Jun 27th, 2005 by இரா. செல்வராசு
மூன்று வாரங்களுக்கு முந்தின நிகழ்வொன்று. முதலில் நினைத்தது போல் டொராண்டோவுக்குப் போக முடியாது போலிருக்கிறது என்று நயாகரா வரையாவது போய்விட்டு வரலாமா என்று எண்ணம். சிறியவள் கூட ஆசைப் பட்டாளே! இரண்டு வருடங்களுக்கு முன் சென்ற நயாகராப் பயணம், எடுத்து வந்த படங்களால் மட்டுமே அவள் நினைவில் இருக்கும். இப்போது கொஞ்சம் பெரியவளாகி விட்டதில் (இரண்டில் இருந்து நான்கு என்றாலும் பெரிய வயது தானே:-) ) இன்னும் அதிக அளவில் ரசிக்கக் கூடியதாய் அமையலாம்.

சரி அவ்வளவு தூரம் சென்ற பிறகு டொராண்டோவிற்குப் போகாமல் எப்படி? தொடர்ந்த பயணத்திட்டத்தில் ஒரு இரவு நயாகராவிலும், மறு இரவு ஸ்கார்பரோவிலும் தங்குவதற்கு இணையம் வழியாய் இடங்கள் கூடத் தேடி வைத்தோம். இருந்தும் அன்றைய அலுப்புகள், தகைவுகள், வேலை மிச்சங்கள் இவையாலும் இன்ன பிறவாலும் பயணம் வேண்டாம் என்று முடிவாயிற்று. சரி அடுத்த வலைப்பதிவர் கூட்டத்திற்குச் சென்று கொள்ளலாம். நயாகரா சென்றிருந்தால் அந்த நாளுக்கு ஒரு நினைவாகவாவது அமைந்திருக்கும். பரவாயில்லை. பிறகொரு நாள்…
வெளியூர் போகவில்லை. மாலை உள்ளூரிலேயே இருக்கும் கோயிலுக்குச் செல்லலாம் என்றொரு யோசனைக்குப் பின் அலுவலகம் சென்றேன். ஆனால் மதியம் வலுத்த மழையால் அந்தத் திட்டமும் கரைந்து போனது. ‘மதியம் பெய்த மழை’க்கு மாலை கோயிலுக்குச் செல்வதற்கென்ன என்று கேட்பீர்களோ? எப்படிப்பட்ட சிரமமாய் இருந்தாலும் சரி, பக்தியோடு கோயிலுக்குச் சென்று சாமி கும்பிட்டுவிட்டு வரவேண்டும் என்கிற கட்டாய பக்திகளுக்கெல்லாம் குடும்ப சகிதம் விடை கொடுத்து அனுப்பி விட்டோம். அன்புள்ள ஆண்டவனை நமது வசதி கருதியும் முன்பின் அசத்திக் கொள்ளலாம் என்கிற உயர்நிலைக்கு (!) வந்துவிட்டோம். கோயிலுக்குப் போகும் மனநிலை மாறிவிட்டது. அவ்வளவே. காத்திருப்பார் இறைவன் பொறுமையோடு என்று அன்றைய கோயில் திட்டமும் சுருண்டு கொண்டது.
Continue Reading »
Posted in வாழ்க்கை | 5 Comments »
Jun 23rd, 2005 by இரா. செல்வராசு
சுவீடன் போய் வந்தது பற்றி அப்பாவிடம் பேசிக் கொண்டிருந்த போது அவர் கேட்டார், “அது ஒரு பெரிய நாடு அல்லவா?” என்று. ஒரு நாடு சிறியது பெரியது என்று எதை வைத்துச் சொல்வது? பரப்பளவை வைத்துப் பார்த்தாலோ, மக்கட்தொகையை வைத்துப் பார்த்தாலோ சுவீடன் அப்படி ஒன்றும் பெரியது அல்ல. இவர்களின் மக்கட்தொகை மொத்தமாய் ஒன்பது மில்லியனுக்கும் குறைவே. ஒப்பிட்டுப் பார்க்க, தமிழகத்தில் மட்டும் சுமார் அறுபத்தி இரண்டு மில்லியன் பேர் இருக்கிறோம்.

