பேபி டாலர் மில்லியன்
Mar 1st, 2006 by இரா. செல்வராசு
“மோ குஷ்லா என்றால் என் கண்ணே… என் ரத்தமே… என்று அர்த்தம்”
எச்சரிக்கைக் குறிப்பு: மில்லியன் டாலர் பேபியின் கதை இங்கு வேறொரு கோணத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. படம் பார்க்காதவர்கள் கதை தெரிய வேண்டாம் என்று எண்ணினால் மேற்கொண்டு படிக்க வேண்டாம். தெரிந்தாலும் பரவாயில்லை என்று எண்ணினால் மட்டுமே தொடரவும்.
“மோ குஷ்லா என்றால் என் கண்ணே… என் ரத்தமே… என்று அர்த்தம்”. ஆக்ஸிஜன் குழாயை அகற்றும் முன் தலையைக் கோதி முத்தமிட்டு மென்மையாகச் சொன்னார் ஃப்ரேங்கி. என்னால் பேச முடியவில்லை. இப்போது பேசவும் ஒன்றுமில்லை. நன்றியோடு அவரைப் பார்த்தேன்.
முன்னங்கால்களை இழந்த என் நாய்க்குச் சிறுவயதில் தந்தை செய்த வைத்தியத்தை எனக்குச் செய்யச் சொன்னேன். எத்தனை போராட்டம் இதற்கு? முகத்தில் வேதனையோடு பார்த்தார். தான் எழுதுகிற கடிதங்கள் எல்லாமே திரும்பி வந்துவிடுகிற நிலையில், தன் மகளை விட்டு விலகிவிட்ட துயரைப் பல்லாண்டுகளாகப் பட்டுக் கொண்டிருக்கும் இவரை, என் வேண்டுகோள் பெரும் மனப்போராட்டத்திற்கு ஆட்படுத்தியிருக்கும் என்று உணர்கிறேன். ஆனால் என் நல் நினைவுகளை, வாழ்க்கையை இழக்க நான் தயாராய் இல்லை. என் நாவைக் கடித்து நினைத்ததைச் செய்துகொள்ள வேண்டுமென்றால் கூட நான் சித்தமாய் இருந்தேன். படிப்படியாய் என் சந்தோஷங்களை இழந்து கொண்டேயிருக்க நான் விரும்பவில்லை.
இதுநாள்வரையிலே எல்லாவற்றையும் பார்த்துவிட்டேன். எல்லா இடங்களுக்கும் சென்றுவிட்டேன். நினைத்ததைச் சாதித்துவிட்டேன். ‘மோ குஷ்லா, மோ குஷ்லா’ என்று எனக்கு அர்த்தம் தெரியாத கேயிலிக் மொழிச் சொற்றொடரை உரக்கக் கத்தி உற்சாகமூட்டிய கூட்டங்களைக் கண்டு உன்மத்தம் அடைந்திருக்கிறேன். இதை விட என்ன கிடைக்கும் எனக்கு?
தினமும் இங்கு வந்திருந்து யீட்ஸின் கவிதைகளைப் படித்துக் காட்டி என் மீது அன்பு காட்டிக் கவனித்துக் கொள்ளும் இவர் எனது ஆசான். குரு. என்னைக் கவனித்துக் கொள்ளப் பெற்றவள் வருவாளென்று நம்பினேன். வந்தாள் ஒரு நாள் வக்கீலோடு. வந்தவளின் பிரியம் என் சொத்தின் மீது மட்டுமே இருந்தது என்பது வேதனையாய்த் தான் இருந்தது. பத்திரத்தில் ஒப்பமிடக் கைகள் வராதம்மாவென்று வாயில் பேனாவைத் துணிக்கச் சொன்ன சகோதரியின் அன்பு தான் என்னே! சிறையில் இருந்து வந்தவன் சகோதரன். என்னைப் பார்க்கவென்று வந்துவிட்டு, ஒரு வாரமாய் இன்பச் சுற்றுலாவாய் ஊர்சுற்றிக் கொண்டிருந்திருக்கிறார்கள்! இனி இப்பக்கம் வராதீர் என்று துரத்தி விட்டேன். சொட்டிய கண்ணீருடன் தொலைந்தாள் என் தாய். நிச்சயம் மகளுறவு கெட்டது என்று சொட்டவில்லை அந்தக் கண்ணீர் என்று மட்டும் எனக்குத் தெரியும்.
இதனாலெல்லாம் எனக்கு மனக்காயமாகுமோவென்று தவித்தபடி வெளியே என் ஆசான். இவரின் அன்பையும் கருணையையும் என்னவென்று சொல்லுவது?
“கருணையற்ற மனிதா!” என்றேன் ஒருநாள் சிரித்தபடி. பிறகு?
