தன்னச்சில் மெல்லச் சுழலுது காலம்
Jan 13th, 2006 by இரா. செல்வராசு
இரண்டு புள்ளிகளை வைத்து அவற்றினிடையே ஒரு நேர்க்கோடு வரையச் சொன்னால் சிறு குழந்தை கூட அழகாக வரைந்து விடும். நேர்க்கோடு எளிமையானது. அதனை வரைவதும் எளிமையானது. வரைகோட்டைப் பல வண்ணங்களால் அமைக்கலாமே தவிர வடிவம் என்பது அதற்கு ஒன்றே தான். அதே இரண்டு புள்ளிகளிடையே ஒரு நேரிலிக் கோட்டை வரையக் கிளம்பினால், வரம்பிலியாகக் கோடுகளை வரைந்து கொண்டே இருக்கலாம். நேரிலிக் கோடுகளின் சாத்தியங்கள் கணக்கில் அடங்காதவை.
வாழ்க்கையும் அதனையொட்டிய அனுபவங்களும் ரசனைகளும் கூட இப்படித் தான். ஆரம்ப நிலையில் ஒரு நேர்க்கோடாய் இருந்து புரிந்து கொள்ள எளிமையாகவும் சுளுவாகவும் இருக்கிறது. அது ஒரு குழந்தைக்கான புரிந்துகொள்ளலாய்க் குறுக்கிய வடிவம் கொண்டதாய் இருக்கிறது. அதுவே போதும் என்று நினைப்பவர்களுக்கு அந்த நிலையே ஒரு திருப்தியைத் தருகிறது. அதையும் தாண்டிச் செல்ல நினைப்பவர்களுக்கு நேரிலியாய்ப் பல அனுபவங்களைத் தந்து சுவை கூட்டுகிறது. இன்னும், ஒரு பரிமாணம் தாண்டிப் பல பரிமாண வெளியில் நோக்குகையில் நேரிலிக் கோடுகள் நேரிலி வடிவங்களாகி அவற்றின் பலக்கிய அழகைக் காட்டி ஆச்சரியப் படுத்துகின்றன.
காலச் சுழற்சியில் மாறிய காட்சியில் ஒரு அமெரிக்க இரவில் எழுதிக் கொண்டிருக்கிறேன். வெளியே குளிர். சென்ற வருடத்தை விட இந்த வருடம் சற்று மிதமான குளிர் தான். சில தினங்களுக்கு முன்னர் பனிக்கொட்டி வெட்ட வெளியில் வெண்மை விரிந்து கிடந்தது. சில நிமிடங்களே ஆனாலும் அன்று, பெற்ற பிள்ளைகள் பனியெறிதல் விளையாட்டில் குதூகலித்தது நிறைவாய் இருந்தது. கதிரவனைக் காண்பது அரிதாய் இருக்கிற காலம் என்றாலும் சமீபத்தில் வீசிய கதிரொளி பனியைக் கரைத்துச் சென்றுவிட்டது. காலம் சுழலும். மீண்டும் பனி வரும். பனியெறிதலும் பனிச்சறுக்கும் கூடவே வரும்.
இது ஒரு புத்தாண்டும் கூட. புதியது என்று காலத்தை மனிதன் வகைப்படுத்திக் கொண்டாலும் சலனமெதுவமற்றுச் சுழன்று கொண்டிருக்கிறது காலம். தனிச்சிறப்பானது ஒன்றுமில்லை என்றாலும் அகவாய்வு செய்துகொள்ளப் புத்தாண்டு ஏற்ற தருணம் என்று கொள்ளலாம் தான். எவ்வழியிற் செல்வதும் பரிபூரணச் சுகமாயில்லை என்கிற போது, செல்லும் வழியைச் சற்றே செப்பணிட்டுக் கொள்ளச் சுய ஆய்வுகள் உதவத் தான் செய்கின்றன.
மனித உறவுகள் பலக்கியனவாய் இருக்கின்றன. ஒரு குழந்தையாய் இருக்கையில் பார்த்த நேர்க்கோடுகள் வளர்கையில் சிலசமயம் நெம்பப்பட்டு நேரிலிகளாகின்றன. பார்த்துக் கொண்டிருக்கையிலேயே மாயமாய் மாறிப் பல வடிவுகள் காட்டுவதாய் இருக்கின்றன. ஆட்டக்களம் மாறி வேறுவெளிக்குக் கடத்தப் படுகின்றன. மாறிய களத்தின் ஆட்டக் குறைகள் தொடர்பு இடைவெளிகளை உருவாக்குகின்றன. அங்கே ‘நானென்ன செய்ய முடியும், செய்திருக்க முடியும்?’ என்று உயரக் கையை வீசிக் கையாலாகாத்தனம் காட்டுவதை விட ஏதேனும் செய்ய முற்பட வேண்டும். மேலும் மேலும் மண்ணில் புதைந்து போகாமல் தொடர்பைப் புதுப்பித்துக் கொள்ள முயல வேண்டும்.
