தமிழ்மணம்/வலைப்பதிவு குறித்த தொடர் சிந்தனைகள் ( 1 ?)
Jun 22nd, 2005 by இரா. செல்வராசு
மாயவரத்தான் ஒரு பதிவு வழியாக வலைப்பதிவுகளும் அது உண்டாக்கியிருக்கும் விருப்பு வெறுப்பு குழுவியம் பற்றியெல்லாம் ஒரு தொடர் பதிவுக்கு வித்திட்டிருக்கிறார். அதனைத் தொடங்கி வைக்க முதலில் என்னை அழைத்திருக்கிறார். அவர் என் பதிவில் இட்ட ஒரு பின்னூட்டம் தொடர்பாக எழுந்த சில மடல் தொடர்புகளும் இதற்குக் காரணம் என்று எண்ணுகிறேன். பொதுவாய் இது போன்ற ஒரு பதிவு செய்ய நான் முனைந்திருக்க மாட்டேன் என்று தோன்றினாலும், சில நாட்களாய் இருக்கும் எண்ணங்களை வெளிப்படுத்த எண்ணி இந்த வாய்ப்பை ஏற்றுக் கொள்கிறேன்.
முதலில் தமிழ்மணம் குறித்த ஒரு குறிப்பு. தமிழ்மணத்தின் இணை நிர்வாகிகளில் ஒருவராய் இருந்தாலும் இது வலைப்பதிவுலகில் ஒரு சேவையை மட்டுமே அளிக்கிறது என்பதைத் தெளிவு செய்ய வேண்டும் என்று நான் நினைக்கிறேன். ஆனால் சமீபத்தில் பலர் தமிழ்மணம் வலைப்பதிவு இரண்டும் ஒன்றே என்று தவறாக எண்ண ஆரம்பித்திருக்கின்றனர். “காப்பியர்”-ஐ “ஜெராக்ஸ்” என்பது போல என்று சப்பைக்கட்டும் எழ ஆரம்பித்திருக்கிறது. இது முழுதும் பொருந்தாத கருத்து.
இதனால் சில சிக்கல்கள் இருக்கின்றன. ப்ளாக்கர், யார்ல்.நெட் போன்ற சேவை நிறுவனங்களில் பிரச்சினை இருந்தாலும் தமிழ்மணத்தார் தான் தீர்த்து வைக்க வேண்டும் என்று நியாயமில்லாத எதிர்பார்ப்பு எழுகிறது. காசி என்னும் தனி மனிதரால் தன் சொந்த நேரத்தில் உருவாக்கப் பட்ட ஒரு சேவை இது. நூற்றுக்கணக்கில் இருக்கிற வலைப்பதிவுகளைப் படிப்பதை எளிமையாக்கவென்று வடிவமைக்கப்பட்டுப் பிறகு பல நுட்பங்களால் மேலும் பல சேவைகள் வழங்கப்பட்டது. ஒரு குமுகாய உணர்வும் வரவேண்டும் என்று வாசகர் மன்றமும் சேர்க்கப் பட்டது. இப்படிப் பற்பல நுட்பச்சேவைகளை வழங்கும் ஒரு அமைப்பே தவிர, தமிழ்மணம் ஒரு இணைய இதழோ, வலைப்பதிவுகளின் தொகுப்போ அல்ல. பதிவுகள் எல்லாம் இங்கு சேமிக்கப் படுவதில்லை. யாராவது தம் பதிவுகளைத் தொலைத்து விட்டு தமிழ்மணம் மீட்டுத் தர வேண்டும் என்று வழக்குப் போட்டாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை!
