May 10th, 2005 by இரா. செல்வராசு
மெல்போர்ன் அருகே இருக்கும் ஒரு கடற்கரைப் பகுதியில் இரவில் கூட்டம் கூட்டமாய்ப் பென்குயின்கள் கரைக்கு வரும் என்று பார்க்கப் பல மணி நேரங்கள் காரோட்டிச் சென்றிருந்தோம். எங்களைப் போன்றே பெருங்கூட்டம் கூடியிருந்தது. சில மணி நேரங்கள் இருட்டட்டும் என்று காத்திருந்து பார்த்தபோது, அவ்வளவாய் ஒன்றும் வரவில்லை. கடைசியாய், போனால் போகிறது என்று ஒரு சில பென்குயின்கள் மட்டும் காட்சி தந்தன. போகிறது போவென்று குளிருக்கு இதமாய் ஒரு தக்காளி சூப் குடித்துவிட்டு, பென்குயின் வேடமணிந்த ஒன்றைக் கட்டிப் பிடித்துவிட்டு (நானில்லைங்க, குழந்தை 🙂 ) வந்துவிட்டோம்.
மெல்போர்ன் நடுநகர்ப் பகுதி (City Center) ஒரு ஒழுங்காய் அமைந்திருக்கிறது. செவ்வக வடிவத்தில் குறுக்கும் நெடுக்குமாய்த் தெருக்கள். வெளிப்புறமாய் இருக்கிற தெருவில் ஒரு குற்றுந்து இலவசமாய் ஆட்களை ஏற்றிச் சென்று சுற்றிக் கொண்டிருக்கிறது. நகரின் முக்கிய பகுதி ஒரு ஆற்றங்கரையின் அருகே அமைந்திருக்கிறது. ஆற்றங்கரையை அழகாகப் பயன்படுத்தத் தெரிந்திருக்கிறது இவர்களுக்கு. கரையை ஒட்டிப் ‘ப்ராமனாடு’ என்று அமைத்திருக்கிற இடங்களில் நிறைய உணவகங்களும் பிற பொழுதுபோக்கு அம்சங்களும் (இசைக்கேற்றபடி எழுந்து வீழும் ஒரு செயற்கை நீர்ப்பொழிவு) உண்டு. இரண்டு கரைகளையும் இணைக்கும் அழகான நடைப்பாலம் தட்டையாக (இலக்கிய ரசம் சொட்டுதா? 🙂 ) இல்லாமல் சற்று மேலெழுந்து வளைந்த மாதிரி இருக்கிறது.

Continue Reading »
Posted in பயணங்கள் | 12 Comments »
May 8th, 2005 by இரா. செல்வராசு

சிட்னி சுற்றுலாவிற்கு ஏற்ற ஒரு நகரம். நடுநகர்ப் பகுதியிலேயே பார்க்கவென்று நிறைய இடங்கள் இருக்கின்றன. சில ஆண்டுகள் ஆனபின்னும் இன்னும் நினைவில் இருக்கிற இடங்கள் ஓல்ட் சிட்னி, டார்லிங் ஹார்பர் பகுதிகள். சிட்னி என்றவுடன் அடையாளச் சின்னங்களாய் முதலில் படுவது ‘ஆபரா ஹவுஸ்’ – இன் எழில்மிகு வடிவமும் ‘ஹார்பர் பிரிட்ஜ்’ எனப்படும் துறைமுகப் பாலமுமாகத் தான் இருக்கும்.
ஓல்ட் சிட்னி என்னும் பழைய சிட்னிப் பகுதியில் தங்கினால் நடந்து போகும் தூரத்தில் விசைப்படகுத் துறை இருக்கிறது. விசைப்படகில் ஏறி ஒரு உலா சென்றால் தூரக்காட்சியாக ஆபரா ஹவுஸ் மற்றும் வானவில் பாலம் எல்லாவற்றையும் ஒரே பின்புலத்தில் வைத்துப் பார்த்துக் கொள்ளலாம்.