பொருளாதார நிலையை வைத்து, வாழ்க்கைத் தரத்தை வைத்துப் பார்க்கும் போது பெரியதாகத் தான் இருக்க வேண்டும். மொத்த ஐரோப்பாவே பொறாமைப் படும் அளவிற்கு உயர்வாழ்க்கைத் தரம் இருந்தாலும், சுவீடியர்கள் அதற்காக அதிக வரியைச் செலுத்துகிறார்கள். சராசரியாய் இவர்களின் வாழ்க்கைக் காலம் 78 முதல் 82 ஆண்டுகளாக இருக்கிறது. நிலப்பரப்பில் 50 சதவீதத்துக்கு மேல் காடுகள் நிறைந்திருக்கின்றன. அதனால் காடும் காடு சார்ந்த தொழிலும் இங்கு பிரதானமாக இருக்கிறது.
அப்பா மேலும் ஒரு கேள்வியைக் கேட்டு வைத்தார். “அங்கேயெல்லாம் இந்தி பேசுவாங்களா? இல்லை இங்கிலீசு தானா?”
Continue Reading »
Posted in தமிழ், பயணங்கள், பொது | 37 Comments »
Jun 22nd, 2005 by இரா. செல்வராசு
மாயவரத்தான் ஒரு பதிவு வழியாக வலைப்பதிவுகளும் அது உண்டாக்கியிருக்கும் விருப்பு வெறுப்பு குழுவியம் பற்றியெல்லாம் ஒரு தொடர் பதிவுக்கு வித்திட்டிருக்கிறார். அதனைத் தொடங்கி வைக்க முதலில் என்னை அழைத்திருக்கிறார். அவர் என் பதிவில் இட்ட ஒரு பின்னூட்டம் தொடர்பாக எழுந்த சில மடல் தொடர்புகளும் இதற்குக் காரணம் என்று எண்ணுகிறேன். பொதுவாய் இது போன்ற ஒரு பதிவு செய்ய நான் முனைந்திருக்க மாட்டேன் என்று தோன்றினாலும், சில நாட்களாய் இருக்கும் எண்ணங்களை வெளிப்படுத்த எண்ணி இந்த வாய்ப்பை ஏற்றுக் கொள்கிறேன்.
முதலில் தமிழ்மணம் குறித்த ஒரு குறிப்பு. தமிழ்மணத்தின் இணை நிர்வாகிகளில் ஒருவராய் இருந்தாலும் இது வலைப்பதிவுலகில் ஒரு சேவையை மட்டுமே அளிக்கிறது என்பதைத் தெளிவு செய்ய வேண்டும் என்று நான் நினைக்கிறேன். ஆனால் சமீபத்தில் பலர் தமிழ்மணம் வலைப்பதிவு இரண்டும் ஒன்றே என்று தவறாக எண்ண ஆரம்பித்திருக்கின்றனர். “காப்பியர்”-ஐ “ஜெராக்ஸ்” என்பது போல என்று சப்பைக்கட்டும் எழ ஆரம்பித்திருக்கிறது. இது முழுதும் பொருந்தாத கருத்து.
இதனால் சில சிக்கல்கள் இருக்கின்றன. ப்ளாக்கர், யார்ல்.நெட் போன்ற சேவை நிறுவனங்களில் பிரச்சினை இருந்தாலும் தமிழ்மணத்தார் தான் தீர்த்து வைக்க வேண்டும் என்று நியாயமில்லாத எதிர்பார்ப்பு எழுகிறது. காசி என்னும் தனி மனிதரால் தன் சொந்த நேரத்தில் உருவாக்கப் பட்ட ஒரு சேவை இது. நூற்றுக்கணக்கில் இருக்கிற வலைப்பதிவுகளைப் படிப்பதை எளிமையாக்கவென்று வடிவமைக்கப்பட்டுப் பிறகு பல நுட்பங்களால் மேலும் பல சேவைகள் வழங்கப்பட்டது. ஒரு குமுகாய உணர்வும் வரவேண்டும் என்று வாசகர் மன்றமும் சேர்க்கப் பட்டது. இப்படிப் பற்பல நுட்பச்சேவைகளை வழங்கும் ஒரு அமைப்பே தவிர, தமிழ்மணம் ஒரு இணைய இதழோ, வலைப்பதிவுகளின் தொகுப்போ அல்ல. பதிவுகள் எல்லாம் இங்கு சேமிக்கப் படுவதில்லை. யாராவது தம் பதிவுகளைத் தொலைத்து விட்டு தமிழ்மணம் மீட்டுத் தர வேண்டும் என்று வழக்குப் போட்டாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை!
