தாராப்பூர் பன்னிரண்டு
Nov 29th, 2005 by இரா. செல்வராசு
ஒரு தட்டுக் கோழிப் பிரியாணி ஓட்டல் சரோவரில் ஐம்பத்தெட்டு ரூவாய். முக்குக் கடையில் வாங்கிய வாடிலால் வெண்ணிலா ஐஸ்கிரீம் ஐந்து ரூவாய். தண்ணீர் என்று நினைத்துத் தெரியாமல் வாங்கிய கின்லீ பாட்டில் சோடா பன்னிரண்டு ரூவாய். தள்ளுவண்டிப் பெரியவரிடம் புரியாத மொழியில் பேரம் பேசி வாங்கிய மூன்று பச்சை நிற வாழைப்பழங்கள் ஐந்து ரூவாய். இருட்டைக் கிழிக்க முயன்று தோற்று விகசித்துப் போன தெருவிளக்கொளியில் மாடு கன்றுகளோடு வித்தியாசம் பாராமல் திரிந்து கொண்டிருக்கும் தாராப்பூர்-பொய்சர் மக்களூடே நடந்து சென்று வந்த நேரங்களோ விலை மதிப்பில்லாதவை.
மும்பையில் இருந்து மூன்று மணி நேரக் கார்ப்பயணத்தில் இருக்கிற தாராப்பூருக்குச் சுமார் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே ஒரு முறை உற்ற தோழி ஒருவரைச் சந்திக்கவென்று வந்திருக்கிறேன். எப்படி இங்கு வந்தேன், ரயிலா, பேருந்தா, போன்றவை சரியாக நினைவில் இல்லை. ஆனால் திரும்புகையில் தோழி ரயில்வண்டியில் மும்பை வரை உடன் வந்ததும், வழியில் தன் காதல் கதையைச் சொன்னதும் பசுமையாய் நினைவிலிருக்கிறது. தெரிந்த கதையின் தெரியாத ஆரம்பங்களை அன்று தான் தெரிந்து கொள்ள முடிந்தது.
தாராப்பூரில் ஊரைப் பகுதி பகுதியாக வகுந்து போட்டுப் பல நிறுவனங்களுக்கும் ஆலைகளுக்கும் கொடுத்துவிட்டார்கள். மருந்துக் கம்பெனிகளில் இருந்து இரும்புக் கம்பெனிகள் வரை நிறையப் பார்க்க முடிகிறது. ‘மகாராஷ்டிரா தொழில் வளர்ச்சிக் கழகம்’ (MIDC) அமைத்துக் கொடுத்திருக்கும் தொழிற்சாலைப் பகுதியில் சாதாரண மக்களின் வளர்ச்சிக்கும் வாழ்க்கைத் தரத்திற்கும் அடிப்படை வசதிகளுக்கும் இன்னும் கொஞ்சம் முக்கியத்துவம் தந்திருக்கலாம்.
அருகே இருக்கும் பொய்சாரில் தான் குடியிருப்புக்கள் நிறைய இருக்கின்றன. இப்போது சுற்றுகிற அதே ‘சித்ராலயா’ கடைவீதியில் தோழியின் தந்தையோடு அன்று காலை நடை சென்று காய்கறியோ கீரைவகையோ வாங்கி வந்திருக்கிறேன். அப்போது இருந்த அதே குப்பை கூளம் இன்னும் இருக்கிறது. இந்தப் பன்னிரண்டு வருடங்களாய்ச் சேர்ந்ததில் அவற்றின் அளவு அதிகரித்து இருப்பது ஒன்று தான் வித்தியாசம். இத்தனை குப்பைகளுக்குள் மக்களால் எப்படி வாழ முடிகிறது? நகராட்சியோ கிராம ஆட்சியோ கீழ்மட்ட அரசு இங்கு முற்றிலும் செயலிழந்து கிடப்பதாகப் படுகிறது. சுத்தம், சுகாதாரம் என்பதை அறியாமலே இருப்பதால் தான் இப்படியோ என்கிற எண்ணத்தைப் பொய்யாக்கும் வண்ணம் நேரெதிரே ‘தாராப்பூர் அணுமின் நிலையம்’ மற்றும் ‘பாபா அணு ஆராய்ச்சி நிலையக்’ குடியிருப்புகள் போதிய அளவு சுத்தமாய் இருக்கின்றன. எதிரெதிரே இருந்தாலும் இவை வேறு உலகங்களாய்க் காட்சி அளிக்கின்றன. பின்னும் மக்கள் இது பற்றிக் கவலையின்றி இருக்கிறார்களா? கவலைப்பட்டாலும் அது பற்றி ஒன்றும் செய்ய இயலாத சக்தியற்றவர்களாய் இருக்கிறார்களா?
