கொலராடோ – 6
Jun 24th, 2004 by இரா. செல்வராசு
பயணத்தின் இறுதிக் கட்டமாய் இரண்டு நாள் டென்வர் நகரில்- குறிப்பாகப் பதினாறாம் தெருவில் (16th Street) என்று சொல்லும் அளவிற்கு அந்தப் பகுதியிலேயே சுற்றிக் கொண்டிருந்தோம். டென்வர் டவுண்டவுன்(downtown என்பதை அப்படியே தமிழில் எழுதுவதற்கு வேடிக்கையாக இருக்கிறது!) பகுதியில் அமைந்துள்ள இந்தத் தெரு கோலாகலமாய் இருந்தது.
சுமார் ஒரு மைல் நீளத்திற்கு மேலும் கீழுமாய் ஒரு பேருந்து சில நிமிடத்திற்கு ஒரு முறை சுற்றிக் கொண்டிருந்தது. அதில் எந்தக் கட்டணமும் இன்றி எங்கு வேண்டுமானாலும் ஏறி எங்கு வேண்டுமானாலும் இறங்கிக் கொள்ளலாம். இதுமிகவும் வசதியாக இருந்தது. அந்தத் தெரு முழுக்க வேறு வாகனங்கள் செல்ல இயலாதபடி அமைத்திருந்தார்கள். குறுக்குத் தெருக்களில் மட்டும்பிற வாகனங்கள் சென்று கொள்ளலாம். ஒரு மின் ரயில் கூட ஊரின் மற்ற பாகங்களில் இருந்து மக்களை இங்கு கொண்டு வந்து சேர்க்கிறது. இது போன்ற வசதி சென்னை ரங்கனாதன் தெரு, கோவை டவுன் ஹால் பகுதிகளில் இருந்தால் எப்படி இருக்கும் என்று மனது அசை போட்டுக் கொண்டது. இப்படி எங்கு எதைப் பார்த்தாலும் நமக்குத் தெரிந்தவற்றோடு மனது முடிச்சுப் போட்டுக் கொள்ளப் பார்ப்பது சுவாரசியம் தான். இந்த வண்டிகள்அடிக்கடி நின்று சென்றாலும் சுற்றுப் புறத்திற்கு ஊறு விளைவிக்காதவாறு மின்சக்தியில் இயங்குகின்றனவாம். அடிக்கடி இந்த வண்டியில் ஏறிச் சுற்றிக் கொண்டிருந்தோம். குழந்தைகள் சோர்வுற்ற போது சும்மா இதில் ஏறி உட்கார்ந்து கொண்டு மேலும் கீழும் இரண்டு முறை எங்கும் இறங்காமல் சுற்றிக் கொண்டும் இருந்தோம்!
தெரு முழுக்க நிறைந்திருந்த கடைகளில் மக்கள் சென்று வந்து கொண்டிருந்தார்கள். பலவிதமான கடைகள், உணவகங்கள், புத்தகக் கடைகள், திரை அரங்குகள் இப்படியாய் நிறைந்திருந்தது. வழியில் பூத்தொட்டிகள் வைத்து அழகு படுத்தி இருந்தார்கள். இரு மருங்கிலும் மரங்கள் நிறைந்திருக்க நடுவிலே ஓய்வாய் அமர்ந்து செல்லும் வகையில் நாற்காலிகள். தெரு முனையிலே யாரேனும் இசைக் கலைஞர்கள் தமது இசைத் திறமைகளைக் காட்டிக் கொண்டு இருந்தார்கள்.
கையிலே வரைபடத்தை வைத்துக் கொண்டு எந்தப் பக்கம் போவது என்று யோசித்தபடி நின்றவர்களுக்குத் தாமாக முன்வந்து அன்போடு வழிகாட்டினர் டென்வர் வாசிகள். ஒரு முனையில் நகர மன்றம் ஒரு முக்கியமான கட்டிடமாய் நின்று கொண்டிருந்தது. டென்வர் நகரம் கடல் மட்டத்தில் இருந்து சரியாக ஒரு மைல் உயரத்தில் அமைந்திருக்கிறது என்பதை அளந்து அந்த ஒரு மைல் முனையை அதிகாரபூர்வமாக இந்த நகர் மன்றத்தின் முன்புறப் படிக்கட்டுக்களில் குறித்து வைத்துள்ளனர். போன வருடம் உள்ளூர் கல்லூரி மாணவர் குழு வந்து அளந்து பார்த்ததில் அந்தக் குறி சற்று மாறி இருக்கிறது என்று ஒரு இரண்டு இஞ்ச்சு தள்ளிக் குறித்துள்ளனர் ! அவ்வளவு துல்லியமாய் எப்படி அளந்தார்களாம்?
