மாமரத்தச் சுத்துவோம்
Jun 15th, 2005 by இரா. செல்வராசு
முன்னொரு நாள் ஒரு சுந்தரப்பா(!) தன் அப்பாவின் பாட்டுக்கள் கொண்டு வந்து போட்டிருந்தார். குழந்தைகளுக்கும் தெரிந்த “மல்பரி புஷ்” இசைக்கும் சுட்டியையும் தந்திருந்தார். இங்கொரு அப்பாவும் பெண்களும் அதில் கொஞ்சம் எடுத்துக் கொண்டு சுற்றினோம்.
ஒரு பத்தி மட்டுமே பாடினாலும் இப்போது இங்கு இரண்டு பெண்களுக்குத் “துலக்குவோம்” என்கிற தமிழ்ச் சொல் தெரியும். ஒவ்வொரு சொல்லாய்க் கடக்கிறோம்.
இணையத்திற் சுட்ட இந்த மாமரத்தைச் சுட்டினால் பாட்டருவி எம்பிக் கொட்டும் (mp3, 260 KB).
‘வான் டிராப் குடும்பப் பாடகர்கள்’ தரத்திற்கு இருக்காது தான் :-). இருந்தாலும் இந்த உற்சாகப் பாட்டுக்கு சொந்தக்காரர்கள் நாங்கள் என்பதில் தனியொரு கருவம் கொள்கிறோம்!
இப்படி அழகாக மாமரத்தை விடியற்காலையில் ச்சுத்தினால் அது காய்த்துத்தள்ளாதா!
அழகாகப் பாடுகிறார்கள்.
நன்றிகள்!
Superb!
நந்திதா நலம் தானே?
தங்கமணி, கண்ணன் நன்றி.
நந்திதாவின் கை நன்றாக இருக்கிறது. இன்னும் ஓரிரு நாட்களுக்கு மட்டும் எட்டெண்வடிவக் கட்டு. தயக்கமின்றி எல்லாம் செய்கிறாள். அவ்வப் போது எங்காவது இடித்துக் கொள்ளும் போது மட்டும் எனக்குப் பயமாக் இருக்கிறது. 🙂 அவளுக்கொன்றுமில்லை!
இனிமையாக இருக்கிறது.
“சுத்துவோம்.. சுத்துவோம்…” – குழந்தைகளின் குரல் காதுக்குள் சுற்றிக் கொண்டேயிருக்கிறது.
இருவரையும் விசாரித்ததாக சொல்லவும்.
குட்டி பாப்பாங்க சோஓஓஓஓஓஓஓஓஓ ஸ்வீட்ட்ட். பாப்பாக்கள் பெயர் என்ன? விஜய் மாமா அவங்களை கேட்டதா சொல்லுங்க. அருமையான பதிவு செல்வா.
:)) ச்ச…இந்த சந்தோஷத்துக்காகவே வலையலாம்! நன்றி செல்வராஜ். பிள்ளைகளுக்கு எம் அன்பு. தங்கமணி, புன்னையையோ எதையோ பெண்கள் உதைத்தால் நன்றாய்க் காய்க்கும் என்பதாக ஏதோவொரு இலக்கிய ஞாபகம்! வயலில் நெற்பயிர் நாம் வருவதைக் கண்டு தமக்குள் பேசி மகிழும் என்று என் அம்மாச்சியொருவர் சொல்வார். செடிகளோடு நாம் பேசுவதைச் செடிகள் விரும்புவதையும் எங்கோ படித்ததுண்டு. இப்படியே நந்திதா, நிவேதிதாவின் பாட்டுக்கு மாமரமும் காய்த்துத் தள்ளுமென்கிறாய், நன்று!
அருமையாக உள்ளது செல்வராஜ்!
//செடிகளோடு நாம் பேசுவதைச் செடிகள் விரும்புவதையும் எங்கோ படித்ததுண்டு.// கேட்கவே நன்றாக உள்ளதே!
நண்பர்கள் அனைவரின் கருத்துக்கும் நன்றி.
விஜய், பெயர்களைச் சுந்தரின் பின்னூட்டத்தில் பாருங்கள். நீங்கள் சமீபத்தில் தான் இந்தப் பக்கம் வர ஆரம்பித்திருக்கிறீர்கள் போலும். இல்லாவிட்டால், சும்மா என் மகள்களைப் பற்றித் தான் எழுதித் தள்ளிக் கொண்டிருந்தேன் என்று வீட்டில் குற்றச்சாட்டு எழும் அளவிற்கு எழுதி இருப்பேன். ‘வாழ்க்கை’ பதிவுப் பிரிவில் பாருங்கள்.
