கொலராடோ – 2
Jun 8th, 2004 by இரா. செல்வராசு
கொலராடோ ஸ்பிரிங்ஸ்- டென்வரை விட இன்னும் ஓராயிரம் அடி அதிக உயரத்தில் இருக்கிறது. ராக்கி மலைத்தொடரின் பள்ளத்தாக்குகளில் அமைந்திருக்கிற இந்த ஊரைச் சுற்றி அந்த அழகான மலைத்தொடர் அருமையான பின்னணியை அமைத்துக் கொடுத்திருக்கிறது. “மறக்காமல் தண்ணீர் நிறையக் குடியுங்கள்” என்று பலரும் அறிவுறுத்தினர். அதிக உயரத்தில் இருக்கிற இடங்களில் நம் உடல் நீர் சுண்டிவிடும் வாய்ப்புக்கள் உண்டு என்றும் அது தலைவலி, தூக்கமின்மை போன்ற உபத்திரவங்களைத் தரவல்லது என்றும் கூறினர். பெயரிலே ஸ்பிரிங்ஸ் இருந்தாலும் இந்த ஊரில் எந்த ஊற்றுக்களும் இல்லையாம்.
ஊரின் பொருளாதாரம் சுமார்40 சதவீதம் அமெரிக்க ராணுவத்தை நம்பி இருக்கிறது. ஊரைச் சுற்றி ராணுவ முகாம்களும் உள்ளன. Fort Carson என்னும் இடத்தில் இருந்து ஈராக் சென்றவர்கள் சென்ற வார இறுதியில் தான் திரும்பி வந்திருக்கிறார்கள்- மாண்டுபோன நாற்பத்தி ஐந்து பேரைத் தவிர! நான்கு கரைகளிலும் இருந்தும் வெகுதூரம் உள்ளேஇருப்பதாலும், மலைத்தொடரின் அரண் இருப்பதாலும், இது மிகவும் பாதுகாப்பான இடமாகக் கருதப் படுகிறதாம். அமைதியாய் இருக்கிற இந்த ஊர் ஓய்வு பெற்றவர்கள் வந்து தங்கி விட ஏதுவாய் இருக்கிறது என்று இங்கே பல ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகள் குடிபெயர்ந்து வந்து தங்கியிருக்கின்றனர் என்றார் இந்த ஊரின் மேயர்.
ராணுவத்தை அடுத்து சுற்றுலாவைப் பெரிதும் நம்பி இருக்கிறது இந்த ஊர். குறிப்பாய்ச் சொல்ல வேண்டிய இரு அம்சங்கள் பைக்’ஸ் பீக் (Pike’s Peak) எனப்படும் மலை உச்சியும், Garden of the Gods என்று வழங்கப் படும் செம்பாறை அமைப்புக்களும். பைக் உச்சி இருப்பது 14000 அடி உயரத்தில் என்றாலும் அங்கு செல்ல வேண்டிப் பல வசதிகள் இருக்கின்றன். காரிலேயே செல்லும் வண்ணம் சாலைகள் அமைத்திருக்கிறார்கள். பத்தொன்பது மைல் வளைந்து வளைந்து செல்லும் மலைப்பாதையில் மேலே செல்லச் சுமார் ஒன்றரை மணி நேரம் ஆகிறது. வழியில் ஆங்காங்கே நிறுத்தி வேடிக்கை பார்த்துச் செல்லும் வசதிகள். இது தவிர Cog Rail என்னும் ஒரு இழுவை ரயில் வண்டி (பழனி மலையிலே இருக்குமே அதுபோல என்று நினைக்கிறேன்) உச்சி வரை அழைத்துச் செல்கிறது.
இலக்கு மட்டுமல்ல பாதையும் இனிமையானது என்பதைப் போல், வழியெங்கும் பார்க்க அருமையான காட்சிகள். தூரத்தில் இருந்து பார்க்க “பிராக்களி மவுண்டன்” போலச் சில இடங்கள் கவர்ச்சியாய் இல்லை என்றாலும், இந்த மலைப்பாதையினூடே செல்லும் போது ஊசியிலைக் காடுகளும் ஊடுருவி வரும் வெளிச்சங்களும் அருமை. அங்கங்கே இயற்கையாக அமைந்து போயிருக்கிற விதம் விதமான பாறை அமைப்புக்கள். மலை உச்சியில் விழுந்து கிடந்த பனி முழுதும் கரையாமல் சூரிய ஒளியில் பிரகாசித்து ஒரு அருமையான காட்சியைத் தந்தது. அதனாலேயே இந்தப் பைக் மலை உச்சி இந்த ஊரின் முத்திரையாக அமைந்து போயிருக்கிறது போலும்.
Garden of the Gods – கடவுளர் தோட்டம் என்று வழங்கப்படும் இந்த இடம் இயற்கையின் விந்தைகளில் ஒன்று. ஒரு காட்டின் நட்ட நடுவில் திடீரென்று பிரம்மாண்டமாய் எழுந்து நிற்கும் செம்பாறை அமைப்புக்கள். எப்படி ஏன் இவை இப்படி அமைந்து போயின என்பது விந்தை தான்.
செவ்விந்தியர்கள் வாழ்ந்த் ஆதி காலத்தில் இருந்து இந்தப் பகுதியில் இருப்போர் ஒரு ஆன்ம அமைதி நாடி இங்கு வந்து செல்வதுண்டாம். இது போன்ற இயற்கை அதிசயங்களும் அதன் அழகும் பிரமிக்க வைக்கின்றன. நாங்கள் சென்ற மாலை நேரத்தில் பெருங்காற்றும் அடிக்க, இந்தச் செம்பாறைகளினூடே நடந்து சென்று வந்தது ஒரு தனி அனுபவமாய்த் தான் இருந்தது.
