கொலராடோ – 5
Jun 20th, 2004 by இரா. செல்வராசு
மலையின் மறுமுனைக்குச் செல்லப் பாலம் தவிர,கம்பித் தொங்கு வண்டியொன்றும் (Cable Car) இருந்தது. இதன் வழியே செல்லும் போது தூரத்தில் தெரியும் தொங்குபாலம் அழகாகக் காட்சியளிக்கிறது. ஆனால், இந்தப்பயணம் சுமார் மூன்றே நிமிடங்களில் முடிந்து விடுகிறது. எங்கிருந்தோ ஒரு சிகப்புஹெலிக்காப்டர் உயரத்தில் பறந்து சென்றது.
மறுமுனையில் பெரிதாய் ஒன்றும் இல்லை. Petting Zoo என்று ஒரு சிறுவர் மிருகக் காட்சி சாலை. ஒருபட்டியிலே கடவைச் சாத்தி ஒரு ஐந்தாறு செம்மறி ஆடுகளை சுற்ற விட்டிருந்தார்கள். பட்டியும் மேய்கிற ஆடுகளும் இந்த நாட்டிலே சுற்றுலாக் காட்சிகள் என்பதே ஒரு வேடிக்கை தான். இப்போதெல்லாம்தமிழகத்திலும் கூட நகர்ப்புறத்துக் குழந்தைகளுக்கு இது அரிய காட்சியாகத் தான் இருக்கும். ஆடுகள் தவிர, சிறு குதிரை மாதிரி இருந்த இரண்டை, குழந்தைகளின் சவாரிக்கு வைத்திருந்தார்கள். “Burr Ride” – “பர்”என்று அழைக்கப் பட்ட அந்தக் குதிரைகள் ஒரு மினி-அளவில் இருந்தன. (ஒருவேளை “பரி”யில் இருந்து ஈற்றிகரம் கெட்டுப் “பர்”ஆகியிருக்கலாம்! 🙂 )
இந்த ஆடு குதிரைகளைப் பார்த்துக் கொள்ள, நீல நிறத்தில் சட்டையும் ஜீன்ஸ் பேண்ட்டும் சீருடையாய் அணிந்த பெண்கள் இருவர் இருந்தார்கள். நகர்ப்புறத்து அமெரிக்கப் பெண்கள் போல் முகச்சாயங்கள் அப்பியிருக்கவில்லை. மாறாய் மெலிதான புன்னகை தவழ எளிமையாக இருந்தார்கள், பேசினார்கள். அநாவசியப் பாசாங்கு இல்லை. இது அமெரிக்காவின் ஒரு கிராமப்புறம் போலும். ஆமாம், இவர்கள் எல்லாம் பள்ளி கல்லூரிக்குச் செல்ல மாட்டார்களா ? ஒருவேளை பள்ளிப்படிப்பிற்குப் பின் நின்று விட்டார்களோ ? கல்லூரி என்று ஒன்று இந்த ஊர் அருகில் இருக்க வாய்ப்பு இருக்கிறதா ? தெரியவில்லை.
நான் ஒரு மகளையும், மனைவி ஒரு மகளையும் உட்கார வைத்து, பர்-ஐ நடத்திச் சென்று வந்தோம். அவை சில சமயம் நகராமல் சண்டித்தனம் செய்தால், வாலுக்கு மேலே ஒரு அழுத்தம் கொடுத்தால் மீண்டும் நகரும் என்று அந்தப் பெண் சொன்னது மாதிரியே நடந்தது. அதிலும் எனது “பர்” கொஞ்சம் அதிகமாகவே சண்டித்தனம் செய்ததால் வால் மேல் கையாகவே ஓட்டிக் கொண்டிருந்தேன் !
“இந்த ஆடு குதிரை எல்லாம் அருகில் இருக்கிற ஒரு வயதான அம்மாளுக்குச் சொந்தமானது. வேனிற்காலத்தில் இங்கே வருபவர்களுக்காக விட்டு வைத்திருக்கிறார்கள். இவை எல்லாவற்றிற்கும் செல்லப் பெயர்கள் கூட இருக்கின்றன”, என்றார் ஒரு பணிப்பெண்.
பொதுவாகவே, ஆரவாரமில்லாத இந்த ஊர்களின் மக்களிடம் நல்லதொரு நட்புணர்ச்சி கலந்திருக்கிறது. இங்கு வருபவர்களுக்கும் அது அப்படியே தொற்றிக் கொள்கிறது போலும். கேன்ஸாஸ் மாநிலத்தில் இருந்து வந்திருந்த ஒரு நடுவயதுத் தம்பதியினரைச் சந்தித்தோம். கலகலப்பாய்ப் பேசிக் கொண்டிருந்தார்கள். (சிறிது நேரம் கழித்து “எத்தனை நாளைக்குத் தான் பிறரிடம் வேலை செய்வீர்கள்? நீங்களே சொந்தமாய்த் தொழில் செய்ய அருமையான ஒரு வாய்ப்பு இருக்கிறது. நீங்களே உங்களுக்கு மேலாளராய் இருக்கலாம்” என்றெல்லாம் MLM பற்றி ஆரம்பித்து விடவில்லை என்பது ஒரு நிம்மதி!!). டென்வர் அருகே இருக்கும் ஐடஹோ ஸ்பிரிங்ஸ்-இல் இருந்து வரும் வழியில் குறுக்கு வழியில் செல்லலாம் என்று அந்த அம்மாள் கூற, சரியென்று கிளம்பி வந்த வழியோ மலைப்பாதையை (கேன்யனை) ஒட்டி அமைந்த ஒரு சுழல்-பாதையாக அமைந்து விட்டதும், வழியில் நாற்பது ஐம்பது மைல்களுக்கு ஒரு பெட்ரோல் கடை கூட இல்லாது போனதையும் ஒரு பயப் பரவசத்தோடு விவரித்தார்கள். நல்ல வேளை, அதுவே அந்த அம்மாளின் யோசனையாய் இல்லாமல் அந்த அய்யாவின் யோசனையாய் இருந்திருந்தால், அந்நெரம் அவருக்குப் பாதி காது காணாமல் போயிருக்கும் !