அருகிலேயே இருக்கும் பொது நூலகம் பல மாடிக் கட்டிடமாய் அமைந்து கிடக்கிறது. நூல்களை மக்கள் எடுத்துச் செல்வதற்குப் பணியாட்களிடம் எடுத்துச் செல்ல வேண்டியதில்லை. அதற்கும் சில இயந்திரங்களை அமைத்து இருக்கிறார்கள். வேண்டிய நூல்களை எடுத்துச் சென்று அந்த இயந்திர(ன்)ங்களிடம் காட்டினால் போதும். குழந்தைகள் புத்தகங்கள், கணினிகள் என்று அவற்றிற்கு மட்டும் ஒரு தளத்தை ஒதுக்கி இருக்கிறார்கள். அந்தக் கணினிகளில் இணையத் தொடர்பு இருக்கவே சிறிது நேரம் சில வலைப்பதிவுகளைப் பார்வையிட்டுக் கொண்டிருந்தேன். குழந்தைகள் பகுதியில் இருப்பதைப் பயன்படுத்த 12 வயதுக்குக் கீழே இருக்க வேண்டும் என்று என்னைத் துரத்தி விட்டு விட்டார்கள் !
எதற்காக எல்லா ஊரிலும் இருக்கும் ஒரு நூலகத்திற்கு, இவ்வளவு தூரம் சென்று போனீர்கள் என்று கேட்கிறீர்களா ? இரண்டு மகள்கள், ஒரு வாரப் பயணம், அலைச்சல் இவை எல்லாம் சேர்ந்த பிறகு நாம் சென்று வரக் கூடிய இடங்கள் வெகுவாகக் குறைந்து விடுகின்றன. பெரிதாய் அலையாமல், கடைசிக் கட்டத்தில் முடிந்ததை மட்டும் பார்த்து விட்டு ஊரை நோக்கிக் கிளம்பினோம்.
டென்வர் விமான நிலையப் பகுதி சுமார் 53 சதுர மைல் அளவில் அமைந்திருக்கிறதாம். இவ்வளவு பெரிய விமான நிலையப் பகுதியை முன்னர் நான் கண்டதில்லை. அதனால் தான் முதலில் ஊர் மிகவும் பரந்து கிடப்பது போல் எனக்குத் தோன்றியிருக்க வேண்டும். உண்மையில் ஊரின் மையப்பகுதி சற்றுத் தள்ளி இருக்கிறது. டைனசோர் முதுகு போல அமைந்திருக்கிறது என்று நான் எண்ணிய டென்வர் விமான நிலையம் உண்மையில் கொலராடோவின் சிகரங்களை ஒரு கலை அம்சத்தோடு குறிக்கிறதாம் ! விமான நிலையத்தில் இருந்து பார்த்தாலே தொடுவானத்தில் தெரியும் சிகரங்களுக்கு ஒரு சிந்தைவழி வந்தனம் சொல்லி விட்டுக் கிளம்பினோம்.
கிழக்குப் பகுதியிலே, செம்மை களைந்த இயற்கை பசுமை பூண்டு எங்களை வரவேற்கக் காத்திருந்தது.
-(முற்றும்).
செல்வா உங்கள் பதிவு மிக நன்று. மற்ற பதிவுகளும் மிக நன்று.
ஒரு ஓய்வான காலை வேளையில் (லேசாய் வெயில் அடிக்கணும்), அமைதியும் மெல்லிய நடமாட்டமும் இருக்கும் மையநகரில் ஒரு நாற்காலியில் உட்கார்ந்து கித்தார் வாசித்துப் பாடிக் கொண்டிருப்பாரே ஒரு ஆள், அந்தக் காத்திலே ஒரு உயிரும் ஒரு கவிதையும் அசையும்!
பாரி, சுந்தரவடிவேல் நன்றி. எல்லா ஊரிலும் இருக்கும் காட்சிகளாக இருந்தாலும், சில சமயம் நமக்கு முற்றிலும் புதிய ஊருக்குப் போவது பரவசமானது என்பதை உணர்ந்திருக்கிறேன். அதில் சிறிதை இங்கு எழுத்தாக்கி வைக்க முயன்றேன்.
