைகை மொழிகளிலோ ஊடாடல் நடப்பது இயல்பே. தொடந்து நீண்ட காலம் அந்த நிலை நிலைக்குமானால் ஒருவர் மற்றவரின் மொழியைக் கற்றுக் கொள்ளலாம். (யார் கற்றுக் கொள்கின்றனர் என்பது அவசியத்தைப் பொறுத்தது). ஆனால் தற்காலிகமாய் இருக்கும் போது புரிந்தும் புரியாமலும் அரைகுறையாய் வேற்று மொழிகளில் இருவரும் பேச முற்படுவதென்பது இயல்பே.
இங்கு பிரச்சினையே ‘இந்தி தேசிய மொழி, அது தெரியவில்லையா உனக்கு’ என்று நங்கநல்லூர்க் காய்கறிக் கடைக்காரரை ஏளனப் பார்வை பார்க்கும் வட இந்தியரின் ஆணவப் போக்குத் தான். அப்போது தான் ‘இந்திக்கு மட்டும் அப்படி என்ன கொம்பு முளைத்திருக்கிறது’ என்று எரிச்சல் வருகிறது. எல்லோரும் அப்படி இல்லை தான். இருந்தாலும் அப்படி இருக்கிறவர்கள் நங்கநல்லூரிலும் டில்லியிலும் மட்டுமல்ல அமெரிக்காவிலும் நான் பார்க்கிறேன். மற்றபடி பிற மொழிகளின் மீது வெறுப்புக் கொள்ளவோ உதாசீனப் படுத்தவோ நமக்கு எந்த முகாந்திரமும் இல்லை.
ரோசாவசந்த், மேற்சொன்ன அடிப்படையில் உங்களுக்கு ஏன் கோபம் வருகிறது என்று எனக்குப் புரிகிறது.
செல்வராஜ், நீங்கள் சொன்னதை ஒத்த பார்வையில்தான் நான் அப்போதும், இப்போதும் எழுதினேன். புரிந்துகொண்டதற்கு நன்றி. .
இராம.கி ஐயா, உங்கள் கருத்துக்களுக்கு நன்றி. நீங்கள் கூறியிருப்பதில் முக்கியமான கருத்து ஒன்று உள்ளது – “ஆங்கில மொழி அறிவும், ஆங்கிலமே எல்லாமும் என்கிறதும் வெவ்வேறானவை”. இந்த வித்தியாசத்தைத் தான் உணராமல் கிடக்கிறோம். அறிவியல், நுட்பியல் முன்னேற்றங்களுக்கு ஆங்கிலம் உதவினாலும், அதுவே எல்லாம் என்பது தவறான சித்தாந்தம் தான். ஒரு வகையில் இது அறியாமை. அது போகும் வரை சிலராவது சங்கை ஊதிக் கொண்டு தான் இருக்க வேண்டும்.
வளர்ந்த நாடுகளுள் பல தங்கள் மொழியிலேயே தான் அறிவியல் நுட்பியல் விதயங்களைக் கைக் கொள்கின்றன. சுவீடன் அதற்கு ஒரு உதாரணம் தான்.
தங்கமணி, விஜய் நன்றி.
தங்கமணி, விஜய், எழில் உங்கள் அன்புக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள். எழில் சொன்னது போல் பிறரிடம் கற்றுக் கொள்ள நிறைய நல்லன இருக்கின்றன. நல்லனவற்றை யாரிடம் இருந்து வேண்டுமானாலும் கற்றுக் கொள்ளலாம்.
மாண்ட்ரீஸர், நன்றி. உணவகத்திலும், விமான நிலைய புத்தகக் கடையிலும் மட்டுமில்லை. இந்தப் போக்கு பல இடங்களில் ஊடுருவிக் கிடக்கிறது. நான் ஊருக்குச் சென்றிருந்த போது ஒருமுறை தந்தை பணிபுரிந்த வழக்காடுமன்ற நீதிபதி ஒருவரைச் சந்திக்கச் சென்றேன். தமிழர் தான். இருந்தும் நான் தமிழிலேயே பேச முயன்றும் அவர் என்னவோ என்னிடம் ஆங்கிலத்திலேயே பேச முயன்று கொண்டிருந்தார். இதையே சென்னை கோட்டையில் பணி புரியும் ஒருவரின் மகனும் அனுபவித்ததைக் கேட்டிருக்கிறேன்.