அதோடு வலைப்பதிவுகளில் எழுதப் படுபவை அந்தந்த வலைப்பதிவர்களுக்கே சொந்தம். அவரவரே பொறுப்பு. தமிழ்மணத்திற்கும் வலைப்பதிவுகளின் உள்ளடக்கங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. பல காரணங்களுக்காகவும் இது முக்கியமாய் நினைவில் கொள்ள வேண்டும். உதாரணத்திற்கு, இரண்டு நாட்களுக்கு முன்னர் ஒரு புதிய பதிவர் ஒரு பலான பதிவு ஒன்றை எழுதி இருந்தார். உடனடியாக அதனைச் சுட்டிக் காட்டிய ஒரு நான்கைந்து நண்பர்களுக்கு நன்றி. அந்தப் பதிவும், செய்தியோடையும் தமிழ்மணத்தில் இருந்து நீக்கப் பட்டது. இது போன்ற பதிவுகளால் தாக்கங்கள் ஏற்பட்டால் அதற்குத் தமிழ்மணம் ஒரு போதும் பொறுப்பாக முடியாது.
ஆங்கில வலைப்பதிவுகளுக்கென்று தமிழ்மணம் போன்ற திரட்டிச் சேவைகள் பல இருக்கின்றன. ஆனால் பல்லாயிரமாய் இருக்கும் அவற்றிற்கு அவை தேவையாய் இருக்கலாம். ஐநூற்றுச் சொச்சமே இருக்கும் தமிழ்ப்பதிவுகளுக்குப் பல சேவைகள் தேவையில்லை தான். இருந்தும் இது போன்றே வேறு சேவைகள் தோன்றுவதில் தவறில்லை. சிறிது காலத்துக்கு முன் நவன் பகவதி ஒரு சோதனைச் சேவையைச் சில நாட்களுக்குச் செய்து காண்பித்தார். சுரதாவும் முன்பு இது போன்று சில நுட்பங்களைப் பாவித்திருக்கிறார்.
வலைப்பதிவுகளுக்காகத் தமிழ்மணம் என்பதில்லாமல் தமிழ்மணத்திற்காக வலைப்பதிவு என்கிற நிலை அவ்வளவு ஆரோக்கியமானதல்ல என்று எனக்குத் தோன்றுகிறது.
* * * *
சொந்தப் பதிவு குறித்த சிந்தனைகளுக்கு வருவோம். என் பதிவு குறித்தும், பின்னூட்டங்கள் குறித்தும், ஒரு அலசலும், பிடித்த பிடிக்காதவற்றைச் சொல்லும்படியும் கேட்டிருந்தார் மாயவரத்தான். எனக்குப் பிடிக்காத பதிவுகள், பதிவர்கள் என்று சிலர் பலர் இருந்தாலும் அதை நான் இங்கு பட்டியலிட்டுக் கொண்டிருக்கத் தயாராய் இல்லை. அதனால் பயன் ஒன்றும் இல்லை. என்னைப் பொறுத்தவரை பிடித்ததைப் படிக்கிறேன். பிடிக்காதவற்றை ஒதுக்குகிறேன்.
பிடித்த பதிவுகள் என்பதைப் பற்றியும் தனியே சொல்ல வேண்டியதில்லை. என் பதிவுகளின் இடப்புறப் பட்டியலைப் பார்த்தாலே தெரியும். குறிப்பிட்டுச் சொல்லும்படியாக எனக்குப் பிடித்தவற்றை இங்கு சேர்த்து வைக்கிறேன். அவ்வப் போது இதனை மாற்றினாலும் இன்னும் சில இதில் இல்லாதனவும் எனக்குப் பிடித்தவை இருக்கின்றன என்று தான் சொல்ல வேண்டும். கொஞ்ச காலம் பார்த்துத் தொடர்ந்து பிடித்திருந்தால் இங்கு சேர்க்கிறேன்.
