Feed on
Posts
Comments

1. எட்டுத்தொடர் பத்தியொன்று எழுதவாருமென்று வாரமிரண்டின் முன்னழைத்தார் நண்பர் மணியன். வாரமொரு பதிவும்கூட எழுதும் ஒழுங்கில்லாக் காரணத்தால் உடனடியாகச் செவிமடுத்து எழுதமுடியவில்லை. ‘எட்டு அறவட்டுத் (random) தகவல்கள்’ என்பது பெரும்பாலும் ‘எட்டு சாதனைகள்’ என்றாகிப் போன பல பதிவுகளைப் பார்த்தபோது, நாமென்ன எழுதுவது என்று யோசித்துக் கொண்டிருந்தேன். இடையில் அருணா ஸ்ரீனிவாசனின் அழைப்பும் வந்து சேர்ந்தது. அண்மைக்காலங்களில் தொடராட்டங்களில் பெரிதாய் நாட்டங்காட்டிச் சென்றிருக்கவில்லை என்றாலும் இந்த எட்டிற்காக அறவட்டாய்ச் சிலவற்றை எழுதலாம் எனத் தோன்றியது. முதலில், பல மாதங்களாய் (ஏன், ஒரு வருடத்திற்கும் மேலாய்) எழுத நினைத்தும் இன்னும் எழுதாத இடுகைகள் சிலவற்றின் பட்டியல்: (எட்டு மட்டும் பட்டியலிட்டது இவ்விடுகைக் கருவோடு பொருந்தத் தான் 🙂 )

  • தாராபுரத்தில் இயந்திரப் பறவைகள்
  • குழவியர் படிப்பணம்
  • சுவிட்சர்லாந்தில் மூன்று நாட்கள்
  • வேதிப்பொறியியல் ஓர் எளிய அறிமுகம் – முடிவுரை (தொடரில் மூன்று பாகம் எழுதியது இன்னும் முடிக்கவில்லை என்பதை ஒருவருமே கண்டுகொள்ளவில்லை) 🙂
  • சாதியைப் பற்றிக் கதைக்கிறேன்
  • ஒருங்குறியும் ஓகாரக் கொம்பும்
  • நன்றாக எழுதுவது எப்படி (மகளிடம் படித்த பாடம்)
  • குழந்தைகளோடு ஒரு சொர்க்கம்

இவற்றிற்கென ஒரு நேரம் வரும்போது இவை பதிவு இடுகைகளாகலாம்.

* * * *

2. காலத்தில் பின்னோக்கிச் சுழன்று, குழந்தையாய் இருந்து சற்றே வளர்ந்த, ஆரம்பப்பள்ளி அரை டவுசர் காலத்திற்குச் செல்லலாம். விடிகாலையில் ஒருநாள் அப்பாவின் மிதிவண்டியில் பின்னிருக்கையில் (கேரியர்) அமர்ந்து கொண்டு பயணம். நீதிமன்ற ஊழியராய் இருந்த அப்பா ‘ஜட்ஜ் அய்யா’வைப் பார்க்க அழைத்துப் போனார்.

“போனதும் அவரப் பாத்து ‘குட்மார்னிங்’னு இங்கிலீசுல சொல்லு”.

கடைநிலை ஊழியராய் இருந்தவர் தன் மகனை நினைத்து எப்போதும் பெருமை கொண்டவர். முன்னிலைப்படுத்தி மகிழ்ச்சி அடைந்தவர். ‘ஒரு தடவ கோர்ட்டுக்கு வந்துட்டுப் போ’ என்று அவர் சொன்னதைப் பிற்காலத்தில் ஏனோ பலமுறை புறக்கணித்திருக்கிறேன். அன்று முன்னர் சந்தித்திராத ஜட்ஜ் அய்யாவை நினைத்துச் சொல்கிறேன்.

“பயமா இருக்கும்பா”

“ஒண்ணும் பயப்பட வேண்டாம்… இல்லாட்டித் திரும்பும்போது சொல்லிடு”

கதவு திறந்து உள்ளே சென்றதும், “வாப்பா இராமசாமி…” என்று ஜட்ஜ் ஐயா கணீர்க் குரலில் பேச, “நம்ம பையன் சார்…” என்று கை காட்டுகிறார் அப்பா.

Continue Reading »

n2d2-nbm.jpg“அப்பா, எனக்கு மூணு வரம் கெடச்சா நான் என்ன கேப்பேன்னு உங்களுக்குத் தெரியுமா?”, சிறு நடையாய்க் கடையொன்றுக்குச் சென்றுவிட்டு வீடு திரும்புகையில் ஒரு கதையொன்றைச் சொல்லிமுடித்த என்னிடம் நிவேதிதா கேட்டாள்.