“ஐடஹோ ஸ்ப்ரிங்ஸ் சென்றால் கொலம்பைன் இண்-இல் சென்று தங்குங்கள். நாங்கள் அங்கு தான் தங்கி இருந்தோம். அருமையான இடம்”, என்று யோசனை தெரிவித்துப் போனார்கள். அந்த இடம் எங்கே இருக்கிறது என்று கூட எங்களுக்குத் தெரியாது !
இன்னும் ஒரு ஜோடி நியூசிலாந்தில் இருந்து வந்திருந்தது.
“காமிரா வச்சுருக்கீங்களா ? இந்தப் பக்கமா போனீங்கன்னா ஒரு எல்க் உட்கார்ந்திருக்குது. அதன் கொம்புகள் ஐந்தாறு கிளை பிரிந்து அழகாய் இருக்குது. போய்ப் பாருங்க”, என்று சுட்டிக் காட்டிவிட்டுப் போக, எல்க் எருமையைப் படத்தினுள் பிடித்துக் கொண்டேன். அதோடு பெருங்கொம்புச் செம்மறியாடு ஒன்றையும், பார்க்கவும் படம் பிடிக்கவும் ஒரு வாய்ப்பாய் அமைந்தது.
இவை தவிர மீண்டும் கிளம்பிய முனைக்கே வந்தால், வழக்கம் போன்ற குதிரைப் பொம்மை ராட்டினங்கள், பரிசுப் பொருட் கடைகள், பஞ்சு மிட்டாய் விற்பனைகள், படம் பிடித்துக் கொள்ள ஏதுவாய் முகப்பு அலங்காரங்கள், எல்லாமும் இங்கும் இருந்தன. இவற்றிற்கிடையே, ஒரு அமெரிக்கக் கருப்பணசாமி போன்ற ஒன்றும் ஓரமாய் நின்று பார்த்துக் கொண்டிருந்தது. கொட்ட ஆரம்பித்த மழைத் தூரல்களில் அவரை நனைய விட்டுவிட்டு நாங்கள் கிளம்பினோம். -(தொடரும்). |
(ஒருவேளை “பரி”யில் இருந்து ஈற்றிகரம் கெட்டுப் “பர்” ஆகியிருக்கலாம் ! 🙂 )
>>
நான் அந்தப் பக்கம் இன்னும் போகலியே. மூதாதையர்களா இருக்கும் :-))
(சிறிது நேரம் கழித்து “எத்தனை நாளைக்குத் தான் பிறரிடம் வேலை செய்வீர்கள்? நீங்களே சொந்தமாய்த் தொழில் செய்ய அருமையான ஒரு வாய்ப்பு இருக்கிறது. நீங்களே உங்களுக்கு மேலாளராய் இருக்கலாம்” என்றெல்லாம் MLM பற்றி ஆரம்பித்து விடவில்லை என்பது ஒரு நிம்மதி!!)
>>
:-)))
இது என்ன பிரமாதம் எங்க ஊருக்கு வாங்க Anheuser Busch (அதாங்க Bud(weiser) காரங்க) அந்தக் காலத்து மாட்டுக் கொட்டா இங்கெதான் இருந்துச்சி, குதிரை இங்கெதான் புல்லு தின்னுச்சின்னு ட்ராம்ல சுத்திக் காட்டுவாங்க.(உள்ளெ Bud free. அங்கெ குடிச்சது பத்தலன்னா http://www.budweisertours.com/ இங்கெ போயும் குடிக்கலாம் :-))
பரி, அதை எழுதியபோது உங்களைத் தான் நினைத்துக்கொண்டேன். 🙂
கொலராடோவில் கூட Coors ஆலை இருப்பதாய்ச் சொன்னார்கள். அந்தப் பக்கம் எல்லாம் போகவில்லை. Coke குடிப்பதே பிரச்சினையாய் இருக்கும் போது Coors எங்கே ? 🙂
அனேகமாக அமெரிக்கா வந்தால் கொலராடா போகத்தேவையில்லை எல்லாவற்றையும் தான் நீங்களே படம்பிடித்துக் காட்டுகிறீர்களே
ஈழநாதன், நன்றி. சும்மா ஒரு பயணக் கட்டுரை எழுதும் முயற்சி தான். அடுத்ததோடு முற்றும் போட்டு விட்டேன்.