பெங்களூர் மழையில் நனைகின்ற பூங்காற்று – 4
Jul 13th, 2005 by இரா. செல்வராசு
பெங்களூர் – சென்னை விமானம் அரை மணி நேரப் பயணம் தான் என்றாலும் அருமையாய் நொறுக்குத் தீனி கொடுக்கிறார்கள். இப்போதெல்லாம் ஓரிரு மணி நேரம் செல்லும் அமெரிக்க விமானப் பயணங்களில் கடலைக்கொட்டை கூடக் கிடைப்பதில்லை. அதற்கு மேல் செல்லும் பயணங்களில் கூட, கிடைக்கிற சாப்பாட்டுக்கு ஐந்து டாலர் கேட்கிறார்கள்.
ஜெட் ஏர்வேஸ்-இல் இரவு தூங்குகிற நேரத்தில் எதற்கு குளிர்துண்டு கொடுக்கிறார்கள் என்று நினைத்தேன். ஆனால் வியர்வை அழுக்கைத் துடைத்துக் கொள்கையில் அயர்வு நீங்கி ஒரு புத்துணர்வு வருகிறது. இதில் ஒரு மனோதத்துவத் திட்டம் இருக்க வேண்டும். அயர்வான பயணிகளை விட, மலர்ந்திருக்கிற பயணிகளைக் கவனித்துக் கொள்வது எளிதானது. (“என்னவோ பெருசா கண்டுபிடிச்சிட்டாரு”).
மாரியம்மன் கோயில் திருவிழாவின் போது கிடைக்கும் நீர்மோர் இப்போது பொட்டலத்தில் அடைபட்டு விமானத்தில் பறந்து கொண்டிருக்கிறது. அதுவும் கூடச் சுவையாய் இருந்தது. ஒரு வேளை உப்பு அதிகமாகவோ குறைவாகவோ இருக்குமோ என்று எண்ணினேன். இல்லை. சரியாக இருந்தது. நீர்மோரையும் எதாவது பன்னாட்டு நிறுவனம் தங்கள் சொத்தாக்கிக் கொண்டு விடுமா என்று ஐயத்துடன் எங்கு செய்கிறார்கள் என்று பார்த்தேன். இல்லை இது ஒரு உள்நாட்டு நிறுவனம் தயாரிப்பது தான்.
சென்னை விமான நிலையத்தில் pre-paid taxi என்பதைச் சீருந்து என்று தமிழ்ப் பெயர்த்திருப்பது எனக்குப் பிடித்திருக்கிறது. Rest Room என்று அமெரிக்காவிலும் Wash Room என்று கனடாவிலும் இருப்பதை ‘ஒப்பனை அறை’ என்று தமிழில் வழங்குவதும் நன்றாக இருக்கிறது. பொதுவாகவே இப்போது தமிழ்ப் பலகைகள் அதிகம் தென்படுகின்றன. தமிழ் ஆர்வலர்களின் ஆதங்கங்களும் முயற்சிகளும் வீணில்லை என்று சொல்லத் தோன்றுகிறது.
சென்னை அண்ணா சாலையில் காமராசர் நினைவாலயம் அருகில் அமைந்திருக்கிற இந்தத் தங்குமிடத்திற்கு ஏன் ‘இண் சென்னை’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள் என்று தான் தெரியவில்லை. முதல் நாள் சென்ற சீருந்துக்காரருக்கும் தெரியவில்லை. அடுத்த நாள் சென்ற ஆட்டோக்காரருக்கும் தெரியவில்லை. “அண்ணா சாலையிலே இண் சென்னை” என்று நான் சொன்னதை என்னவோ அவர்களிடத்தில் உடைந்த ஆங்கிலத்தில் பேசுவதாய் எண்ணிக் கொண்டார்களோ தெரியவில்லை. எதாவது ஒருவழிப் பாதையாய் இருக்கும்; நுழைவிற்குச் செல்ல இப்படிச் சுற்ற வேண்டும் போலிருக்கிறது என்று நான் எண்ணிக் கொண்டிருந்தேன். இண் சென்னை தாண்டி, ஜெமினியை எல்லாம் கொஞ்ச தூரம் தாண்டிச் சென்று “அண்ணா சாலை இன் சென்னை வந்தாச்சு. எங்க சார் போகணும்?” என்றார்கள்! இதற்குத் தான் அழகான ஒரு தமிழ்ப் பெயர் வைக்க வேண்டுமென்பது. ‘வோர்ல்ட் பார்க்’ குழுமத்திற்கு இது கேட்கவா போகிறது?
