அற(ெ)வட்டு
Jul 5th, 2007 by இரா. செல்வராசு
1. எட்டுத்தொடர் பத்தியொன்று எழுதவாருமென்று வாரமிரண்டின் முன்னழைத்தார் நண்பர் மணியன். வாரமொரு பதிவும்கூட எழுதும் ஒழுங்கில்லாக் காரணத்தால் உடனடியாகச் செவிமடுத்து எழுதமுடியவில்லை. ‘எட்டு அறவட்டுத் (random) தகவல்கள்’ என்பது பெரும்பாலும் ‘எட்டு சாதனைகள்’ என்றாகிப் போன பல பதிவுகளைப் பார்த்தபோது, நாமென்ன எழுதுவது என்று யோசித்துக் கொண்டிருந்தேன். இடையில் அருணா ஸ்ரீனிவாசனின் அழைப்பும் வந்து சேர்ந்தது. அண்மைக்காலங்களில் தொடராட்டங்களில் பெரிதாய் நாட்டங்காட்டிச் சென்றிருக்கவில்லை என்றாலும் இந்த எட்டிற்காக அறவட்டாய்ச் சிலவற்றை எழுதலாம் எனத் தோன்றியது. முதலில், பல மாதங்களாய் (ஏன், ஒரு வருடத்திற்கும் மேலாய்) எழுத நினைத்தும் இன்னும் எழுதாத இடுகைகள் சிலவற்றின் பட்டியல்: (எட்டு மட்டும் பட்டியலிட்டது இவ்விடுகைக் கருவோடு பொருந்தத் தான் 🙂 )
- தாராபுரத்தில் இயந்திரப் பறவைகள்
- குழவியர் படிப்பணம்
- சுவிட்சர்லாந்தில் மூன்று நாட்கள்
- வேதிப்பொறியியல் ஓர் எளிய அறிமுகம் – முடிவுரை (தொடரில் மூன்று பாகம் எழுதியது இன்னும் முடிக்கவில்லை என்பதை ஒருவருமே கண்டுகொள்ளவில்லை) 🙂
- சாதியைப் பற்றிக் கதைக்கிறேன்
- ஒருங்குறியும் ஓகாரக் கொம்பும்
- நன்றாக எழுதுவது எப்படி (மகளிடம் படித்த பாடம்)
- குழந்தைகளோடு ஒரு சொர்க்கம்
இவற்றிற்கென ஒரு நேரம் வரும்போது இவை பதிவு இடுகைகளாகலாம்.
* * * *
2. காலத்தில் பின்னோக்கிச் சுழன்று, குழந்தையாய் இருந்து சற்றே வளர்ந்த, ஆரம்பப்பள்ளி அரை டவுசர் காலத்திற்குச் செல்லலாம். விடிகாலையில் ஒருநாள் அப்பாவின் மிதிவண்டியில் பின்னிருக்கையில் (கேரியர்) அமர்ந்து கொண்டு பயணம். நீதிமன்ற ஊழியராய் இருந்த அப்பா ‘ஜட்ஜ் அய்யா’வைப் பார்க்க அழைத்துப் போனார்.
“போனதும் அவரப் பாத்து ‘குட்மார்னிங்’னு இங்கிலீசுல சொல்லு”.
கடைநிலை ஊழியராய் இருந்தவர் தன் மகனை நினைத்து எப்போதும் பெருமை கொண்டவர். முன்னிலைப்படுத்தி மகிழ்ச்சி அடைந்தவர். ‘ஒரு தடவ கோர்ட்டுக்கு வந்துட்டுப் போ’ என்று அவர் சொன்னதைப் பிற்காலத்தில் ஏனோ பலமுறை புறக்கணித்திருக்கிறேன். அன்று முன்னர் சந்தித்திராத ஜட்ஜ் அய்யாவை நினைத்துச் சொல்கிறேன்.
“பயமா இருக்கும்பா”
“ஒண்ணும் பயப்பட வேண்டாம்… இல்லாட்டித் திரும்பும்போது சொல்லிடு”
கதவு திறந்து உள்ளே சென்றதும், “வாப்பா இராமசாமி…” என்று ஜட்ஜ் ஐயா கணீர்க் குரலில் பேச, “நம்ம பையன் சார்…” என்று கை காட்டுகிறார் அப்பா.
