சுவீடன் மிதிவண்டி அப்பா
Jun 19th, 2005 by இரா. செல்வராசு
வாஸ்டெராஸில் நகர்நடுச் சதுக்கத்தில் இருந்த மிதிவண்டியோட்டிகள் சிலை என்னைக் கவர்ந்தது. இப்படியொரு சிலையமைக்க இங்கு ஒரு கலாச்சாரம், பாரம்பரியம் இருந்திருக்க வேண்டும். சுவீடனின் ஆறாவது பெரிய ஊர் என்றாலும், அப்படி ஒன்றும் பெரியதாகத் தெரியவில்லை. மாலை ஆறு மணிக்கு மேல் வெறிச்சோடிப் போகும் ஊர். இருந்த கொஞ்சம் மக்களில் பலர் மிதிவண்டிகள் வைத்திருக்கிறார்கள். உணவகங்களின் முன்னாலோ பிற குழுமலிடங்கள் முன்னாலோ ஓட்டுனர்களுக்காக வண்டிகள் காத்துக் கிடந்தன.
முன்பெல்லாம் சரியான நேரத்திற்குப் பணிக்குச் செல்ல வேண்டிய கட்டாயம் இருந்தபோது வரிசையாக மிதிவண்டிகள் வரும், மாலைச் சங்கிற்குப் பின் போகும் என்று சக ஊழியர் வருணித்த காட்சி தனிச்சிறப்பாய் இருந்தது. இப்போது அப்படி இல்லை. மாறியிருக்கிறது. இருந்தும் மிதிவண்டிகளுக்கென ஒரு தனிச் சாலைப்பகுதி இன்னும் பல இடங்களில் இருக்கிறது.
பொதுவாகவே நாடு, ஊர், பேதமின்றி, மிதிவண்டிகளுக்கு நிறையக் கதைகள் இருக்கின்றன. என் அப்பாவும் ஒரு வண்டி வைத்திருந்தார். வாராவாரம் உட்கார்ந்து மண்டி போட்டுக் கொண்டு துடைத்துப் பளபளவென்று வைத்திருந்தார். சக்கரத்தின் ஒவ்வொரு கம்பியாய்ப் பார்த்துப் பார்த்து துடைத்த பொறுமை சத்தியமாய் எனக்கு இருக்கவில்லை. அவர் வாங்கியதற்குப் பிறகு நானும் ஒரு வண்டி வாங்கினேன். இருந்தாலும் சில ஆண்டுகள் கழித்துப் பார்த்தபோது இன்னும் அவருடையது தான் புதிது போல இருந்தது.
இப்போது மிதிவண்டி இல்லை. அந்தப் பச்சை வண்ண இருக்கை வண்டியைப் பின்னர் பெற்றவரால் நிச்சயம் அப்படியே அப்பாவைப் போல வைத்திருந்திருக்க முடியாது. அப்பா பெரும்பாலும் இப்போது நடை தான். பணியோய்வு பெற்ற வாழ்வில் வண்டிகளுக்குப் பயன் இருந்தாலும் அவ்வளவு அவசியம் இல்லை.
நேற்றிரவு அப்பாவுடன் பேசினேன். காலையில் கண்விழித்து எழுந்து வந்த போது சிறு பெண்கள் தயாராய் இருந்தார்கள். “அப்பா இது உங்களுக்கு” என்று கொடுத்த ஒரு பையில் பல வாழ்த்துக்கள், படங்கள், உடன் வழிந்தோடிய அன்பு.
இன்று தந்தையர் தினம் !
எல்லா அப்பாக்களுக்கும் வாழ்த்துக்களும், நன்றியும்.