சுகமான அனுபவங்களாகப் பார்த்து பார்த்துப் பதிந்து கொண்டிருக்கிறீர்கள். பாராட்டுக்கள். அனைத்து பதிவுகளையும் படித்துப் பார்த்தேன். மிக நன்றாக இருக்கிறது உங்களது வலைக்குறிப்புகள்.
செல்வராஜ் அண்ணே,
நகர மையப்பகுதிக்கு செல்ல வாய்ப்பு கிடைக்கவில்லை. பேஸ் பால் பந்தயத்தை தவிர.
ராக்கி மவுண்டைன் -க்கு கீழே இத்தாலிய கேசிடியா 3 டாலர்களுக்கு கிடைத்தது. உணவின் அளவும் தரமும் நன்றாய் இருந்தது. அந்த ஒரு கடையைத்தவிர மற்ற அனைத்தும் அநியாய விலை.
உங்கள் பதிவு எனக்கு டென்வர்-ஐ ஞாபகபடுத்துகிறது. அதுவும் அருமையான ஓ சி ட்ரிப்பை. 🙂
இங்கு ஒரு இத்தாலிய கேசிடியாவின் குறிப்பும் இருக்கட்டுமே! ம்ம் 🙂
http://www.recipezaar.com/recipe/getrecipe.zsp?id=76988
சரவணன், உங்கள் பாராட்டுதல்களுக்கு மிக்க நன்றி. நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். உங்கள் பக்கத்திற்கும் சென்று பார்த்து வந்தேன். “a”-உடன் உங்கள் பெயரில் இடம் கிடைக்கவில்லை போலிருக்கிறது. முதலில் தவறான இடத்திற்குச் சென்றுவிட்டேன்.
கார்த்திக், உணவு, உணவுக்கடை பற்றி நானும் எழுதாமல் போய்விட்டேன். அதைத் தீர்க்க உங்கள் கருத்தும் சுட்டியும் உதவுகிறது:-). மனைவியின் வலை-ஆய்வின் பயனாக(!), கண்டிப்பாகச் செல்ல வேண்டும் என்று Vespa Dipping Grill என்று ஒரு உணவகத்தைக் குறிவைத்துச் சென்றோம். நகர் மையப்பகுதியை ஒட்டி இருக்கிறது. திறக்கப்படும் மாலை ஐந்து மணி வரை காத்திருந்து அங்கு செல்ல, “ஓ இன்று கூட்டம் நிறைய இருக்கிறது. முன்பதிவு செய்திருக்க வேண்டும்” என்று கூறிவிட்டார்கள். “வெளியூரில் இருந்து வந்திருக்கிறோம், நாளை சென்றுவிடுவோமே” என்று கூறியும் பயனில்லை. சரி விடு என்று திரும்புகையில் வேண்டுமானால் வெளியே உட்கார்ந்து சாப்பிடுங்கள் என்று நாங்கள் மட்டும் கடைக்கு வெளியே கடைபரப்பிச் சாப்பிட்டோம். அப்படி ஒன்றும் அற்புதமான உணவு இல்லை என்பது வேறு கதை. ஆனாலும் அதுவும் ஒரு அனுபவம் தான்.
Italian Quesadilla புதிதாக இருக்கிறதே! மெக்ஸிகன் வகையறாதான் கேள்விபட்டிருக்கிறேன்.
கொலொராடோ கூட்டிச் செல்ல வேண்டுமென்று என் மனைவி நச்சரிக்க ஆரம்பித்துவிட்டாள் செல்வராஜ். அருமை. நன்றி.
நன்றி பாலாஜி. ஒரு நடை போய்விட்டுத் தான் வாருங்களேன். ராணுவப்பயிற்சித் தளங்களுக்கு மற்றும் RodeoShows, WildWest/Gunfighting shows/Sceninc Rail முதலியவற்றிற்கெல்லாம் போக இயலவில்லை. நீங்கள் போனால் சொல்லுங்கள்.
டென்வருக்கு மேலே ராக்கி மவுண்டன் பார்க் பக்கமும் செல்லவில்லை. கார்த்திக் ராமாஸ் சென்றிருப்பார் போல.
—