“நீ போட்டியில் வெற்றி பெற்றால் தானே சொல்கிறேன் என்றேன்?” என்கிறாரே!
என் கால்களை வெட்டி விட்டார்கள். அசைய இயலாமற் படுத்த நிலையில் “மோ குஷ்லா என்றால் என்ன அர்த்தம் என்று இன்னும் சொல்லவேயில்லையே” என்று ஃப்ரேங்கியிடம் கேட்டேன்.
தவறு செய்துவிட்டேன். நான் திரும்பி இருக்கக் கூடாது. எதிராளியை வீழ்த்தி விட்டோம் என்ற மகிழ்வில் நடுவர் முடிவை ஏற்று, தற்காற்கும் கைகளைக் கீழே இறக்கி இருக்கக் கூடாது. எத்தனை முறை படித்துப் படித்துச் சொல்லியிருக்கிறார்?
“எப்போதும்… எப்போதும் உனது உடலைக் காத்துக் கொள்” என்று! தவறு செய்துவிட்டேன். அதருமமாய், முதுகுகாட்டியிருந்தவளைக் குத்தியது அவள் தவறு தான். இருந்தும் என்ன? நானல்லவோ கிடக்கிறேன் படுக்கையில்? முதுகெலும்பு கூழாய்ப் போய்விட்டது. என்னை கவனித்துக் கொள்ளவும் இனி என்னால் இயலாதே.
லாஸ் வேகாஸிற்கு விமானத்தில் சென்று சாலைப்பயணமாய்த் திரும்பலாம் என்று சொன்னபடியே நடக்கிறது. விந்தை தான். மருத்துவ வண்டியில் கூடவே இருக்கிறார் ஃப்ரேங்கி.
வென்றுவிட்டோம் என்று திரும்பிய போது நடுவரையும் தாண்டிப் பின்னிருந்து அவள் குத்தியதில் நிலை தடுமாறித் தரையில் விழுகிறேன்.
லாஸ் வேகாஸில் கடினமான போட்டி தான். இருந்தும் நான் தயாராகவே இருக்கிறேன். எதிராளி நியாயமாகப் போரிடாதவளென்று தான் என் ஆசான் கடைசி வரை இவளுடன் போட்டிக்கு ஒத்துக்கொள்ளவில்லை. ஆனால், இப்போது நான் தயார்.
வெற்றிகள் வந்தென்னைச் சேருகின்றன. பல நாடுகள் பல ஊர்கள் என்று பயணம் செய்து கோப்பைகளைக் குவிக்கிறேன். ஆசான் பரிசாய்க் கொடுத்த கனச்சட்டையில் இருந்த “மோ குஷ்லா”வைப் பார்த்துக் கூட்டம் ஆர்ப்பரிக்கிறது.
முகம் கிழிந்து மூக்குடைந்து சேர்த்து வைத்ததில் ஆசை ஆசையாய் அம்மாவுக்கு வீடு வாங்கினேன். சிரமப்பட்டிருக்கும் என் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் என்று உள்ளூர ஆசை. என் ஆசானையும் அழைத்துக் கொண்டு அம்மாவிடம் கொடுக்கச் சென்றேன். ஆனால்?
என் ஆசையோ அன்போ புரியவில்லை இவர்களுக்கு. ஏன் வீடு வாங்கினாய், பணமாகக் கொடுத்திருக்கலாமே? வீடு இருந்தால் அரசு தரும் மானியத்தை இழந்து விடுவேனே என்கிற கவலை தான் அம்மாவுக்கு. அதற்கும் சேர்த்துமாக நான் பணம் அனுப்புகிறேன் என்று சொன்னேன். ஹும்… எனது வெற்றியில் எனது சாதனைகளில் இவளுக்குப் பெருமையில்லை. என் அன்பு இவளுக்குப் புரியவில்லை.
“யாராவது நல்ல ஆளாப் பார்த்துக் கட்டிக்கிட்டு லட்சணமான பொண்ணா இருக்கப் பார்”, அம்மாவின் குரலும் ஏளனப் பார்வையும் தாக்க வெளியே வந்தேன். நெஞ்சில் சோகம் வழிவதைத் தவிர்க்க முடியவில்லை.
வழியில் ஆசானிடம் சிறு வயதில் தந்தையோடு இருந்த நாட்களை நினைவு கூர்ந்தேன். முன்னங்கால்களை இழந்த நாயொன்றை நான் வைத்திருந்ததும் நினைவுக்கு வந்தது. பாவம், ஒரு அறையில் இருந்து மற்றொன்றிற்குச் செல்ல இழுத்துக் கொண்டு கிடக்கும். ஒரு நாள் அதனோடு வெளியே சென்ற தந்தை திரும்பி வரும்போது நாய் வரவில்லை. அவர் வண்டியின் பின்புறம் இருந்த கடப்பாறை தெரிந்தது. நான் எதுவும் கேட்கவில்லை.