சிலராவது இதனை எல்லாம் கேள்வி கேட்டுக் கொண்டு தான் இருக்க வேண்டும்.
்ரோரோசாவசந்த், உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள். ஆனால் அதற்கு சற்றும் குறையாத முயற்சியொன்றை நானும் செய்திருக்கிறேன். கொரியாவின் தலைநகரான ஸோல்லில் (Seoul) ஆங்கிலம் சற்றுமறியாத மருந்துக் கடைக்காரிடம் (வெளிப்படையானத் திமிருடன்) ஆங்கிலத்தில் எனது உபாதைகளை விவரித்து மருந்துகளும் பெற்றேன். என்னை அவர்கள் கேனையனாகவோ, மொழிவெறியனாகவோ காணாது, உதவி தேவைப்படும் ஒரு நோயாளியாகக் கண்டார்கள். மிகுந்த சிரமத்துடன் என்னைப் புரிந்து கொண்டு சட்டெனக் குணப்படுத்தும் மருந்தையும் தந்தார்கள். கொடுக்க வேண்டிய பணத்தை calculatorஇல் தட்டித் தெரியப் படுத்தினார்கள். பெயர் தெரியாத அந்த அந்நியர்களுக்கு என் நன்றிகள்.
//‘இந்தி தேசிய மொழி, அது தெரியவில்லையா உனக்கு’ என்று நங்கநல்லூர்க் காய்கறிக் கடைக்காரரை ஏளனப் பார்வை பார்க்கும் வட இந்தியரின் ஆணவப் போக்குத் தான். அப்போது தான் ‘இந்திக்கு மட்டும் அப்படி என்ன கொம்பு முளைத்திருக்கிறது’ என்று எரிச்சல் வருகிறது. எல்லோரும் அப்படி இல்லை தான். இருந்தாலும் அப்படி இருக்கிறவர்கள் நங்கநல்லூரிலும் டில்லியிலும் மட்டுமல்ல அமெரிக்காவிலும் நான் பார்க்கிறேன்//
இதே அனுபவம் எனக்கும் நடந்துள்ளது, பெங்களூரில் எனக்கு தெரிந்த ஒரு இந்தியை தாய்மொழியாக கொண்ட மென்பொறியாளருடன் பேசிக்கொண்டிருந்தபோது 5 ஆண்டுகளாக பெங்களூரில் இருக்கின்றீர், ஏன் இன்னும் கன்னடம் கற்றுக்கொள்ளவில்லை என கேட்டதற்கு “why should I learn kannad, everybody must know Hindhi,Hindhi is a national language know” என்றார், இது மாதிரியான ஒரு மொழி ஆதிக்க உணர்வுதான் பிரச்சினையே தவிர மொழியல்ல.
சென்னை விமானநிலையத்திலுள்ள ஹிக்கின்போதம்ஸில் நான் தமிழ் பேச பேச விற்பனையாளர் ஆங்கிலம் பேசிய அனுபவம் எனக்கு நேர்ந்தது.
மொழி உணர்வுக்கும் வெறிக்கும் பலருக்கும் இங்கே வித்தியாசம் தெரிவதில்லை!
சமீபத்தில் ஐரிஷ் மொழி ஐரோப்பிய அலுவலக மொழியாக ஏற்றுக்கொள்ளப்பட்டதை யாராவது கவனித்தீர்களா? அவர்கள் மக்கள் தொகையை கணக்கில் கொண்டால் இது மிகவும் ஆச்சரியத்துக்கும் பாராட்டுக்கும் உள்ள விஷயம். தமிழ்/தெலுங்கு/கன்னடம் ???
குறிப்பு: என் #21 பின்னூட்டம் ரோசாவசந்திற்கு அளித்த விடை (அவரது #14 & #15 ஆகியவற்றுக்கு).
இராம.கி கூறியதில் எனக்கு வேறுபாடில்லை. ஒரு இயக்கமாகப் புறக்கணித்தால், வர்த்தகப் பாதிப்பால் அவர்கள் வழிக்கு வரும் நிலை எனக்கும் ஏற்புடையதே.
