இரண்டு குரங்குக் கதை
Jun 17th, 2005 by இரா. செல்வராசு
ஒரு வீட்டுல ரெண்டு குரங்கு இருந்துச்சாம். ஒண்ணு பெரிய குரங்கு, பேரு நந்திதா. இன்னொன்னு ரொம்பச் சின்னக் குரங்கு நிவேதிதான்னு பேரு. நிவேதிதாக் குரங்கு இத்துளியூண்டு இத்துக்குளியூண்டு தான் இருக்குமாம்.
அந்த நந்திதா குரங்குக்குப் பசிச்சா நிவேதிதாக் குரங்கச் சாப்பிட்டுடுமாம். ஆனா அதுல ஒரு சிறப்பு என்னன்னா, நிவேதிதாக் குரங்கச் சாப்பிட எடுத்துட்டோம்னா அந்த இடத்துல இன்னொரு நிவேதிதாக் குரங்கு வந்துடுமாம். ஒன்னு ஒன்னா எத்தனை எடுத்துச் சாப்பிட்டாலும் இன்னொன்னு மாயமா வந்து உட்கார்ந்துக்குமாம். தீந்தே போகாதாம்.
தெனமும் காலையில் அம்மா வந்து இன்னிக்கு என்ன சாப்பிடறேன்னு கேட்டா, நந்திதா குரங்கு சொல்லுமாம், “ரெண்டு நிவேதிதாக்கள் வேணும்”னு (“டூ நிவேதிதாஸ் ப்ளீஸ்”).
தீரத் தீர வர்ற அந்த நிவேதிதா குரங்கு சிறப்பானதுங்கறதால அதுக்குச் சிறப்பான சாப்பாடு தான் வேணுமாம். அது வந்து…ம்ம்… பச்சப் புல்லு மட்டும் தான் சாப்பிடும். ஆனா அதுல மூணு விஷயம் கட்டாயமா இருக்கணும்.
- ஒன்னு, அந்தப் புல்லு நல்ல பச்சையா இருக்கணும்.
- ரெண்டு, அது சரியா ரெண்டு அங்குல நீளம் இருக்கணும்.
- மூணு, அதுல அதிகாலைப் பனித்துளி (dew) கட்டாயம் இருக்கணும்.
இதுல ஒண்ணு இல்லைன்னாலும் அந்தக் குரங்கு சாப்பிடாதாம். அது சாப்பிடலைன்னா ஒரு பிரச்சினை. என்னன்னா நந்திதா குரங்குக்குச் அதச் சாப்பிடக் கொடுத்துட்டோம்னா அதுக்கப்புறம் முழுசா வர்றதுக்குப் பதிலா பாதி பாதியாத் தான் வந்து உட்காருமாம். தலை முதல் கால் வரை இருக்கும். ஆனா, இடப்புறமோ வலப்புறமோ ஒரு பாதி தான் வரும்.
சரி, அதுனால என்ன? ரெண்டு நிவேதிதாவச் சாப்பிடறதுக்குப் பதிலா, நாலு அரை நிவேதிதாவச் சாப்பிட்டுக்கலாம்னா (நாலு அரை சேந்தா ரெண்டு முழுசு தான?), அதெல்லாம் ஒத்துக்க முடியாது எனக்கு ரெண்டு முழு நிவேதிதா தான் வேணும்னு நந்திதாக் குரங்கு அடம் புடிக்குமாம்.
எதுக்கு இந்த வம்பெல்லாம்? இதுக்குத் தான், அப்பாம்மா, இந்தப் பிரச்சினையெல்லாம் வேண்டாம். இதுக்காக தெனமும் பனித்துளி இருக்கிற ரெண்டு அங்குலப் பச்சைப் புல்லுக்கு எங்க போயித் தேடறதுன்னு இனிமே நாமளே வீட்டுக்குப் பின்னாடி ஒரு தோட்டம் போட்டு, புல்லு, பூவு, எல்லாம் வளக்கலாம்னு சொன்னாங்களாம்.
இதக் கேட்டு ரெண்டு குரங்குக்கும் சந்தோஷமாப் போச்சாம். ஏன்னா அதுங்களுக்குத் தோட்டத்தில போயி வெளையாடறது, களை புடுங்கறது, பூவப் பாக்கிறது, மரத்துல தொங்கறது, இதெல்லாம் ரொம்பப் புடிக்குமே!
அப்புறம் இன்னொரு விஷயம் என்னன்னா, அந்த ரெண்டு குரங்கும் ரொம்ப சந்தோஷமாயிட்டா அழகான சின்னப் புள்ளைங்களா மாறிடுமாம். எப்பல்லாம் ரொம்ப சந்தோஷமா இருக்குதோ அப்போ அழகுப் பொண்ணுங்களாவும் சந்தோஷமா இல்லையோ அப்போ மறுபடியும் குரங்குங்களாவும் மாறிடுமாம்!
