Feed on
Posts
Comments

நெஞ்சுக் கூட்டையும் தோள்பட்டையையும் இணைக்கிற பாலமாகப் புறம் ஒன்றாய் ஆளுக்கு இரண்டு எலும்புகள் இருக்கும். உடலுக்கு ஒரு கட்டமைப்புத் தருவதோடு இவை உள்ளிருக்கும் நரம்பு வலைகளுக்கும் பாதுகாப்பை அளிக்கின்றன. ஆங்கிலத்தில் Clavicle அல்லது Collar Bone என்று சொல்வார்கள். “S” வடிவத்தில் இருக்கும் இதனை இணையத் தமிழ் அகரமுதலி காறையெலும்பு அல்லது சவடியெலும்பு என்று கூறுகிறது. முதலில் விலா எலும்பு என்று தமிழ் அறிவிலியாய் எழுதிக் கொண்டிருந்ததை வெட்கத்தை விட்டு ஒத்துக் கொண்டு, தவறைச் சுட்டிக் காட்டிய மனைவிக்கும் நன்றி சொல்லத் தான் வேண்டும்.

மற்ற பல எலும்புகள் போல் சதையொட்டி இராமல் வெறும் தோல் மட்டுமே போர்த்தப்பட்டிருப்பதால் காறையெலும்பை எளிதில் பார்க்கவும் உணரவும் முடியும். நேரடியாகவோ, பிறவழியாகவோ இவை அடிபடும் சாத்தியங்களும் கணிசமானது. உதாரணத்திற்கு வாகன விபத்துக்களில் மாட்டிக் கொள்பவர்களுக்கும், சிலவகையான விளையாட்டுக்களில் ஈடுபடுவோருக்கும் காறையெலும்புக் காயங்கள் ஏற்பட அதிக வாய்ப்புண்டு. குறிப்பாக, ஐஸ் ஹாக்கி, சாதா ஹாக்கி (!), மல்யுத்தம், கால்பந்து, உதைபந்து (ஒன்றை அமெரிக்கன் ஃபுட்பால் என்று கொள்க, மற்றது சாக்கர்!), கூடைப்பந்து, குத்துப்பந்து (Volleyball 🙂 ) இவற்றில் சவடியெலும்புகள் அடிபடுவது அதிகம் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழ்ச்சினிமாவாய் இருந்தால் மிதிவண்டிச் சங்கிலி, இரும்புக்குழாய், வாள், கம்பு, கிரிக்கட் மட்டை என்று பலவித ஆயுத எழுத்துக்களால் மற்ற எலும்புகளோடு சேர்ந்து உடையச் சவடிக்கும் வாய்ப்புண்டு. கதை நாயகர்களுக்குப் போலியாகச் சண்டைக்காட்சியிலும் சில சாகசகங்களிலும் ஈடுபடுபவர்களுக்குப் பாவம் இது நிஜ வாழ்விலும் நிகழ்வதுண்டு.

Continue Reading »

பெண்களுடன் நடந்து சென்று வந்தபோது வாத்துக்குளம் வறண்டு கிடந்தது. பாளம் பாளமாய் வெடித்துக் கிடந்த குளத்தைப் பார்த்துப் பெரியவளுக்குக் கொஞ்சம் ஏமாற்றம். இந்த வசந்தத்தில் போன வருடம் போல் மழையில்லை. தண்ணீரில்லாத குளத்தில் வாத்துக்கள் வரவில்லை. உள்ளே இறங்கிச் சிறிது நேரம் விளையாடியதில் வருத்தம் கொஞ்சம் மறைந்தது.

“வாழ்க்கையிலேயே முதன்முறையாக இப்படிப் பார்க்கிறேன்” என்றாள். “இது என்ன பெருசு? எங்க ஊர்ல பெரிய பெரிய ஆறெல்லாம் தண்ணியில்லாமக் கிடக்குது” என்றேன்.

“It’s not fair” என்றாள். பேறாற்றைச் சொன்னாளா வாத்துக் குளத்தைச் சொன்னாளா? தெரியவில்லை.