சிட்னியின் தென்புறத்தையும் வடக்குப் பகுதியையும் இணைக்கும் இந்தப் பாலம் கட்டும் வரை இவையிடையே போக்குவரத்துக்கு விசைப்படகுகளே உதவின. இப்போது, கடலடியில் நீண்ட சுரங்கப்பாதைகளும் அமைக்கப் பட்டிருக்கின்றன. இந்தப் பாதைகள் பல மைல் நீளம் கொண்டதாக இருக்கின்றன.
Continue Reading »
Posted in பயணங்கள் | 9 Comments »
May 5th, 2005 by இரா. செல்வராசு
குறைந்தது மாநிலத்துக்கு ஒன்று என்று ஆஸ்திரேலியாவில் மிகப் பெரிய நகரங்கள் இருக்கின்றன. அவற்றுள் கிழக்குக் கரையோரம் இருக்கும் சிட்னி, மெல்போர்ன் இவை முக்கியமானவை. இவை போன்ற பெரிய நகரங்களை விட்டால் இடையில் குறுநகரங்கள் தான் இருக்கின்றன. அப்புறம் எங்கும் நிறைந்த காடு. அவ்வளவு தான். குறுநகரங்கள் சொல்லி வைத்தாற் போல் ஒரு இலக்கணத்துக்கு உட்பட்டவையாக இருக்கின்றன. குறுக்கும் நெடுக்குமாக நாலைந்து தெருக்கள். நகரின் நடுப்பகுதியில் கடைவீதி. தவறாமல் இந்திய உணவகம், தாய்லாந்து, சீன உணவகங்கள். இப்படி.

வழியில் தெரியும் ஈ காக்காயை ஒரு கையில் எண்ணி விட்டுச் சுமார் எட்டு மணி நேரப் பயணத்தில் சிட்னியில் இருந்து மெல்போர்னுக்குச் சென்றுவிடலாம். அப்புறம் போக்குவரத்து நெரிசலில் நகர்ந்து நகருக்குள் செல்ல ஒரு மாமாங்கமே ஆகி விடும். விரைந்தேகும் நெடுஞ்சாலைகளும் வேகத்தை மட்டுப் படுத்தக் காவற்காரரும் ஆஸியிலும் உண்டு. எனது ராசி அங்கும் சென்று ஒருமுறை வேகமாகச் சென்றதற்கு மாட்டிக் கொண்டேன். போனால் போகிறது அயலூர்க்காரன் என்று மன்னித்து விட்டுவிட்டார்கள் என்பது ஆச்சரியம் தான். அன்றே ஜெர்மனியைச் சேர்ந்த என் கும்பணிக்காரர் (குமு, பணி என்ற வேர்களில் இருந்து இந்தச் சொல் வரும் என்று எண்ணுகிறேன்; சமீபத்தில் இராம.கி.யின் ‘வளவில்’ பார்த்தேன்) ஒருவர் தானும் மாட்டிக் கொண்டதும் அவரையும் மன்னித்து விட்டுவிட்டார்கள். ஏதோ ஈஸ்டர் சமயம் என்று குடிபோதையில் ஓட்டுவோர் அதிகம் என்பதால் அதிகரித்தக் கண்காணிப்பில் இருவரும் மாட்டிக்கொண்டோம். குடிவாசமறியாதவன் என்று விட்டுவிட்டார்கள் போலும்.

Continue Reading »
Posted in பயணங்கள் | 9 Comments »
May 3rd, 2005 by இரா. செல்வராசு
இவ்வார நட்சத்திர நிலவு வசந்தன் கங்காரு என்று ஒரு படம் போட்டிருப்பது ஒரு பகிடிக்குத் தான் என்று நினைக்கிறேன். நிச்சயமாக நான் பார்த்த கங்காருக்கள் அப்படி அணில் மாதிரி இருக்கவில்லை :-). குறைந்த பட்சம் மூன்று வருடங்களுக்கு முன்னர் அவை அப்படி இருக்கவேயில்லை!
மூன்றே வாரங்களுக்கு என்று சென்ற ஒரு பயணம் கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்கு இழுத்து விட ஆஸ்திரேலிய அனுபவத்திற்கும் அரிய காட்சிகளைக் காணவும் ஒரு அருமையான வாய்ப்பாய் அமைந்தது. (அட! அது பற்றிக் கூட ஒரு பழையகதை பயணக்கதை எழுதலாமே!). அதுவும் ஒரு இலக்கப் படக்கருவியை வாங்கிச் சென்ற முதல் பயணம் என்றதால், ‘காசா பணமா’ என்று எடுத்துத் தள்ளிய படங்கள் நிறையவே உண்டு.
சிட்னியில் இருந்து ஒரு நான்கு மணி நேரம் கீழே மெல்போர்னை நோக்கிச் சென்றால், இடையில் ‘ட்யூமுட்’ என்று வரும் ஒரு குக்கிராமத்திற்குத் தான் சென்றிருந்தோம். வார இறுதிகளில் ஒரு வாரம் மேல்நோக்கி சிட்னிக்கும் ஒரு வாரம் கீழ்நோக்கி மெல்போர்னுக்கும் போய் வந்தாலும், இடையில் ஓரிரு முறைகள் அருகிலேயே இருக்கும் வனப் பிரதேசத்திற்கும் சென்று வந்தோம். பல நாட்கள் ஒன்றும் கண்களில் தென்படவில்லை என்றாலும், ஒரு முறை ஆட்டு மந்தைகளைப் போல் காட்டில் சுற்றிக் கொண்டிருந்தன கங்காருக்கள். முதன் முறை பார்ப்பதில் அவை எப்படி எங்களை எதிர்கொள்ளும் என்று அறியா ஒரு சிறு பயத்துடன் படம் பிடிக்க முயன்றேன். சற்றுத் தொலைவில் தான் இருந்தன.

