ஒரு தந்தையின் கடிதம்
Jul 7th, 2004 by இரா. செல்வராசு
சுமார் இரண்டு மாதங்களுக்கு முன் ஒரு நாள். வரண்டு போன அலுவலக மடல்களுக்கும், எரிச்சலூட்டும் எரிதங்களுக்கும் இடையில், உணர்ச்சி பொங்கிய ஒரு மின்மடல் வந்தது. பிராங்க்(Frank) -ஐ எனக்கு அவ்வளவாகத் தெரியாது. எங்கள் நிறுவனத்தின் வேறொரு கிளையில் வேறூரில் வேலை செய்யும் அவரை அதிக பட்சமாய் இரு முறைகள் சந்தித்திருப்பேன். அவரது மகன் சார்லியையோ நிச்சயமாய் முன்னர் எனக்குத் தெரிந்திருக்கவில்லை. அப்படியிருக்க, தன் மகனை விளித்து அவர் எழுதியிருந்த கடிதத்தை எங்கள் அலுவலகத்தில் பலருக்கும் நகலாக அவர் அனுப்பி இருந்தது ஏன் என்ற கேள்விக்குறியுடன் படிக்க ஆரம்பித்தேன். மடல்வரிகளுக்கு இடையே ஒரு விதமான கனமான அமைதி நிலவி உள்ளே ஈர்த்தது. உணர்ச்சிகள் நிரம்பிய அந்தக் கடிதத்தை இதுவரை பலமுறை படித்துவிட்டேன். இன்னும் கூட இம்மடலை அஞ்சல்பெட்டியில் இருந்து அழித்துவிட மனம் வரவில்லை. பிறரோடும் இதனைப் பகிர்ந்து கொள்ளுங்கள் என்று அவர் அந்த மடலின் தலைப்பிலேயே கூறிவிட்டதால், அதனைத் தமிழ்ப்படுத்திக் கீழே தருகிறேன்.
இப்படி ஒரு கடிதத்தை எந்த ஒரு தந்தையும் தன் மகனுக்கு எழுதவேண்டிய நிலை ஏற்படக் கூடாது.
இனிஅந்தக் கடிதம்…
04/24/2004 03:03 PM
எனது மகன் சார்லஸுக்கும், என் நிலையை அறிந்து கொள்ள விரும்பும் ஏனையோருக்கும்…
சார்லீ,
உனது தற்போதைய மின்மடல் முகவரி என்னவென்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் இதனை நீ பெறுவாய் என்பது எனக்கு நிச்சயமாய்த் தெரியும். “ட்ரூப் A”வில் இருக்கும் மாநிலக் காவல் அதிகாரிகள் இன்று ஒரு மணி நேரம் என்னுடன் இருந்தனர். என்னைச் சரி நிலைக்கு மீளச்செய்து வழக்கம் போல நிகழ் உலகில் சிறப்பாய் இயங்க எனக்கு அவர்கள் உதவி செய்தனர். இந்த உலகில் வாழ்க்கை எல்லோருக்குமே சில விரும்பத்தகாத ஆச்சரியங்களைத் தாங்கி நிற்கிறது.
நீ சாலையின் வளைவில் நடுக்கோட்டைத் தாண்டிச் சென்றுவிட்டாய். ஒருவேளை அதி வேகமாய்ச் சென்றது காரணமாய் இருக்கலாம் – உங்களிருவருக்கும் சுதாரித்துக் கொள்ள ஒன்றரை வினாடிகளே இருந்தன – நீங்கள் இருவரும் நடுவிலே சந்தித்தீர்கள் ! இருவரில் ஒருவராவது சாலையின் மறுமுனைக் குழிப் பகுதிக்கு போகவில்லை என்பது துரதிர்ஷ்டமானது. ஆனால் மகனே, இதைத் தான் ‘விபத்து’ என்பார்கள் என்பதை நீயும் நானும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று அந்தக் காவலர் கூறினார்.