“குட்மா…”, தொண்டைக்குள் என்ன அடைத்தது தெரியவில்லை. குரல் மட்டும் வெளிவரவேயில்லை. ஏதோ பேசிக் கொண்டிருந்த போது இடையில் எங்கு சொல்லலாம் என்று யோசித்து வாய்ப்பே வரவில்லை. வாயும் வரவில்லை.
“சரி போய்ட்டு வரோம் சார்”, சில நிமிடங்கள் கழித்துக் கிளம்புகிறோம்.
“நல்லாப் படிப்பா” என்றோ ஏதோ சொல்கிறார் ஜட்ஜ். “குட் மார்னிங் சார்” என்கிறேன் நான்!
—
ஐந்தாண்டுகளுக்கு முன் இன்னொரு நீதிமன்றப் பயணம். இன்னொரு ஜட்ஜ். அறைக்கு வெளியே எதற்குச் செருப்பைக் கழட்டிவிட்டுச் செல்ல வேண்டும் என்னும் கேள்வியோடு உள்ளே செல்கிறேன். இது ஒன்றும் கோயில் அல்லவே. ஜட்ஜ் சாமி மட்டும் செருப்புப் போட்டிருக்கிறதே என்று மனதுள் ஓட்டம்.
“ஹவ் இஸ் லைஃப் இன் அமெரிக்கா? வாட் ஆர் யூ டூயிங்? ஹவ் லாங் ஹேவ் யூ பீன் தேர்?”
பவ்யமாய் நின்றுகொண்டிருந்த அப்பாவைப் பார்க்கிறேன். ஆங்கிலத்திலேயே பேச முற்பட்ட நீதிபதியோடு, உட்கார்ந்திருந்த நான், தமிழிலேயே பதிலிறுக்க முயல்கிறேன்.
* * * *
3. தன்னைச் சந்திக்க வந்த நண்பர் ஒருவரிடம் பின்னறையில் என் மாமா, “செல்வன் இருப்பது மலை மாதிரி. பெரிய உதவியா இருக்கு. இல்லன்னா பெருஞ்சிரமப் பட்டுப் போயிருப்போம்” என்று சொல்லக் கேட்க மிகவும் பெருமையாக இருக்கிறது.
ஈரோட்டில் பெரியமாரியம்மன் கோயில் முன்னே மிதிவண்டியில் சென்று கொண்டிருந்த தாத்தாவின் மீது ஏதோ வண்டியிடிக்கக் கீழ்விழுந்து அவர் காலுடைந்த நேரம். மழைபொய்த்த கிராமத்து வறுமைச்சூழலில் இருந்து நகருக்கு இடம்பெயர்ந்து, தன் மகனான என் மாமாவோடு சேர்ந்து சிறு நிறுவனம் ஒன்றை ஆரம்பித்துச் சற்றே காலூன்றி இருந்த நேரம். நான் எட்டாவதிலோ ஒன்பதாவதிலோ இருக்கிறேன். தாத்தாவின் முடக்கத்தினால் தொழில் பாதிக்காமல் இருக்க, பள்ளி முடிந்து வந்தவுடன் மிதிவண்டியை எடுத்துக் கொண்டு தாத்தாவுக்குப் பதிலாக வசூலுக்குச் சென்றுவிடுவேன். ஒன்றிரண்டு மணி நேரம் ஊரைச் சுற்றிக் கடை கடையாக ஏறி இறங்கி வாடிக்கையாளர்களைச் சந்தித்துத் திரும்பிக் ‘கடை’க்கு வந்து கணக்கு எழுதி முடித்து, இடையில் தட்டச்சுப் பயிலகம் சென்று, இரவு வீட்டை அடைய ஒன்பது/பத்து மணிக்கு மேலாகி விடும். அதோடு கடையில் கணக்கெழுதி, பதிவலுவப் படிவங்கள் பூர்த்தி செய்து, ஆண்டுக் கணக்கு வரவு செலவு, வங்கிக்குச் செல்வது, வடை காப்பி வாங்கி வருவது என்று எல்லாம் செய்திருக்கிறேன்.
வீட்டில் கொஞ்சம் அதிகம் தூங்கியவனை எழுப்ப முனைந்தவர்களிடம், “தூங்கட்டும் விடுங்க. அவன் எத்தன வேல செய்யுறான் தெரியுமா?” என்று அவர் சொன்னது அறிந்து பெரும் மகிழ்வு அடைந்திருக்கிறேன். சுயமதிப்பு அதிகரிக்கக் கண்டிருக்கிறேன். அன்பையும் பெருமையையும் காட்டி வளர்த்தவரோடு காலச்சுழற்சியிலும் தொடர்புக்குறைவிலும் குறைபுரிதல்களாலும் வெட்டுப்பட்ட உறவுகள் மீண்டும் ஒருநாள் ஒட்டும் என்ற நம்பிக்கை மெலிதாக ஒட்டிக் கொண்டிருக்கிறது இன்னும்.
