இரா. செல்வராசு

விரிவெளித் தடங்கள்

இரா. செல்வராசு header image 2

உதிரிப் பூக்கள்

June 3rd, 2004 · 11 Comments

நான் இங்கு எழுதிச் சில நாட்களாகி விட்டன.எனினும் சுற்றும் பூமி நின்று போய்விடவில்லை :-).  “சில நாட்களாய் இங்கு வரவில்லை. வேலை அதிகமாகி விட்டது”, என்று மட்டும் எழுத ஒரு குறிப்புத் தேவையில்லை என்று நினைக்கிறேன். இருந்தாலும், இந்த வார இறுதி தொடங்கிஅடுத்த சில நாட்களில்அலுவல் காரணமாய் வெளியூர் செல்வதால் அதிகமாய் இந்தப் பக்கம் வர இயலாது என்பதையும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு தெரிவித்து விடுகிறேன்.


வாசகர்களின் வந்து வந்து பார்த்துச் செல்ல வேண்டிய வேலையைத் தவிர்ப்பதற்காக இப்படி ஒரு குறிப்புப் பயன்படலாம். எனினும், செய்தியோடைத் திரட்டி வழியாகப் படிப்பவர்களுக்கு இந்த குறிப்பு அவசியமில்லை. புதிதாய் ஒரு குறிப்புஇருந்தால், அவர்கள் பெட்டிக்கு ஓடை ஓடி வருமே! ஆனால், அந்த வசதியை எல்லோரும் பாவிக்கிறார்களா என்பது தான் தெரியவில்லை.


‘கொலராடோ ஸ்பிரிங்ஸ்’-இல் இருந்து முடிந்தால் (படங்கள்?) பதிவு செய்கிறேன்.


* * * * *


“அருமைக்காரர்என்பதற்குகொங்குத்தமிழில்பொருள்என்ன..?” என்று சில நாட்களுக்கு முன்பு நண்பர் வாசன் கேட்டிருந்தார்…



அண்ணனின் மனைவியை அருமையாள் என்று அழைப்பது வழக்கம் என்று அவர் கூறியிருந்தது எனக்குப் புதிய செய்தி. கொங்கு நாட்டில், அருமைக்காரர் எனப்படுபவர் உறவினர் அல்லர். உறவினராகவும் இருக்கலாம். திருமணங்களை முன் நின்று நடத்தி வைக்கும் ஒரு ஊர்ப் பெரியவர். திருமணச் சீர் சடங்குகளைத் தெளிவாகத் தெரிந்து வைத்திருக்கும் ஒரு அருமைப் பெரியவர். “அருமைப் பெரியவர்” தான் மருவி அருமைக்காரராக மாறி விட்டது என்று எண்ணுகிறேன். இன்னும் சில புத்தகங்களில் அருமைப் பெரியவர் என்று குறிப்பிட்டிருப்பதைக் கவனித்தேன்.

திருமணத்தின் ஆரம்பமாக, முதல் நாள் முகூர்த்தக் கால் நாட்டுவதுடன் நிகழ்ச்சிகள் ஆரம்பமாகும். அதை முன் நின்று நடத்துபவர் அருமைக்காரரே. இரவு முழுதும் பல சீர்களை நடத்திப் பின் இறுதியாக மறுநாள் காலையில் மணவறையில் மாப்பிள்ளை கையில் மங்கல நாணை எடுத்துக் கொடுத்து மணமகள் கழுத்தில் அணியச் செய்வார். இப்படி எல்லா நிகழ்ச்சிகளுக்கும் முன் நின்று பூசைகள் செய்து திருமணத்தை இனிதே நடத்தி வைப்பவரே அருமைக்காரர்.

இப்படித் தான் எனது கையில் மங்கல நாண் எடுத்துக் கொடுத்து, எங்களுக்கும் ஒரு அருமைக்காரர் திருமணம் நடத்தி வைத்து, இன்றோடு சரியாக எட்டு ஆண்டுகள் முடிகின்றன.

