கொடியும் உரிமையும்
Jun 16th, 2005 by இரா. செல்வராசு
அமெரிக்காவில் நேற்று முன் தினம் (ஜூன் 14) கொடிநாள். அமெரிக்கக் கொடிக்கு நீண்ட வரலாறு உண்டு. தற்போது நீலம், சிவப்பு, மற்றும் வெள்ளை ஆகிய மூன்று நிறங்கள். ஐம்பது மாநிலங்களைக் குறிக்கும் நட்சத்திரங்களும், ஆரம்ப மாநிலங்களைக் குறிக்கப் பட்டைகளுமாய் இருக்கிற கொடி அதன் காலத்தில் பலமுறை மாறுதலுக்கு உள்ளாகி இருக்கிறது. பல வீர உரைகளும், பாட்டுக்களும், இதன் மீது அமைக்கப் பட்டிருக்கின்றன.
பொதுவாய் அமெரிக்கர்கள் கொடியின் மீது விசுவாசமாகவும், மரியாதை உடையவர்களாகவும் இருப்பதைக் காணலாம். ஒரு பற்றுணர்ச்சியோடு தமது வீட்டின் மேலே கொடியைப் பறக்க விட்டிருப்பர். போர்க்காலத்திலோ, பிற சமயத்திலோ எப்போதெல்லாம் நாட்டின் மீது பற்றை வெளிப்படுத்த வேண்டுமோ அப்போதெல்லாம் கொடியின் பயன்பாடு அதிகரிக்கும். சிறு குழந்தைகளுக்கும் கூடக் கொடியின் அருமைகளைச் சிறு வயதிலேயே பள்ளியிலேயே அறிமுகம் செய்து வைக்கின்றனர்.
மறுபக்கம் இவர்கள் மிக மிகச் சாதாரணமாகவும் கொடியினைப் பயன்படுத்துவதைப் பார்க்கலாம். கைவினைப் பொருட்களிலும், காப்பிக் கோப்பைகளிலும், பிளாஸ்டிக் நாற்காலிகளிலும், அணிந்துகொண்டிருக்கும் துணிகளிலும், தொப்பிகளிலும், ஏன் ஒட்டுத் துணியாய் இருக்கும் உள்ளாடைகளிலும், கச்சைகளிலும் (படம் சுயதணிக்கை செய்யப்படுகிறது:-) !) கூடக் கொடியைப் பயன்படுத்தி இருப்பதையும் பார்க்கலாம்.
இப்படியெல்லாம் கண்டபடி பயன்படுத்தக் கூடாது என்று கொடியை மதிக்கவென்று சில வழிமுறைகள் சொல்லப் பட்டிருந்தாலும், அவை சட்டங்கள் அல்ல. அமெரிக்க விமானப் படைத் தளபதி ரிச்சர்ட் மையர்ஸே இப்படி ஒரு கொடியால் அமைந்த சட்டையைச் சென்ற மாதம் அணிந்து ஒரு விழாவிற்குச் சென்றிருக்கிறார்.
அமெரிக்காவின் சிறப்புக்களில் ஒன்று பேச்சுரிமையும், உணர்ச்சிகளை வெளிப்படுத்த இருக்கும் உரிமையும். கொடியை எரித்துக் கூட ஒருவர் தன் உணர்ச்சிகளை வெளிப்படுத்தலாம். அப்படிச் செய்வோரைத் தண்டிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. எல்லா ஊரைப் போன்றும் இங்கும் இது ஒரு பெரிய அரசியற் பிரச்சினையாக இருக்கிறது.
கொடியை அவமதிப்பதைத் தடை செய்யும் மசோதா ஒன்றைக் காங்கிரஸ் சில ஆண்டுகளுக்கு முன்னர் கொண்டுவந்தாலும், அது சட்டமாகவில்லை. இந்த விதயத்தில் இருபுறமும் உணர்ச்சியோடு இருப்பவர்கள் அதிகம். கொடியைத் தேசமாகவும், புனிதமாகவும், நாட்டிற்கும் நாட்டின் சிறப்புக்களுக்கும் உரிய ஒரு சின்னமாகவும் பார்ப்பவர்களால் அதற்கு ‘உண்டாகும்’ அவமதிப்புக்களைப் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியவில்லை.