அதீத எதிர்வினை என்பது உடலுக்கும் மனதுக்கும் உறவுக்குமே நல்லதல்ல. உயிர் இருக்கையில் வினை இருக்கும். வினை இருக்கையில் எதிர்வினை இருக்கும். விளைவுகள் இருக்கும். மறுக்கவியலாத கூற்றுக்கள். எதிரெதிர்ச் சக்திகளின் இழுவைகளில் அல்லலுறாதிருக்கச் சுயசக்தி பெருக வேண்டும். சுதந்திரம் பரவ வேண்டும். முரடாய் இருக்கத் தேவையில்லை. எதிர்புறத்திற்கும் மூச்சுவிட இடம் வேண்டும்.
பலக்கிய அனுபவங்களுக்கு இலக்கியம் ஆறுதலைத் தந்தாலும் ஒரு தெளிவைத் தருவதாயில்லை. ‘சொந்தமென்ன பந்தமென்ன, உன் தொழில் போர் செய்திருப்பது; சஞ்சலமடையாதே’ என்று கீதை ஒருபுறம்; ‘இன்னா செய்தாரை ஒறுக்க நன்னயம் செய்துவிடு’ என்று தமிழ்மறை மறுபுறம். நன்றே செய்து பின் இன்னா செய்தாரை எப்படி ஒறுப்பது? நன்னயமே செய்துவிடலாம் தான், பின்பு… முடிகிறபோது… என்று தான் மனம் சுற்றுகிறது.
சுற்றத்தில் புதிய பிறப்புக்கள் பற்றிச் செய்திகள் வந்து சேர்கின்றன. புதிய கோடுகளுக்குப் புள்ளிகள் தயாராகின்றன.
மெல்லச் சுழலுது காலம்.
அதீத எதிர்வினை என்பது உடலுக்கும் மனதுக்கும் உறவுக்குமே நல்லதல்ல. உயிர் இருக்கையில் வினை இருக்கும். வினை இருக்கையில் எதிர்வினை இருக்கும். விளைவுகள் இருக்கும். மறுக்கவியலாத கூற்றுக்கள். எதிரெதிர்ச் சக்திகளின் இழுவைகளில் அல்லலுறாதிருக்கச் சுயசக்தி பெருக வேண்டும். சுதந்திரம் பரவ வேண்டும். முரடாய் இருக்கத் தேவையில்லை. எதிர்புறத்திற்கும் மூச்சுவிட இடம் வேண்டும்.
நன்று. மூச்சு விட இடம் நிச்சயம் வேண்டும் எப்போதும்.
செல்வா,
உங்கள் தேடுதல் முயற்சியை அழகாய்ப் பகிர்ந்துகொண்டிருக்கிறீர்கள்.
உங்கள் அகவாய்வு நல்ல பலன்களையும், முக்கியமாக உங்களுக்கு மகிழ்ச்சியையும் தரட்டும்.
உங்களுக்குப் புத்தாண்டு, மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள்!
Made me to read it once more. ennappa, new year arambathile azhamana pathiva? effect of indian trip?
செல்வராஜ்,
நல்ல பதிவு. காலம் யாருக்காகவும் காத்திருப்பதில்லை.
அது பாட்டுக்கு மெல்ல நகர்ந்துகொண்டே இருக்கின்றது.
நேரிலிக்கோடு என்ற புது வார்த்தையைக் கற்றுக்கொண்டேன். நன்றி.
ஆமாம், நீங்கள் இப்போது பெங்களூரிலில்லையா? அமெரிக்கா திரும்பிவிட்டீர்களா?
உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்
செல்வராஜ், வழக்கப்படி சிந்திக்க வைத்து விட்டீர்கள் :-), நேரிலியே வாழ்க்கையை சுவையாக்கும் இல்லையா? வாழ்க்கை சொல்லி தரும் பாடங்களை விட இலக்கியம் எதையும் கற்றுதருவதில்லை.