* * * * *

“கண்கள் சொல்லும் கதை” ஊரில் இருந்து வந்தவுடன் தொடரும். இப்போது தான் லேசர் பக்கமாய் கதை வந்திருக்கிறது. இது பற்றிக் கருத்துச் சொன்ன பாலா, வெங்கட் இவர்களுக்கு நன்றி. இந்தத் தொடர் முடிந்தவுடன் இதன் நிறை குறைகள் பற்றி லேசர் நிபுணர் வெங்கட் கூறுவார் என்று நம்புகிறேன். இன்னும் செய்து கொள்ளவில்லையென்றால் தனி அஞ்சல் அனுப்பவும் என்று பயமுறுத்தி வைத்திருக்கிறார்!

* * * * *

தொடர்ந்து ஐந்தாவது நாளாய் என் மகளுக்கு இரவில் இருமல் தொந்தரவு அதிகமாய் இருக்கவே, Albuterol என்னும் உள்ளிழுக்கும் மருந்து கொடுக்க வேண்டியிருந்தது. இது ஒரு மிதமான ஆஸ்துமா காரணமாய் இருக்கலாம். சென்ற ஆண்டுகளில் ஒரு இரண்டு மூன்று முறை இந்தத் தொந்தரவு அதிகமாகி மூச்சு விடவே சிரமப்பட்ட அவளைக் காண மிகவும் சிரமமாய் இருந்தது. ஒரு கையாலாகாத்தனம் ஏற்பட்டது. இது பற்றி வெங்கட் ஒரு முறை தன் வலைப்பதிவில் எழுதி இருந்தார் என்று நினைவு வர, தேடிப் பார்த்தேன் கிடைக்கவில்லை. இது பற்றியும் அவரிடம் கேட்க வேண்டும். எனினும், இதற்குச் சரியான தீர்வு இல்லை என்றே அறிகிறேன்.

கண் இல்லாத, தன் கழிவுகளையே உண்டு வாழும் குப்பைப் பூச்சிகள் (dust mites) ஏற்படுத்தும் ஒவ்வாமை காரணமாய் இந்த நிலை ஏற்படலாம் என்றும் படித்தேன். அது பற்றியும் ஒரு நாள் எழுத வேண்டும் என்று நினைத்திருக்கிறேன்.

இந்த மூச்சுத் திணறலை கற்பனை செய்து பார்க்க, மூக்கை அடைத்துக் கொண்டு வாயில் மூச்சு விட்டுப் பாருங்கள். பிறகு ஒரு ஐந்து நிமிடம் வேகமாய் ஓடி விட்டு, அதே போல் மூக்கைப் பிடித்துக் கொண்டு, ஆனால் இப்போது ஒரு சிறு குளிர்பானக் குழாயை (straw) வாயில் வைத்து அதன் மூலம் மூச்சு விடுவதைக் கற்பனை செய்து பாருங்கள். அப்படி இருக்குமாம் !

* * * * *

சில சமயம் அமெரிக்க மருத்துவமனைகளில் திருப்திகரமான நிலை ஏற்படுவதில்லை. வயிற்று வலியால் சில சமயம் அவதிப்படும் ஒருவருக்கு உண்மையான காரணம் என்ன என்று தங்களுடைய பலவிதமான சோதனைகளுக்குப் பிறகும் அவர்களால் சொல்ல முடியவில்லை. ஒரு வேளை இதுவாய் இருக்கலாம், ஒருவேளை அதுவாய் இருக்கலாம் என்று ஊகங்கள் மட்டுமே வெளிப்படுத்துவது நம்பிக்கைக்குரியதாய் இல்லை. இந்தியாவில் இப்படி இல்லை. எனக்குத் தெரிந்து எதேனும் வலி பிரச்சினை என்றால் டாக்டர்.கோவிந்தனிடம் சென்றால் ஒரு ஊசி போடுவார், சரியாகிப் போகும். ஒருவேளை இந்தியாவில் சிக்கலான விஷயங்களுக்கு மருத்துவம் பார்க்கச் சென்றதில்லை என்பதால் இது சரியான ஒப்பீடு இல்லையோ ?