செல்வராஜுடன் சிறிது மாறுபடுகிறேன். என்னதான் ஒரே மொழிக்காரராக இருந்தாலும், ஒரு முன்பின் தெரியாதவரை வற்புறுத்தும் அதிகாரமும் தகுதியும் எனக்குக் கிடையாதென்றே நம்புகிறேன். அதனாலேயே, புத்தகக்கடைப் பணியாளரை் நான் எதுவும் கூறவில்லை, அவரது சொந்தத் தேர்வை மதித்து. என்னாலானது, என் தேர்வை மட்டும் விட்டுக் கொடுக்காது கடைபிடித்தேன்.
விடைகளுக்கும் விளக்கங்களுக்கும் நன்றி.
தமிழ்பாம்பு குறிப்பிட்ட அந்த உணவகத்துக்கு அவ்வப்போது செல்லும் வழக்கம் எனக்கு உண்டு. ( வீட்டுக்கு அருகாமையில் இருக்கிறது ). பரிமாறுபவர் ஆங்கிலத்தில் தான் விசாரிப்பார். பொதுவாக நட்சத்திர விடுதிகளில் இப்படித்தான் நடைமுறை என்பதாலும், ஆங்கிலத்தில் விசாரிக்கப்படுவதையே விரும்புகிற விருந்தினர்கள் அதிகம் இருக்கிற ஊர் என்பதாலும், நான் அதை வித்தியாசமாக உணர்ந்ததில்லை. ஆனால், நிர்வாகம், தமிழ் பேசவே தடை உத்தரவு போட்டிருக்கிறது என்பது எனக்கு புதிய சேதி. அடுத்த முறை இதை விசாரித்து கலாட்டா செய்யவாவது போவேன்.
செல்வராஜ் – நீங்கள் சொல்வதுதான் – நம்மைப்போன்ற சிலராவது இதை அடிக்கடி செய்துகொண்டிருக்க வேண்டும்.
தன் மொழியைப் பேசுவதை இழிவாகக் கருதுபவர்களை நான் இந்தியாவுக்கு வெளியே எங்கும் கண்டேனில்லை. இன்னும் காலனியாத்திக்க அடிமைத்தனத்திலிருந்து விடுபடவில்லை நாம். சொல்லப்போனால் இந்த இழிவையே பெருமையாக மாரில் தாங்கிசுமக்கிறோம்.
மிகச் சமீபத்தில் நடந்த ஒரு சம்பவம். டொராண்டோவில் ஒரு முகந்தெரியாதவர் என்னிடம் நேரே வந்து நீங்கதான் வெங்கட்டா என்று கேட்டார். நான் தயக்கத்துடன் ஆமாம் என்று சொன்னேன். உங்கள டிவிஐ-ல அடிக்கடி பாத்துருக்கேன் என்றார். சரி, சந்தோஷம் என்று சொன்னேன். அடுத்ததாக ஆமாம் இவ்வளவு படிச்சவரா இருந்தாலும் நீங்க எப்படி சரளமா இங்கிலிஷ் கலக்காம தமிழ்ல பேசுறீங்க என்றார். என்ன சார், நான் தமிழ்க்காரந்தான தமிழ்ல பேசுறதுல என்ன ஆச்சரியம் என்று சொல்லிவிட்டு நகர்ந்துகொண்டேன்.
நம்முடைய அளவுகோல்கள் எப்படிக் கேவலமாக மாறியிருக்கின்றன.
//தன் மொழியைப் பேசுவதை இழிவாகக் கருதுபவர்களை நான் இந்தியாவுக்கு வெளியே எங்கும் கண்டேனில்லை//
தமிழ்நாட்டுக்கு வெளியே என்று சொல்லுங்கள் வெங்கட்.
மலையாள நண்பர்கள் அவர்கள் மொழியில் பேச வெட்கப் படுவதில்லை.
எனக்கு ஒரே வருத்தம் தான்.
இந்த தமிழ் தலைகள் எல்லாம் (அய்யா ராமதாசு,செம்மொழி கொண்டான் கலைஞர்…)
பல பெரிய உணவகங்களுக்குச் செல்பவர்கள் தானே. தாரை தமிழ் பேசாதவன் தலையில் கொட்டினால் என்ன?
நீ என்னத்த கிழிக்குறே என்பவர்களுக்கு…
(யாரும் கேட்காவிட்டாலும் எனது மனச் சாட்சி கேட்கிறது)
தமிழ் நாட்டில் எங்கு சென்றாலும் தமிழில் தான் பேசுகிறேன்.