“என்ன கேப்பே? சொல்லுமா”

* * * *

இன்றைய என் கதை அப்படியொன்றும் சுவாரசியமாய் இருக்கவில்லை. மனம் வடிவானவள் வாடியிருந்த நாளொன்றில் கண்ணிலே இரண்டு சொட்டுவிட்டு அழுத கணம் நினைவில் வந்தது. ‘நீங்க இப்போ கதையெல்லாம் சொல்லுரதேயில்ல’ என்ற குற்றச்சாட்டு ‘என் கதையையும் விரும்பிக் கேட்கிறாளே’ என்று பெருமிதம் கொள்ள வைப்பதொன்று. பாட்டி சொன்னதும், பால்யத்தில் அறிந்ததுமான கதைகளைத் தாண்டி பசியெடுத்த இவளுக்குக் கதைகள் சொல்லி மாளவில்லை என்று சொந்தமாய்க் கதைகளைத் திரித்துவிடுவது சில ஆண்டு முன் என் வழக்கமாய் இருந்தது. ஒரு நாள் சொன்ன கதை மறுநாளே மறந்து போகும் என்னை, அவற்றை மறவாது இன்னும் நினைவு கொண்டு இவள் சொல்லுவது ஆச்சரியப்படுத்தும் ஒன்று. ‘அந்தக் கதையெல்லாம் தான் எனக்கு ரொம்பப் பிடிக்குமப்பா’ என்றவளுக்குச் சொல்வதற்காக நிறையக் கதைகளைத் தெரிந்துகொள்ள வேண்டுமெனச் சிந்திப்பதுண்டு. சிந்தனை செயலாக மாறாத காரணத்தால், இன்றைக்கு ஒரு கதை சொல்லத் தயாராய் இல்லாமல் ஏனோதானோவாய் ஒன்றைச் சொல்லி வைத்தேன்.

Continue Reading »

ஆறு நிமிட நேரம். ஆறு முதல் பன்னிரண்டு வயதுள்ளான ஆரம்பப்பள்ளி மாணவப் பார்வையாளர்கள். International Fair என்னும் பன்னாட்டுத் திருவிழாவில் இந்திய தேசம் பற்றி ஒரு அறிமுகப் படம் காட்டவேண்டும் என்றபோது, வெறும் சடத்துவப் படங்காட்டல் அல்லாது சிறிதாய் ஒரு குறும்படமாய்த் தயார் செய்ய முடியுமா என்று ஒரு முயற்சியில் இறங்கினோம். ஹோலி மற்றும் தீபாவளிப் பண்டிகைகளுக்கும் முக்கியத்துவம் தருவதாய் இருக்கவேண்டும் என்னும் இந்தியக் குழுவினரின் விருப்பத்தையும் கருத்தில் கொண்டு, அதோடு முடிந்தவரை பல அம்சங்களையும் காட்டவும் விழைவு.

பெரும்பாலும் இணையத்தில் இருந்து சேகரித்த துண்டுகளை வெட்டி ஒட்டித் தயார் செய்த படம். Fair Use என்னும் முறையில் பயன்படுத்தி இருப்பதால் காப்புரிமைப் பிரச்சினை ஒன்றும் இல்லை என்று நினைக்கிறேன்.

விழா முடிந்த பிறகு மாலை பள்ளியில் இருந்து வீடு வந்த மகளின் (மகள்களின்) முகத்து முறுவலையும் பெருமிதத்தையும் பார்த்தது இதற்காகச் செலவிட்ட பல மணி நேரங்களைப் பயனுள்ளதாக ஆக்கிவிட்டது.

குறும்பட ஆர்வம் தொற்றிக் கொண்டதும் ஒரு சுவாரசியமான பக்க வினை.

N2D2 Feb 2007“அப்பா…”, குரல் கேட்டுத் திரும்பினேன். “திடீர்னு ஒருநாள் நான் செத்துப் போயிட்டா, என்னோட பொருள்லாம் என்னப்பா பண்ணுவீங்க?”, எப்போதும் போன்ற சாதாரண நாளொன்றின் மாலைப்பொழுதில் நிவேதிதாவிடம் இருந்து வந்த கேள்வி கேட்டுத் துணுக்குற்றுப் போனேன்.

“என்னம்மா, என்ன சொல்றே?”

“சும்மா ஒரு பேச்சுக்குப்பா. ஒரு உதாரணத்துக்கு நம்ம கார் ஒரு மரத்து மேல மோதி விபத்து நடந்துடுச்சுனா… அதுல நான் செத்துப் போயிட்டா, என் கிட்ட இருக்குற பொருள் எல்லாம் என்ன பண்ணுவீங்க?”