பொதுவாய்ச் சில கருத்துக்கள் வேண்டுமானால் கூறலாம். தமிழில் எழுத்துப் பயிற்சியும் புதிய நுட்பங்கள் கற்றுக் கொள்வதும் எனக்கு முக்கிய குறிக்கோள்களாய் இருக்கின்றன. அது தவிர வேறு சில உப காரணங்களும் உண்டு. தூர தேசத்தில் இருக்கும் நண்பர்கள் உற்றாருடன் வாழ்க்கைச் செய்திகளைப் பரிமாறிக் கொள்வதும், இணையம் வழியாகப் புதிய நண்பர்களைப் பெறுவதும், புதிய செய்திகள் தெரிந்து கொள்வதும், தவறுகளைத் திருத்திக் கொள்வதும், இப்படிப் பல. வலைப்பதிவின் ஆரம்ப காலத்தில் இதனைக் குறிப்பிட்டிருந்தேன்.
தமிழார்வம் உள்ளவர்களை, எளிதில் உணர்ச்சிவயப்பட்டுத் தாம் தூமென்று குதிக்காமல் தமது எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளத் தெரிந்தவர்களை, வேடிக்கைக் குறிப்புக்களால் புன்முறுவல் கொள்ள வைப்பவர்களை, அழகான நடையில், எளிமையாக எழுதக் கூடியவர்களை, ஆழமாய் எழுதி உள்ளத்தில் ஒரு தாக்கத்தை உண்டுபண்ணுபவர்களை, சுய வளர்ச்சிக்கு உதவுபவர்களை, சமூகச் சீர்திருத்தக் கருத்துக்களை முன் வைத்து இருண்ட கண்களைத் திறக்க வைப்பவர்களை, காலகாலமாய்க் கொண்டிருக்கும் விழுமியங்களை வேறு கோணத்தில் இருந்து பார்க்க வைத்து அவற்றின் குறைகளால் வெட்கப் பட வைப்பவர்களை, துறைசார் பதிவுகளும் நுட்பங்களும் எழுதிச் சொல்லித் தருபவர்களை, சோர்வான நேரத்தில் அயர்ச்சி நீக்கும் வண்ணம் இலகுவாய் எழுதுபவர்களை என்று பலரை எனக்குப் பிடிக்கும்.
எனக்குப் படிக்க ஆர்வத்தை அளிக்காதவை என்று பார்த்தால், சும்மா கூட்டம் சேர்க்கும் நோக்கத்துடன் பரபரப்புக் காட்டுபவர்கள், எதுவும் மெனக்கெடாமல் சும்மா ரெண்டு வரியை எழுதிப் போட்டுவிட்டுப் பின்னூட்டம் இடுங்கள், நட்சத்திரத்திலே குத்துங்கள் என்று கேட்டுக் கொண்டிருப்பவர்கள், வெறும் சினிமா அரசியல் என்று ஊறியதையே வழித்துப் போட்டுக் கொண்டிருப்பவர்கள், தமிழார்வம் உள்ளவர்களைக் கிண்டலடிப்பவர்கள், தமக்குப் பிடிக்காதவர்கள் என்பதாலேயே காரணம் இன்றிப் பிறரை எள்ளிக் கொண்டிருப்பவர்கள் என்று இப்படிப் பல இருக்கின்றன. ஆனால் இப்படி எழுதுவதற்கு இவர்களுக்கு முழு உரிமையும் இருக்கிறது என்பதிலும் நான் உறுதியாக இருக்கிறேன். எனக்கு ஆர்வம் இல்லை, அவ்வளவு தான். நான் ஒதுங்கிப் போகிறேன்.