Continue Reading »
Posted in இணையம் | 10 Comments »
Jun 19th, 2005 by இரா. செல்வராசு
வாஸ்டெராஸில் நகர்நடுச் சதுக்கத்தில் இருந்த மிதிவண்டியோட்டிகள் சிலை என்னைக் கவர்ந்தது. இப்படியொரு சிலையமைக்க இங்கு ஒரு கலாச்சாரம், பாரம்பரியம் இருந்திருக்க வேண்டும். சுவீடனின் ஆறாவது பெரிய ஊர் என்றாலும், அப்படி ஒன்றும் பெரியதாகத் தெரியவில்லை. மாலை ஆறு மணிக்கு மேல் வெறிச்சோடிப் போகும் ஊர். இருந்த கொஞ்சம் மக்களில் பலர் மிதிவண்டிகள் வைத்திருக்கிறார்கள். உணவகங்களின் முன்னாலோ பிற குழுமலிடங்கள் முன்னாலோ ஓட்டுனர்களுக்காக வண்டிகள் காத்துக் கிடந்தன.
முன்பெல்லாம் சரியான நேரத்திற்குப் பணிக்குச் செல்ல வேண்டிய கட்டாயம் இருந்தபோது வரிசையாக மிதிவண்டிகள் வரும், மாலைச் சங்கிற்குப் பின் போகும் என்று சக ஊழியர் வருணித்த காட்சி தனிச்சிறப்பாய் இருந்தது. இப்போது அப்படி இல்லை. மாறியிருக்கிறது. இருந்தும் மிதிவண்டிகளுக்கென ஒரு தனிச் சாலைப்பகுதி இன்னும் பல இடங்களில் இருக்கிறது.

பொதுவாகவே நாடு, ஊர், பேதமின்றி, மிதிவண்டிகளுக்கு நிறையக் கதைகள் இருக்கின்றன. என் அப்பாவும் ஒரு வண்டி வைத்திருந்தார். வாராவாரம் உட்கார்ந்து மண்டி போட்டுக் கொண்டு துடைத்துப் பளபளவென்று வைத்திருந்தார். சக்கரத்தின் ஒவ்வொரு கம்பியாய்ப் பார்த்துப் பார்த்து துடைத்த பொறுமை சத்தியமாய் எனக்கு இருக்கவில்லை. அவர் வாங்கியதற்குப் பிறகு நானும் ஒரு வண்டி வாங்கினேன். இருந்தாலும் சில ஆண்டுகள் கழித்துப் பார்த்தபோது இன்னும் அவருடையது தான் புதிது போல இருந்தது.
Continue Reading »
Posted in பயணங்கள், வாழ்க்கை | Comments Off on சுவீடன் மிதிவண்டி அப்பா
Jun 17th, 2005 by இரா. செல்வராசு
ஒரு வீட்டுல ரெண்டு குரங்கு இருந்துச்சாம். ஒண்ணு பெரிய குரங்கு, பேரு நந்திதா. இன்னொன்னு ரொம்பச் சின்னக் குரங்கு நிவேதிதான்னு பேரு. நிவேதிதாக் குரங்கு இத்துளியூண்டு இத்துக்குளியூண்டு தான் இருக்குமாம்.
அந்த நந்திதா குரங்குக்குப் பசிச்சா நிவேதிதாக் குரங்கச் சாப்பிட்டுடுமாம். ஆனா அதுல ஒரு சிறப்பு என்னன்னா, நிவேதிதாக் குரங்கச் சாப்பிட எடுத்துட்டோம்னா அந்த இடத்துல இன்னொரு நிவேதிதாக் குரங்கு வந்துடுமாம். ஒன்னு ஒன்னா எத்தனை எடுத்துச் சாப்பிட்டாலும் இன்னொன்னு மாயமா வந்து உட்கார்ந்துக்குமாம். தீந்தே போகாதாம்.
தெனமும் காலையில் அம்மா வந்து இன்னிக்கு என்ன சாப்பிடறேன்னு கேட்டா, நந்திதா குரங்கு சொல்லுமாம், “ரெண்டு நிவேதிதாக்கள் வேணும்”னு (“டூ நிவேதிதாஸ் ப்ளீஸ்”).

Continue Reading »
Posted in வாழ்க்கை | 7 Comments »