Apr 14th, 2007 by இரா. செல்வராசு
வள்ளி தேவசேனா சமேதனாகிய ஸ்ரீ சுப்பிரமணியனுக்குப் பல மூலைகளில் இருந்தும் மணியடித்துக் கொண்டிருந்தார்கள். மின்கலம் பொருத்திய முரசொன்று மூலையில் டம்ட டம்ட டம் கொட்டிக் கொண்டிருந்தது. அமெரிக்கத் தலைநகரத் தமிழர் கூட்டம் சிறிதாகப் புத்தாண்டை வரவேற்கப் பட்டோடும் பிறவோடும் குழுமியிருந்தது.
மணியொலியும் முரசொலியும் நாசிகளில் ஏறிய நறுமணமும் ஒருபுறம் புற அறிவைச் சீண்டிக்கொண்டிருக்க, அவற்றினூடாக ஒரு அமைதியை நாடி மனம் மிதந்து கொண்டிருந்தது. தங்க விசிறியும் சாமரமும் வீச, அலங்கரிக்கப்பட்ட முருகக் கடவுள் இன்று பிறமொழி மந்திரத்தோடு தன் தமிழையும் அவ்வப்போது கேட்டதனால், தம்பதியர் சகிதம் சந்தோஷமாகத் தான் இருந்திருக்க வேண்டும்.
எல்லாப் பொழுதுகளையும் போன்று தான், இதுவும் ஒரு தெய்வீக நிமிடம்; நானும் அங்கே ஒரு சாட்சி என நிலைத்திருந்த என்னை அசைத்துப் பார்த்தும் முடியாமல், “சரி நாங்கள் போய் மத்த சாமியெல்லாம் கும்பிட்டுட்டு வர்றோம்”, என்று என்னுடைய சமேதகியும் வாண்டுகளும் நகர்ந்து சென்றனர்.
அப்பன் சுந்தரேசனும், அம்மா மீனாட்சியும் புறங்களில் இருந்தார்கள். பரவாயில்லை. அப்புறம் பார்க்கலாம் என்று இருந்துகொண்டேன். பார்க்காமல் விட்டால் தான் என்ன? காலையில் அப்பாவோடு தொலைப்பேசியபோது அனுப்பி வைத்த புத்தாண்டு வாழ்த்துக் கிடைத்ததா என்று கேட்டிருந்தார். எதைப் பற்றியும் கவலையற்றிருக்க முயல்வதாய்க் கூறினார்.
எதைப் பற்றியும் கவலையற்றுத் தாய் தந்தையர் தோளில் வகைக்கொன்றாய்க் கட்டிக் கொண்டு வாண்டுகள் பலவும் கோயிலில் மலர்ந்திருந்தன. வளர்ந்திருந்த சிலவோ, “இன்னும் நேரமாகுமா?” என்று கேட்டு மந்திரத்தில் மயங்காது முகத்தைத் தொங்க வைத்திருந்தன. மதிய நேரத்துப் பசி என் மகளிடம் கூடக் காட்சிப் பட்டிருந்தது.
Continue Reading »
Posted in பயணங்கள், வாழ்க்கை | 14 Comments »
Mar 29th, 2007 by இரா. செல்வராசு
நவீன கணிமைக்கும் அதில் குறிப்பாக மென்பொருள் வளர்ச்சிக்கும் ஒரு பெரிய மைல்கல்லாக இருந்த ஃபோர்ட்ரான் (Fortran) என்னும் கணிமொழியை உருவாக்கிய குழுவின் தலைவர் ஜான் பேக்கஸ் (John Backus), தனது 82ஆவது வயதில் சென்ற வாரத்தில் (மார்ச் 17) மறைந்து போனார்.