நான் பின்னூட்டம் இடுவதும் அப்படித் தான். பிடித்தவற்றிற்கு, நேரமிருக்கும் போது நிதானமாய்ப் பின்னூட்டம் இடுகிறேன். சில சமயம் இடுவதில்லை. சிலர் ஒரு குழுவாய் அமைந்து கொள்கிறார்கள் என்கிற ஒரு குற்றச் சாட்டும் எழுவதுண்டு. அது உண்மை தான். ஆனால் அதில் தவறேதுமில்லை என்று நானும் நினைக்கிறேன். (தனது பதிவொன்றில் நவன் பகவதியும் இதைச் சொல்லி இருந்தார்). ஒரு குழுவினர் பிறருக்குப் பின்னூட்டம் அளிப்பதில்லை என்பதால் அவரை ஒதுக்கி வைக்கின்றனர் என்று அர்த்தமல்ல. எல்லோரும் எல்லாப் பதிவுகளுக்கும் பின்னூட்டம் அளித்துக் கொண்டிருக்க முடியாது. அவரவர் விருப்பு வெறுப்புப் பொறுத்து ஒரு குழுவாகிக் கொள்வதோ, அங்கு மட்டும் பின்னூட்டம் இடுவதோ அவரவர் விருப்பத்தையும் நேரத்தையும் பொருத்தது. அதில் குற்றமேதுமில்லை.
பின்னூட்டங்கள் ஒரு உற்சாகத்தைத் தருவது உண்மை தான். தொடர்ந்து எழுதும் ஊக்கத்தையும், தவறுகளைக் களைந்து கொள்ளவும், புதியவற்றைக் கற்றுக் கொள்ளவும் அவை உதவும் போது பயனுள்ளதாய் இருக்கிறது. சில சமயம் சூடான விவாதங்களுக்கு வழி வகுத்தாலும் அதில் இருந்து பொதுவான நலன் விளைகிறதானால் அதுவும் சரியே. அதை விட்டு விட்டு அவரவர் பிடித்த முயல்களுக்கு மூன்றும் மூன்றரையுமாகக் கால்கள் என்று இருக்கும் போது வீண் மனக் காயங்கள் தான் ஏற்படுகின்றன. அப்புறம் வழக்காடுமன்றங்கள், மிரட்டல்கள் இவையெல்லாம் தான் உள்ளே வருகின்றன. தேவையா இவையெல்லாம்? உணர்ச்சிகளின் கட்டிற்குள் ஆடிக் கொண்டிராமல் பொதுவாகவே தமிழர்கள் உணர்ச்சிகளைத் தங்கள் கட்டுள் கொண்டு வர முனைய வேண்டும்.
* * * *
இந்தச் சிந்தனைகளை ஒரு தொடர் பதிவாக்கக் கேட்டிருந்தார் மாயவரத்தான். அதன் படி நான் யாரையாவது கை காட்ட வேண்டும். ஆனால் அப்படி யார் மீதும் இதனைத் திணிக்க எனக்கு விருப்பமில்லை. அதனால், யாருக்காவது விருப்பமிருந்தால் பின்னூட்டத்தில் குறிப்பிட்டுவிட்டு இந்தத் தொடர் சிந்தனைகளை இரண்டாவதாகத் தொடர அழைக்கின்றேன். அப்படி யாரும் முன்வராத பட்சத்தில் (இரண்டு நாட்களில்), மாயவரத்தானையே இதனைத் தொடரும்படி அழைக்கிறேன்.
தமிழ் மணம் குறித்து உங்கள் கருத்துக்களைப் பற்றிய என் கருத்துக்கள்.
துவக்க காலத்தில் இருந்து வலைப்பதிவு செய்பவர்கள், தமிழ்மணத்துக்கும், வலைப்பதிவு சேவைக்குமான வேறுபாட்டினை புரிந்து வைத்திருக்கிறார்கள் தான் என்றாலும், புதிதாக வருபவர்களுக்கு இதைத் தெளிவாகச் சொல்ல வேண்டிய அவசியம் இருக்கிறது. தமிழ் மணம் தரவுத் தளத்தில் தங்கள் வலைப்பதிவை உள்ளிடுமுன்னர், நீங்கள் குறிப்பிடுகின்றவற்றை, தெளிவாக எடுத்துச் சொல்லிவிடலாம்.