வெளிநாட்டில், தமிழன் என்று பார்த்தவுடன் நான் யாரை அறிய முடிகிறதோ அவர்களிடம் தமிழில் தான் பேசத் தொடங்குவேன்.
எனது பதிவில் சமச்கிருத எழுத்துக்களை பயன் படுத்துவது இல்லை.
பல நடைமுறைச் சிக்கல்கள் இதில் உண்டு என்றாலும் எதோ ஏழைக்கேத்த எள்ளுருண்டை
என்னால் முடிந்தது 🙂
அன்புடன்,
கணேசன்.
நல்ல பதிவு! பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளில் இதுதான் நிலை. எல்லா இடங்களிலும் அவர்களின் தாய்மொழியில் தயக்கமின்றிப் புழங்குகிறார்கள். ஆங்கிலம் தெரியாததால் இவர்களுக்கு வளர்ச்சி இல்லாமல் போய்விடவில்லையே!
//நான் தமிழிலேயே பேச முயன்றும் அவர் என்னவோ என்னிடம் ஆங்கிலத்திலேயே பேச முயன்று கொண்டிருந்தார்.// அதுவும் வெளிநாட்டில் இருந்து வந்தவர் என்று தெரிந்தால்போதும்; நம்மக்கள் அவர்களுடன் ஆங்கிலத்தில்தான் பேசவேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டுவிடுகிறார்கள். பலமுறை இந்த அனுபவம் எனக்கு நிகழ்ந்துள்ளது.
வெகு சாதாரண சொற்களைக்கூட (எண்கள், நிறங்கள், கிழமைகள்,….) பெரும்பாலானோர் ஆங்கிலத்தில் சொல்லும் நிலையாகிவிட்டது 🙁
குழலி, “மொழி உணர்வுக்கும் வெறிக்கும் பலருக்கும் இங்கே வித்தியாசம் தெரிவதில்லை!” என்று நீங்கள் கூறியிருப்பது சரிதான்.
வாய்ஸ் ஆன் விங்ஸ், நீங்கள் கூறுவதை ஓரளவு புரிந்து கொண்டாலும், மொழியுணர்வை வெறியென்று எண்ணி வீண் குற்ற உணர்ச்சி கொள்கிறீர்களோவென்று தோன்றுகிறது. கொரியாவில் நீங்கள் ஆங்கிலத்தில் பேசியது திமிரினால் என்று நினைக்கத் தோன்றவில்லை. அந்தச் சூழ்நிலையில் அது தான் உங்களால் முடிந்தது. நானும் வாஸ்டெராஸ் கடையில் வாங்கிய பொருளுக்கு எவ்வளவு என்று கேட்கச் சைகையில் கல்லாக்கணியைக் காட்டினார் சுவீடிய மொழி மட்டுமே தெரிந்த அம்மணி. அவரிடம் ஆங்கிலம் தவிர நான் வேறு எப்படிப் பேசியிருக்க முடியும்?
கார்த்திக், நீங்கள் சுட்டிய செய்தி பார்த்தேன். நான்கு மில்லியன் ஐரிஷ்காரர்கள் தான் இருக்கிறார்கள், இருந்தும் அவர்களின் மொழி அங்கீகரிக்கப் பட்டிருப்பது நன்று.
பிரகாஷ், உண்மை தான். இயல்பாய் அவரவர் அப்படிப் பேசினால் கூட ‘தலைவிதியே’ என்று நொந்து கொண்டு சும்மா இருந்து விடலாம். ஆனால் நிர்வாகம் அப்படி உத்தரவு போட்டிருப்பது என்பது பாம்பு சொன்னது போல் கொஞ்சம் கொதிப்பை உண்டுபண்ணக் கூடியது தான். (எங்கள் பள்ளியில் தமிழில் பேசினால் நாலணா அபராதம் விதித்த அன்றே இதெல்லாம் தோன்றியிருக்க வேண்டும்!).
வெங்கட், கணேசன், இராதாகிருஷ்ணன், நன்றி. நீங்கள் ஆதங்கப் பட்டிருப்பது போல் அளவுகோள்கள் மாறி இருப்பது கேவலந்தான். இராதாகிருஷ்ணன் சொல்லி இருப்பது போல் சாதாரணச் சொற்கள், வாக்கியங்கள் கூட ஆங்கிலத்தில் அமைந்து விடுகிறது.