* * * * *

மருத்துவர் என்றதும் சில நாட்களுக்கு முன் வானொலியில் கேட்ட நிகழ்ச்சி நினைவுக்கு வருகிறது. அமெரிக்காவில் அதிக மக்கள் வசிக்காத கிராமப்புறப் பகுதிகளுக்குச் செல்ல அமெரிக்க மருத்துவர்கள் முன் வருவதில்லை என்பதால், (எல்லா நாட்டிலும் இதே கதை தானோ ?) வெளிநாட்டு மருத்துவ ஆராய்ச்சியாளர்களுக்கு (J-1 Visa Holders), ஆய்வு முடிந்த பின் உடனே தங்கள் நாட்டிற்குத் திரும்பிச் செல்ல வேண்டும் என்னும் கட்டாயத்தை விலக்கி அவர்களை இது போன்ற கிராமப்புறப் பகுதிகளுக்கு பணியாற்ற வைக்கின்றனர். இதுபோன்ற பணிகளை ஏற்ற சில இந்திய மருத்துவர்களால் தான் மேற்கு வர்ஜீனியா மாநிலத்தின் சில மூலைகளில் மருத்துவமனைகள் மூடாமல் காப்பாற்றப் பட்டன என்று அந்தச் செய்தி தெரிவித்தது. அந்த மாநிலத்தில் சில ஆண்டுகள் இருந்திருப்பதன் காரணமாக, அந்தச் சிற்றூர்கள் எப்படி இருக்கும் என்று என்னால் கற்பனை செய்து பார்க்க முடிகிறது.

இருப்பினும் அரசு ஆணை ஒன்று கிடப்பில் போடப்பட்டிருப்பதாலோ என்னவோ, இந்தத் திட்டத்திற்கு ஏதோ குந்தகம் வரும் போல் இருக்கிறது. இதில் யாருக்கு நட்டம் அதிகம் ?

* * * * *

Tags: பொது

11 responses so far ↓

  • 1 Dubukku // Jun 4, 2004 at 10:06 am

    செல்வராஜ் தம்பதிகளுக்கு திருமணநாள் வாழ்த்துக்கள் !!!

  • 2 Vassan // Jun 4, 2004 at 9:06 pm

    செல்வராஜ்:

    உங்களுடைய மகளின் இருமல் குறைந்து விட்டதா..

    நினைவில் வைத்து அருமைக்காரர் பற்றி தெளிவித்தமைக்கு நன்றி.

    அருமையா(ள்) அல்லது வரிசையா(ள்) என்றே
    அண்ணியாரை அழைப்பது எமது குடும்ப அல்லது வகுப்பினத்தின் peculiar வழக்கமாய் இருக்கலாம் ! இது மாதரி உறவுகளை அழைக்கும் முறை எத்தனை உண்டோ தமிழினத்தில்..? மணப்பாறையைச் சேர்ந்த எமது மாமி ஒருவர் அவரது தந்தையை ஆயன் என்று அழைப்பார்…

    கொலரா ஸ்பிரிங்ஸ் லிருந்து அல்புகர்க்கி பக்கம்தான் ( 300 சொச்ச மைல்) .அடுத்த தடவை வந்தால் இங்கு வந்து போக பாருங்கள்.

  • 3 ஈழநாதன் // Jun 4, 2004 at 11:06 pm

    சிறிது பிந்திய திருமண வாழ்த்துகள்.எங்களுக்கு மருத்துவக் குறிப்புகள் தருவதோடு நின்றுவிடாது மகளுக்கும் கொஞ்சம் கொடுங்கள்

  • 4 sundaravadivel // Jun 4, 2004 at 11:06 pm

    செல்வராஜ், எனக்கும் அந்தக் கொடுமையான அனுபவம் உண்டு. Albuterol கூடவே நான் எடுத்துக் கொள்ளும் இன்னொன்று Flovent எனப்படும் ஒரு தடுக்கும் மருந்து. Advair என்ற ஒன்றுமுண்டு. பக்க விளைவுகள் குறைந்த தடுப்பு மருந்துகள் இருப்பதாகவும் அறிகிறேன். உங்கள் மருத்துவர் மூலம் அறிந்திருப்பீர்கள், இருப்பினும்.

  • 5 Thangamani // Jun 5, 2004 at 6:06 am

    Thirumana naal vaazthukkal selvaraj.

  • 6 achimakan // Jun 5, 2004 at 9:06 pm

    நன்றி செல்வராஜ். எனது அடுத்த பதிவுக்கான கருத்தைக் கொடுத்து விட்டீர்கள்.

    ஆஸ்த்மா அல்லது இரைப்பு நோய் (இதை கணை என்றும் நாய்க் கணை என்றும் கூடச் சொல்வார்கள்). இதற்கு அல்லோபதி மருத்துவத்தில் நிரந்தரத் தீர்வு கிடையாது.