விபத்துக்கள் பொதுவாகவே பெரும் சோகத்தில் முடிவதுண்டு. இங்கே உனக்கும் இன்னொரு வண்டியில் இருந்தவருக்கும் நிகழ்ந்தது போலவே. ஆனால் வேண்டுமென்றே நீ இப்படிச் செய்யவில்லை. இன்னொரு வாய்ப்புக் கிடைத்தால், அந்த வளைவில் நீ வேறு விதமாய் ஓட்டியிருப்பாய், ஏன், ஒருவேளை அந்த அதிகாலை ஒன்றரை மணிக்குச் சாலையிலே அலையாமல், உனது அன்னையோடும் அன்புச் சகோதரியோடும் வீட்டிலேயே இருந்திருப்பாய்.
மகனே! இது தனிப்பட்ட மடல் அல்ல. நீ இரண்டு விஷயங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். முதலாவதாக நீ தெரிந்து கொள்ள வேண்டியது உனது தந்தை சரியாகி விடுவார் என்பது – உனது சகோதரியும், அன்னையும், குட்டிப் பெண் அலெக்ஸிஸும் கூடச் சரியாகி விடுவார்கள். என்னை நம்பு.
இரண்டாவதாக நீ தெரிந்துகொள்ள வேண்டியது காவலர்கள் நேரடியாக யார் மீதும் குறை கூறவில்லை என்பது. நடந்தது ஒரு ‘விபத்து’ என்பதையும், இதைப் போன்ற நிகழ்வுகளை அவர்கள் சதா எதிர்கொள்வது உண்டு என்றும், நாம் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று விரும்புகிறார்கள். நீ ஒரு தவறு செய்துவிட்டாய். ஆனால், அது வேண்டுமென்றே செய்யப்பட்டதல்ல.
போக்குவரத்து ஆலோசகர் P.L. பெல்லூ, III, (பேட்ஜ் எண் 1907) போன்ற பொது நல அதிகாரிகளுக்கு நாம் நன்றியுடையவர்களாக இருக்க வேண்டும். அவருடைய சுருக்கப் பெயர் – ட்ரே. விபத்துகளை அலசுவதில் தேர்ச்சி பெற்ற அவர், நீ உனது பாதையைச் சரி செய்து கொண்டு சாலையின் சரியான பக்கத்திற்கு வந்துவிட உன்னால் ஆன முயற்சியைச் செய்திருப்பது தெளிவாகத் தெரிகிறது என்று கூறினார். அந்த முயற்சியில் ஏறக்குறைய வெற்றியும் பெற்று விட்டாய் என்றார்.
ஆனால், மற்றைய வாகனத்தின் ஓட்டுனருக்கு இது உறுதியாகத் தெரியவில்லை என்பதால், அவரும் சாலையில் உனது பகுதிக்கு வண்டியை ஒடித்து ஓட்ட முயற்சி செய்திருக்கிறார். ஒரு வினாடிக்கும் குறைவான நேரத்தில் எல்லாம் முடிந்து விட்டது. நீங்கள் இருவரும் ஒன்றும் உணர்ந்திருக்க மாட்டீர்கள் என்று நான் நிச்சயமாய் அறிவேன். டகோமா ட்ரக்கை ஓட்டி வந்தவர் மட்டும் பிழைத்துவிட்டார். கடுஞ்சோகத்திலும் ஒரு கருணை நிகழ்வு ! அதனால், உன்னைப் படைத்தவனுடன் நன்றாக இரு.