ஆனால், கொடி என்பது வெறும் சின்னம் தான். அதை ஏதேனும் செய்வதால் நாட்டின் பெருமைகளுக்கும் அது பிரதிபலிக்கும் சுதந்திர உணர்ச்சிகளுக்கும் இழுக்கு என்பது ஏற்றுக் கொள்ள முடியாதது; கிறுக்குத் தனமானது என்று மறுசாரார் எடுத்து வைக்கும் உரைகளோடு நானும் உடன்படுகிறேன்.
அமெரிக்க தேசக் குறிக்கோள்களில் முக்கியமானது – அரசு என்பது தனிமனித உரிமைகளைப் பாதுகாக்க உருவாக்கப் பட்ட அமைப்பு – என்கிற சித்தாந்தம். தனிமனித உரிமைகளின் எல்லைகள் என்பதை எப்படிச் நிர்ணயிப்பது? அடுத்தவரைத் துன்புறுத்தாதவரை ஒருவருக்கு எல்லாச் செய்கைகளுக்கும் உரிமை உள்ளது.
“பிறரைக் காயப்படுத்தாதவரை நீ என்ன வேண்டுமானாலும் செய்யலாம். அதற்கு உனக்கு உரிமை உள்ளது”, என்பது தான் அவ்வப் போது நான் என் மகளிடமும் சொல்வது.
இந்த உரிமை விழுமியம் அமெரிக்காவிற்கு மட்டுமல்ல. உலக குமுகாயம் முழுமைக்கும் பொதுவானது. பிறரைக் காயப் படுத்தாதவரை, பிறரைத் துன்புறுத்தாதவரை, வலுக்கட்டாயமாய் ஒருவரின் விருப்பத்தினை மீறிச் செயல்களில் ஈடுபடுத்தாதவரை ஒருவர் எது வேண்டுமானாலும் செய்யலாம்.
கொடி முக்கியமானது தான். ஆனால் தனிமனித உரிமை அதனை விட முக்கியமானது. யோசித்துப் பார்த்தால் புனிதம், பாரம்பரியம் என்று போற்றப்படும் எல்லாவற்றிற்கும் இது பொருந்தும். கடவுள், தேசப்பற்று, சாதி, மதம், இனம், பால், இத்யாதி, இத்யாதிக் கருத்தாக்கங்களையும் விடத் தனிமனித உரிமையே மேலானது.
தனிமனித உரிமை எப்போது அப்படி எல்லாவற்றிற்கும் மேலே போற்றப்படுகிறதோ அப்போது தான் ஒரு குமுகாயம் முதிர்ச்சி பெற்ற ஒன்றாய் அமைகிறது.
செல்வா,
நல்ல பதிவு.
//…தனிமனித உரிமை அதனை விட முக்கியமானது. யோசித்துப் பார்த்தால் புனிதம், பாரம்பரியம் என்று போற்றப்படும் எல்லாவற்றிற்கும் இது பொருந்தும். கடவுள், தேசப்பற்று, சாதி, மதம், இனம், பால், இத்யாதி, இத்யாதிக் கருத்தாக்கங்களையும் விடத் தனிமனித உரிமையே மேலானது.
தனிமனித உரிமை எப்போது அப்படி எல்லாவற்றிற்கும் மேலே போற்றப்படுகிறதோ அப்போது தான் ஒரு குமுகாயம் முதிர்ச்சி பெற்ற ஒன்றாய் அமைகிறது.//
அருமை!
நல்ல பதிவு செல்வராஜ். இந்த விசயத்தில் நானும் அமெரிக்கர்களின் கட்சிதான்.
