Feed on
Posts
Comments

மலையின் மறுமுனைக்குச் செல்லப் பாலம் தவிர,கம்பித் தொங்கு வண்டியொன்றும் (Cable Car) இருந்தது. இதன் வழியே செல்லும் போது தூரத்தில் தெரியும் தொங்குபாலம் அழகாகக் காட்சியளிக்கிறது. ஆனால், இந்தப்பயணம் சுமார் மூன்றே நிமிடங்களில் முடிந்து விடுகிறது. எங்கிருந்தோ ஒரு சிகப்புஹெலிக்காப்டர் உயரத்தில் பறந்து சென்றது.

Colo5_1580.JPG

மறுமுனையில் பெரிதாய் ஒன்றும் இல்லை. Petting Zoo என்று ஒரு சிறுவர் மிருகக் காட்சி சாலை. ஒருபட்டியிலே கடவைச் சாத்தி ஒரு ஐந்தாறு செம்மறி ஆடுகளை சுற்ற விட்டிருந்தார்கள். பட்டியும் மேய்கிற ஆடுகளும் இந்த நாட்டிலே சுற்றுலாக் காட்சிகள் என்பதே ஒரு வேடிக்கை தான். இப்போதெல்லாம்தமிழகத்திலும் கூட நகர்ப்புறத்துக் குழந்தைகளுக்கு இது அரிய காட்சியாகத் தான் இருக்கும். ஆடுகள் தவிர, சிறு குதிரை மாதிரி இருந்த இரண்டை, குழந்தைகளின் சவாரிக்கு வைத்திருந்தார்கள். “Burr Ride” – “பர்”என்று அழைக்கப் பட்ட அந்தக் குதிரைகள் ஒரு மினி-அளவில் இருந்தன. (ஒருவேளை “பரி”யில் இருந்து ஈற்றிகரம் கெட்டுப் “பர்”ஆகியிருக்கலாம்! 🙂 )

Continue Reading »

“அமெரிக்காவில் எங்கு சென்றாலும், எல்லாம் ஒரே மாதிரி தான் இருக்கிறது” என்று குறைபட்டுக் கொள்பவர்களைப் பார்த்தால், “ஏனுங்க, ஒரு நடை கொலராடோ பக்கம் போயிட்டு வந்து அப்புறம் பேசுங்க” என்று தான் கூற வேண்டும் என்று எண்ணிக் கொண்டேன். ஒரே மாதிரி இருக்கும் இடங்களுக்கு மட்டும் போய் விட்டு வந்து “எல்லாம் ஒரே மாதிரி தான் இருக்கிறது” என்றுஅலுத்துக் கொண்டால், அது போய் வந்தவர்களின் குறையா அல்லது அந்த இடங்களின் குறையா? கொலராடோ நிச்சயம் வித்தியாசமான பகுதி. மக்கள் அதிகம் வசிக்கும் நகர்ப்புறங்களை விட்டுச் சற்றே வெளியே வந்துவிட்டால் எல்லாப் பக்கங்களிலும் பார்த்துப் பழகிய மெக்டானல்ட்ஸ், வால்-மார்ட், இவற்றையெல்லாம் தாண்டி ஒரு தனி உலகம் இருக்கிறது என்று நன்கு புரியும்.

Colo4_1602.JPG

கொலராடோ ஸ்பிரிங்ஸ் அருகே பார்க்க வேண்டிய இன்னொரு இடம்- கேன்யன் சிட்டியின் அருகே இருக்கிற ராயல் கோர்ஜ் (Royal Gorge).

 

Continue Reading »

கொலராடோ என்ற பெயர் “Colo-Rado” என்பதில் இருந்து வந்திருக்கிறது. Colo-Rado என்றால் “சிகப்பு நிறம்” (Color-Red ) என்று பொருள். ஆக, இந்த மண்ணுக்கும் மலைக்கும் நிலத்துக்கும் தக்கதொரு அருமையான காரணப் பெயர் இது.  இந்த விவரத்தைப் பயணம் முடியும் தருவாயில் தான் தெரிந்து கொண்டேன் என்றாலும் வந்த முதல் சில நாட்களிலேயே,’இங்கே இயற்கை சற்றே செம்மையை அதிகமாகப் பூசிக் கொண்டிருக்கிறது’என்று நான் எண்ணியது சரியாகத் தான் இருக்கிறது. அதனால் எனக்கு இந்தப் பெயர் இன்னும் கூடுதலாகப் பிடித்துவிட்டது. கொல-ராடோ.

sIMG_1518பெரும் மலை முகடுகள் மட்டுமல்ல; தங்குமிடத்திற்கு வெளியே நடைபாதையோரம் அழகுக்காகப் போட்டு வைத்திருந்த சிறு கற்களும் கூடச் செந்நிறத்தில் தான் இருந்தன. எங்கு சென்றாலும் தன் கற்குவியலுக்காகச் சில கற்களைப் பொறுக்கிக் கொள்ளும் வழக்கமுடைய என் மகள் நிவேதிதா இங்கிருந்தும் சில செந்நிறக் கற்களை எடுத்துக் கொண்டிருந்தாள். பை நிறைய அவள் எடுத்ததை நிறுத்திக் கை நிறைய மட்டும் எடுத்துக் கொள்ள வைக்கவேண்டியிருந்தது !