உனக்கு 23 வயது. தன் இளம்பிராயத்தில், சுமார் 23 வயதிருக்கும் போது, தானும் உன்னைப் போன்றே இருந்ததாகக் கூறினார் ட்ரே. இப்போது காவலராக இருக்கிறார். மற்ற காவலர்களும் இதையே கூறினர். நான் உன்னிடம் நடந்து கொண்டது போன்றே அவர்களது தந்தையரும் அவர்களிடம் நடந்து கொண்டனர் என்றும், ஆனால் அவர்கள் எல்லாம் சரியான நல்ல நிலைக்கு வந்துவிட்டனர் என்றும் ஆச்சர்யத்துடன் கூறினர். அவர் உன்னுடைய படங்கள் சிலவற்றை (பள்ளி/கல்லூரி/பணியிடம் மற்றும் பிற இடங்களில் எடுத்தவை) பார்ததுவிட்டு, உன் மேல் பெருமை கொண்டு நீயும் ஒரு சிறந்த காவலதிகாரியாக ஆகியிருக்கக்கூடும் என்று நினைத்தார். அவரும் கூட ஒருமுறை தான் ஓட்டிய காவல் வாகனத்தைக் கட்டுப்பாடிழந்து ஓட்டி இருவரை இடித்துக் காயப்படுத்திவிட்டதாகவும், நல்ல வேளையாக அது மிகவும் மோசமாக அமைந்துவிடவில்லை என்ற்ம் கூறினார். அதுவும் கூட ஒரு ‘விபத்து’ தான் என்றும், அன்று தானும் வண்டியின் கட்டுப்பாட்டை இழந்து விட்டதாகவும் கூறினார்.
ஓ, மறந்துவிட்டேனே ! “ட்ரூப் A” வில் இருக்கும் இன்னொரு காவலர் மிகச் சமீபத்தில் தான் ஒரு நாள் உனக்கு வேக உச்ச வரம்பை மீறியதற்குப் பிணயம் கட்டச் சொன்ன ஞாபகம் இருக்கிறது என்றார். அது பற்றிப் பிறகு உன்னிடம் நான் தனிமையில் பேச வேண்டும்.
நீ போதுமான அளவுக்கு பாதிக்கப் பட்டுள்ளாய். நாங்களும் அப்படியே. இனி, அன்றாட நிகழ்வுகளுக்குள் மீளும் நேரம் வந்துவிட்டது. உனது இழப்பை நாங்கள் என்றும் உணர்வோம். அருமையான உன் வாழ்வு அற்பமாய் முடிந்துபோனதை எண்ணி அதனால் உந்தப்பட்டு, சில நல்ல காரியங்கள் செய்வோம். உன்னுடன் கழித்த நாட்களின் இனிய நினைவுகள் என்றும் எங்களோடு நிலைத்திருக்கும். நீ எங்களின் மகனாக இருந்தமைக்கு பெருமைப் பட்டுக் கொள்கிறோம்.
தயவுசெய்து அங்கே வீட்டுப் பாடத்தை ஒழுங்காகச் செய். பத்திரமாகப் பறந்து செல்.
-உனது அன்புத் தந்தை.
mm
selva,
ithu thannai meetukkollum muyarchiyil oor thanthaiyin aRputha pathivu. Pahirnthu kondatharkku nanrigal.
selvaraj..too touching..canyou give us the original version please..
சிந்திக்க வைத்த பதிவு.
இந்த மகத்தான வாழ்க்கையை சில நொடிகள் எவ்வளவு அநாயாசமாக மாற்றிப் போடுகிறன.
தான் தனது மகனை இழந்தது போல வேறு எந்தத் தந்தையும் தவிக்கக் கூடாது என்பது தானே அவர் அதனைப் பலருடனும் பகிர்ந்து கொள்வதன் நோக்கம். இது உணர்வு பூர்வமாக உள்ளது.
வாழ்வின் முதுமையில் ஒருவருக்கு வரக்கூடாத மிகப் பெரும் சோகம் அவரது ஒரே நம்பிக்கையாகிய மகனை இழப்பது தான் என்று எப்போதோ படித்து நினைவுக்கு வருகிறது.
Selvaraj,
Would you share the original mail with us?
நண்பர்களே, அசலை இங்கு வெளியிடும் முன் Frank இடம் அனுமதி பெற எண்ணினேன். அவருக்கு நேற்று ஒரு மடல் எழுதி இருந்தேன். அவருக்கு ஆட்சேபனை இல்லை என்று கூறிவிட்டதால், இன்றிரவு அதனைப் பதிவு செய்கிறேன். நன்றி.
அத்தந்தையின் மின்னஞ்சல் படித்தேன்.
மனதின் ஆழத்தில் ஒரு நெருடல்.
இப்படி எத்தனை தந்தைகளோ!
மகேன்