Continue Reading »

ஐரோப்பாவின் பல நாடுகளுள் நுழைய ‘ஷெஞ்சென்’ நுழைவனுமதிப் பத்திரம் (Schengen Visa) வாங்கியிருக்க வேண்டும். அமெரிக்கக் குடிமகவாய் (குடிமகன்+குடிமகள்=குடிமகவு(?) ) இருந்தால் இது தேவையில்லை. பொதுவாகவே, அமெரிக்கர்களுக்குப் பல நாடுகளுக்குச் செல்லவும் நுழைவனுமதிப் பத்திரம் தேவையில்லை. இதற்காகவே அமெரிக்கக் குடியுரிமை வாங்கி வைத்துக் கொள்ளலாம் என்றொரு எண்ணம் மூலையில் எழாமல் இல்லை.

ஏதோ ஒரு விநோத நாட்டுப்பற்றுணர்ச்சி வந்து இந்தியக் குடியுரிமையை விடாமலிருக்க வைத்திருக்கிறது. இதனால் இந்தியக் குடியுரிமையை விட்டுவிட்டு அமெரிக்கக் குடியுரிமை பெற்றவர்களுக்கு நாட்டுப்பற்றுக் குறைவு என்றோ, மற்றவர்க்குப் பற்று அதிகம் என்றோ எதுவும் நான் கூற விழையவில்லை. இது பற்றிப் பலருக்கும் பல கருத்துக்கள் இருக்கும். அவையிரண்டிற்கும் இடையே ஒரு பிணைப்பு இல்லை என்பதே இப்போதைய என் எண்ண ஓட்டம்.

சரி. அது தான் இப்போது இரட்டைக் குடியுரிமை வந்துவிட்டதே. இரண்டிலும் ஒன்று வாங்கி வைத்துக் கொள்ளலாமே என்றும் கூடத் தோன்ற ஆரம்பித்திருக்கிறது. ஆனால், அதில் இன்னும் தெளிவின்மையும் பல சிக்கல்கள், குழப்பங்களும் இருக்கின்றன. வாஷிங்டனில் இருக்கிற இந்தியத் தூதரகம் இரட்டைக் குடியுரிமை விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்வதை நிறுத்தி வைத்திருக்கிறது. அதோடு, பேச்சுவாக்கில் இரட்டைக் குடியுரிமை, இருமைக் குடியுரிமை என்று கூறினாலும், இது முழுவதுமாய் இரட்டைக் குடியுரிமையைத் தருவதில்லை. அயலக இந்தியக் குடியுரிமையை மட்டுமே தருகிறது (Overseas Indian Citizenship). நியு யார்க் இந்தியத் தூதரகத்தின் இது பற்றிய விளக்கத்தில் இறுதிப் பத்தியில் தெளிவாகக் குறிப்பிடப் பட்டுள்ளது. Overseas Citizenship is not Dual Nationality.

ஒரு வகையில் இது ஏமாற்றமே. அயலக இந்தியக் குடிமகவானால் சில இழப்புக்களை ஏற்றுக் கொள்ள வேண்டும். அவற்றுள் முக்கியமானது ஓட்டுரிமை இழப்பு. இந்தியத் தேர்தலில் ஓட்டுப் போட்டுப் பல காலம் ஆயிற்றென்றாலும், ஓட்டுரிமையை இழப்பதென்பது உரிமையான ஒன்றைப் பறிகொடுப்பது போல் தான் தோன்றுகிறது. அதோடு ‘திரும்பிச் சென்று அரசியலில் சேர்ந்து…’ என்கிற வீராவேச வசனங்களையும் இனிப் பேச முடியாமல் போய் விடும். அயலக இந்தியக் குடிமக்கள் இந்தியாவில் அரசமைப்புப் பதவிகளும் அரசு வேலைகளும் வகிப்பதும் இயலாத ஒன்று. அப்புறம் எப்படி ஒரு எம்மெல்லே (அ) எம்ப்பி ஆவது? எப்படி ஒரு மாவட்ட ஆட்சியர் ஆவது? ‘அதுக்கெல்லாம் வயசு தாண்டியாச்சு’ என்கிற மனைவியின் நினைவுறுத்தல் இடியை ஒருபுறம் தள்ளிவிட்டு மீண்டும் ஐரோப்பாவிற்கு வருவோம்.

Continue Reading »

Aus Map

ஒரு நாள் முழுக்க நீலமலைப் பகுதியில் சுற்றிக் கொண்டிருந்துவிட்டுத் திரும்பக் கிளம்பிய நேரம் தான் எங்கள் கதை ஆரம்பிக்கிறது! ஒழுங்காக வந்த வழியிலேயே திரும்பி நெடுஞ்சாலையிலே சென்றிருக்கலாம். ஆனால், எப்போதுமே புதுப் புது வழிகளைத் தேடும் நமது அறிவு அன்றும் கொஞ்சம் விளையாடிவிட்டது.