Continue Reading »

கொலராடோ ஸ்பிரிங்ஸ்- டென்வரை விட இன்னும் ஓராயிரம் அடி அதிக உயரத்தில் இருக்கிறது. ராக்கி மலைத்தொடரின் பள்ளத்தாக்குகளில் அமைந்திருக்கிற இந்த ஊரைச் சுற்றி அந்த அழகான மலைத்தொடர் அருமையான பின்னணியை அமைத்துக் கொடுத்திருக்கிறது. “மறக்காமல் தண்ணீர் நிறையக் குடியுங்கள்” என்று பலரும் அறிவுறுத்தினர். அதிக உயரத்தில் இருக்கிற இடங்களில் நம் உடல் நீர் சுண்டிவிடும் வாய்ப்புக்கள் உண்டு என்றும் அது தலைவலி, தூக்கமின்மை போன்ற உபத்திரவங்களைத் தரவல்லது என்றும் கூறினர். பெயரிலே ஸ்பிரிங்ஸ் இருந்தாலும் இந்த ஊரில் எந்த ஊற்றுக்களும் இல்லையாம்.

sIMG_1481ஊரின் பொருளாதாரம் சுமார்40 சதவீதம் அமெரிக்க ராணுவத்தை நம்பி இருக்கிறது. ஊரைச் சுற்றி ராணுவ முகாம்களும் உள்ளன. Fort Carson என்னும் இடத்தில் இருந்து ஈராக் சென்றவர்கள் சென்ற வார இறுதியில் தான் திரும்பி வந்திருக்கிறார்கள்- மாண்டுபோன நாற்பத்தி ஐந்து பேரைத் தவிர! நான்கு கரைகளிலும் இருந்தும் வெகுதூரம் உள்ளேஇருப்பதாலும், மலைத்தொடரின் அரண் இருப்பதாலும், இது மிகவும் பாதுகாப்பான இடமாகக் கருதப் படுகிறதாம். அமைதியாய் இருக்கிற இந்த ஊர் ஓய்வு பெற்றவர்கள் வந்து தங்கி விட ஏதுவாய் இருக்கிறது என்று இங்கே பல ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகள் குடிபெயர்ந்து வந்து தங்கியிருக்கின்றனர் என்றார் இந்த ஊரின் மேயர்.

 

Continue Reading »

டென்வர் விமான நிலையம் சற்றே ஊரை விட்டுத் தள்ளி இருந்தது. அங்கிருந்து வெளியேறிய போது காரில் இருந்து திரும்பிப் பார்த்தபோது அந்த விமான நிலையம்ஏதோ காட்டுக்கிடையே கட்டப்பட்ட ஒய்யாரக்கூடாரம் போலிருந்தது. ஊரே ஒரு பரவலாய்ப் படர்ந்திருந்தது போன்ற உணர்வு. அந்த அடர்த்திக் குறைவு ஊருக்கு வெளியே மட்டுமாக இருக்கலாம். முக்கிய ஊர்ப்பகுதிக்குச் செல்லாமலே கொலராடோ ஸ்ப்ரிங்ஸ் நகர் நோக்கி விரைந்தோம்.

இந்தப் பகுதி கடல் மட்டத்தில் இருந்து சுமார் ஒரு மைல் அளவில் மேலே உள்ளதாம். அதனால் டென்வரைச் செல்லமாக மைல்-உயர்-நகர்(Mile High City) என்று அழைப்பது வழக்கமாம். இவ்வளவு உயரம் உடையது என்று ஏற்கனவே படித்ததால் மட்டும் அல்ல, வேறு ஏதோ ஒன்றுஅப்படி ஒரு உயரத்தில் மிதந்து கொண்டிருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தியது. மற்ற நகரங்கள் எல்லாம் எங்கோ கீழே பள்ளத்தில் கிடப்பது போன்ற பிரம்மை. சாலையின் இரு மருங்கிலும் உயர வித்தியாசங்கள். ஒரு புறம் மலைகளும் மேட்டுப் பகுதிகளும், மறு புறம் பள்ளத்தாக்குகளாகவும் இருந்தது. அந்தப் பள்ளத்தாக்குகளில் அங்கங்கே ஒரு கொத்தாய் இருந்தகுடியிருப்புப் பகுதிகளும் அங்கிருந்த வீடுகளும் ஆஸ்ட்ரிக்ஸ்-ஒபீலிக்ஸ் கதைகளில் வரும் ஊர்களை ஞாபகப் படுத்தியது.

 

Continue Reading »

« Newer Posts - Older Posts »