“நல்ல எலுமிச்சை வெதுப்பினிப்பு (லெமன் பை) கிடைக்குமிடம் எனக்குத் தெரியும்” என்று என் ஆசானை அழைத்துச் சென்றேன். இப்படி ஒரு நல்ல இனிப்பிற்காக ஆசைப்படுபவர் இவர் என்று தெரியும். ஆனந்தமாய் அனுபவித்துச் சுவைத்தார். அதைப் பார்ப்பதற்கே பெரும் மகிழ்ச்சியாக இருந்தது. நாம் அன்பாய்க் கொடுப்பதைப் பிறர் விரும்பி ஏற்றுக் கொள்வது எவ்வளவு சுகம்?
இன்னும் ஒரு பழைய வீட்டில் வசிக்கிறேன் என்பது என் ஆசானுக்கு ஆச்சரியமாய் இருக்கிறது. என் அம்மாவுக்கு வீடு வாங்கப் பரிசுப் பணத்தைச் சேர்த்து வைத்துக் கொண்டிருக்கிறேன்.
ஆறு சுற்றுச் சண்டைகளுக்கு வந்துவிட்டேன். அங்கும் வெற்றிகள் குவிகின்றன. நான்கு சுற்றுச் சண்டைகளில் வெற்றி சுலபமாகக் கிடைக்கிறது. முதல் சுற்றிலேயே எதிராளிகளை வெற்றி கொள்கிறேன். இதற்கெல்லாம் என் ஆசானின் பயிற்சியே காரணம் என்று நான் நினைக்கிறேன். வெற்றி பெற வேண்டும் என்று எனக்கும் வெறி. இருந்தும் இவரை விட்டுவிட்டு வேறு மேனேஜர்களிடம் நான் செல்லப் போவதில்லை. இவரே என் ஆசான். கடைசிவரை. அடுத்த நிலைக்கு நான் எப்போது தயார் என்று இவர் நினைக்கிறாரோ அதுவரை நான் பொறுமையாக இருப்பேன்.
இருந்தும் என்னுடைய முதல்ச்சண்டைக்கு நான் தயாராக வேண்டும். அழைத்துச் சென்றவன் சரியானபடி ஊக்கம் கொடுக்கவில்லை. அடிவாங்கிக் கொண்டிருக்கிறேன். என்ன செய்யவேண்டும் என்று சரியான திட்டங்கள் சொல்லவில்லை. எனக்குக் கலவரமாய் இருக்கிறது. நான் தோற்க வேண்டும் என்றே என்னை அழைத்து வந்திருக்கிறான். எதிராளியின் வெற்றியில் இவனுக்கு லாபம் இருக்கிறது. கூட்டத்தின் மூலையில் பார்த்துக் கொண்டிருக்கிற என் ஆசான் ஓடி வருகிறார். தானே எனக்குக் குருவென்று இடையில் நுழைந்தவரை நான் ஏற்று ஆமோதிக்கிறேன். அவர் கொடுக்கிற பயிற்சியின்படி அடித்து வீழ்த்துகிறேன் எதிரியை. என் முதல் வெற்றி. என் முதல் சண்டை. ஆனந்தத்தில் கட்டிக் கொள்கிறேன் என் ஆசானை.
அருமையாகச் சொல்லித் தருகிறார். கிடைத்த நேரமெல்லாம் நானும் பயிற்சி செய்கிறேன். காலசைவுகள் பயிற்சியற்ற பிற நேரங்களிலும் தொடர்கின்றன. படிப்படியாய் அனைத்தும் கற்றுக் கொள்கிறேன். “ஒரு சண்டைக்கு நான் தயாராகி விட்டேனா?” என்று கேட்கிறேன். பயிற்சிக் கூடத்தில் இருந்த எவரையோ அழைத்து “உனக்குச் சண்டைக்கு ஒரு ஆள் வேண்டுமா? இதோ இவள் தயார். பேசிக் கொள்ளுங்கள்” என்று போகிறார். “அது தான் நான் ஒத்துக்கொண்டது. பயிற்சி அளிப்பேன். ஆனால் சண்டைக்கு அழைத்துச் செல்ல வேறு ஆள் கிடைத்தவுடன் நான் ஒதுங்கிக் கொள்வேன் என்றேனே”, என்கிறார். தயக்கத்துடன் பார்க்கிறேன்.
ஆறு மாதங்கள் ஆகியிருக்கிறது. எனக்குப் பயிற்சி அளிக்கச் சம்மதித்து விட்டார். அன்று எனக்குப் பிறந்த நாள்.