ஒரு பொதுத் தொலைபேசியகத்தில் இருந்து அமெரிக்காவிற்கு எண்களைச் சுழற்றினேன். ஒரு வருடத்திற்கும் மேலிருக்குமா தோழியிடம் பேசி?
“உமா, ஹலோ…”
“ஹாங்…”
“உமா, நான் செல்வராஜ் பேசுறேன்…”
“செல்வராஜ்? ஹேய்… என்ன ஒரு ஆச்சரியம்?”
நண்பர்களோடு தொடர்பை விடாதிருக்கத் தொலைபேசிகளும் வளர்நுட்பங்களும் வழிசெய்கின்றன என்றாலும் எப்படியோ எல்லோருடனும் வலுவான தொடர்பு கொண்டிருக்க முடியவில்லை என்பது ஒரு தோல்வி தான்.
“உனக்கு இன்னும் ஒரு ஆச்சரியம் இருக்கு உமா. நான் இப்போ தாராப்பூரில் இருந்து பேசுகிறேன். சித்ராலயா பக்கத்திலிருந்து…”
‘சித்ராலயா’ என்று இந்தப் பகுதிக்கே தன் பெயரைத் தானமாக்கிக் கொண்டிருக்கும் திரையரங்கு சின்னதாய் இருக்கிறது. ஞாயிறு இரவுக் காட்சிக்கும் கூடக் கூட்டம் சிறிதாய்த் தான் இருக்கிறது. உள்ளே நடந்து பார்த்தேன். புறத்தீட்டர் (புரொஜெக்டர்) அறையின் சன்னல் வழியாக ஒருவர் வேடிக்கை பார்த்துக் கொண்டு படம் காட்டத் தயாராகிக் கொண்டிருந்தார். உயர்ந்த படிக்கட்டு ஒன்று அந்த அறைக்குச் இட்டுச் செல்கிறது. ஒரு மகத்தான ‘டெண்ட்டுக் கொட்டாய்’ போலத் தான் இருக்கிறது. காற்று வாங்கிக் கொண்டு இருக்கிற அனுமதிச்சீட்டுச் சாளரத்தில் பத்து ரூவாய் முதல் இருபத்தெட்டு ரூவாய் வரை மூன்று நிலையில் சீட்டுத் தருகிறார்கள். வாகன நிறுத்துமிடத்தில் காவலாளி சோம்பல் முறித்துக் கொண்டிருக்கிறார். இரண்டு வரிசையில் மொத்தமாய் ஒன்பது சைக்கிள்களும் நான்கைந்து இருசக்கர வாகனங்களும் மட்டும் நின்று கொண்டிருக்கின்றன. ‘ஏக் கீ பூல்’ என்று இந்தியோ மராத்தியோ ஒரு படப் போஸ்டரில் நடிகையொருவர் சிக்கனமாய்த் துணியணிந்து முதுகுகாட்டி உட்கார்ந்திருக்கிறார்.
“ஹேய்… எங்கே? அங்கே நீ எப்படி?” ஒரு ஆச்சரியத்தையும் பரவசத்தையும் தோழியின் குரலில் உணர முடிகிறது. எனக்கும் மகிழ்ச்சி. சுருக்கமான ஒரு பேச்சில் வந்த விவரம் கூறுகிறேன். இன்னும் பத்துப் பதினைந்து நாள் இங்கு இருப்பேன் என்கிறேன்.
“ஆகா! நானும் இப்போ அங்கே இருந்திருந்தால் நல்லா இருக்குமில்லே? எங்கே தங்கி இருக்கே?”