ஜாவாவும், சி++உம், சி-ஷார்ப்பும் இன்ன பிற இக்காலக் கணிமொழிகளில் விளையாடும் நிறையப் பேருக்குப் ஃபோர்ட்ரான் என்னும் ஒரு மொழியைத் தெரியாமலே இருக்கலாம். அல்லது பெயரளவில் மட்டும் ‘எங்கோ கேட்ட மாதிரி இருக்கிறதே’ என்னும் தூரத்துச் சொந்தம் மட்டும் இருக்கக் கூடும். ஆனால், 1957ல் ஐ.பி.எம். நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த ஜான் பேக்கஸின் குழுவினரால் உருவாக்கப் பட்ட ஃபோர்ட்ரான் அந்தக் காலகட்டத்தில் ஒரு அரிய சாதனையாக இருந்திருக்கிறது. இன்றைய கணித்துறையின் மென்பொருள் வளர்ச்சிக்கும், உருவுக்கும் ஒரு வழியும் வடிவும் அமைத்துக் கொடுத்திருக்கிறது என்றால் அது மிகையல்ல.
அசெம்பிளி மற்றும் இயந்திரமொழிகளிலே நிரல்கள் எழுதிக் கொண்டிருந்த நிரலாளர்கள் தனிக்குழுவாக ஒரு பீடத்தினை உருவாக்கிக் கொண்டிருந்த காலகட்டத்தில் ஒவ்வொரு விஞ்ஞானியும், ஆராய்ச்சியாளனும் அந்தப் பீடாதிபதிகளின் துணை தேவையின்றித் தங்கள் புலனத்தின் நிரல்களைத் தாங்களாகவே எழுதிக் கொள்ளும் இயலுமையைக் கொடுத்தது Formula Translator என்பதன் சுருக்கமான ஃபோர்ட்ரான் மொழி. மனிதனுக்கும் கணினிக்கும் இடையிலான ஒரு பாலமாகச் செயல்பட்ட முதல் உயர்மட்ட மொழியாக (High Level languages) உருவெடுத்தது ஃபோர்ட்ரான்.
Continue Reading »
Posted in கணிநுட்பம் | 6 Comments »
Mar 27th, 2007 by இரா. செல்வராசு
“அப்பா… இன்னிக்கு நான் ஒண்ணு கண்டு பிடிச்சிருக்கேன்…”
“என்னம்மா?”
“பன்னண்டுக்குள்ள வரிசையா மூணு நம்பர் எடுத்துக்குங்க”
“ம்ம்… 10, 11, 12…”
“அதுல நடுவுல இருக்கற நம்பர அதனாலயே பெருக்குனா வர விடையில ஒண்ணு கழிச்சீங்கன்னா, முதல் நம்பரையும் மூணாவது நம்பரையும் பெருக்குனா வர்ற விடைக்குச் சமமாயிடும்”
“எப்படி எப்படி… 11*11=121; 121-1=120; 120=10*12… அட! ஆமாம்!”
“இப்படி எந்த மூணு எண்ண எடுத்தாலும் வரும்”
“பரவாயில்லயே… எப்படிடா இதக் கண்டு பிடிச்சே?”
“அப்படியே யோசிச்சுப் பாத்துட்டு இருப்பேன்ல… அப்போ தான் இதக் கண்டுபிடிச்சேன். அன்னிக்குக் கூட ஏழும் அஞ்சும் சேந்தா 12, ஏழுல அஞ்சு போனா 2; எட்டும் அஞ்சும் 13, எட்டுல அஞ்சு போனா 3; இப்படி ரெண்டு நம்பரும் அதுல ஒண்ணு அஞ்சுமா இருந்தா இருக்குற சிறப்பக் கண்டுபிடிச்சேன்ல. அது மாதிரி தான்”
“இருந்தாலும், அத விட இது அருமையான கண்டுபிடிப்பு. நான் அசந்துட்டேன் போ” என்றேன்.
Continue Reading »
Posted in கண்மணிகள் | 8 Comments »
Feb 18th, 2007 by இரா. செல்வராசு
‘தேன்கூடு கல்யாண்’-ஐ எனக்குச் சாகரன் என்னும் வலைப்பதிவராக மட்டுமே முதலில் தெரியும். அதிகம் பின்னூட்டமிட்டதில்லையாயினும் என்னைக் கவர்ந்த எழுத்துக்களுள் அவருடையதும் ஒன்று. அதனாலேயே ஏதோ ஒரு வலைப்பதிவு மீம் விளையாட்டொன்றில் என்னைக் கைகாட்ட எண்ணி அவர் சொல்லியிருந்த சிறுகுறிப்புக்கும் மகிழ்வாய் இருந்தது. அவருக்கும் என் பதிவுகளில் சிறு ஈர்ப்பு இருந்திருக்கக் கூடுமென மகிழ்வு.