மரணத்தை இவர்களிடம் இருந்து மறைத்து வைக்க வேண்டும் என்று எண்ணியிராமல் சாதாரண ஒரு நிகழ்வாய்ப் பேசியிருக்கிறோம். மனித வாழ்வும், வயதானால் சாவும் இயற்கை நிகழ்வு தான் என்பதை முழுதும் புரிந்தோ புரியாமலோ இவர்கள் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். ‘நாங்கெல்லாம் வளந்து பெருசாகுறப்போ உங்களுக்கு வயசாயிடும். அப்புறம் செத்துப் போயிடுவீங்க’ என்று ஒரு நாள் வர இருக்கும் எங்கள் சாவு பற்றியும் இவர்கள் எங்களிடமே பேசியதும் உண்டு! மரணத்தை ஒரு புனிதமாகவோ, பயங்கரமானதாகவோ அறிமுகப்படுத்தாதிருந்தாலும், திடீரென்று மாலைத்தீனி சாப்பிட்டுக் கொண்டிருக்கும் ஒரு எட்டு வயதினள் தன் மரணத்திற்குப் பிறகு… என்று பேசுகையில் சற்று திடுக்குற்றுத் தான் போனேன். ஒரு நுணுத்தத்தில் சுதாரித்துக் கொண்டவன், இந்தச் சிந்தனை செல்லும் திசையில் பயணிக்க எண்ணிப் பேச்சைத் தொடர்ந்தேன்.
Continue Reading »

Internet Dog (Fair use from:) http://www.smallbusinesshub.comஇணையத்தில் ஓரளவிற்குக் குப்பை கொட்டியிருக்கிறீர்கள் என்றால் நீங்கள் இந்த ‘ஐப்பீ’ என்பது பற்றிக் கேட்டிருக்கக் கூடும். இது உலகெங்கும் உள்ள கணினிகளை இணைக்கும் வலையாகிய இணையத்தின் செயலாற்றலுக்கு முக்கியமான ஒரு நுட்பம் என்றாலும், ஆழத்தில் இருக்கிற அது பற்றி அறியாதிருப்பது சாதாரணமானது தான். ஆனாலும், அந்த அறியாமையைத் தெரிந்தோ தெரியாமலோ பயன்படுத்தி, ஏதாவது சில அரசியற்சிக்கல்களாலோ அரைவேக்காட்டுத்தனத்தாலோ, (இல்லை அறியாமையாலோ கூட இருக்கலாம்) பயமுறுத்தும் சில(ர்) எழுத்துக்களையும் கூட நீங்கள் ஆங்காங்கே கண்ணுற்றிருக்கலாம்.

கணினி வல்லுனர்கள் பலருக்கும் கூட இந்த ஐப்பி பற்றிய விவரங்கள் முழுமையாகத் தெரியும் என்று சொல்லிவிட முடியாது. இந்தப் பதிவு ஆழ்ந்த நுட்ப விவரிப்புக்களுக்குள் போகாமல், பொதுவாக எளிமையாகச் சொல்ல முடியுமா என்று பார்க்கும் ஒரு முயற்சி. குறைந்தபட்சம், தெரியாத ஒரு விஷயம் பற்றி யாரேனும் பீதி கிளப்பினால் அதனை எதிர்கொள்ள உதவும் சிறு அடிப்படை அறிவு.

ஐப்பி என்பது Internet Protocol என்பதன் சுருக்கமான IP என்பதே. TCP/IP என்பதன் ஒரு அங்கம். இது இணையத்தில் உள்ள கணினிகளுக்குள்ளான தரவுப் பரிமாற்றத்திற்கான (data transfer) பொதுவில் ஏற்படுத்தப்பட்ட ஒரு தரம் (standard). தரவுகளை எங்கு அனுப்புவது, எப்படி அனுப்புவது, என்பது போன்றவற்றிற்கான ஒரு வகை ஒப்பந்தம். இன்றைய இணையச் செயல்பாட்டிற்கு அடிப்படையான ஒரு நுட்பம்.

உதாரணத்திற்கு நம்முடைய அன்றாடப் பாவனையில் இருக்கும் இணைய உலாவியோ, மின்னஞ்சலோ, அரட்டையரங்குகளோ, இப்படி எந்த ஒரு சேவையாக இருந்தாலும், அவையனைத்திலும் ஆழத்தில் இருப்பது தரவுப் பரிமாற்றம். நீங்கள் அனுப்புகிற செய்தி, அஞ்சல், பதிவு, படம், பாட்டு, ஒலிக்கோப்பு, ஒளிக்கோப்பு, எதுவாக இருந்தாலும் உங்கள் கணினிக்கும் பிறிதோர் கணினிக்கும் இடையே அந்தத் தரவுகள் செல்ல வேண்டும். அப்படிச் செல்ல வேண்டுமாயின் ஒவ்வொரு கணினிக்கும் தனித்து இனங்காட்டும் ஒரு அடையாளம் வேண்டும். அந்த முகவரியை நிர்ணயிப்பதும், தரவுகளை எப்படிச் சிறு சிறு பொட்டலங்களாகப் பிரித்து வரிசைப்படுத்தி அனுப்புவது, கிடைத்த தரவுப் பொட்டலங்களை மீண்டும் சேர்த்து மூல ஆவணத்தை எப்படி மீட்டெடுப்பது போன்ற நடைமுறைகளை விவரிப்பது இந்த வரையறை. இதனை ஒரு நடைவரை (Protocol) என்றும் கூறுவர். (நன்றி: டொமெசுடிக்கேட்டட் ஆனியன் வெங்கட் – இவரை வெங்காய வெங்கட் என்றும் கூறலாம் 🙂 ).
Continue Reading »

« Newer Posts - Older Posts »