ஓட்டல் காண்டெஸ்ஸாவை இவருக்குத் தெரிந்திருக்கிறது. ஊரில் இருக்கிற சிறந்த ஓட்டல் இது தான் என்கிறார்கள். இங்கேயே ஒரு நாள் தண்ணீர்த் தொட்டி வற்றி அடிவண்டல் சேற்றுத் தண்ணீர் வந்து, பின் வாளிகளில் பணியாளர்கள் சிலர் நீர் கொண்டு வந்து தந்தார்கள் என்றாலும் இது தான் இருப்பதிலேயே சிறந்த தங்கும் விடுதி என்பதைப் பிற விடுதிக்காரர்களே ஒப்புக் கொள்கிறார்கள். இரண்டு பிரெட் துண்டுகளுக்கு இருபத்தெட்டு ரூவாயும், பாட்டில் நீருக்கு இருபத்தைந்து ரூவாயும் பிடுங்கித் தள்ளி விடுகிறார்கள். ஒரு கோப்பைத் தேநீருக்கு பதினைந்து முதல் இருபது ரூவாய் வரை ஆகிறது. காலை உணவிற்குப் பெரிய தெரிவட்டை (மெனு) தந்தாலும் தெரிவுசெய்யும் எதுவும் இருப்பதில்லை. பிரெட், ஆம்லெட் தவிர இருப்பது ‘அடைத்த பராத்தா’ மட்டுமே. காலிபிளவர் அடைத்த வெண்ணை போட்ட பராத்தாவுக்குத் தொட்டுக் கொள்ளத் தயிரும் ஊறுகாயும் நன்றாக இருக்கிறது. இதை மட்டும் இருபது ரூவாய்க்கு எப்படித் தருகிறார்கள் என்பது தான் புரியவே இல்லை.
அன்று பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன் ‘நல்லாச் சாப்புடுப்பா’ என்று தாங்கித் தாங்கிக் கோழி வறுவல் செய்திருந்தார்கள் உமாவின் தாய். அதுவே நான் அவர்களைச் சந்திக்கும் முதல் முறை. ஆந்திர முறையில் காரசாரமாய்ச் சுவையாய் இருந்ததென்று மேலும் வைத்த எல்லாவற்றையும் வீணாக்காமல் சாப்பிட்டு எழுந்தேன். ‘நீ நல்லா சாப்பிட்டது அம்மாவுக்கு ரொம்ப திருப்தி’ என்று பிறகு உமா சொன்னதைக் கேட்டு நான் மகிழ்ந்திருந்தேன். எனக்குச் சோறு போட்டதில் சிறு நிறைவடைந்த அந்த அம்மா இன்று இவ்வுலகில் இல்லை. அதுவே அவர்களை நான் பார்த்த கடைசி முறையும் கூட.
உமாவின் நட்புக்களோ சொந்தங்களோ இன்று இந்த ஊரில் யாரும் இல்லை. அவர் இங்கு இருந்ததும் கூடச் சில ஆண்டுகள் தான் இருக்கும் என்று எண்ணுகிறேன். இருப்பினும் தாராப்பூர் அவர் நினைவுகளில் நீங்கா இடம் பெற்ற ஊராக இருக்க வேண்டும்.
“அங்கே இருந்து என்னை நினைத்து நீ இன்று அழைத்தது நல்லா இருக்குது”
சில படங்கள் எடுத்தும் கூட அனுப்பி இருக்கலாம். அடுத்த முறை படக்கருவி எடுத்துவர வேண்டும்.
“வேறு என்னெல்லாம் பார்த்தே? சொல்லு சொல்லு” – ஆசையாய்க் கேட்டார் தோழி.
மஹாராஷ்டிராவின் புறத்தில் ஒரு சிற்றூர் என்றாலும் தினமும் எங்காவது ஒரு முறையாவது தமிழைக் கேட்காமல் இல்லை. ஒரு தொலைப்பேச்சிலோ, கடையிலோ யாராவது ஒரு தமிழரைக் கூடக் கவனிக்காத நாட்கள் இல்லை என்பது ஆச்சரியமாய் இருக்கிறது. ஒழுங்காய் இல்லாத தம்பியைக் கண்டிக்கிறேன் என்று மதுரைத்தமிழில் ஒருவர் தம்பி மனைவியுடன் தொலைபேசிக் கொண்டிருந்தார். இணைய மையம் ஒன்றில் தற்செயலாய்த் தலையைத் திருப்பிப் பார்த்தால் ஒருவர் தமிழ்ச் செய்தி படித்துக் கொண்டிருக்கிறார். நான் பணிசெய்ய வந்த நிறுவனத்தின் கட்டுறுத்தலறையில் (Control Room) ஒருவர் “நீங்க தமிழா” என்கிறார். சேலத்துக்காரர்.