பத்மா !எதிர்வினைகள் சிலருக்கு தேவையாய் இருக்கின்றன. நமக்கு அது தேவையில்ல என்னும்போது, நடப்பதை மெல்லிய புன்னகையுடன் ஏற்றுக் கொள்ள முடிகிறது. நிற்கும் நிலையில் உறுதி இருந்தாலும், யாராலும் நம்மை எதிர் திசையில் இழுக்க முடியாது, நம் மூச்சை பிறர் நிறுத்தவும் முடியாது. கீதையே இங்கு ஓரளவு சரி,”கடமையை செய்”, அடுத்த வரியை சிறிது மாற்றி – “பலன் எதுவாக
இருந்தாலும் சமமாக பாவி ” 🙂
ம்.
அனைவருக்கும் நன்றி, வாழ்த்துக்கள்.
சுதர்சன், ரொம்ப ஆழமா கருத்து சொல்லியிருக்கீங்க! 🙂
உஷா, மூச்சு விடுவதற்கு ‘எதிர்ப்புறத்திற்கும்’ இடம் கொடுக்க வேண்டும் என்று சொன்னேன். பத்மாவும் அதைத் தான் ஆமோதித்தார்கள் என்றே நினைக்கிறேன்.
துளசி, பெங்களூரில் இருந்து அமெரிக்கா திரும்பிவிட்டோம்.
கண்ணன், நன்றி. கிருஷ், அப்பப்போ இப்படி ஆழம் போகணும் தானே! 🙂 வாழ்க்கைங்க!
உஷா: மூச்சுவிட எதிர்ப்புறத்துக்கும் இடம் தேவை என்னும் பொருளிலும் ” every one needs some space, even a husband and wife” என்ற பொருளிலும் சொன்னேன். நிறைய இடத்தில் பாசம் அன்பு என்ற பெயரில் இழுத்து மூச்சுமுட்ட செய்வதும் தவறுதானே. நன்றி செல்வராஜ் விளக்கியமைக்கு.
செல்வராஜ்,
அமெரிக்க வாழ்க்கைச் சூழலில் தத்துவார்த்தமாக மாறீட்டீங்க. குட்டீஸுக்கு என் புத்தாண்டு வாழ்த்துக்கள்
செல்வா நல்ல பதிவு. சட்டென்று பழைய பழமொழிகளோடு சுருட்டிவிடக்கூடாது என்று படுகிறது.
நேரிலியாகப் பார்க்காமல் நீரில் கரைத்த(ந) நீல மைய்யைப் போல எல்லையிலியாகப் பார்க்கப் பயிலுங்களேன். 🙂
தாணு, கார்த்திக் நன்றி. எல்லையிலிப் படத்தை விதைத்து வேறொரு ஆழ்நிலை பற்றிக் காட்டி விட்டீர்கள். நீரில் மெல்லக் கலக்கும் நீல மை போல் இயல்பாய் வாழ்வூடே பயணிக்கலாம் தான். நடுவே முடுக்கி (stirrer) கலக்கி விடும்போது என்ன செய்வது? 🙂
நல்லதொரு பதிவு செல்வராஜ்…
//அதீத எதிர்வினை என்பது உடலுக்கும் மனதுக்கும் உறவுக்குமே நல்லதல்ல. உயிர் இருக்கையில் வினை இருக்கும். வினை இருக்கையில் எதிர்வினை இருக்கும். விளைவுகள் இருக்கும். மறுக்கவியலாத கூற்றுக்கள். எதிரெதிர்ச் சக்திகளின் இழுவைகளில் அல்லலுறாதிருக்கச் சுயசக்தி பெருக வேண்டும். சுதந்திரம் பரவ வேண்டும். முரடாய் இருக்கத் தேவையில்லை. எதிர்புறத்திற்கும் மூச்சுவிட இடம் வேண்டும்.//
சிந்திக்கவைக்கும் பதிவு.. யோசிக்கையில் இவையெல்லாம் இனிமையாகத்தான் இருக்கின்றன. ஆனால் இயல்பு வாழ்க்கையென வரும்போது பத்மா சொன்னது போல குடும்பத்திற்குள்ளேயே பினைப்புகளின் அழுத்தம் இறுக்கிப்போடுவதாகத்தான் இருக்கிறது.. எனக்கு என் பெற்றோர்.. என் குடும்பத்திற்க்கு நான் என..
ம்ம்ம்.. புதிய கோடுகளுக்குப் புள்ளிகள் தயாராகின்றன.