கொலராடோ – 1
Jun 7th, 2004 by இரா. செல்வராசு
டென்வர் விமான நிலையம் சற்றே ஊரை விட்டுத் தள்ளி இருந்தது. அங்கிருந்து வெளியேறிய போது காரில் இருந்து திரும்பிப் பார்த்தபோது அந்த விமான நிலையம்ஏதோ காட்டுக்கிடையே கட்டப்பட்ட ஒய்யாரக்கூடாரம் போலிருந்தது. ஊரே ஒரு பரவலாய்ப் படர்ந்திருந்தது போன்ற உணர்வு. அந்த அடர்த்திக் குறைவு ஊருக்கு வெளியே மட்டுமாக இருக்கலாம். முக்கிய ஊர்ப்பகுதிக்குச் செல்லாமலே கொலராடோ ஸ்ப்ரிங்ஸ் நகர் நோக்கி விரைந்தோம்.
இந்தப் பகுதி கடல் மட்டத்தில் இருந்து சுமார் ஒரு மைல் அளவில் மேலே உள்ளதாம். அதனால் டென்வரைச் செல்லமாக மைல்-உயர்-நகர்(Mile High City) என்று அழைப்பது வழக்கமாம். இவ்வளவு உயரம் உடையது என்று ஏற்கனவே படித்ததால் மட்டும் அல்ல, வேறு ஏதோ ஒன்றுஅப்படி ஒரு உயரத்தில் மிதந்து கொண்டிருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தியது. மற்ற நகரங்கள் எல்லாம் எங்கோ கீழே பள்ளத்தில் கிடப்பது போன்ற பிரம்மை. சாலையின் இரு மருங்கிலும் உயர வித்தியாசங்கள். ஒரு புறம் மலைகளும் மேட்டுப் பகுதிகளும், மறு புறம் பள்ளத்தாக்குகளாகவும் இருந்தது. அந்தப் பள்ளத்தாக்குகளில் அங்கங்கே ஒரு கொத்தாய் இருந்தகுடியிருப்புப் பகுதிகளும் அங்கிருந்த வீடுகளும் ஆஸ்ட்ரிக்ஸ்-ஒபீலிக்ஸ் கதைகளில் வரும் ஊர்களை ஞாபகப் படுத்தியது.
மேகங்கள் தொட்டு விடும் தூரத்தில் இல்லை. என்றாலும், வழக்கமான் உயரத்தில் இன்றி மிகவும் அருகாமையில் இருப்பதாய் ஒரு உணர்வைத் தந்தன. நெடுந்தூரத்தில் தொடுவானத்தில் அப்பிக் கொண்டிருந்த மேகங்களைத் தொடுமேகம் என்று சொல்லலாமோ ? வழியில் திடீர் திடீரென்று சிறு குன்றுகள் சுற்றிலும் யாருமின்றித் தனியே நின்று கொண்டிருந்தன. மொத்தத்தில் இந்தப் பகுதியில் இயற்கை கொஞ்சம் பசுமையைக் குறைத்துச் செம்மையைச் சற்று அதிகமாகப் பூசிக் கொண்டிருந்தது போலிருந்தது. அமெரிக்காவின் கிழக்குப் பகுதியைப் போல அடர்த்தியான மரங்கள் இங்கே இல்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாய் சிறியதாய் இருந்த மரங்கள் கொண்டிருந்த மலைகளைப் பார்த்த என் மகள் அவற்றிற்கு “பிராக்களி மவுண்டென்” என்று பெயரிட்டது வேடிக்கையாய் இருந்தது (அமெரிக்காவில் இல்லாதவர்களுக்கு: பிராக்களி – என்பது காலிஃபிளவர் அச்சில் ஒரு காய். ஆனால் பச்சை நிறத்தில் இருக்கும். அமெரிக்காவில் மட்டுமே நான் கண்டிருக்கிறேன். பிற நாடுகளில் உள்ளதா என்று தெரியவில்லை).
மணிக்கு 75 மைல் வேக அளவு என்று இந்த நெடுஞ்சாலையில் குறிப்பிட்டிருந்தது எனக்கு ஆச்சரியத்தைத் தந்தது. இதற்கு முன்பு 70 மைல் வேகத்தைத் தான் உச்சவரம்பாய்ப் பார்த்திருக்கிறேன். 75ற்கும் மேல் எங்காவது இருக்கிறதா என்று தெரியவில்லை. பெரும்பாலும் உச்சவரம்பு வேகத்தை விட ஒரு ஐந்து மைல் வேகம் அதிகமாகவே செல்வது வழக்கமாயினும், இங்கே அருமையான காட்சிகள் என் கண்களைக் கவர்ந்திழுத்ததில் வரம்பை விட மிகவும் குறைந்த வேகத்திலேயே ஓட்டியபடி கொலராடோ ஸ்பிரிங்ஸ் வந்து சேர்ந்தோம்.
“Cave of the Winds” என்று நயாகராவில் கேள்விப் பட்டிருக்கிறேன். இங்கும் ஒன்று உள்ளது. ஒரு மலைத் தொடரின் மேல் சென்றால், அங்கு இயற்கையாக அமைந்திருக்கிற ஒரு குகை அமைப்பைத் தான் அப்படிக் கூறுகிறார்கள். ஒரு முக்கால் மணி நேரச் சுற்றாய் உள்ளே சுற்றிப் பார்த்து வந்தோம். குகையின் உள்ளே பாறைகள் மேலிருந்து கீழாகவும், கீழிருந்து மேலாகவும், பல வடிவங்களில் வளர்ந்து கொண்டிருந்தன. இதுபோன்ற குகைகளை கென்டக்கியில் “Mammoth Caves” என்னும் இடத்தில் பார்த்திருக்கிறேன். அங்கு போலவே இங்கும் குகையின் உள்ளே ஒரு பகுதிக்கு அழைத்துச் சென்று எல்லா விளக்குகளையும் அணைத்து விட்டு, கும்மிருட்டு எப்படி இருக்கும் என்று காட்டினார்கள். சில பல நிமிடங்களுக்குப் பிறகும் கண்கள் இருட்டுக்குப் பழகவே இல்லை. காரணம் துளியும் வெளிச்சம் இல்லை என்பது தானாம். இது போன்ற நிலையில் நீண்ட நேரம் இருக்க நேரிட்டால், கண்கள் வெளிச்சத்தைத் தேடுவதை மறந்து குருடாகவும் சாத்தியம் இருக்கிறதாம். உண்மையாக இருக்கலாம் என்று தோன்றியது. இது போன்ற குகை வழிகாட்டிகள் சொல்கிற எல்லாவற்றையும் அப்படியே ஏற்றுக் கொள்ளத் தயக்கமாக இருக்கிறது. சும்மா ஒரு சுவைக்காக அவர்கள் ஏற்றி இறக்கிக் கூறுவது உண்டு என்று தோன்றுகிறது.
ஆனால் பிறர் ஏற்றிக் கூற வேண்டிய அவசியம் ஏதுமின்றி அங்கு தெரிந்த சில காட்சிகள் மிகவும் அருமையாகக் கண்களையும் நெஞ்சத்தையும் கவர்ந்து கொள்கின்றன.
-(தொடரும்).
photo superO super!
பிராக்களி – அமெரிக்காவில் மட்டுமே நான் கண்டிருக்கிறேன். பிற நாடுகளில் உள்ளதா என்று தெரியவில்லை). இங்கு சிங்கையில் கிடைக்கிறது. அது ஆஸ்திரேலியா/நியூஜீலாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்படுவதால் அங்கும் கண்டிப்பாக கிடைக்கும்:)