அரை நாள் மட்டுமே தங்க இருப்பவனுக்கு வேறு வழியின்றி நீண்ட நாள் தங்குவசதியாக அமைந்திருக்கிற அறை ஒன்றை ஒதுக்கினார்கள். வெளி நாடுகளில் இது போன்றவற்றில் தங்கி இருக்கிற அனுபவத்தில் இது உலகத் தரம் வாய்ந்ததாய் இருக்கிறது என்று என்னால் சொல்ல முடியும். ஏன்? அவற்றில் மிகவும் சிறப்பானவற்றில் ஒன்று என்றும் கூடச் சொல்லலாம். ஒரு படுக்கை அறை, ஒரு வரவேற்பு அறை, ஒரு சமையல் அறை என்று எல்லா வசதிகளும் அடக்கம். இரண்டு தொலைக்காட்சிப் பெட்டிகள், குளிரூட்டிய அறைகள். வரவேற்பில் இருந்த ஒருவர் மட்டும் என்னதான் நான் தமிழில் பேசினாலும் விடாது ஆங்கிலத்திலேயே பேசினார்.
வந்தவேலை விரைவில் முடிந்தது. பத்ரியோடு தொலைபேசியில் பேச மாலை வலைப்பதிவர்களின் சிறிய கூட்டம் ஒன்று இருப்பதை அறிந்தேன். சென்னை வந்திருந்த காசியும் வருவார் என்று தெரிந்து அந்தக் கடற்கரைக் கூட்டத்திற்குச் சென்று வரும் ஆசை எனக்கும் ஏற்பட்டது. திரும்ப பெங்களூர் செல்லும் பயணத்தைச் சற்றே தள்ளி வைத்துவிட்டு முதன் முறையாக சில வலைப்பதிவர்களைச் சந்தித்தேன். கடற்கரையில் பெய்த மழையால் இடம் நேரம் மாறினாலும் பலரையும் பார்க்க முடிந்தது. ஆனாலும் முதல் ஆளாய் அவசரமாகக் கிளம்ப வேண்டியதாகி விட்டது. பிறகொரு முறை வாய்ப்பிருந்தால் சந்தித்துக் கொள்ளலாம்.
யாரோ வாங்கித் தந்த சாம்பார் வடைக்கும் காப்பிக்கும் நன்றி கூடச் சொல்லாமல் வந்துவிட்டேனே என்று ஆட்டோவில் விமான நிலையம் செல்லும் வழியில் கொஞ்சம் உறுத்தியது. “நூறு ரூபாய் கொடுங்க. மிஞ்சிப் போனா நூத்திப்பத்து” என்று பத்ரி அறிவுறுத்தியிருந்ததால் நூற்றி இருபதோடு(!) ஆட்டோக்காரரிடம் இருந்து தப்பித்தேன்.
லண்டனின் தீவிரவாதிகள் தாக்குதல் பற்றி விமான நிலையத்தில் தொலைக்காட்சி ஓடிக் கொண்டிருந்தது.
மீண்டும் ஜெட் ஏர்வேஸ்-இல் பொட்டலத்தில் நீர் மோர் கொடுத்தார்கள்.
This is for your information.If possible share ur experience.