தமிழ்மணம் மன்ற மையத்தில் இது வரை கேட்ட முக்கியமான கேள்விகளையும், அதற்கான உருப்படியான பதில்களையும் தொகுத்து முகப்புப் பக்கத்தில் வைத்து, இனி சந்தேகம் கேட்க வருகிறவர்கள், அந்த பக்கதுக்குச் சென்று, அங்கே பதில் இல்லை என்றால் மட்டுமே புதிதாகக் சந்தேகம் எழுப்பலாம் என்று அறிவிப்புச் செய்யலாம்.
தமிழ்மணம், வலைப்பதிவு சேவை செய்யவில்லை. வலைப்பதிவுகளின் தலைப்பை மட்டும் தேதிவாரியாக அடுக்கித் தருகிறது என்பதை, தமிழ் மணத்தின் முகப்புப் பக்கத்தில் கொட்டை எழுத்துக்களில் தெளிவாகக் குறிப்பிட வேண்டும்.
தமிழ்மணம் நிர்வாகிகள் குறைந்த அளவில் தான் இருக்கிறார்கள் என்பதால், குறைகளைச் சொன்ன உடனே, அடித்துப் பிடித்துச் செய்ய வேண்டும் என்பதோ, அல்லது சந்தேகம் கேட்டால், உடனே வந்து தெளிவாக்க வேண்டும் என்பதையோ, சிரமப்பட்டு செய்யவேண்டியதில்லை. நிர்வாகிகளுக்கு என்றைக்கு முடியும் என்பதை, முன்கூட்டியே அறிவித்துவிட்டால், அதாவது வாரத்தில் ஏதாவது ஒரு நாள் அல்லது இரு நாள் மட்டும் இந்த வேலையைச் செய்ய ஒதுக்கி விட்டால், மற்ற நாட்களில் சொந்த வேலைகளைப் பார்க்கும் போது, இடைஞ்சல் இருக்காது.
பதிவு நல்லாயிருக்கு.
பின்னூட்டமிடுறதில கனக்கச் சிக்கல்கள் இருக்கு.
குறிப்பா ‘குரங்கும் தொப்பி வியாபாரியும்’ கதையைச் சொன்ன பிறகு;-)
செல்வா,
பல விஷயங்களைத் தெளிவாக்கியதற்கு நன்றி.
//இதனால் சில சிக்கல்கள் இருக்கின்றன. ப்ளாக்கர், யார்ல்.நெட் போன்ற சேவை நிறுவனங்களில் பிரச்சினை இருந்தாலும் தமிழ்மணத்தார் தான் தீர்த்து வைக்க வேண்டும் என்று நியாயமில்லாத எதிர்பார்ப்பு எழுகிறது.//
மன்றத்தில் கேட்கப்படும் கேள்விகள் அனைத்து வலைப்பதிவர்களையும் நோக்கி எழுப்பப்படுவதாகத்தான் கொள்ளவேண்டும். அது தமிழ்மணம் ‘வாடிக்கையாளர் சேவை மேடை’ என்பதுபோல எடுத்துக்கொள்ளவேண்டியதில்லை. எனவே அங்கு தெரிந்தவர்கள் யாரும் பதில் சொல்லலாம், சொல்லவேண்டும் (சொல்கிறார்களா என்பது வேறு). தெரியாவிட்டால் சும்மா இருந்துவிடலாம். பொறுப்புணர்வு அதிகமானாலும் சிக்கல்:P
அன்புடன்,
-காசி
‘வலைப்பூ’வாக இருந்தபோது இது போன்ற அருமையான கட்டுரைகள் வாரா வாரம் ஒவ்வொருவரின் பார்வையில் வரும். கொஞ்சம் இடைவெளிக்குப் பிறகு, அசை போடவும் யோசிக்கவும் புரிதலை மேம்படுத்தவும் உதவும் பதிவு. நன்றி.