“இதோ இங்க பாருங்க. இவரும் தமிழ் தான்” என்று இன்னொருவரை அறிமுகம் செய்து வைக்கிறார். நான் ஈரோட்டைச் சேர்ந்தவன் என்று அறிந்ததும், “நானும் ஈரோடு ஆர்ட்ஸ் காலேஜ்ல தான் மூணு வருஷம் படிச்சேன். ஆனா சொந்த ஊர் கடலூர்” என்றார். “ஓ அப்படியா? உங்களுக்கு அன்புவைத் தெரியுமா? அவரும் அங்க தான் படித்தார். சிங்கப்பூர்ல இருக்கார்” என்றேன். சரியாய் பதில் சொல்வதற்குள் பணியழைப்பு வர ஓடிவிட்டார். வெளியூர்களில் இருந்து வந்து படிக்கும் அளவிற்கு ஈரோடு கலைக் கல்லூரியில் அப்படி என்ன இருக்கிறது என்று விசாரிக்க வேண்டும்.
தாராப்பூரின் வளர்ச்சிக்கு அடையாளமாய் இப்போது சைபர்-கபேக்கள் என்று சில இணைய மையங்கள் முளைத்திருக்கின்றன. அவை இருக்கும் கட்டிடங்கள் இன்னும் அழுக்குப் படிந்து தான் இருக்கின்றன. நான்கைந்து இணைய மையங்களுக்குச் சென்றும் பார்த்தும் எல்லா இடங்களிலும் விண்டோஸ் 98 தான் வைத்திருக்கிறார்கள். தானியங்கித் தமிழ் எழுத்துருக்கள் இதில் வேலை செய்யாதே. தானியங்கிப் பணம் வழங்கி இருக்கிறதா என்ற கேள்விக்கு, இரண்டு திசைகளில் எப்படிச் சென்றாலும் ஒரு கிமீ தொலைவில் ஒரு ‘ஐசிஐ’ வழங்கி இருக்கிறது என்றார்கள்.
சாலையோரம் விரித்த சாக்குப் பைகளின் மேல் பரப்பிய காய்கறிக் கடைகள் இன்னும் இருக்கின்றன. ஆலமர விழுதுகளோடு சேர்த்துக் கூடாரம் அமைத்து வைத்திருந்தார் ஒரு செருப்புத் தைக்கும் தொழிலாளி. தள்ளுவண்டியில் பழம் வைத்துக் கொண்டிருந்தவர், சிரமப்பட்டுக் கையாலேயே ஒரு இயந்திரத்தைச் சுற்றிச் சாறு பிழிந்து கொண்டிருந்தார். சாறிழந்த சக்கை அப்படியே சாலையில் விழுந்து கொண்டிருந்தது.
‘ஃபோம் foam பஞ்சுக் கடையொன்றில் ஒரு பெரிய குண்டாந்தடியை வைத்துக் கொண்டு பஞ்சையோ, ஃபோமையோ போட்டு அடி அடியென்று அடித்துக் கொண்டிருந்தார் ஒருவர். அப்படி அடித்த பஞ்சை வைத்துப் பெரிய மெத்தை ஒன்றைத் தைத்து நிரவிக் கொண்டிருந்தார்கள்.
மாதுளை ஒன்று எட்டு ரூவாய் என்று கேட்டுவிட்டு வாங்காமல் நடந்தேன். ஒரு கடை முன் கிடந்த சாக்கு மூட்டை மேல் இரு சிறுமிகள் அமர்ந்து கட்டிக் கொண்டு விளையாடிக் கள்ளமில்லா நட்பை வெளிக் காட்டிக் கொண்டிருந்தார்கள். பன்னிரண்டு வருடம் கழித்து இவர்கள் இங்கேயே இருப்பார்களா?