* * * *
4. கணக்கு எனக்கு மிகவும் பிடித்த பாடமாய் இருந்திருக்கிறது. பத்தாம் வகுப்பில் கணக்குப் பாடத்தில் சதமும் பள்ளியில் முதல் மதிப்பெண்ணும் வாங்கியிருந்தேன். தினகரன் செய்தித்தாளில் பெயர் வந்திருக்கிறது என்று இரண்டு மூன்று பிரதி எடுத்து வைத்திருந்தேன். பன்னிரண்டாம் வகுப்பில் இறுதித் தேர்வுக்கு முன்னர் எழுதும் பயிற்சித் தேர்வுகளின் போது அன்பான கணித ஆசிரியையிடம் ஒரு நாள் பேசிக் கொண்டிருக்கையில், “மிஸ், பத்தாவதிலே இடைத்தேர்வுகளில் பலமுறை சதம் வாங்கியிருந்தேன். ஆனா, இப்போ இதுவரை ஒருமுறை கூட முழு மதிப்பெண்கள் வாங்கவில்லை. என்னவோ ஒரு முறையாவது நூறு வாங்கினாத் தான் முழுப்பரிட்சையிலே நூறு வாங்குவேன்னு உள்ளுணர்வு சொல்லுது. ஆனா இப்போவும் ஒரு இரண்டு மதிப்பெண் கேள்வி தப்புப் பண்ணிட்டேன்” என்றேன்.
இறுதித் தேர்வுக்கு முன்னான கடைசிப் பயிற்சித் தேர்வு அதுதான். இரண்டு நாள் கழித்து ஆசிரியை,
“இல்லையே எல்லாம் சரியாத் தான் இருந்தது” என்று சொல்லி அந்தத் தேர்வில் நூறு மதிப்பெண்கள் போட்டிருந்தார். “இப்போ இறுதித் தேர்வுல நூறு வாங்கிருவே இல்ல?” என்று அர்த்தத்தோடு பார்த்தார்.
அவ்வருட இறுதித் தேர்வில் எப்போதும் போலின்றி மிகவும் கடினமான கேள்வித்தாள் அமைந்தது. பாடத் திட்டத்தில் இல்லாத கல்லூரி அளவில் வரவேண்டிய கேள்விகள் கண்டு அனைத்து மாணவர்களும் தடுமாறிப் போயினர். முழுவதுமாய் முடிக்கக் கூட நேரமின்றிப் பல விடைகள் தவறாகத் தான் இருக்குமோ என்று ஐயம். தேர்வு முடிந்து வந்தபின் பிற மாணவர்களோடு ஆசிரியையைச் சந்தித்து விடைகளைச் சரிபார்த்தபடி சோகமாய் இருந்தோம். எம் கவலைகளைப் பகிர்ந்து கொண்டவர், “கவலப் படாதீங்க. அடுத்த தேர்வுக்குப் படிங்க” என்று சொல்லிச் சென்றுவிட்டார். அந்நாளின் எதிர்பாராப் பின்னடைவில் இருந்து மீளுவது சிரமமாகத் தான் இருந்தது.
அவ்வருடக் கணிதத் தேர்வு, மிகவும் கடினமான கேள்வித்தாள் என்பதால் மாநிலம் முழுக்க அனைவருக்கும் சில மதிப்பெண்கள் இலவசமாகப் போடும்படி உத்தரவு வந்துவிட்டது என்று பின்னர் சொன்னார்கள். மொத்த மதிப்பெண்ணில் பள்ளியில் இரண்டாவது இடம் தான் கிடைத்தது என்றாலும் கணிதத்தில் மட்டும் நூறு கிடைத்துவிட்டது. மதிப்பெண் பட்டியல் வாங்கச் சென்றிருந்தபோது “சந்தோஷம் தானே?” என்றார் கணித ஆசிரியை. அவர் முகத்திலும் நிறைவு.