வெளிப்படையாய் ஒத்துக் கொள்ள வேண்டும் தான். நானும் கூட வீட்டில் பேச்சில் கலக்கும் ஆங்கிலத்தைக் குறைக்க வேண்டும். இது போன்ற பதிவுகள், விவாதங்கள், ஒத்த கருத்துக்கள் அந்த உறுதியை அதிகரித்துக் கொண்டு வருகின்றன. கணேசன் சொன்னது போல் ஏழைக்கேத்த எள்ளுருண்டையாய் எழுத்தில் ‘தமிழ்வீரனாய்’ 🙂 இருக்க முடிவது போல் பேச்சில் சுலபமாய் இருக்க முடியவில்லை. குமுக அழுத்தங்களும் காரணம்? நமக்கே இப்படி எனில் அடுத்த தலைமுறைக்கு எப்படி இருக்கும்?
செல்வராஜ்
நல்ல பதிவு. நான் ஹங்கேரி சென்ற போது அனைவரும் காவலர் உட்பட ஹங்கேரி மொழியில்தான் பேசினர். இந்தியாவின் பிரச்சினை பல மொழிகள் பேசுவதால் என்று நினைக்கிறேன். குஜராத்தியோ, மற்றவர்களோ ஆங்கிலம் அதிகம் பேசுவதில்லை. தெலுங்குக்காரர்கள் கூட தெலுங்கில்தான் பேசுகின்றனர். இது தமிழ்நாட்டின் பழக்கம். சரளமாக ஆங்கிலம் பேசுவது ஒரு தகுதியாக பட்டது.
நன்றி பத்மா. பல மொழிகள் இருப்பதால் இந்தியச் சூழல் சற்றுச் சிக்கலானது தான். இருந்தாலும் நீங்கள் சொன்னபடி ஆங்கிலம் ஒரு தகுதியாகப் போய்விட்டதால், அது அவ்வளவாய்த் தெரியாதவர்கள் ஒரு குறையுணர்ச்சி கொள்ளும்படியாக ஆகிவிட்டது குமுகாயத்தில். அதைத் தான் களைந்து கொள்ளும்படி நிகழ்வுகள் அமையவேண்டும்.
/அவர்களிடமிருந்து தமிழருக்கு விடுதலை வேண்டும், அவ்வளவுதான். எந்தத் தாத்தா வரவேண்டும், இந்தியன் தாத்தாவா, கம்புவைத்த, கண்ணாடி போட்ட, வழுக்கைத் தாத்தாவா? /
அன்பின் இராம.கி, இதுக்கெல்லாம் தாத்தா வந்து சரிவராது. சரியான தமிழ்த்”தாதா” நாயகன் வேண்டும் 😉
//வட இந்திய ஹோட்டலை விடுங்கள். தென்னிந்தியச் செட்டிநாடு உணவகத்திலும் ஆங்கிலம் பேசி வரவேற்கும் பணியாளரை எதிர்கொள்ளும் வாய்ப்பேற்படலாம். நாம் தமிழில் பேசிய பின்பும் அவர் ஆங்கிலத்திலேயே தொடரலாம், அது அவரது சொந்தத் தேர்வு. நாம் செய்யக்கூடியவை: வேறு தமிழ் பேசும் பணியாளரை அனுப்பும்படி கேட்கலாம், அவ்வாறு எவரும் இல்லையெனில் (தமிழே பிரதானமென்றால்) வெளியேறி நடையைக் கட்டலாம். இவையன்றி அவரை அவரது விருப்பத்துக்கு மாறாக தமிழில் பேசுமாறு வற்புறுத்துவது (சங்கம் வளர்த்த மதுரையிலும்) மொழிவெறியைக் குறிக்கும் செயலே.//
