பழைய கடிதம் ஒன்று
Jan 30th, 2006 by இரா. செல்வராசு
கடிதங்களுக்கென்று ஒரு தனிக் கவர்ச்சி உண்டு. அதிலும் சின்ன வயதில் இருந்து பள்ளி நண்பன் எழுதிய கடிதத்தில் இருந்து பெரும்பாலானவற்றை இன்னும் சுமந்து திரியும் என்னைப் போன்றவருக்கு அதுவும் ஒரு அசையாச் சொத்துப் போல. இந்தியாவில் இருந்து திரும்பி வந்த இந்த முறை பழைய இரும்புப் பெட்டிக்குள் பொக்கிசமாய்ச் சேர்த்து வைத்திருந்த கட்டுக்களை எடுத்து வந்துவிட்டேன். வேண்டும் போது மீள்சென்று பார்வையிடலாம் என்கிற எண்ணமே ஒரு சுகந்தான். இத்தனையும் வைத்து என்ன செய்வது என்று எண்ணிச் சிலவற்றை எறிய முனைந்து பிறகு முடியாமல் மீண்டும் எடுத்துக் கட்டி வைத்துக் கொண்டவனைப் பார்த்த மனைவியின் பார்வையைக் குறித்தே ஒரு கடிதம் (கதை) எழுதலாம்! (திருமணத்திற்கு முன்பு ஆறு மாதங்கள் அநேகமாய் வாரமொன்றாய் எழுதிய கடிதங்கள் கூட ஒரு தனித் தொகுதியாய் பத்திரமாய் இருக்கிறது என்றே எண்ணுகிறேன் 🙂 ).
தங்கமணி – சுந்தரவடிவேல் இடையேயான கடிதங்கள் தனி வகையானவை. என்னுடைய, எனக்குவந்த கடிதங்கள் அந்த அளவிற்குச் சென்று ஆய்ந்ததில்லை. டீசே தமிழன் தனக்கு வந்த வெவ்வேறு வகையான கடிதங்களைப் பதிவு செய்திருக்கிறார். அவை வேறு வகை. ஆயினும் சுவையானவை. எல்லா வகைக் கடிதங்களுக்கும் பொதுமையான ஒன்று உள்ளதென்றால் அது வெறுங்காகிதம் வழியாய் உணர்வுகளை அனுப்பி உள்ளம் விடுகிற தூது தான். அதனால் தான் பழைய கடிதங்களானாலும் பழையதாகிவிடாத உணர்ச்சிகள் எப்போதும் பசுமையான நினைவுகளை மீட்டெடுக்கின்றன.
அண்மையில் ஜப்பான் கொரியா பயணக்குறிப்பு எழுதுவதற்கு நான் எழுதிய ஒரு கடிதத்தைத் தேடி என் கிடங்கைக் குடைந்து கொண்டிருந்ததில் கண்ணில் பட்டது நண்பர் கிருஷ்ணமூர்த்திக்கு எழுதிய கடிதம் ஒன்று. என்னுடையதை நானே பிரதி எடுத்து வைத்துக் கொண்ட வெகு சில கடிதங்களில் அதுவும் ஒன்று. வாழ்வின் முக்கிய தருணமொன்றில் எழுதப்பட்ட கடிதம் அது. அதில் இருந்து ஒரு பகுதி கீழே:
* * * *
லூயிவில்
05 ஜூன் 94
இனிய நண்பர் கிருஷ்ணமூர்த்தி,
…நன்றாய் இருக்கிறேன் நான். உடலும் உள்ளமும் உறுதியாகவே இருக்கின்றன. வழக்கம் போல் கல்லூரி சென்று வந்து கொண்டிருக்கிறேன். …
இந்தியா வந்து சென்ற பிறகு, என்னுள் சில மாற்றங்களை என்னால் உணர முடிகிறது. ‘மாற்றம்’ என்னும் போது, அடிப்படை அமைப்பு பற்றிக் கூறவில்லை. மனதின் சக்தி இன்னும் கூடிவிட்டாற் போல ஒரு உணர்வு. என்னை நானே கூர்ந்து கவனித்துக் கொள்ளும் தன்மை அதிகரித்துவிட்டாற்போல; மனமோ, உடலோ சோர்வுற்றால், அதனை அடையாளம் கண்டுகொண்டு தெளிய முடிகிற திறமை; எனக்கு நானே ஊக்கம் சொல்லிக் கொண்டு, நல்லனவற்றைப் பாராட்டிக் கொண்டு,… நடப்பன எல்லாமே இயல்பும் நன்மைக்குமே என்பதில் எனக்குள்ள நம்பிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிற நிலை.