-(தொடரும்).
நல்ல படங்கள் அப்படியென்று சொல்லலாமா என்று யோசித்தேன். ஏதாவது கட்டளைக்குள்ளாவது சிக்கிவிட்டாலும் என்ற பயத்திலே சொல்ல மாட்டேன் 🙂
நல்லா படம் காட்டறீங்க 🙂
இப்டியெல்லாம் படத்தப் போட்டு (எங்க)கிரெடிட் கார்டுக்கு வேட்டு வைக்கக்கூடாது 🙁
🙂
படமும் அருமை படக்கட்டுரைகளும் அருமை()
அடுத்த பகுதி எப்பொழுது? சம்மரில் ஒருமுறை சென்று பார்க்க வேண்டும் என்று படித்தவுடன் நினைக்க வைக்கிறது.
Fort Collinsல இருக்கும் என் நண்பன் ஒருவன் வாடா வாடா என்று வருந்தியழைக்கிறான். பரி சொன்ன அட்டை சமாச்சாரம்தான் பின்னாடி இழுக்குது! :))
அன்புள்ள செல்வராஜ்,
டென்டவர் நகரமைப்பு எங்கள் மிகவும் கொடுத்து வைத்த வணிகர்களில் ஒருவர். 🙂
சென்ற ஆண்டு அக்டோபர் வாக்கில் சென்றிருந்தேன். ராக்கி மவுண்டனையும் பார்க்க வாய்ப்பு கிடைத்து. எல்க் வாட்சிங் போயிருந்தீர்களா? எருமை நாக்கு கறி மிகவும் பிரசித்தமாம் அங்கே.
சில நல்ல ரெஸ்டாரண்டுகளுக்கும் போக ஆபிஸ் செலவில் வாய்த்தது. ஒரு ரெஸ்டாரண்டு மிகவும்
பழைய காலத்து கூரைவீடு போன்ற அமைப்பில் இருந்தது. அங்கே விசேடம் என்ன என்று கேட்டால்,
பாரில் நீங்கள் சொல்லும் ஆர்டரை உரக்க ஒலிப்பெருக்கியில் சொல்லி கலாய்ப்பார்கள்.
நான் ஆர்டர் செய்ததோ டயட் கோக், கற்பனை செய்து கொள்ளுங்கள். ஊரே சிரித்தது. கொஞ்சம் நஞ்சம் ஒட்டிக்கொண்டிருந்த மானமும் ஒலிபெருக்கி வழியாக போயே போனது. ஒரு பேஸ்பல் பந்தயம் போயிருந்தேன் , அதுவே முதல் விளையாட்டு அரங்க விஜயம். விளையாடு புல்வெளி கண்ணை பறிப்பதாக அமைக்கப்பட்டிருந்தது. பேஸ்பால் எனக்கு ஒருமண்ணும் தெரியாது. அன்று கற்று அன்றே மறந்தது அது. 🙂 டென்வர் ஏர்போர்ட் தூரத்து அழகு மிகவும் கவரக்கூடிய ஒன்று.
முடிந்தால் இந்த பக்கத்தையும் படத்தையும் உங்கள் பதிவோடு இணையுங்கள். நன்றி.
http://www2.bv.com/services/transport/airports/aviatn_design.asp
இன்னொரு சுட்டி
http://www.gayot.com/travel/citytrips/denver.html
இன்னொரு சுட்டி
http://www.hdrinc.com/information/default.asp?PageID=1290&ParentID=3L30
நன்றி நண்பர்களே… ஊரில் இருந்து திரும்பி வந்தாயிற்று. இன்னும் ஓரிரு பதிவுகள் + படங்கள் இருக்கு. என்னவோ கட்டளைங்கறாரே ரமணியண்ணன்னு டயல்-அப்-இல் பார்த்த போது ஒண்ணும் புரியலே. இப்போ வந்து வலை மேய்ஞ்சதில தான் விஷயம் தெரிந்தது.
கார்த்திக், விரிவான உங்கள் கருத்துக்கும் நன்றி. அந்த டென்வர் விமான நிலையம் ஒரு சிறப்புத் தான். சுட்டிகளுக்கு நன்றி.
பரி, சுந்தர், அட்டைப் பயம் நியாயமானது தான். இருப்பினும் வாய்ப்புக் கிட்டினால் அந்தப் பக்கம் நிச்சயம் சென்று வாருங்கள். பரி, இப்பவே போனா ஒரு டிக்கெட் தான். இல்லைன்னா, ரெண்டு, மூணு, நாலுன்னு வாங்க வேண்டியிருக்கும் 🙂
பாலாஜி, ஈழநாதன் உங்களுக்கும் நன்றி.
செல்வராஜ்,
கொழு கொழு கன்னத்துடன்(கிள்ள வேண்டும் போல்)
உங்கள் செல்ல மகளின் படம் ,
அடுத்து அந்த நான்காவது படம்!!
பொக்கை வாயுடன் வயதானவர் ஒருவர்
மல்லாந்து படுத்திருப்பது போல் !!
அத்தனை படமும் அந்த இடங்களை
நேரிலேயே பார்ப்பது போல் அற்புதமா
இருக்கு!
நல்ல பதிவு செல்வராஜ். நம்ம ஊராயிருந்தால் அருணாசலம் (செம்மலை) என்று பேர்வைத்து ஆன்மிகமென்ற பெயரில் நல்ல காசு பார்த்திருப்பார்கள். பாவம் பிழைக்கத்தெரியாதவர்கள்..
பரி, இப்பவே போனா ஒரு டிக்கெட் தான். இல்லைன்னா, ரெண்டு, மூணு, நாலுன்னு வாங்க வேண்டியிருக்கும் 🙂
>>
வாஸ்தவமான பேச்சு :-))