இப்போ தோட்ட விஷயம் கேட்டவுடனே ரெண்டு பேரும் சந்தோஷமா ஆகி பெரிய குரங்கு நந்திதா சின்னப் பொண்ணாவும், சின்னக் குரங்கு நிவேதிதா பெரிய பொண்ணாவும் மாறிட்டுச் சந்தோஷமா இருந்தாங்களாம்.
அட, அவங்க ரெண்டு பேரும் பொண்ணுங்களா மாறிட்டதாலே இனிமே சாப்பிடறுதுக்குப் புல்லு வேண்டியதில்ல. ஹனி-நட்-ச்சீரியோஸ் சாப்பிட்டுக்குவாங்க. அதனால இனிமே புல்லு, தோட்டம் தேவை இல்லைன்னாலும், அது இருந்தாத் தான சந்தோஷமா இருப்பாங்க, அப்போ தான் பொண்ணுங்களா இருப்பாங்க, இல்லேன்னா மறுபடியும் குரங்காயிடுவாங்களே அப்படீன்னுட்டு அம்மாப்பா தோட்டத்த வச்சுக்கலாம்னு சொல்லீட்டாங்களாம்.
அப்புறம் அந்த ரெண்டு பேரும் அழகான பொண்ணுங்களா எப்பவும் சந்தோஷமா இருந்தாங்களாம் !
* * * *
இரவு உறங்கச் செல்லும் பெண்களுக்குக் கதை சொல்லி நீண்ட நாட்களாயிற்று. இன்று மாட்டினார்கள்! உறங்கப் பணித்துவிட்டு அறைக்கு வெளியே வந்தேன்.
“அப்பா…” அழைத்தது ஒன்று.
“நாளைக்குப் பேசிக்கலாம். சீக்கிரம் தூங்குங்க”
“இல்லப்பா. ஒரே ஒரு விஷயம். சீக்கிரமா…”
“சரி சொல்லும்மா”. குரங்குப் புள்ளைங்க. விடாதுங்க!
“நீங்க ஒரு பதிப்பாளரா ஆயிடுங்க ! (You should become a publisher!)”
…
“அப்புறம், நாமளே இந்தக் கதை எல்லாம் பதிப்பிச்சிரலாம்!”
??!! 🙂
Good one
நல்ல நகைச்சுவை உணர்வோடு கதை சொல்லியுள்ளீர்கள்.
//“நீங்க ஒரு பதிப்பாளரா ஆயிடுங்க ! (You should become a publisher!)”//
உடனே பதிப்பாளராகி பதிப்பிச்சுட்டீங்களா? நல்ல கதை. :))
நன்றிகள்!
பல வருடங்களுக்கு முன்னர் எங்களின் செல்வங்கள் இரண்டும் “நாம் ஏதாவது செல்லப் பிராணிகளை வளர்க்கலாமே” என்று கூறினர்.
நாங்கள் நம் வீட்டில்தான் இரண்டு செல்லக்குட்டிக்குரங்குகள் உள்ளனவே என்றோம்.
உடனே அவர்கள் “ஆமாம் ஆமாம் ஒன்றின்பெயர் அப்பா, இன்னொன்றின் பெயர் அம்மா” என்றனர்.:-))
மற்றொருமுறை வனவிலங்குகள் சரணாலயம் சென்றிருந்தபோது “குரங்குகளின் சேட்டைகளைக் கண்டு ஏன் புன்னகைக்கிறோம் ? ” என்று கேட்டதற்கு, “ஆமாம் உங்கள் உறவினர்கள் நண்பர்களைப்பார்த்தால் நீங்கள் புன்னகைக்கமாட்டீர்களா ? அதுபோலத்தான் இது” என்றனர்.:-))
நம்பி, பாஸிடிவ்ராமா, தங்கமணி நன்றி.
லதா, வருக. நீங்கள் சொன்னது சுவாரசியமானது. சுட்டிக் குழந்தைகளா இருப்பாங்க போலிருக்கே. இங்கயும் கதை கொஞ்சம் அப்படித் தான். இந்தத் தலைமுறைச் செல்வங்கள் எல்லாமே கொஞ்சம் சூட்டிகை தான்! உங்கள் பின்னூட்டத்திற்கும் நன்றி.
அருமையான பதிவு. குழந்தைகளுக்கு திருஷ்டி சுத்திப் போடுங்கள்.
மாயவரத்தான், மிக்க நன்றி. உங்கள் புரிதலுக்கும்.