இங்கே செய்தித்தாளில் ஒரு நாள் பார்த்தேன். ஒரு advt. “Dont just sit there. Do something – walk, run, swim, cycle, just move. It’s the first step to feeling great!” என்று. அதே போலத் தான் ‘இயங்கிக்’ கொண்டிருக்கிறேன் நான். ஓய்வற்ற இயக்கம் இயற்கையின் இயல்பு என்று புரிந்து கொள்ள முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். (ஓய்வு என்பதை உடல் ஓய்வாய்க் கூறவில்லை. மன ஓய்வை, மனச்சோர்வைக் கூறுகிறேன்).
‘எதுவும் குழப்பங்கள் இல்லையே’ என்று கேட்டிருந்தீர்கள். … ஒரு காலத்தில் குழப்பங்கள் இருந்தது உண்மை தான் .ஆனால், நான் அந்தக் குழப்பங்களைக் கண்டு பயப்படவில்லை. சுதந்திரமாய் எண்ணங்களை என்னுள் விவாதிக்க அனுமதித்தேன். உண்மையில் தெளிவாய் இருக்கிறேன். வாழ்க்கையை இரசிக்க ஆரம்பித்து விட்டேன். இனி என்ன நிகழ்ந்தாலும், அது எந்த விஷயமாய் இருந்தாலும் அது என்னைப் பெரிதும் பாதிக்காது என்றே எண்ணுகிறேன். அப்படியே பாதித்தாலும், என்னையே கவனித்துக் கொண்டு விரைவில் சரிநிலைக்கு வர என்னால் இயலும் என்றும் எண்ணுகிறேன். …
* * * *
ஒரு சுய ஆய்விற்கும் சுய ஊக்கத்திற்குமான தேவையை அன்று இந்தக் கடிதம் பூர்த்தி செய்திருக்கிறது. மாறிய காலங்களில், மாறிய கோலங்களில், மீண்டும் அதனை நினைவூட்டிக் கொள்வது தனிப்பட்ட முறையில் எனக்கு நன்றாக இருக்கிறது.
//சின்ன வயதில் இருந்து பள்ளி நண்பன் எழுதிய கடிதத்தில் இருந்து பெரும்பாலானவற்றை இன்னும் சுமந்து திரியும் என்னைப் போன்றவருக்கு அதுவும் ஒரு அசையாச் சொத்துப் போல. //
செல்வராஜ், ஒரு பெட்டி இருக்கிறது நான் பெற்றதும், எழுதியதும். அந்தரங்கமான, பொதுத்தளத்தின் மொழியில் இல்லாத கடிதங்களை என்ன செய்வது? ஆனால் நிச்சயம் எந்தவித விவாதத்திலும் அடங்கமுடியாத தொலைதூரக் குயிலொன்றின் குரல் போல, மனதை நிரவும் வேப்பம் பூவின் மணம்போல தோன்றுகிறது அவைகளைப் படிக்கையில்.
எதையாவது எடுக்க உட்கார்ந்தால் பழைய கடிதங்களினுள்ளும், நாட்குறிப்புக் கட்டுக்குள்ளும் அமிழ்ந்து போய்விடுவேன். எத்தனை முறை படித்தாலும் மீண்டும் உள்ளே இழுத்துப் போடுபவை அவை.
நன்றி செல்வராஜ்!
Relived those moments! It rekindled lot of memories. I think I wont have sleep this night!
செல்வராஜ்
எனக்கு சுமையாகிப்போகும் சில பொழுதுகள் என் சகோதரனின் கடிதம் கண்டால் இலேசாகிவிடும். மின்மடல்/ தொலைபேசி வந்ததன் ஒரு நட்டம் கடிதங்கள் காணாமல் போனதுதான்.
Selvaraj,
Reading letters from the past is indeed a pleasure. But it has never occurred to me to make copies of my letters. I don’t write many letters now and so I can’t start doing that anymore!
நண்பர்களுக்கு நன்றி. பலருக்கும் இப்படிக் கடிதப்பிரியம் இருப்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.