>> வயலில் நெற்பயிர் நாம் வருவதைக் கண்டு தமக்குள் பேசி மகிழும் >>
வாவ்! சுந்தர், என்ன ஒரு அழகான கற்பனை!
நந்திதா நிவேதிதாவா. நல்ல பெயர்கள். எங்கெங்க வலைப்பதிவு பக்கமே வந்து 7 மாசம் தானே ஆறது. அதுவும் உங்கப்பதிவில் வரும் படங்களைப் பார்த்ததும் கப்புன்னு உங்க பதிவும் பேவரைட் ஆனது. இத்தோ ‘வாழ்க்கை’ பகுதியை படிக்கிறேன்.
செல்வராஜ்
நன்றாக இருக்கிறது. செடிகளின் அருகில் பேசினாலோ பாடினாலோ அவை தழைத்து வளரும் என்பதும், அவர்களின் வளரும் புரதம் (gibrellic acid) சுரக்கும் என்றும் தாவரவியல் ஆராய்ச்சிகுறிப்புகள் சொல்கின்றன. நேரம் கிடைக்கும் போது மீண்டும் தேடி எடுத்து அவற்றை தருகிறேன்.
பாட்டு நல்லாயிருக்கு. ரெண்டு பிள்ளையளுக்குமிடையில ஒரு குரல் கேக்குதே?
எங்கட ஊரில மாமரம் காய்க்கிறதுக்கு ஒரு விசயம் செய்யிறதெண்டு சொல்லுறவை. ஆனா நான் நேர காணேல. ஒராள் அம்மணமா நிண்டு செருப்பால அடிக்க வேணுமாம் மாமரத்துக்கு.
வசந்தன் நன்றி. ‘செல்வராஜ் குடும்பப் பாடகர்கள்’ ஆயிற்றே. அதனால் இடையில் எங்கள் குடும்பக் கரடியின் குரலும் சேர்ந்து கேட்கிறது! 🙂
மரம் காய்க்கிறதுக்குச் சுவாரசியமான கதையெல்லாம் சொல்லியிருக்கீங்க !! 🙂
இன்று பகல்சாப்பாட்டுக்கு போகும் போது காரிலே, “கோடைகாலம் முடிஞ்சாச்சு, ” என்ற ஒரு பாடல்வரி வந்ததும், உங்கள் , “மாமரத்தை சுத்துவோம்” நினைவுக்கு வந்தது.
கூடவே,
“வெயிலு வெயிலு வெயிலு லேலேலேய்
வெளிய வெயிலு வெயிலு லேலேலேய்
முயலு முயலு முயலு லேலேலேய்
முந்தி போகுது முயலு லேலேலேய்
குயிலு குயிலு குயிலு லேலேலேய்
கூ-வுனு கூவுற குயிலு லேலேலேய்
மயிலு மயிலு மயிலு லேலேலேய்
வெயிலில் ஆடும் மயிலு லேலேலேய்
சேவலு சேவலு சேவலு லேலேலேய்
கொக்கரக் கோ சேவலு லேலேலேய்”
என்ற ஒரு சிறுவர் பாடலையும் பாடிக்கொண்டே வந்தேன்.
🙂
நன்றாய்த் தான் இருக்கிறது. கார்த்திக் நான் இந்தப் பாட்டைக் கேட்டதே இல்லையே. என்னளவில் முடிந்ததைப் பாடிக் காட்டினேன். பெண்கள் ஓடியே போய்விட்டார்கள்! 🙂 (ஆங்கிலத்தில் அவளாகவே ஒரு spring is over பாட்டு எழுதிக் கொண்டிருக்கிறாள்!!)
// இந்தப் பாட்டைக் கேட்டதே இல்லையே.//
எப்படி கேட்டிருக்க முடியும்? நேற்று பகல் 12 மணிக்குத்தானே இயற்றினேன். 🙂
இதை இயற்றியபின் தான்”மாமரத்தை ” சுத்தினேன் ,
ஆச்சரியமாக கிட்டத்தட்ட இரண்டும் ஒரே மாதிரி இருந்தது.
/பெண்கள் ஓடியே போய்விட்டார்கள்/
ஏதோ இதற்காவது உபயோகப்படுகிறதே!! 🙂