சாகரன் என்ற புனைப்பெயரிலேயே அறியப்பட்ட அவர் பெரிதாகத் தன்னை யாரென்று வெளிக்காட்டிக் கொண்டதில்லை. அவரது பதிவின் களன் கொண்டு அவர் சவுதியில் இருக்கக்கூடும் என்பதைத் தவிர வேறெதுவும் எனக்குத் தெரிந்திருக்கவில்லை. இயல்பான நடையில் அமைந்த எழுத்துக்குச் சொந்தக்காரர். தன் குழந்தைக்குப் பெயர் வைக்க அலைந்த ஒரு அன்பான தகப்பனுக்கு வேறோர் அடையாளமும் வேண்டுமோ? இன்று அவரை இழந்து நிற்கும் அவரது மனைவி, குழந்தை, பெற்றோருக்கு என் ஆழ்ந்த வருத்தங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
2005 டிசம்பரில் தேன்கூடு அமைத்தது பற்றியொரு மின்னஞ்சலைத் தமிழ்மணம் ஆலோசனைக் குழுவில் இருந்த அனைவருக்கும் அனுப்பிக் கருத்துக்கள் கேட்டிருந்தார். தமிழ்மணம் என்னும் ஒரு வலைத்திரட்டிக்கும் வலைப்பதிவுகளுக்கும் வித்தியாசம் தெரியாமல் பலர் குழப்பிக் கொண்டிருப்பதோடு திரட்டி நிர்வாகத்தை அவதூறாகவும் பேசிக் கொண்டிருந்த சூழலிலே ஆங்கிலத்துக்கு இருப்பது போல நுட்பியல் அளவிலே பல திரட்டிகளும் பல வசதிகளும் கொண்டு வந்து இணையத்தில் தமிழின் இருப்பை இன்னும் நிலைக்கவும் மேம்படுத்தவும் இது ஒரு முயற்சி என்று குறிப்பிட்டிருந்தார். அதோடு பல திரட்டிகள் சேவைகள் என்று வளர்ச்சி ஏற்படும்போது மக்களின் புரிதல்கள் அதிகமாக வாய்ப்பிருக்கும் என்றும், அதனால் தமிழ்மணத்துக்கும் தனித்துக் கிடைக்கும் இடிகள் குறையலாம் என்றும் நம்பினார். இரண்டு திரட்டிகளும், இன்னும் அதிகரித்த நுட்பியல் வளர்ச்சிகளும், அடுத்தடுத்த தளங்களும் தமிழின் இணைய வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் என்றும் நம்பினார்.
Continue Reading »
Posted in இணையம் | 4 Comments »
Feb 15th, 2007 by இரா. செல்வராசு
“இனிமேல் இந்த ஊர்ப்பக்கமா திரும்பி வரவேண்டியது இல்லை இல்லே?”
காரோட்டிக் கொண்டிருந்த மனைவியின் பக்கமாகத் திரும்பிக் கேட்டேன். அன்றொரு நாள் விடியற்காலையில் கிளம்பிய கிழக்கு நோக்கிய பயணத்தில் கண்ணளவில் இருந்த கதிரோன் அப்போது இன்னும் மேல்நோக்கிச் சென்றிருந்தான். பதில் கிட்டும் முன் நேர்திரும்பிக் கொண்டேன். விரையும் சாலையை அவசரமாக விழுங்கிக் கொண்டு கார் சென்றுகொண்டிருந்தது. பலமுறை இந்தச் சாலையில் முன்னும் பின்னுமாய்ப் பயணித்திருந்தாலும், இது திரும்புதல் இல்லாவொரு ஒருவழிப் பயணம்.