“நெடுஞ்சாலை என்றாலும் மீண்டும் கிழக்கே சிட்னி நோக்கி நூறு கி.மீ போய்ப் பிறகு தென்மேற்காய்ப் போக வேண்டும். அதற்குப் பதிலாக இப்படி நேர் தெற்காக ஒரு வழி இருக்கிறது பார், அப்படியே போய் விட்டால் விரைவில் கூல்பர்ன் போய்ச் சேர்ந்துவிடலாம்” என்றேன் மனைவியிடம்.

“வேண்டாங்க. எதுக்குத் தெரியாத வழியிலே போய்க்கிட்டு?”

NSW Map

“அட இல்லை. இங்கே வரைபடம் இருக்கிறது பார். நேர் வழியாகத் தான் போட்டிருக்கிறார்கள். அப்படியே இந்தப் பள்ளத் தாக்கு ஓரமாய் பார்க்க நன்றாய் (Scenic) இருக்கும் என்று நினைக்கிறேன்”

“ம்ம்ம்”

Continue Reading »

சிட்னியில் இருந்து மேற்கே சுமார் நூறு கி.மீ தூரத்தில் ‘கட்டூம்பா’ என்று ஒரு சிறுநகரம் இருக்கிறது. ஆஸ்திரேலியப் பழங்குடியினரை ‘அபோரிஜனல்ஸ்’ (Aboriginals) என்று வழங்குகிறார்கள். அபோரிஜனல் மொழியில் ‘கெடும்பா’ என்றால் ஒளிக்கும் நீர் வீழ்ச்சி (shining falling waters) என்று பொருளாம். கெடும்பாவில் இருந்து மருவி வந்திருக்கிறது கட்டூம்பா. ஆஸ்திரேலியாவில் பல இடங்களில் இதுபோன்ற பழமையான, பழங்குடியினரின் ஊர்ப் பெயர்களே இன்னும் வழக்கில் இருக்கின்றன. உதாரணத்திற்கு, கேன்பரா (சந்திக்கும் இடம்), வாகா வாகா (காக்கா காக்கா), கூயாங் (ஓய்வுக் கூடாரம்), குரீ குரீ (விரைந்து விரைந்து).

கட்டூம்பாவை அடுத்து இருக்கிறது ‘புளூ மவுண்டன்ஸ்’ என்னும் நீலமலைத்தொடர். இது ஒரு காரணப் பெயர். இப்பகுதியில் நிறைந்திருக்கும் யூக்களிப்டஸ் மரங்களின் இலைகளில் இருந்து நூகத் துகள்களாய் (micro particles) வெளிவந்த எண்ணெய்த் துகள்கள் காற்றில் பரவிக் கிடக்கின்றன. அவற்றில் பட்டுத் தெறிக்கும் சூரிய ஒளிக் கதிர்கள் ஒரு நீலப் புகையைச் சுற்றுவெளிக்கு அடித்து வைத்திருப்பது ரம்மியமான ஒரு காட்சி.

நமது ஊரிலும் இதே காரணத்தினால் தான் ‘நீலகிரி’ என்று பெயர் வந்திருக்கும். ‘நீல்கிரீஸ்’ என்று தூயதமிழில்(!) சொன்னால் தான் சிலசமயம் நமக்குப் புரிகிறது! என்ன செய்வது? ‘ப்ளூமவுண்டன் எக்ஸ்பிரஸ்’ என்னும் விரைவுத் தொடருந்தில் சில முறைகள் பயணித்திருகிறேன். ஆனால் அது நீலகிரியின் எதிர்த்திசையில் சென்னை நோக்கிய பயணம். நீலகிரிக்கோ ஒரே ஒரு முறை தான் சென்றிருக்கிறேன்.

Blue Mountains Valley

நீலமலைத் தொடரில் கட்டூம்பா நகருக்கு அருகே அமைந்திருக்கிறது ஜேமிசன் பள்ளத்தாக்கு. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் இந்தப் பகுதியில் வாழ்ந்த பழங்குடியினருக்கும் கட்டூம்பா என்றே பெயர். இந்தப் பகுதியில் அவர்களையொட்டிய சுவாரசியமான இடுகதைகளும் (myths & legends) நிலவுகின்றன.

Continue Reading »

« Newer Posts - Older Posts »