* * * *
5. சின்னச் சின்ன அனுபவங்களாக இருந்தாலும் எல்லாவற்றிலும் ஏதேனும் ஒரு பயன் இருக்கும் என்று நம்புபவன் நான். சிறு வயதில் கோடைவிடுமுறையில் ஓரிரு முறை ஆந்திரா சிற்றூர் ஒன்றில் மளிகைக் கடை வைத்திருந்த உறவினர் கடையில் ‘எரகட்லு’, ‘பச்சமிரப்காய்லு’, ‘ஒங்காய்லு’ என்று வியாபாரம் செய்திருக்கிறேன். ஒரு வருடம் பள்ளி விடுப்பில் கனரா வங்கியில் ஒரு மாதம் வேலை கொடுத்தார்கள். வங்கிப் பணி பற்றிக் கற்றுக்கொள்ளலாம் என்று ஆர்வமாகப் போனவனைப் பக்கம் பக்கமாகக் கூட்டல் மட்டும் போட விட்டுவிட்டார்கள். அவர்களின் வேலைப்பளுவைக் குறைக்க மட்டும் பயன்படுத்திக் கொண்டு என் ஆர்வத்தை அடக்கிவைத்து விட்டார்கள். ‘சிங்கள் எண்ட்ரீ, டபுள் எண்ட்ரீ’ என்று கணக்கு முறைகளைக் கற்றுக் கொள்ளும் வகுப்பிற்குச் சென்றிருக்கிறேன். அன்றாடப் புத்தகம், பேரேடு என்று ஒரு நிறுவனத்தின் கணக்குப் புத்தகங்கள் எழுத உதவியிருக்கிறேன். ஒருவேளை பொறியியற் பாதையில் செல்லாதிருந்தால் கணக்காளர் ஆகியிருக்க வாய்ப்பிருக்கிறது என்றே நினைக்கிறேன். இன்று டி.எம்.ஐ நிறுவனத்தில் பொருளாளராகவும் இருக்கிறேன்.
* * * *
6. “நீங்க சாஃப்டுவேர்ல இல்லியா?” என்று பலர் ஆச்சரியப்பட்டுப் போகிறார்கள். எங்களுடைய பதினோறாம் வகுப்பில் தான் முதன்முறையாக அந்தப் பள்ளியிலே கணினியியல் அறிமுகப் படுத்தப்பட்டது. அதில் சேர ஆயிரம் ரூபாய் அதிகம் கட்டவேண்டியிருக்கும் என்பதாலும் உயிரியல் போன்ற மரபுசார் பாடத்தைக் கைவிடவேண்டாம் என்று வீட்டினர் சொன்னதாலும் நான் ஒரு ஏக்கத்துடனேயே உயிரியல் பாடத்தை எடுத்துக்கொண்டேன். ஓரிரு வாரங்கள் கழிந்தபின்னும் என் ஏக்கம் தீர்ந்தபாடில்லை. புதலியல் விலங்கியல் பாடங்களில் மனம் செல்லவே இல்லை. மீண்டும் வீட்டிலே சொல்லி விளக்கிக் கணினியலுக்கு மாறிக் கொண்டேன். சொல்லாமல் கொள்ளாமல் விலகிக் கொண்டதற்குப் புதலியல் ஆசிரியை கொஞ்சம் நாள் கோவித்துக் கொண்டார்கள். ஆனால், அன்றிலிருந்து இன்று வரை வளர்கணினித் துறையில் குறையாத ஆர்வம் எனக்குண்டு. இருப்பினும் என் ஆரம்ப விருப்பத்திற்கும் மாறாக, இளம்பொறியியல் பட்டப் படிப்பில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கணினித்துறை கிடைக்க வாய்ப்பிருந்தும் வேதிப்பொறியியலில் சேர்ந்தேன். ஆரம்ப நாட்களில் வளாகத்தில் கணினித் துறை மாணவர்களைப் பார்த்துச் சற்று ஏங்கி இருந்தாலும், எல்லாம் நன்மைக்கெனவே அமைந்தது. இப்போதும் வேதிப்பொறியியல் துறையிலேயே வேலை என்றாலும், போதுமான அளவு கணினியலோடு சம்பந்தமும் உண்டு.
இன்று தமிழ்மணம், பூங்காவை நடத்தும் டி.எம்.ஐ நிறுவனத்தின் தொழில்நுட்பக் குழுவின் முக்கிய உறுப்பினராகவும் இருக்கிறேன்.