//அமெரிக்காவின் சிறப்புக்களில் ஒன்று பேச்சுரிமையும், உணர்ச்சிகளை வெளிப்படுத்த இருக்கும் உரிமையும். கொடியை எரித்துக் கூட ஒருவர் தன் உணர்ச்சிகளை வெளிப்படுத்தலாம். அப்படிச் செய்வோரைத் தண்டிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. எல்லா ஊரைப் போன்றும் இங்கும் இது ஒரு பெரிய அரசியற் பிரச்சினையாக இருக்கிறது. //
ஸ்பைக் லீயின் மால்கம் எக்ஸ் என்ற படத்தில் டைட்டில் போடுவதே அமெரிக்கா கொடியை எரித்து அதில் X என்ற எழுத்து தோன்றுவதான க்ராபிக்ஸில். ஏனோ மேலுள்ள வரியை படித்தத்தில் அது தான் ஞாபகம் வந்தது. செப்.11 காலங்களில் அமெரிக்காவில் இருந்த போது கொடியை கண்ட இடங்களில் குத்தி தேசப்பற்றை எப்படி வெளிப்படுத்தினார்கள் என்பதை நான் கண்டிருக்கிறேன். வியந்திருக்கிறேன்.
நல்ல பதிவு. நான் பலமுறை நினைத்திருக்கிறேன் நம் ஊரில் சுதந்திர நாள் தவிர மற்றைய தினங்களில் வீடிட்ல் ஏன் தேசிய கொடியை பறக்க விடுவது இல்லை என்று. காரிலும் வீட்டிலும் பறக்கும் போது அழகாய்த்தான் இருக்கிறது.
கண்ணன் நன்றி. தங்கமணி, அமெரிக்கர்களிலும் இரண்டு கட்சியினரும் இருக்கிறார்கள். அதனால் தான் ஒரு சாரார் கொடி அவமதிப்புத் தடைச்சட்டம் கொண்டு வர முயன்றார்கள். அவர்களன்றி உரிமைக்கு முதல்குரல் கொடுப்பவர்களின் கட்சி என்று நீங்கள் சொல்வதாகப் புரிந்து கொள்கிறேன்.
விஜய், பத்மா நன்றி. இந்தியாவில் கொடி பற்றி முன்பு யோசித்திருக்கிறேன். ஆனால், இங்கு போல் அங்கு வீட்டிலோ, காரிலோ கொடியைப் பறக்க விடுவதே சட்டத்திற்குப் புறம்பானது என்று ஞாபகம். சில ஆண்டுகளுக்கு முன் வாஜ்பாய் பிரதமராய் இருந்த போது தான் இந்தச் சட்டம் தளர்த்தப்பட்டு மக்கள் வீட்டில் கொடியை வைத்துக் கொள்ளலாம் என்று மாற்றப் பட்டது என்று நினைக்கிறேன்.
கொடிபற்றிய இந்தியச்சட்டம் 2002இல் மாற்றப்பட்டது பற்றிப் பார்க்க.
செல்வா,
நேற்றிரவு, ஜே லெனோ, “ஸ்டார் ஸ்பாங்கிள்ட் பேனர்” என்கிற பாடலை யார் எழுதியது என்று பொது மக்களை கேள்வி கேட்டு சதாய்த்துக்கொண்டிருந்தார்.
http://en.wikipedia.org/wiki/The_Star-Spangled_Banner
அது சரி கார்த்திக். உங்க ஊர்ல (பால் டீ மோர்) நடந்த கதையாச்சே! இந்த மாதிரி நிறைய அமெரிக்க வரலாறு எல்லாம் இனிச் சில வருடங்கள் பெண்களின் பள்ளிக்கூடம் வழியாக வீட்டுக்கு வரும் என்று நினைக்கிறேன். விக்கி மூலம் பற்றி நினைவுறுத்தியதற்கு நன்றி. அறியாமையை வெளிப்படுத்தாமல் கொஞ்சம் படிச்சுக்கலாம்.