வாழ்க்கை வீரன் கல்லறை
Mar 2nd, 2006 by இரா. செல்வராசு
கொடும்பகை அவற்றொடு
கடும்போர் புரிந்திடக்
குதிரை யானையேறிக்
கைவேலெறிந்து
கூர்வாள் சுழற்றிச் சமராடுகையிற்
கிழிந்து வலித்ததென்
உடல் மட்டும் தான்.
கூடவிருந்த கூட்டம் ஒன்று
காலடிக் கம்பளமுருவிக்
காய்ந்த வஞ்சங்கொண்டு
குறுவாள் பின்னெழுப்பிக்
குத்துகையில் நறுக்கென்று
வலிக்கும்
உள்ளமுஞ் சேர்ந்து.
இடிந்து போயினுமிவை
இச்சகத்தில் இயற்கையெனக்
காயங்கள் சுயமாற்றித்
துயர்
துச்சமென் றுதறியெழுந்து
நிலைத்து நிற்க முயலுகையில்
அச்சோ பாவமென
இச்சுச்சுக் கொட்டியொரு கூட்டம்
இரக்கக்கழிவு காட்டியே
கொன்றுவிட்டதென் உயிரை.
இருந்தும் என் கல்லறையில்
எழுதிவைத்தேன்
இவனொரு வீரன் என்று.
இறந்தவனைப் புதைத்துவிட்டு
இனியும் நடப்பேன்
நெஞ்சம் நிமிர்ந்து.
//அச்சோ பாவமென
இச்சுச்சுக் கொட்டியொரு கூட்டம்
இரக்கக்கழிவு காட்டியே
கொன்றுவிட்டதென் உயிரை.//
நல்லாருக்கு கவிதை செல்வராஜ்!
நன்றி தங்கமணி. நீங்கள் சொல்லியிருப்பது இன்னும் மகிழ்ச்சி தருகிறது.