* * * *
7. சென்னையில் இரண்டாமாண்டு கல்லூரி நாட்களில் ஒரு நாள். ரஷ்யா கலாச்சார மையத்தில் அனைத்துக் கல்லூரி மாணவர் கவிதைப் போட்டியில் பங்குபெற்றேன். மூன்றாவது பரிசு கிடைத்தபோது தெரிந்தவர் யாரும் அருகில் இல்லை. ஆனால், எனக்குப் பெரும் மகிழ்வாய் இருந்தது. மொட்டை வெய்யலில் தெம்போடு மிதிவண்டியை ஓட்டிக் கொண்டு விடுதிக்குத் திரும்பிச் செல்கிறேன். உள்ளுக்குள்ளே உத்வேகம். பலர் கலந்து கொண்ட போட்டியிலே பரிசு கிடைத்தது ஒரு கவிஞனுக்குக் கிடைத்த அங்கீகாரம் என்று மனதுக்குள்ளேயே எனக்கு நானே பாராட்டிக் கொண்டேன்.
அடுத்த ஆண்டு அண்ணா பல்கலைக்கழகத்து அனைத்துக் கல்லூரிப் போட்டி ஒன்றில் (“மண்ணில் தெரியுது வானம்”) மூன்றாவது பரிசு இரண்டு பேருக்கு அளிக்கப் பட்டது. அதில் ஒருவனாய் நான் இருந்ததும், அதன் நடுவராய் இருந்த ஒருவர் என் கல்லூரி ஆசிரியர் என்பதும் நிறைவைத் தரவில்லை. அது என் கவிதைக்கு அளிக்கப் பட்ட பரிசு தானா, அல்லது வேறேதேனும் அரசியலா என்ற ஐயம் நீங்கவில்லை. இருப்பினும் மகிழ்ச்சி தான்.
நண்பர் ஒருவர் இந்திய மாணவர் பேரவையில் கவியரங்கம் ஒன்றிற்கு எழுது என்று சொல்லிவிட்டு நான் சம்மதம் ஏதும் சொல்லும் முன்பே ‘கருத்தை அரிக்கும் காகிதக் கரையான்கள்” என்னும் தலைப்பில் கவிஞர் செல்வராஜ் என்று என் பெயரையும் சேர்த்து (நோட்டீஸ்) அச்சடித்துப் பரப்பி விட்டார். வந்திருந்தது பத்திருபது பேர் தான் என்றாலும், அன்று படைத்தவைகளுள் சிறப்பானதாய் இருந்ததாய்ச் சொல்லிப் பலர் வந்து பாராட்டிச் சென்றனர்.
ஆனால், கவிஞர் செல்வராஜ் அதன் பிறகு பெரிதாக வளரவில்லை !
* * * *
8. சாதனைகள் மட்டுமல்ல. வேதனைகளும் கலந்தது தான் வாழ்க்கை. அமெரிக்கா வந்த இரண்டாவது வருடம். ஒரு நிலையில் பெருந்தகைவுக்கு ஆளானேன். ஊரை விட்டுத் தொலைவில் இருந்ததாலா, உறவைப் பார்த்துப் பலநாள் ஆனதாலா, உருப்படியாய் ஒன்றும் செய்யாதிருக்கிறோம் என்று பச்சாதாபத்தாலா, நட்பு நம்மை உதாசீனப்படுத்துகிறது என்ற ஏக்கத்தாலா, எல்லாம் கலந்த ஒரு வெறுமையாலா என்று தெரியவில்லை. பல வாரங்கள், மாதங்கள் சோம்பித் தனிமையில் அழுது, எதிலும் விருப்புறாது, கலந்துகொள்ளாது, உற்சாகம் இழந்து கிடந்திருக்கிறேன். ‘நம் இருப்பிற்கு என்ன பயன்’ என்று சலித்திருக்கிறேன். நல்லவேளையாய், அதைத் தாண்டிச் செல்லவில்லை. எப்போதும் இருக்கும் பொதிவுணர்ச்சியும், நம்பிக்கைகளும், சிறுகாலம் நீறுபூத்தாற்போல் இருந்தாலும் என்னை அச்சுழலில் இருந்து மீட்டு எடுத்துவிட்டன. சிறுகச் சிறுக மீண்டு எழுந்து வந்தது வாழ்க்கையில் ஒரு பெரிய பாடம். பின்னாட்களில் மனச்சோர்வுகளுக்கு ஆளாகையில் “இதுவும் கடந்து போகும்” என்று உணர வைத்த அனுபவம்.
