கொலராடோ – 3
Jun 15th, 2004 by இரா. செல்வராசு
கொலராடோ என்ற பெயர் “Colo-Rado” என்பதில் இருந்து வந்திருக்கிறது. Colo-Rado என்றால் “சிகப்பு நிறம்” (Color-Red ) என்று பொருள். ஆக, இந்த மண்ணுக்கும் மலைக்கும் நிலத்துக்கும் தக்கதொரு அருமையான காரணப் பெயர் இது. இந்த விவரத்தைப் பயணம் முடியும் தருவாயில் தான் தெரிந்து கொண்டேன் என்றாலும் வந்த முதல் சில நாட்களிலேயே,’இங்கே இயற்கை சற்றே செம்மையை அதிகமாகப் பூசிக் கொண்டிருக்கிறது’என்று நான் எண்ணியது சரியாகத் தான் இருக்கிறது. அதனால் எனக்கு இந்தப் பெயர் இன்னும் கூடுதலாகப் பிடித்துவிட்டது. கொல-ராடோ.
பெரும் மலை முகடுகள் மட்டுமல்ல; தங்குமிடத்திற்கு வெளியே நடைபாதையோரம் அழகுக்காகப் போட்டு வைத்திருந்த சிறு கற்களும் கூடச் செந்நிறத்தில் தான் இருந்தன. எங்கு சென்றாலும் தன் கற்குவியலுக்காகச் சில கற்களைப் பொறுக்கிக் கொள்ளும் வழக்கமுடைய என் மகள் நிவேதிதா இங்கிருந்தும் சில செந்நிறக் கற்களை எடுத்துக் கொண்டிருந்தாள். பை நிறைய அவள் எடுத்ததை நிறுத்திக் கை நிறைய மட்டும் எடுத்துக் கொள்ள வைக்கவேண்டியிருந்தது !
கொலராடோ ஸ்பிரிங்ஸ்-இல் வேலை முடிந்து பயணத்தின் அடுத்த கட்டமாய் இரண்டு நாட்கள் டென்வரில் கழிக்க எண்ணிக் கிளம்பிக் கொண்டிருந்தோம்.
“இந்த ஊருக்கும் ஓட்டலுக்கும் பை-பை சொல்லும்மா, கிளம்புவோம்”, என்றபடி காரின் பின்புறம் மூட்டை முடிச்சுகளை ஏற்றிக் கொண்டிருந்தேன்.
“பை-பை டபிள் ட்ரீ… பை-பை கொலராடோ ஸ்பிரிங்ஸ்…”, என்றவள் சற்றே தீவிரமாய் யோசனையில் மூழ்கினாள்.
“அப்பா”
“என்னம்மா ?”
“ஏன்ப்பா, குளிர்காலத்துல இந்த ஊருக்கு வந்தா ‘கொலராடோ விண்டர்(ஸ்)’ னா சொல்லுவாங்க ?
குபீரென்று சிரிப்பு வந்தது. நானும் மனைவியும் வாய் விட்டுச் சிரித்தோம். மனசு லேசானது. இயற்கையாகக் காட்டுக்குள்ளே எழுந்து நிற்கும் செம்மலைகளைப் போலவே, இத்தனை சின்னப் பெண்ணின் மனதினுள்ளே எழும் சிந்தனைகளும் எங்கிருந்து வருகின்றன இவை என்று வியக்க வைக்கின்றன.
இவளே தான் முன்பொரு முறை சுமார் மூன்று வயது கூட ஆகியிராத ஒரு நாள், க்ளீவ்லேண்டு ஈரி ஏரிக்கரையை ஒட்டிக் காரிலே வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த போது, “இப்படியே இந்தச் சாலையிலேயே நேரே போனால் வீடு வந்துவிடும்” என்று மனைவியிடம் புது வழி பற்றி நான் சொல்லிக் கொண்டிருக்க, பின் இருக்கையில் இருந்து அப்பாவியாகக் கேட்டாள்.
“ஏன் அப்பா கோணெயாப் போனா என்னாகும் ?”
அப்பாவும் அம்மாவும் ஏன் இப்படிச் சிரிக்கிறார்கள் என்று அப்போதும் புரியவில்லை அவளுக்கு. சரி, சிரிப்பு தான் என்கிற வரையில் சுகமே என்று தனக்குப் புரிந்த வரையில் தானும் சிரித்து மகிழ்ந்து கொண்டாள். ஆனால் இப்போது எங்கள் சிரிப்பிற்கான காரணத்தை விளக்க வேண்டியிருந்தது.
இப்படி எங்களுக்கு இன்பத்தை அள்ளித் தருகின்ற எங்கள் அருமை மகள் கொலராடோப் பயணம் முடிந்து வந்த பின் வரைகின்ற ஓவியங்களில் புதிதாய் மலை முகடுகள் சேர்ந்து கொண்டிருக்கின்றன.
-(தொடரும்).
Selva,
Arumaiyaanaa pathivu. kuzhanthaiyin kelvigal magilchiyai thanthana…
தங்கமணி அருணாச்சலம் என்று சரியாய்த்தான் சொல்லியிருக்கிறான்!!
கொலராடோவில் இருந்து விலகிய பதில் இது. இருந்தாலும் சற்றே சம்பந்தப்பட்ட ஒன்று…
இன்று மகளைக் கடைக்குக் கூட்டிப் போயிருந்தேன். அலமாரியில் வைத்திருந்த ஒன்றைப் பார்த்து, “சல்சா வாங்கலாமா ?” என்றாள்.
“வேண்டாம்மா. Sale போட்டா வாங்கலாம்” என்றேன்.
“அப்பா… விற்பதற்கு இல்லை என்றால் எதற்கு இங்கு வைத்திருக்கிறார்கள் ?” என்று கேட்டாள் !!!
இப்படியே அவரைக் கேள்விக் கணைகளைத் தொடுக்கச் சொல்லுங்கள் :))
சுவையான தகவல்கள் கூடவே உங்கள் மகளின் கேள்வியிலும் இனிமை