“ஊருக்கு வந்தபின் விரிவாகப் பேசுவோம்”, என்றேன் தோழியிடம். “ஜனவரியில் வந்துவிடுவோம்”.
ஓட்டல் சரோவருக்கு முன் இருக்கும் ஒரு எஸ்டிடி பூத்தில் இருந்து பேசுகிறேன் என்றபோது, “ஓ! எனக்குத் தெரியும். அங்கே தான் எங்கள் திருமண வரவேற்பு விழா நடைபெற்றது!” என்று சொன்னவரிடம், ‘சரியான நாத்தம் புடிச்ச ஊரு’ என்று முன்பு உணர்ந்ததைச் சொல்ல மனம் வரவில்லை.
உங்களுக்குத் தெரியுமா? காலைச் சூரியன் ஒளியில் குளிக்கும் போது இந்த ஊர் புத்துணர்ச்சி தருவதாகத் தான் இருக்கிறது.
“ஆமாம் உமா. நீயும் இங்கே இருந்திருந்தால் நன்றாகத் தான் இருந்திருக்கும்”, என்கிறேன்.
//This entry was posted on Tuesday, November 29th, 2005 at 11:54 am and is filed under வாழ்க்கை, பயணங்கள்//
பதிவும் அழகு. வகைப்படுத்தியதும் அதை விட அழகு..
lovely.
நன்றி பிரகாஷ்.
இப்போது தான் அன்புவின் ‘குப்பை’ இணைப்பு எடுக்கப் போகும்போது உங்களைப் பற்றிய விகடன் செய்தி பார்த்தேன். மேன்மேலும் சிறக்க, வளர வாழ்த்துக்கள்.
அழகாய் எழுதுகிறீர்கள், பொறாமையாய் இருக்கிறது. 🙂
செல்வராஜ்,
உங்க எழுத்துமட்டுமில்லை, ஆங்கிலச் சொற்களுக்குப் பதிலா பொருத்தமான
தமிழ்வார்த்தைகள் உபயோகிப்பதும் கூட அழகும் சுகமும்.
( எனக்கே புரியுதுன்னா பாருங்களேன்!)
வாசிக்க இதமாக இருந்தது செல்வா.
பத்ரி, சுதர்சன், துளசி, கார்த்திக், உங்கள் அனைவரது ஊக்கம் தரும் கருத்துக்களுக்கும் நன்றியும் மகிழ்ச்சியும்.
நன்றாகவிருக்கிறது செல்வராஜ். முக்கியமாய் சுற்றியிருப்பவை குறித்த உங்கள் அவதானங்கள்.
நல்ல, இனிமையான வெளிப்பாடு செல்வா!
தென்றலாய் இதமான ஒரு பதிவு.தாராப்பூரைவிட தோழியின் நினைவின் தாக்கம் அதிகமாய் தெரிகிறது. நினைவு தந்த இதம் வார்த்தைகளில்.
This is the beauty of life. Sometime, a place or an object or a word will rekindle fond memories(painful memories also) and definitely when it makes us feel about a person, the affection we had/have on the person alone will remain, not the pain. Very nice write up. The SCREENPLAY of your write up is fantastic
Really Nice..!!!
செல்வராஜ், பதிவோடு கொஞ்சம் பின்னால் போய் வந்தேன். 88-89 களில் அந்த வழியாக நிறைய பயணித்திருக்கிறோம். அடைத்துக் கொண்டு போகும் பேருந்துகள், சளசளவென்ற மராட்டி பாஷை, இதோ இங்கே இருக்கும் மும்பய்க்கும் தங்களுக்கும் சம்பந்தமே இல்லாத நிதானமான வாழ்க்கை. உரண் இப்பவும் பெரிதாக மாறியிருக்காது என்றே தோன்றுகிறது.
பதிவுக்கு நன்றி.
நிர்மலா.
அருமை!
வழக்கத்தைவிட வெகுஅழகு…
(ஏன் இந்த்முறை இவ்ளோ மெதுவா வந்தேன்னு தெர்ல:)
புறத்தீட்டர் (புரொஜெக்டர்)
தெரிவட்டை (மெனு)
‘அடைத்த பராத்தா’
உங்கள்கடன் பணிசெய்து கிடப்பதே…
வெளியூர்களில் இருந்து வந்து படிக்கும் அளவிற்கு ஈரோடு கலைக் கல்லூரியில் அப்படி என்ன இருக்கிறது என்று விசாரிக்க வேண்டும்.