    ஆனால் எளிய மூச்சுப் பயிற்சி மற்றும் யோகாசனம் மூலம் நிச்சயமான குணம் கிடைக்கும். அடுத்த சில நாட்களுக்குள் விரிவாக எனது பதிவில் எழுதுகிறேன்.

  • 7 -/இரமணிதரன், க. // Jun 6, 2004 at 1:06 am

    என் அப்பாவை இந்த அஸ்மா இழுப்பில்லாமல் நான் கண்ட நாட்கள் குறைவே. அதுவும் புழுதி நாட்களும் முன்பனிக்கால தை மாசி மாதங்களும் மூட்டமான நாட்களும் மிகமோசமானவை. அதற்காக அவர் முயலாத வைத்தியமுறைகள் இல்லை; அலோபதி, சித்த/ஆயுர்வேத வைத்தியம், அக்குயுபஞ்சர் இவை உட்பட. [தவிர, இந்த இழுப்பு குறையுமென்று மைசூர் பல்கலைக்கழகத்திலே அவர் கற்ற 1955~1957 களிலே அவர் பழகிக்கொண்ட குடி, முழுக்கவே அவரைக் குடித்துவிட்டிருந்த அநியாயம் வேறு]. உணவு முறைகளையும் மாற்றி மாற்றிப் பார்த்தார்; காலை எழுந்தவுடனே வெறும் முட்டை தேனில் என்பது தொடக்கம் பல. இந்தியாவிலே இருந்து ஒருவிதமான புகையிலைத்தூள் வடிவிலான சருகுமருந்து ஒன்றினை எரித்து அதன் புகையை உள்ளிழுத்தல், நாசியினையும் சுவாசவழியினையும் இலேசுபடுத்த காற்றமுக்கி, யோகாசனம், ப்ரிட்ணிசிலொன், ப்ராஜில், விட்டமின் பி ஸ்கர்கோட்டட் இவை மூன்றும் நாளுக்கு ஒவ்வொன்றிலும் ஒன்றிரண்டிலே தொடங்கி ஆறு வரைக்கும் போன நிலைவரைக்கும் ஆண்டுக்கணக்காகப் பார்த்திருக்கின்றேன். இவற்றின் பக்கவிளைவு காதிலே கேட்காத்தன்மையை வேறு அதிகரித்தது. ஆஸ்துமா இழுப்பு குறைந்த நேரத்திலே, காலிலே எக்ஸிமா வந்துவிடும். நீரழிவு நோய் பரம்பரையாக இருந்ததால், இந்த எக்ஸிமாவும் நீரழிவும் ஒரே நேரத்திலே வந்தால், ஏற்படக்கூடிய உபத்திரவம்…. ஆனால், அவர் நாய், பூனை, ஆடு, தாரா, கோழி என்று வீட்டிலே வைத்திருந்த மிருகக்காட்சிச்சாலையை மூடியிருந்தாரென்றால், இந்த உபத்திரவத்திலே பாதி ஒழிந்திருக்குமென்பது என் அபிப்பிராயம்.

    இந்த ஆஸ்மாவிலே இருக்கும் வேதனை அதிலே வருந்துகின்றவரைப் பார்த்துக்கொண்டிருப்பது; மூச்சு விடமுடியாமல், வலிந்து வயிற்றினை எக்கி எக்கி அவஸ்தைப்படுகிறது மிகவும் காணச் சகியாதது.

    உங்கள் மகளின் உணவு முறையினை, நாளாந்த செயற்பாடுகளிலே மாற்றங்களைக் கொண்டு வந்து நோயின் அழுத்தத்தினைக் குறைக்கமுடியுமா என்று பாருங்கள்.