Continue Reading »
Posted in பயணங்கள், பொது | 15 Comments »
May 2nd, 2005 by இரா. செல்வராசு
ஓவியக் கண்காட்சி பார்க்கவென்று பெரிதாக ஒரு ஆர்வத்துடன் எங்கும் சென்றதில்லை. பள்ளி கல்லூரி நாட்களில் ஒருமுறை திருவனந்தபுரத்துக்குச் சுற்றுலா போயிருந்த போது எப்படியோ ‘மழைக்கு ஒதுங்கி’ ஒரு ஓவியக் கண்காட்சிக்குள் நுழைந்துவிட்ட கும்பலில் நானும் ஒருவனாய் இருந்துவிட்டேன். பொழுதைப் போக்கியவண்ணம் உள்ளே அலைந்து கொண்டிருந்தேன். ஒரு பக்கத்தில் இருந்த ஓவியக் கூட்டம் அப்படியே பிடித்து நிறுத்தி வைத்து விட்டது. என் அசிரத்தையைப் போக்கி ஆர்வத்தைத் தூண்டியது ஓவியர் ரவிவர்மாவின் எண்ணெய் வண்ணக்கலவைப் படங்கள். பிரகாசமான வண்ணங்களில் பலவகை இந்தியப் பெண்களின் முகங்களை ஒரு உயிரோட்டமாய்க் கொண்டுவந்திருந்ததைக் கண்டபோது ஓவியங்களின் சக்தி மனதில் இன்னும் ஆழமாகப் பதிந்தது. அதிலும் அந்தப் படங்கள் வரையப்பட்டு நூறு ஆண்டுகளுக்கு மேலிருக்கும் என்று அறிந்த போது காலத்தினால் அழியாத கலைக்கு ஒரு உதாரணமாக நின்று வியப்பை மேலிடச் செய்தது.

ரவி வர்மா பற்றி இணையத்தில் படித்த சில விவரங்கள் கீழே. ராஜா ரவி வர்மா (1848-1906) கேரளத்தில் கிளிமனூர் அரண்மனையில் பிறந்து வளர்ந்தவர். ஏழு வயதில் அரண்மனைச் சுவரில் கிறுக்கிக் கொண்டிருந்தவரைப் பார்த்த அவரது மாமா(?) ராஜராஜ வர்மா அவரது ‘திறமையை’ (!) மெச்சி ஓவியக்கலையில் ஆரம்பப் பாடங்கள் சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தார். பதினாலு வயதில் திருவிதாங்கூர் மகராஜா ஆயில்யம் திருநாள் தன் அரண்மனை ஓவியர் ராமசாமி நாயுடுவிடம் கூட்டிச் சென்றார். அங்கே அவர் நீர்வண்ண ஓவியங்கள் வரையக் கற்றுக் கொண்டார் என்றும் பிறகு மூன்றாண்டுகள் கழித்து தியோடர் ஜென்ஸன் என்னும் ஆங்கிலேயர் ஒருவர் எண்ணெய் வண்ண ஓவியங்கள் வரையக் கற்றுக் கொடுத்தார் என்றும் குறிப்புக்கள் கூறுகின்றன. ரவிவர்மாவின் ஓவியங்கள் பெரும்பாலும் இந்தியப் பெருங்காப்பியப் பாத்திரங்களையும் இந்தியப் பின்புலத்தையும் வைத்தே அமைந்திருந்தாலும் அவரை இந்தியக் கலாச்சார ஓவியர் என்று ஏற்றுக் கொள்வதில் பலருக்கு உடன்பாடில்லை. 1873ல் சென்னை ஓவியக் கண்காட்சியிலும், வியென்னா கண்காட்சியிலும் பரிசுகள் பெற்ற பிறகு உலகம் அவரை உணர்ந்து கொள்ளத் தொடங்கியது. அவரது பிற்காலச் சிறப்பிற்கும் புகழுக்கும் இளவயதின் ஆர்வமும் பயிற்சியும் பெரும் காரணிகளாய் இருந்திருக்க வேண்டும். அவையே அடித்தளம் இட்டிருக்க வேண்டும்.
Continue Reading »
Posted in கண்மணிகள், பொது, வாழ்க்கை | 5 Comments »