“முப்பத்தியிரண்டு வயதானவள்; ஒரு பெண்; எப்படிக் குத்துச்சண்டை கற்றுக் கொள்ள முடியும்” என்று எடுத்தெறிகிறார். உடைந்து போகிறேன். இருந்தும் தளர்வதாயில்லை நான். “என் தந்தை இறந்து விட்டார். என் அன்னை அதீதக் கனமாய்க் கிடக்கிறார். என் சகோதரன் சிறையில். உதவியின்றிச் சகோதரிகள். ஒரு ஓட்டல் கடையில் பணியாளராய் வேலை. இது ஒன்று தான் என் கனவு. இல்லாவிட்டால், நானும் ஊரைப் பார்த்துச் சென்று ஏழ்மையிலும் சோகத்திலும் உழன்று கொண்டிருக்கலாம். அது வேண்டாம் என்று தான் ஒரு வெறியோடு கற்றுக் கொள்ள முனைகிறேன்”, என்று கேட்கிறேன்.
சாப்பிட வந்தவன் மிச்சம் வைத்த கறித்துண்டை ‘என் நாய்க்கு’ என்று சொல்லித் துடைத்துப் பத்திரப்படுத்தி வீட்டிற்குச் சென்று எச்சில்கறி சாப்பிடுகிற நிலை இவருக்கு எப்படித் தெரியும். “தயவு செய்து என்னை ஏற்றுக் கொள்ளுங்கள்!”
இருந்தும் இவரை நான் விடுவதாயில்லை. அவரது பயிற்சிக் கூடத்திலேயே சேர்ந்து கொண்டேன். நானாக ஏதோ செய்து கொண்டிருப்பதைப் பார்த்து இவருடைய கூட்டாளி உதவ முன்வருகிறார்.
ஃப்ரேங்கி டன் குத்துச் சண்டைப் போட்டியொன்றில் திறம்படப் பயிற்சி அளிப்பதைப் பார்க்கிறேன். பயிற்சி பெற்றால், இவரிடம் தான் பெற வேண்டும். “ஐயா, எனக்குக் குத்துச் சண்டை சொல்லித் தருவீர்களா? எனக்குச் சற்றுப் பரிச்சயம் இருக்கிறது” என்கிறேன். “பெண்களுக்கெல்லாம் நான் சொல்லித் தருவதில்லை” என்று பொருட்படுத்தாமற் செல்கிறார். வலிக்கிறது எனக்கு.
ஒரு மிசௌரிக் கிராமத்தில் இருந்து கனவுகளைச் சுமந்து கொண்டு பட்டணம் நோக்கி வந்திருக்கிறேன்.
என் பெயர் மேக்கி ஃபிட்ஸ்ஜெரால்ட்.
u took me thru the journey again selva.
-Mathy
செல்வராஜ்: கருணைக்கொலை மன நிலையை பற்றி எழுத வேண்டும் என்பது என் கனவாகவே இருக்கிறது. இதை நேரில் பார்த்தபோது மனப்போராட்டங்களும், அதன் சாதக பாதகங்களும் நன்றாகவே தெரிந்தது. நான் எழுத நினைத்துள்ள பல விஷயங்களில் அதுவும் ஒன்று.
திரைப்படம் பார்த்தபோது அமந்தை மீண்டும் பாதித்தது. இன்று உங்கள் பதிவும். மிக நன்றாக எழுதுகிறீர்கள்.
நன்றி மதி. படம் என்னிலும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது.
பத்மா, நீங்கள் எழுதுவதை எதிர்பார்க்கிறேன். நிச்சயமாய் இரு புறங்களிலும் ஊசலாடும் உணர்ச்சிகளைத் தரக்கூடிய விதயங்களில் இதுவும் ஒன்றுதான். படத்தோடு சம்பந்தப்படாத இன்னொரு விதயம் பற்றியும் யோசிக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருக்கிறேன் – உயிர் எப்போது தொடங்குகிறது?
Selvaraj,
Good one. I always have difficulty following things in reverse (did not get the movie Memento at all), and so I ended up reading this post backwards. Just curious, did you write it the way it is posted or started at the end?
அந்தப் படத்தில் நடக்கும் அந்தக் கருணைக் கொலைதானே மையப் புள்ளியாய் இருக்க வேண்டும். உண்மையான அன்பு என்பதே அதுதானோ என்ற கேள்விக்குரிய பதிலைத்தேடுவதே அப்படத்தின் மூலம் என்று நினைக்கிறேன். ஆனால் நீங்க சொன்ன பாணி அவளின் ஆசைகள், முயற்சிகள் பற்றி மட்டுமே இருப்பதாகத் தெரிகிறதே?