பிரகாஷ், நான் இங்கு புதிதாக ஒன்றையும் சொல்லிவிடவில்லை. காசி ஏற்கனவே பதிவு செய்துகொள்ளும் பக்கத்திலும் பிற இடங்களிலும் (Terms of Use) ஏற்கனவே போட்டுத் தான் வைத்திருக்கிறார். மீண்டும் இதுபோன்று எடுத்துச் சொல்ல வேண்டியிருக்கிறது. அவ்வளவு தான். அதோடு மேலே காசியும் சொன்னது போல், மன்றம் பொதுவாய் ஒரு குமுகாய மனப்பாங்கு வரவேண்டும் என்ற கருத்திலும் ஏற்படுத்தப் பட்டுள்ளது. ஆனால் இதன் பயன்பாடு அந்த நோக்கத்தில் முழு வெற்றி பெறவில்லை.
இது மட்டுமல்ல. இது போன்ற பிற குழுவசதிகளும் முழுமையாகப் பயன்படுத்தப்படாமல் போய்விடுகிறது. இன்னொரு காட்டு – வெங்கட் அமைத்துக் கொடுத்த வலைப்பதிவு விக்கி (நானும் கூட அங்கு ஒன்றும் செய்துவிடவில்லை என்பதை ஒப்புக் கொள்கிறேன்).
வசந்தன், எந்தக் குரங்குக் கதையைச் சொல்கிறீர்கள்? “இரண்டு குரங்குக் கதையையா?” உங்கள் பக்கம் சென்று குரங்கைத் தேடிப் பார்த்தேன். கிடைக்கவில்லை. உங்கள் கருத்துக்கு நன்றி.
காசி, பா.பா. நன்றி. இப்போதெல்லாம் அச்சு மிடையங்களில் வலைப்பதிவுகள் அடியெடுத்து வைக்க ஆரம்பித்திருப்பதாகத் தெரிகிறது. நல்லதாக அமையட்டும்.
Good post 🙂
அருண், நன்றி. வேறு யாரும் இதனைத் தொடர முன்வராததால் இந்த யோசனையை முன்வைத்த மாயவரத்தான் விருப்பப்பட்டால் இதனைத் தொடரலாம்.
manathirku nimmathi alithathu.
உங்கள் பதிவை இப்போதுதான் பார்த்தேன்.
தமிழ்மணம் மூலமாக நான் படித்த வலைப்பதிவுகள் பற்றி எனக்குப் பட்டதை எனது வலைப்பதிவில் எழுதியுள்ளேன்.
அது நீங்கள் கேட்கும் விடயத்திற்கு பொருத்தமானதா தெரியவில்லை!
.:பொறுக்கி
http://porukki.blogsome.com/2005/07/27/13/
எனக்குப் படிக்க ஆர்வத்தை அளிக்காதவை என்று பார்த்தால், சும்மா கூட்டம் சேர்க்கும் நோக்கத்துடன் பரபரப்புக் காட்டுபவர்கள், எதுவும் மெனக்கெடாமல் சும்மா ரெண்டு வரியை எழுதிப் போட்டுவிட்டுப் பின்னூட்டம் இடுங்கள், நட்சத்திரத்திலே குத்துங்கள் என்று கேட்டுக் கொண்டிருப்பவர்கள், வெறும் சினிமா அரசியல் என்று ஊறியதையே வழித்துப் போட்டுக் கொண்டிருப்பவர்கள், தமிழார்வம் உள்ளவர்களைக் கிண்டலடிப்பவர்கள், தமக்குப் பிடிக்காதவர்கள் என்பதாலேயே காரணம் இன்றிப் பிறரை எள்ளிக் கொண்டிருப்பவர்கள் என்று இப்படிப் பல இருக்கின்றன. ஆனால் இப்படி எழுதுவதற்கு இவர்களுக்கு முழு உரிமையும் இருக்கிறது என்பதிலும் நான் உறுதியாக இருக்கிறேன். எனக்கு ஆர்வம் இல்லை, அவ்வளவு தான். நான் ஒதுங்கிப் போகிறேன்.
ஒத்த சிந்தனைகள்………