  • 8 Balaji-paari // Jun 6, 2004 at 2:06 pm

    ஆஸ்த்மா என்று சொல்லமாட்டார்கள். ஆனால் இளைப்பு நோய் என் பால்ய பருவத்தை வெகுவாக பாதித்தது. என்னுடைய பத்து வயதில், எனது தந்தை, என்னை தூக்கிக் கொண்டு மருத்துவரிடம் செல்வார். நெஞ்சு சளிக்கு ஒரு இஞ்ஜெக்சன் (டெர்ராமைசின் என நினைக்கின்றேன்). டெட்ரால், பெட்னிசொல் இவைகளும் கூடவே ஆன்டிபயாடிக்(ரெஸ்டாக்கிளின்) மருந்து பட்டைகளும்..
    ஆனால் கல்லூரி சென்ற பின் அந்நோய் என்னை அதிகமாக பாதிக்கவில்லை. எதிர்காலம் யார் அறிவாரோ?
    செல்வா குழந்தைக்கு என் அன்பு. யோகா மூலம் என் நண்பன் நல்ல பலனை கண்டுள்ளான். மற்ற விவரங்கள் தனி மடலில். ok?

  • 9 செல்வராஜ் // Jun 7, 2004 at 7:06 pm

    நண்பர்கள் அனைவருக்கும் பல காரணங்களுக்காகவும் நன்றி.

    இந்தக் குறிப்புக்களின் மூலம் ஆற்றாமையை வெளிப்படுத்துவதற்கும், ஆலோசனைகள் பெறுவதற்கும், கலந்துரையாடவும், பகிர்ந்து கொள்ளவும் முடிவது நன்றாக இருக்கிறது.

    மகளின் இருமல் பரவாயில்லை என்று சொல்லலாமா என்று நினைக்கிறேன். ஆனால், தெரியவில்லை. அவ்வப்போது மாறி வருகிறது. “ஆஸ்த்மா”/மூச்சு இரைப்பா என்பதும் உறுதியாகத் தெரியவில்லை. (அமெரிக்க) மருத்துவர்கள் உறுதியாகச் சொல்வதில்லை. ஆனால், கடந்த ஆண்டில் ஒரு மூன்று நான்கு முறை அவள் பட்ட அவதி மிகவும் கொடுமை. அதில் முதல் முறை எங்களுக்கும் முன் அனுபவம் இல்லாததால், முற்ற விட்டுவிட்டோமோ என்னவோ, அவசர சிகிச்சைப் பிரிவிற்குச் சென்று இரண்டு நாட்கள் இருக்க வேண்டியதாகப் போய்விட்டது.

    இப்போது இரவில் மட்டும் அவ்வப்போது இருமல் தொந்தரவு. அதற்கும் இந்த இரைப்பு, அதன் மூல காரணமான ஒவ்வாமை இவை காரணமாய் இருக்கலாமா என்று அனுமானங்கள் தான்.

    பலரும் சொல்வது போல் இதற்கு மருத்துவத் தீர்வு இல்லை தான் போலும். ஆச்சிமகன், பாரி, நீங்கள் கூறியது போல் யோகா போன்றவற்றை முயல வேண்டும் தான். பாரி, இளைப்பு என்பது வேறா ? ஊசி போட்டால் குணமாகும் என்றால் அடுத்த முறை இந்தியப் பயணத்தில் அது பற்றி விசாரிக்க வேண்டும். சென்ற முறை சித்த மருத்துவம் முயன்று பார்த்தோம். கசப்பு மருந்தைக் குழந்தை குடிக்க முடியவில்லை.

    சுந்தர், இரண்டு நாட்கள் முன்பு தான் மருத்துவர் advair பரிந்துரைத்தார். அதையும் இப்போது முயன்று கொண்டிருக்கிறோம்.

    இரமணி உங்கள் அன்பிற்கும் நன்றி. தற்போதைக்கு தூசி ஒவ்வாமையைத் தவிர்க்க முயற்சி செய்யலாம் என்று முயல்கிறோம்.

    வாசன், அடுத்த முறை கொலொ.ஸ்பிரிங்ஸ் வரமுடிவது பற்றித் தெரியவில்லை. இன்னும் கொஞ்சம் அருகில் இருந்திருந்தால் ஒரு வேளை ஆல்பகர்க்கிக்கு வர முயன்றிருக்கலாம். உங்கள் அழைப்பிற்கு நன்றி.

    திருமண நாள் வாழ்த்துச் சொன்னவர்களுக்கும் நன்றி.

  • 10 ishareu // Nov 5, 2010 at 3:43 pm

    உண்மைதான் ஐயா,
    ஆதாரம் இங்கே http://laraherbal.com/yoga/cure_for_asthma.html

  • 11 Kannan // Jan 17, 2011 at 6:17 am

    மிகவும் அருமை