தங்கமணி தனிப்பட்ட மொழியின் சுகத்தைப் பகிர்ந்து கொள்ள முடியாதெனினும் பின்சென்று காண்பது சுயத்திற்குச் சுகம் தருவது தானே.
சுந்தரவடிவேல் சொன்னது போல கடிதங்களோடு நாட்குறிப்புக் கட்டும் சேர்ந்துகொள்ளும். ஊரில் இருந்து வரும்போது அதையும் எடுத்து வந்துவிட்டேன். ஆரம்பத்தில் ஒரு குயர் நோட்டில் ‘இன்று அங்கு சென்றேன். இதைச் செய்தேன்’ என்று சும்மா எழுதி வைத்தது கூடப் படிக்க இதமாய் இருக்கிறது. காலப்போக்கில் ஏற்பட்ட மனவளர்ச்சி, முதிர்ச்சி, சுய அழுக்குகள் என்று எல்லாவற்றையும் நினைவுறுத்திக் கொள்ள உதவுகிறது. அவசர வாழ்க்கையில் நாட்குறிப்புப் பழக்கம் (வருடத்தில் சில நாட்கள் தவிர) விட்டுப் போய்க் கொண்டே இருக்கிறது.
மின்மடல், தொலைபேசி வளர்ச்சியால் கடிதங்கள் மறைவதும் எனக்குப் பெரும் சோகம். பிறகெப்படி பல வருடங்கள் கழித்து பத்மா போல் அண்ணன் கடிதம் எடுத்துப் படித்து ஆறுதலடைவது? கிருஷ்ணமூர்த்தி, தந்தையின் கடிதங்களை மீண்டும் எடுத்துப் படித்தீர்களா? பொறுமையாய் ஒரு நாள் படியுங்கள்.
நித்யா, ஓரிரு முக்கிய கடிதங்கள் தவிர என்னிடமும் நகல்கள் இல்லை. இருந்தும் எழுதியவை வீட்டிலும், நண்பர்களிடம் சிலரிடத்தும் இருக்கக் கூடுமே.
//இந்தியாவில் இருந்து திரும்பி வந்த இந்த முறை பழைய இரும்புப் பெட்டிக்குள் பொக்கிசமாய்ச் சேர்த்து வைத்திருந்த கட்டுக்களை எடுத்து வந்துவிட்டேன். வேண்டும் போது மீள்சென்று பார்வையிடலாம் என்கிற எண்ணமே ஒரு சுகந்தான். இத்தனையும் வைத்து என்ன செய்வது என்று எண்ணிச் சிலவற்றை எறிய முனைந்து பிறகு முடியாமல் மீண்டும்//
இதே இதே!!என் நிலையும் இதே,
பழைய கடிதங்களை வைத்து ஒரு நீள் கதையே எழுதலாம்
அவைகளைப் படிக்கும் போது எத்தனை சுவாரஸ்யமாய் இருக்கிறது!!
மீனா.
Interesting to see that my husband is not alone in saving these old boxes. But it is a special feeling when you read them again, sometimes it makes you wonder whether it was you who wrote that letter.
As always good one,
Vimala
மீனா, வாங்க. ரொம்ப நாளாக் காணாமப் போயிருந்த உங்களைப் பழைய கடிதம் மீட்டுவிட்டது 🙂
விமலா, நன்றி. வெகு உண்மை.
செல்வராஜ்
ரொம்ப தாமதமாக உங்கள் `கடிதங்கள்’ வாசிக்கிறேன். பழைய கடிதங்கள் பற்றிய அநுபவப் பார்வை நன்றாக இருக்கிறது. உங்கள் தொடர்கதையும் இனிமேல்தான் படிக்கப் போகிறேன்
கடிதம் எழுதுவது ஒரு கலை . ஜவகர்லால் நேரு அவர்கள் தன் மகளுக்கு எழுதிய கடிதம் ஒரு வரலாறு படைத்தது காலமெல்லாம் அழியாத சொத்தாக உள்ளது .
கடிதம் எழுதும்பொழுது நம்மை அறியாமல் ஒரு ஆர்வம் உண்டாகி மகிழ்வினைத் தரும் . கடிதம் எழுதும்
பண்பாடு குறைந்து தொலைபேசியில் பேசி கடிதம் எழுதும் பழக்கம் மறைத்து வருவது நல்லதல்ல .