“ம்ம்” என்றோ, வேறு எதுவோ பதிலாய் இருந்திருக்கலாம். பதிலை எதிர்பார்த்தே எல்லாக் கேள்விகளும் கேட்கப் படுவதில்லை. பின்பக்கம் திரும்பினேன். பக்கத்து வீட்டு மிஸஸ் டினஸ் கொடுத்த குட்டிக்கரடி / நாய்ப் பொம்மைகளைக் கட்டியபடி பெண்கள் பின்னிருக்கையில் ஓய்ந்திருந்தார்கள். முன்வாரக் கிறிஸ்துமஸ் நாளையொட்டி எங்களை அழைத்துச் சிலமணி நேரம் இனிமையைப் பகிர்ந்து கொண்டு அவர்கள் கொடுத்த அந்தப் பொம்மைகளுக்குப் பெரியவள் ‘ஜிங்கள் பெல்ஸ்’ என்று பெயர் வைத்திருந்தாள்.
தானும் ஒரு பெயரை யோசித்துக் கொண்டிருந்தாள் சின்னவள். ‘கோக்கோ’ என்று சொன்ன தாயின் யோசனை கிஞ்சித்தும் கருணையின்றி நிராகரிக்கப்பட்டது. ‘நானே தான் பெயர் வைப்பேன்’ என்றவளின் கற்பனையூற்று அந்தநேரம் கொஞ்சம் வற்றியிருந்திருக்க வேண்டும். ‘மாங்க்’ என்று தான் ஊறியது. (மங்க்கி -> மாங்க்!). புதிதாக நாமம் சூட்டிக் கொண்ட கருஞ்சட்டைக் கரடிக்குட்டியைப் பார்க்க எனக்கும் கூடப் பிடித்துத் தான் இருந்தது. அதைப் பக்கத்தில் வைத்துக் கொண்டு தூங்குவதாகப் பாவனை செய்து கொண்டிருந்தாள். சற்று முன்னர் தான், தொடை கிழிந்து பஞ்சு வெளியே எட்டிப் பார்த்த ‘மாங்க்’கை இருகரத்தால் நீட்டி, “ஊருக்குப் போனதும் இதைத் தெச்சுக் குடுங்க” என்று கேட்டிருந்தாள்.
நினைவு தெரிந்து சில ஆண்டுகளாய் வாழ்ந்த ஊரை விட்டுப் போக அவர்களுக்கும் பிடிக்கவில்லை. தெரிந்த இடம், நண்பர்கள், பள்ளி, ஆசிரியர்கள், நூலகம் என்று பழகியனவற்றை மாற்ற வேண்டிய கட்டாயம் உவப்பானதாய் இருக்கவில்லை.
மரத்துக்கு மரம் தாவிடும் குரங்குகளுக்கு ஊர்ப்பிடிப்போ வாழும் மரப்பிடிப்போ இருக்குமோ தெரியவில்லை. ஆனால் மனிதனுக்கு இருக்கிறது. ‘பொட்டி தட்டுர வேலை’ என்று சுயமாய்த் தம்மையே கிண்டலடித்துக் கொள்கிற கணினி வல்லுனர்களைப் போல ‘ஓரூராறு மாதம் வேறூராறு மாதம்’ என்று இல்லையென்றாலும் மூன்று நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை இடம்பெயர்ந்திருக்கிறோம். இருப்பினும் இந்த முறை ஆறு வருடங்கள் மாறாதிருந்த ஊரை விட்டு இப்போது விலக சற்று அழுந்தத் தான் செய்கிறது. அதிலும் எம்மக்களுக்கு நினைவு தெரிந்த முதல் மாற்றம் இது தான்.
உணர்வோடு ஒன்றிவிட்ட ஒரு ஊர் இப்போது உயிரிழந்து கிடந்தாலும், அதன் நினைவுகளால் உந்தப்பட்டு அடர்ந்த புதர்களும் இடிந்த சுவர்களுமாய் இருந்ததனூடே போய் உடைந்த சுவற்றின் ஓடு ஒன்றினைப் பத்திரப்படுத்திப் பெருமூச்சு விடுகின்ற தமிழ்நதியின் ஊர்ப் பிரிதலும் விலகலும் பாசமும் போன்றதில்லை இது.
Continue Reading »
Posted in வாழ்க்கை | 8 Comments »