கொலராடோ – 4
Jun 18th, 2004 by இரா. செல்வராசு
“அமெரிக்காவில் எங்கு சென்றாலும், எல்லாம் ஒரே மாதிரி தான் இருக்கிறது” என்று குறைபட்டுக் கொள்பவர்களைப் பார்த்தால், “ஏனுங்க, ஒரு நடை கொலராடோ பக்கம் போயிட்டு வந்து அப்புறம் பேசுங்க” என்று தான் கூற வேண்டும் என்று எண்ணிக் கொண்டேன். ஒரே மாதிரி இருக்கும் இடங்களுக்கு மட்டும் போய் விட்டு வந்து “எல்லாம் ஒரே மாதிரி தான் இருக்கிறது” என்றுஅலுத்துக் கொண்டால், அது போய் வந்தவர்களின் குறையா அல்லது அந்த இடங்களின் குறையா? கொலராடோ நிச்சயம் வித்தியாசமான பகுதி. மக்கள் அதிகம் வசிக்கும் நகர்ப்புறங்களை விட்டுச் சற்றே வெளியே வந்துவிட்டால் எல்லாப் பக்கங்களிலும் பார்த்துப் பழகிய மெக்டானல்ட்ஸ், வால்-மார்ட், இவற்றையெல்லாம் தாண்டி ஒரு தனி உலகம் இருக்கிறது என்று நன்கு புரியும்.
கொலராடோ ஸ்பிரிங்ஸ் அருகே பார்க்க வேண்டிய இன்னொரு இடம்- கேன்யன் சிட்டியின் அருகே இருக்கிற ராயல் கோர்ஜ் (Royal Gorge).
சுமார் ஐம்பது அல்லது அறுபது மைல் நகரில் இருந்து மேற்கே செல்ல வேண்டும். செல்லும் வழியில் எங்கும் பொட்டல் காடுகள். சில சமயம் மூன்று பக்கங்களிலும் (270 டிகிரி) தொடுவானப் பகுதியில் மலைத்தொடர்க் காட்சிகள்! சாலையில் மட்டுமல்ல, காலத்திலும் பின்னோக்கி ஒரு பயணம் செல்வது போன்ற உணர்வை இந்தப் பகுதி தந்தது. ஒரு காலத்தில் இந்தப் பகுதிகளில் தங்கம் நிறையக் கிடைக்கிறது என்று செய்தி/வதந்தி பரவி அதன் ஈர்ப்பில் பலர் வந்து சேர்ந்தது உண்டு. அந்தப் பளபளப்பு நீங்கிய பின் பெரிதும் வளர்ச்சி அடையாமல், சுற்றுலா, மற்றும் சூதாட்ட விடுதிகள் இவற்றைக் கொண்டு பொருளாதாரத்தை விருத்தி செய்ய முயலும் இடங்கள். அதற்கு அத்தாட்சியாய் அமெரிக்க மேற்கத்திய சாயல் திரைப்படங்களில் வருவது போன்ற துப்பாக்கிச் சண்டைக் காட்சியகங்கள், குதிரை வண்டிகள், ரயில் பயணங்கள் இவற்றிற்கான விளம்பரப் பலகைகள் என்று நிறைந்து கிடக்கின்றன. வெண்ணுரை ஆற்று ரப்பர்ப் படகுப் பயணங்களுக்கான (வேறொன்றுமில்லை – White water rafting தான் !!) இடங்களும் நிறைய இருக்கின்றன. ஆனால் அவை பற்றியும், குளிர்காலத்தில் இந்தப் பகுதியில் பிரசித்தி பெற்ற பனிச்சறுக்கு விளையாட்டு பற்றியும் நான் எழுதப் போவதில்லை. (சிறு புள்ளை குட்டிக் காரன் என்பதால், அவை எல்லாம் எல்லை தாண்டிக் கிடக்கின்றன).
சுமார் ஆயிரம் அடிகளுக்கு மேலே எழும்பி நிற்கிற மலைப் பகுதியின் இரு புறத்திற்கும் இடையே விழுந்து கிடக்கிறது ஒரு இடைவெளி. மலை எழும்பி நிற்கிறதா, அல்லது அந்த மலைச்சந்து விழுந்து கிடக்கிறதா என்பது பார்ப்பவர்களின் கண்களைப் பொறுத்து இருக்கிறதோ ?
மலைப் பகுதியின் இரு முனைகளையும் இணைத்தபடி அமைந்து கிடக்கிற ஒரு தொங்கு பாலம் மனித முயற்சியின் மாண்புகளுக்கும், சாதனைகளுக்கும் ஒரு சான்று. எப்படிக் கட்டமைத்திருப்பார்கள் இதனை ? எதற்காக ? இப்போது வெறும் சுற்றுலாத் தளமாய் இருந்தாலும் ஒரு காலத்தில் இதனை அன்றாட வாழ்வில் பயன்படுத்தி இருப்பார்களோ ? இந்தச் சந்தேகங்களுக்கெல்லாம் அங்கு காட்டப் பட்ட ஒரு குறும்படத்திற்குச் சென்றிருந்தால் விடை கிடைத்திருக்கலாம். நாங்கள் செல்லவில்லை. விடைகள் பெரிதும் முக்கியமல்ல. இந்த வியப்பே போதும்.
இரும்புக் கம்பிகளும் மரக்கட்டைகளும் கொண்டு அமைத்த அந்தப் பாலத்தில் இன்னும் நடந்து பார்க்கலாம். கார்களும், சுற்றுலாப் பேருந்துகளும் சென்று வரலாம். இறங்கி ஒரு நிமிடம் நின்ற போது, கடல் நீரில் கப்பல் மிதமான ஆட்டத்தில் இருப்பது போலவே இந்தப் பாலமும் காற்றில் மெல்ல அசைந்து கொண்டிருந்தது. குனிந்து பார்த்தால், ஆயிரம் அடிகளுக்குக் கீழே அர்க்கன்ஸா ஆறு அழகாக அந்த மலைச்சந்தில் வளைந்து நெளிந்து ஓடிக் கொண்டிருந்தது. அதனை ஒட்டி, கரையில் ஒரு ரயில் கம்பளிப் பூச்சியாக ஓடிக் கொண்டிருந்தது (இந்த உவமையைச் சமீபத்தில் எங்கோ படித்தேன். என் சரக்கல்ல. சரியாய் எங்கு என்று நினைவில்லை. ஆனால் ஒட்டிக் கொண்டது!).
வரும் வழியில் என்னடா இது ஒரு காட்டுப் பகுதிக்கு வருகிறோம் போலிருக்கிறதே, என்ன இருக்கப் போகிறது இங்கே என்று ஏற்பட்ட சிறு சலிப்பு, இங்கே இயற்கையும் மனிதனும் இயைந்து நிகழ்த்தியிருக்கிற சாகசங்களைக் கண்ணுற்று, நடுப்பாலத்தில் அடித்த இளங்காற்றில் கரைந்து காணாமலே தான் போனது.
-(தொடரும்).
ராணுவ பயிற்சித் தளங்கள் நிறைய இருக்குமே… எதற்காவது செல்ல வாய்ப்பு கிடைத்ததா? Rodeo Shows?