Voice on wings: இது வட இந்திய உணவகமா/ஏதோ ஒரு கடையா, தென்னிந்தியதா என்பதல்ல பிரச்னை. அமைந்துள்ள இடத்தின் மொழிதான் அமைப்பளவில் முதலில் இருக்கவேண்டுமென்று எதிர்பார்ப்பதைக்கூடத் தவறென்று எப்படிக் கூறுகிறீர்களென்று தெரியவில்லை. கால் சென்டர்களில் வேலைபார்க்கும் இளைஞர்களின் பெயரை மார்க் என்றும் பாப் என்றும் பீட் என்றும் சுருக்குவதுகுறித்து நீங்கள் எழுதிய பதிவின் அதே மனோநிலையில் தமிழ் குறித்து இங்கு பேசுபவர்களின் மனோநிலையைப் புரிந்துகொள்ள முயலவும். தொழில்மொழி, கலாச்சார மொழி என்பவற்றில் உங்கள் வாதங்கள் பெரும்பாலும் தொழில்மொழியை அடிப்படையாகக் கொண்டும் அவற்றைக் குறித்துமே இருக்கின்றன. இங்கே ஆங்கிலமோ ஹிந்தியோ தமிழை அழிக்கிறதா என்பதைவிட, தொழில்மொழி கலாச்சார மொழியை அழிப்பது, கலாச்சார மொழி/தொழில் மொழி என்ற போர்வையில் நிகழ்த்தப்படும் அராஜகம் போன்றவை குறித்துத்தான் இங்கு பெரும்பாலானோர் குறிப்பிடுவதென்று நினைக்கிறேன். பின்பு உங்கள் கொரிய அனுபவம் குறித்து: கொரியமொழி உங்களுக்குத் தெரிந்திருந்து கொரியமொழியிலேயே கேட்டிருந்தால் கொரியமொழியிலேயே பதில் வந்திருக்குமென்றுதான் நினைக்கிறேன். தமிழில் கேட்டாலும் பட்லர் இங்கிலீஷிலாவது பதில்சொன்னால்தான் பெருமை என்று குட்டிக்கரணமடிக்கும் வேலைகளை நாம் தவிர வேறு யார்தான் செய்வார்கள்? டெல்லியில் அமைந்துள்ள உணவகத்துக்குப் போய் தமிழில் பேசு என்று ராமதாஸ் கூட சண்டைபிடிக்கப் போவதில்லை. நீங்கள் சொல்வதைப்பார்த்தால், ஆங்கிலம், ஹிந்தி தெரியாத, தமிழ்மட்டும் தெரிந்து சுயதொழில் செய்து முன்னே வந்த ஒரு சிறுநகரக் கோடீஸ்வரன் கூட தனியே போய் தமிழ்நாட்டு ஆங்கிலச்செட்டிநாட்டு ஓட்டலுக்குப்போய் ஒருவேளைச் சாப்பாடு சாப்பிட முடியாது போலிருக்கிறதே!! அடிப்படையே தவறாக இல்லை? வேறு மாநிலங்களிலென்றால் குறைசொல்லமுடியாது – உள்ளூரிலேயே என்றால் எப்படி? இதே கடுமையுடன் சொல்லவேண்டுமானால், மொழி தெரியாததால் வேலை கிடைக்கவில்லை என்பதற்குக் கூறும் லாஜிக்கை, மூளை இல்லாததால் கலெக்டர் ஆகமுடியவில்லை என்ற நொண்டிச்சாக்குக்கும் பொருத்தலாம். சாக்கு சொல்லவேண்டுமானால் ஆயிரம் சாக்கு சொல்லலாம். அவசியத்துக்கேற்ப/ஆர்வத்துக்கேற்ப மொழியோ வேறொரு திறனோ கற்றுக்கொள்வது வேறு, கண்ணில் படும் எந்தவொரு விஷயம் முன்னாலும் ஆராய்ந்துபாராமல் நிபந்தனையற்ற சரணாகதி அடைவது வேறு.
மாண்ட்ரீஸர், நீங்கள் குறிப்பிடும் சாக்கு கூறும் போக்கை நானும் கண்டிக்கிறேன். ஏதோவொரு மொழி தெரியாத்தால் வேலைச்சந்தையில் நாம் பின்னடைவு பெற்றோம் என்ற வாதத்தை நானும் மறுக்கிறேன். இதை நீங்கள் ஏன் என்னிடம் குறிப்பிடுகிறீர் என்று விளங்கவில்லை.