அந்தக் காலகட்டத்தில் முனைவர் பட்ட ஆய்வில் என்ன செய்யலாம் என்று உறுதியாக முடிவு செய்யாத நிலையில் ‘நரம்புவலைப்பின்னல்’ பற்றிச் சிறிது ஆர்வம் உண்டாகவே என் ஆய்வு ஆசிரியர் என்னை இரண்டு மாதம் பூனாவில் இருக்கும் ‘தேசிய வேதிக்கூடத்திற்கு’ அனுப்பி வைத்தார். அவரோடு சேர்ந்து வேலை செய்த அவரின் நண்பருடன் சேர்ந்து ஒரு வேலை செய்யவும், கற்றுக் கொள்ளவும் சென்று, அதன் தொடர்ச்சியாய் என் ஆய்வுப் பணிகளும் நன்றாக அமைந்து, எங்களின் முதல் நுட்புரை (technical paper) பெரும் மதிப்பிற்குரிய Proceedings of the Royal Society, London, Series A வில் வெளி வந்தது.
ஒரு கருத்தரங்கில் கலந்து கொண்டு முடிந்தபின் அபுதாபி விடுதியில் தங்கியிருக்கிறோம். “சார், இது உங்களுக்குப் புரியாது. இந்தக் கடிதத்தொடர் நூல் நான் தமிழில் எழுதியது. உங்களோடு பகிர்ந்து கொள்ளத் தோன்றியது”, என்று கணினியில் அச்சடித்துக் கின்கோஸ்-ல் கோர்த்திருந்த காகிதங்களைக் காட்டினேன். மிகவும் சந்தோஷப்பட்டவர், “இது பற்றிய சுருக்கமாக எனக்கு மொழி பெயர்த்துக் கொடு. என்னோடு எப்போதும் வைத்துக் கொள்வேன்” என்றார். சுனந்தாவின் முன்னுரையை ஆங்கிலத்தில் எழுதிக் கொடுத்தேன்.
சென்ற மாதம் அவரோடு பேசினேன். பணியில் இருந்து ஓய்வு பெற்று ஒரு வருடத்திற்கு மேல் ஆகியிருக்கும். அறுபத்தி நான்கு வயதிலும் இன்னும் அதே உற்சாகம். ‘தேஷ்பாண்டே’ பற்றியும் கூட ஒரு பதிவு எழுதவேண்டும் என்று பலநாள் முன்பே எண்ணியிருக்கிறேன். முதற்புள்ளியில் இருக்கிற இன்னும் எழுதாப்பட்டியலில் இதனையும் சேர்த்துக் கொள்ளவேண்டும்.
அப்பாடியோவ்!
நீங்களும் எங்கெங்கோ காலை வைத்திருக்கிறீர்கள்.
தெலுங்கில் கோரகாயலு வித்தீங்களா? :-))
அண்ணாத்த, எப்பிடி கீற, வூட்டம்மா, கொயந்திங்கோ அல்லாம் நல்லா கீறாங்கதான? இப்ப, படியளக்கற மகானுபாவன் குடுத்த அர்ஜண்டு ஜோலிய முடிச்சிட்டு அப்பாலிக்கா வர்றன்…வுன் போட்டாவ தமிய்மணத்தில பார்த்த வுடனே மன்ஸுக்கு ரொம்ப மஜாவா இருந்திச்சிப்பா.அதான் சொம்மா கண்டுக்கலாம்னு வந்தன்…
சிறு வயதில் நடக்கும் நிகழ்வுகள் சில மனதில் அப்படியே உறைந்து போயிருக்கும். உங்கள் வாழ்க்கையின் முக்கிய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி செல்வராஜ். ஆரம்பத்தில் உள்ள ஒவ்வொரு தலைப்பும் சுவாரசியமாக இருக்கின்றன. விரைவில் அவற்றை எழுதுங்கள்.
உங்கள் அருமையான சொல்லாடலுக்கும் கருத்துக்கோவைக்கும் நானடிமை. நிரடலில்லாத நடை. தமிழ்மணத்தை உருவாக்குவதிலும் நிர்வகிப்பதிலும் உங்கள் பங்கை வெளிக்காட்டாமலே செயலாற்றி வருகிறீர்கள். எழுதவிருக்கும் இடுகைகள் எதிர்பார்ப்புகளை எழுப்பியுள்ளன. விரைவில் எழுத நேரமும் மனநிலையும் ஒத்துழைக்கட்டும்.
எனது அழைப்பை ஏற்று இவ்விடுகையை இட்டதற்கு நன்றி.
நண்பா,
உன் நாட்குறிப்பேட்டை எடுத்துக்கொண்டு c block முழுவதும் ஓடியபோதே கொடுத்திருக்கலாம்.