எனக்குத்தெரிந்து அங்குதான் ஓரளவு கட்டுபடியான விலையில் அந்தக்காலத்தில் MCA மற்றும் சில பட்டபடிப்புகள் அனுமதி கிடைத்தது!
“நானும் ஈரோடு ஆர்ட்ஸ் காலேஜ்ல தான் மூணு வருஷம் படிச்சேன். ஆனா சொந்த ஊர் கடலூர்”நீங்கள் சந்தித்தது ராமுவாய் இருக்கலாம் … தெரியவில்லை!
nice , செல்வராஜ், தங்கமணி இருவரின் நடையும் சல்லென்று போகும். அழகு. பத்மாவின் உறுத்தாத கோபமும்…. ம்ம்ம்ம் எனக்கெல்லாம் வராது 🙂
நட்பை உணர்பவர்களால்தான், அதே நட்பை எத்தனை ஆண்டு கழித்தும்கூட maintain பண்ண முடியும்.
நினைக்கிற மாதிரியே எழுத்துக்களில் வடிப்பது சிலருக்கு மட்டுமே சாத்தியமாகும், உங்களுக்கு அது நன்றாக வருகிறது.
ஈரோடு என்ற பெயரைப் பதிவில் பார்த்தாலே சந்தோஷமாக இருக்கிறது!!!
அதே செல்வராஜ். எந்த ஊருக்குப் போனாலும் நல்லா எழுதறீங்க. சஹாரா,அண்டார்ட்டிகா மாதிரி எடத்துக்கெல்லாம் கம்பெனியில அனுப்ப மாட்டாங்களா? ;-).
அருள்
அனைத்து நண்பர்களின் அன்பான பின்னூட்டங்களுக்கும் ஊக்கமான வார்த்தைகளுக்கும் நன்றி. இது எனக்குப் பெரிதும் உற்சாகமளிக்கின்றது. மீண்டும் நன்றி, நன்றி.
அருள், அப்படி அனுப்பி வைத்தால் கூட ஒரு நடை போய்விட்டு வந்துவிடுவேன் என்று தான் தோன்றுகிறது:-). ஆனால் மாட்டார்கள்!
அன்பு, அவர் பெயர் ரமேஷ் (ராமுன்னு செல்லமாய்க் கூப்பிடுவீர்களோ?:-)), 89-92 என்று சொன்னதாக நினைவு.
ரொம்ப நல்லா எழுதுறீங்க.
நானுங்கூட ஈரோட்டுல….ஒண்ணும் பண்ணலைங்க!… இரண்டு மூணு முறை வந்திருக்கேன் அம்புட்டுதான். எங்க சித்தி அங்க இருக்காங்க. எளிமையான நடையில் அழகாய் இருக்கிறது உங்கள் எழுத்து.
செல்வா,
சில வரிகளை வெட்டியொட்டி ‘இதெல்லாம் பிடித்திருந்தது’ என்று சொல்ல நினைத்தேன் – அது உங்களின் இந்தப் பதிவைவிட நீண்டுவிடும் சாத்தியம் உள்ளதால் வேண்டாமென்று விட்டுவிட்டேன்.
அருள் சொன்னதையேதான் எனக்கும் சொல்லத் தோன்றுகிறது.
கல்வெட்டு பலூன்மாமா, மரம், கண்ணன், உங்களுக்கும் நன்றி.
Is there any alumini sites/info for Erode arts college ? Looks like lor of ppl are there in the web world now (inclding me)
சைஃபர், நீங்கள் அன்புவைத் தொடர்பு கொண்டால் ஈரோடு கலைக்கல்லூரி பற்றிய விவரங்கள் கிடைக்கலாம்.
About this post in Dinamalar’s Ariviyal AAyiram today :
http://www.dinamalar.com/2005Dec07/flash.asp
தினமலரில் வெளிவந்திருக்கும் சுட்டிக்கு நன்றி மாயவரத்தான். இப்போது தான் பார்க்கிறேன்.