எவ்வளவுதான் ஆங்கிலமும் ஹிந்தியும் தமிழகத்தில் புழங்கினாலும், ஒரு சுத்தத் தமிழனுக்கு இந்த மொழிகள் தெரியாத்தால், தமிழகத்திலுள்ள ஒரு உணவகத்திலேயே ஒரு வேளை உணவு கிடைக்காமல் போகலாம் என்ற வாதத்தை என்னால் ஏற்க முடியவில்லை. மொழியை வளர்க்க வேண்டுமென்பதில் எனக்கு எந்த ஐயப்பாடும் கிடையாது. மொழியெனும் மூச்சை மற்றவர் மீது (அவர் தமிழரானாலும்) விடுவதில்தான் எனக்கு உடன்பாடில்லை. “Practise, by all means, but dont preach” என்று இதையே வேறொரு சந்தர்ப்பத்தில் கூறியிருக்கிறேன்.
மற்றவரின் நடத்தை குறித்து எதிர்பார்ப்பு கொள்வது என்று ஆரம்பித்தால் “புடவையணிந்து, பூவிட்டு, பொட்டிட்டு லட்சணமாக இருப்பவளே பெண்” என்பதிலிருந்து ஆரம்பிக்கலாம். ஒரு புறம் இத்தகைய போக்கைக் கண்டித்துக் கொண்டு, மறுபுறம் அதற்கு நிகரான ஒரு கொள்கையை ஆதரிப்பதைத்தான் நான் விமர்சிக்கிறேன்.
விடையளித்ததற்கு நன்றி.
யோவ் வாய்ஸ், என் ஊரில் என் மொழியில் பேச வேண்டும் என்று நினைப்பது கூட அராஜகம் என்றால், இன்று உலகில் ஆங்கிலத்தைத் தவிர வேறு மொழிகளே உலகில் இருக்காது. லக்னோவிலோ, பாட்னாவிலோ உள்ள கடைக்காரர் ஹிந்தியில் உரையாடினால் அவர்கள் நம்மீது ஹிந்தியை திணிக்கிறார்கள் என்பீர்களா?
சுவீடன் பற்றிய அருமையான கட்டுரை. உங்களைப் போன்ற சுதந்திரமாக சிந்திப்பவர்களை பார்ப்பது அரிது.
நான் நெதர்லாந்தில் வசிக்கிறேன். இங்குள்ள பெரும்பாலான டச்சுக்காரருக்கு சரளமாக ஆங்கிலம் பேசத் தெரியும். ஆனால் இதுவரை என்த்தவொரு டச்சுக்காரரும் தமக்குள் ஆங்கிலத்தில் உரையாடியதை பார்த்ததில்லை. வேற்றுமொழி மக்களுடன் தான் ஆங்கிலம் பேசுவார்கள். நமக்கும் டச்சு மொழி தெரியும் என்றால், உடனேயே தொடர்ந்து டச்சில் பேசுவோமே என்று சொல்வார்கள். ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற பிற ஐரோப்பிய நாடுகளின் மக்களும் அவ்வாறு தான் நடந்து கொள்கிறார்கள்.
எல்லா சொற்களையும் தமிழ்மொழிப் படுத்த வேண்டும் என்ற அவசியமில்லை. ஆங்கிலம் உட்பட நவீன மொழிகள் எல்லாம் பிற மொழிச் சொற்களை கொண்டுள்ளன. அதில் குறை ஒன்றும் இல்லை.
மொழி பற்றிய எனது கட்டுரை ஒன்றையும் அறிமுகம் செய்து வைக்க விரும்புகிறேன்.
http://kalaiy.blogspot.com/2008/11/blog-post_4328.html
ஒரு சிறிய பதிவு அதற்குள் முக்கிய முதன்மையான தகவல்கள். பகிர்ந்த தரமான விமர்சனங்கள்.
நீங்கள் சொன்னது போல் நாம் முயற்சி செய்தால் என்ன எண்ணம் இருந்தாலே போதுமானது.
நான் அடிக்கடி பார்த்து வியந்து கொண்டுருப்பது. ஆங்கில வழி கல்வி வேண்டும் என்று விரும்புவர்கள் அந்த ஆங்கிலத்தை பள்ளியும் சரியாக சொல்லிக்கொடுப்பது இல்லை. வீட்டிலும் அதை முன் எடுத்து செல்ல அக்கறை படுபவர்கள் எவரும் இல்லை. திருநங்கை போல் இரண்டு மொழியும் அறைகுறையாய் தங்கிலீஷ் ஆகி சகிக்க முடியவில்லை.
உணரும் நாள் எந்நாள்?
எவரோ?